மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 4


.
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)
(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

காட்சி 5

களம் - துட்டகைமுனுவின் அரசவை
பங்குகொள்வோர்:- துட்டகைமுனு
சதாதீசன்
அமைச்சர்
அரசவையினர்

(கைமுனுவின் கையிலே ஓர் ஓலை இருக்கிறது.  அதைப்பார்த்தபடியே அவன் பேசுகிறான்)

கைமுனு:- எனது தந்தையாரின் ஆட்சிக்காலத்திலும் ஒருமுறை இப்படித்தான் திறை
கேட்டு ஓலை அனுப்பியிருந்தான் அந்த அறிவற்ற எல்லாளன். கொடுக்கமுடியாது மறுத்துவிடுங்கள் என்று எவ்வளவோ கூறிப்பார்த்தேன் தந்தையிடம். அன்றே திறையை நிறுத்தி போரை நடத்தியிருந்தால் இன்று எல்லாளன் மாண்டு, பல்லாண்டுகள் ஆகியிருக்கும்.

அமைச்சர்:- இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை மன்னா. அத்தோடு உங்கள்
ஆட்சிக் காலத்தில்தான் எல்லாளன் வீழ்ச்சியுறவேண்டும் என்பது விதிபோலும்.



துட்டகைமுனு:- சரியாகச் சொன்னீர்கள் அமைச்சரே. முறையாகப் பாடம் கற்பிக்கிறேன்
அவனுக்கு. தந்தை கட்டிவந்த திறையை மைந்தனும் கட்டுவான் என்று எதிர்பார்த்த அவனது மடத்தனத்தை வெளிப்படுத்துகிறேன். நாளொன்று குறியுங்கள் போரொன்று தொடங்குதற்கு. எல்லாளனை இந்த உலகைவிட்டே அனுப்புவதற்கு.

அமைச்சர்:- வருகிற பௌர்ணமியன்று நலமான நாள். வாகை சூடுவதற்கு
வளமானநாள்.

துட்டகைமுனு:- நன்று அமைச்சரே. அன்றே செல்வோம் போருக்கு. நடக்கட்டும்
அதற்கான ஆயத்தங்கள். என்ன தம்பி சதாதீசா?

சதாதீசன்:- அதைப்பற்றி நீங்கள் அறவே சிந்திக்கவேண்டாம் அண்ணா.
அனைத்தையும் சிறப்பாக நான் கவனிக்கிறேன். ஆனால்...

துட்டகைமுனு:- என்ன தம்பி ஆனால்???

சதாதீசன்:- வேலையும், வில்லையும் கொண்டு வீரவிளையாட்டு நடத்துவதற்கு
நாளையும், கோளையும் ஏனண்ணா நாம் பார்க்கவேண்டும். திறமை இருக்கிறது. இளமை இருக்கிறது. படையின் வலிமை இருக்கிறது. முறைமை எதற்கு நமக்கு? அடுத்த பௌர்ணமிவரை காத்திருப்பதற்கு அவசியமென்ன வேண்டியிருக்கிறது?

துட்டகைமுனு:- அப்படியானால் என்ன சொல்கிறாய் நீ?

சதாதீசன்:- போருக்கு இப்போதே புறப்படவேண்டும் என்கிறேன். சூட்டோடு சூடாக
எல்லாளனின் கோட்டை மீது வேட்டையாட விரையவேண்டும் என்கிறேன். அப்படியானால்தான் அந்தக் கிழவன் எல்லாளனின் படைகள் ஆட்டம் காணும். அடுத்த பௌர்ணமிவரை அவகாசம் கொடுத்தால் அவனது படையின் வலிமையை அதிகரிப்பதற்கு அவனுக்கு நாமே அவகாசம் கொடுத்ததாக முடியும். ஆகவேதான் பௌர்ணமியிலே போர் என்பதை விடுத்து, நாளையே படையை நடத்தவேண்டும் என்கிறேன். இன்றைக்கே அதற்கான ஏற்பாடுகளைத் தொடக்கவேண்டும் என்கிறேன்.

துட்டகைமுனு:- அற்புதமான யோசனை! அதுமட்டுமல்ல சதாதீசா, எல்லாளனின்
கோட்டையை நோக்கி நமது படைகள் செல்வதற்க முன்னர் சிற்றரசர்கள் எல்லோரையும் நாம் சிறைப்பிடிக்க வேண்டும்.

சதாதீசன்: சிற்றரசர்களைச் சிறைப்பிடிப்பதா? சிறைப்பிடித்து அவர்களுக்குத்
தீனிபோட்டுக் காவல் காப்பதா? அது தேவையற்ற வேலை அண்ணா? முப்பத்தியிரண்டு சிற்றரசர்களையும் எல்லாளனுக்க முன்னரே கொன்றுவிடவேண்டும். பக்கத்துணையின்றி எல்லாளன் பரிதவிக்கவேண்டும். அந்தநேரத்தில் நமதுபடை அவன்மேல் பாயவேண்டும். முதலில் சிக்கலின்றி அவர்களைத் தனித்தனியாகக் கொல்வதற்கு தக்கவகையில் திட்டங்களைத் வகுக்கவேண்டும்.

துட்டகைமுனு: திட்டங்கள் எப்போதோ தயார் தம்பி. உனது எண்ணப்படி சிறியதொரு
மாற்றத்தைத்தான் இப்போது செய்யவேண்டும். கட்டியிழுத்துக் கொண்டுவருவதுதான் எனது திட்டம். தலைகளை வெட்டி விழுத்திக் கொன்றுவிடுவது உனது திருத்தம். திருத்தத்துடன் திட்டம் நிறைவேற்றப்படும். சரிதானே?

சதாதீசன்: ஆம் அண்ணா. கைதுசெய்வதும் காவலில் வைப்பதும் தேவையற்றது
மட்டுமல்ல, எதிர்காலத்தில் நமக்குத் தீமையாகவும் முடியலாம். அதனால்தான்
சிற்றரசர்கள் எல்லோரையும் தீர்த்துவிடவேண்டும் என்கிறேன்.

துட்டகைமுனு: அமைச்சரே! சதாதீசனது எண்ணத்தைப் பற்றி
என்ன உமது கருத்து?

அமைச்சர்:- அதுவும் சரியான யோசனைதான். சரியான யோசனையைச் சரியான
சமயத்திலே கூறியிருக்கிறார்.

துட்டகைமுனு:- அவன் எப்போதுமே அப்படித்தான்.
சதாதீசா! உன் எண்ணப்படியே செய்வோம். இப்போதே படைகளை ஒன்று திரட்ட ஏற்பாடுகள் நடக்கட்டும். படைகள் திரளட்டும். பகைவர் வெருளட்டும். சிற்றரசர்கள் ஒவ்வொருவராய்ச் சரியட்டும். வில்லெல்லாம் அம்புகளை விடுக்கட்டும். எல்லாளனது தலையை நோக்கி ஈட்;டிகள் பறக்கட்டும். திறைகேட்ட அவன் தலை தரையிலே உருளட்டும் பாரெங்கும் எமது சிங்கக் கொடி பறக்கட்டும் நாடெல்லாம் நமது வீரத்தைக் கண்டு பிரமிக்கட்டும்!

சதாதீசன்:- நடக்கும் அண்ணா. அனைத்தும் நீ நினைத்தபடியே நடக்கும்.

துட்டகைமுனு:- நன்று தம்பி நன்று. சென்றுவா. நாம் வென்று வர ஏற்பாடுகளை
விரைந்துசெய். சென்றுவா.

(சதாதீசன் செல்ல, கைமுனு இடைமறித்து)

துட்டகைமுனு:- தம்பி சதாதீசா! கொஞ்சம் நில்! சற்று இங்கே வந்துவிட்டுப்போ.
அமைச்சரே! நமது ரகசியத் திட்டம்பற்றி சதாதீசனுக்கு சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். தம்பி சதாதீசா! நமது இளமையும், படையின் வலிமையும் மட்டும் வெற்றிதரும் என்று நாம் நினைக்கக் கூடாது. எல்லாளன் களம்பலகண்டவன். எனவே வெற்றியைப் போருக்கு முன்னரே தீர்மானிக்கக் கூடிய ஏற்பாடொன்று அவசியம்.

சதாதீசன்:- அதெப்படி முடியும் அண்ணா. வெற்றியும் தோல்வியும் போருக்குப்
பிறகல்லவா வெளிப்படும்.

துட்டகைமுனு:- அதுதான் தம்பி அரசியல் தந்திரம். அமைச்சரே! நமது திட்டத்தை
சதாதீசனுக்கு தெளிவாகக் கூறுங்கள்.

அமைச்சர்:- இளவரசே! எல்லாளன் யானைமீதிருந்தே போர்புரியும் வழக்கமுடையவன்.
தேரில் நின்று போரிடும் வழக்கம் அவனுக்கு இல்லை. எனவே அவன் ஏறிவரும் யானையில் யமன் ஏறிவரச் செய்வதே எங்கள் திட்டம்.

சதாதீ{சன்:- சற்று புரியும்படியாகச் சொல்லுங்கள் அமைச்சரே.
(அமைச்சர் சதாதீசனின் காதுக்குள் இரகசியமாகச் சொல்லுதல்)

துட்டகைமுனு:- அமைச்சரே நமது திட்டத்தைச் செயலாக்க, உடனே தீகவாப்பிக்கு
செய்தியனுப்புங்கள்.

அமைச்சர்:- அப்படியே மன்னவா. இப்போதே புறப்படுகிறேன்.

சதாதீசன்:- திட்டம் என்னவோ கேட்பதற்குத் தித்திப்பாகத்தான் இருக்கிறது.
செயற்படுத்துதெப்படி? அது அவ்வளவு......

துட்டகைமுனு:- இலேசான காரியமா என்று கேட்கிறயா?

சதாதீசன்:- ஆம் அண்ணா அதெப்படி முடியும்?

துட்டகைமுனு:- தம்பி, சுகபோகத்தில் நாட்டிலே வாழ்ந்தவன் நீ. சோதனைகளுடன்
காட்டிலே சுற்றித் திரிந்தவன் நான். எல்லாளனை ஒழிக்க ஏற்கனவே ஒரு பிரதானியோடு திட்டம் வகுத்திருந்தேன். அவன் ஒரு தமிழன் ஹ ..ஹ..ஹ..ஹா.. தமிழன்! அவன்தான் இப்போதும் நம் சகலன். எல்லாளனுக்கு இயமன்.

சதாதீசன்:- அண்ணா தமிழனா? அவனை நம்பலாமா? எல்லாளனும் தமிழனல்லவா?

துட்டகைமுனு:- ஆம் தம்பி, எல்லாளனும் தமிழன். அவனை அழிக்க என்னோடு
சேர்ந்திருப்பவனும் அசல் தமிழன். உலகத்தின் வரலாறை உன்னிப்பாகக் கவனித்துப்பார். ஒருபோதும் தமிழன் ஒற்றுமையாக வாழ்ந்ததே இல்லை. ஒற்றுமை மட்டும் இருந்துவிட்டால் உலகிலே அவர்களை வெல்ல யாருமே இல்லை. நம்பிக்கெடுவது தமிழனின் நரம்போடு இணைந்த குணம். ஒருவரை அண்டிக் கெடுப்பது அவர்களின் அதைவிடச் சிறந்த குணம். நம்மோடு சேர்ந்திருக்கும் தமிழன் எல்லாளனின் படையிலுள்ள ஒரு வலியவன். எல்லாளனின் நம்பிக்கைக்கு உரியவன். மாமல்லன். அவன்பெயர் திமிலன். எல்லாளனுக்கு நண்பன். நமக்கு அன்பன். அவன்தான் எல்லாளனை அண்டிக்கெடுத்து நமக்கு நல்லது செய்பவன்.

சதாதீசன்:- அண்ணா! அவனை முற்றாக நம்புவதில் அபாயமில்லையே.

துட்டகைமுனு:- அபாயம் எதுவுமில்லை. எல்லாளன் மாண்டதும் தீகவாப்பிப் பிரதேசம்
முழுவதற்கும் சிற்றரசனாக்குவதாக அவனுக்கு வாக்களித்திருக்கிறேன். மன்னனாகும் பேராசையில் அவன் மயங்கிக் கிடக்கிறான். நான் ஊதுகின்ற மகுடிக்கெல்லாம் அவன் ஆடியே தீருவான்.

சதாதீசன்:- அண்ணா! என்ன இது? ஒரு தமிழ் மன்னனை அழித்து
இன்னொரு தமிழ் மன்னனை உருவாக்குவதற்கா இப்போது நாம்
படையெடுக்கின்றோம்?

துட்டகைமுனு:- ஹ..ஹ..ஹ..ஹ..ஹா.. என்ன தம்பி இது? இது கூடப் புரியாமல்?
எல்லாளனை ஒழிப்பதற்குத்தான் அவன் நமக்கு உதவி. எல்லாளன்
ஒழிந்துவிட்டால் அவனும் நமக்கு எதிரி. வெற்றியைக் கொண்டாட நமது அரண்மனையிலே ஒரு விருந்து. விருந்து முடிய அவன் மேலுலகு செல்வான் விரைந்து.

சதாதீசன்:- சரியண்ணா அதுவரை எதற்கும் அவன்மேல் கொஞ்சம் எச்சரிக்கையாக
இருப்பது நல்லது.

துட்டகைமுனு:- அவசியமில்லை தம்பி. தமிழனின் வரலாறு எனக்கு மிகநன்றாகத்
தெரியும். எல்லோரும் ஒன்றுபடவேண்டும் என்று ஆணை எடுப்பார்கள். இரவோடிரவாக எதிரியோடு சேர்ந்து தன் இனத்தையே காட்டிக்கொடுப்பார்கள். அன்னைத் தமிழ் என்று வணங்குவார்கள். சின்னப் பதவிக்கும் சிறிய சலுகைக்கும் அன்னை என்று சொன்ன தமிழையே அடவுவைக்க இணங்குவார்கள். எல்லோருக்கும் இலட்சியம் ஒன்றே என்பார்கள். தமக்குள் பிரிந்து நின்று சண்டை செய்வார்கள். அல்லது எதிரியிடம் குழைந்து சென்று மண்டியிடுவார்கள். இது கடந்தகால சரித்திரம் மட்டுமல்ல. எதிர்காலத்திலும், தமிழன் என்றொரு இனம் உள்ளவரை உலகின் எப்பாகத்தில் அவர்கள் வாழ்ந்தாலும் தப்பாமல் நிகழப்போகும் சம்பவமும் இதுதான். தயங்காதே தம்பி. சென்றுவா.

---திரை---
(மாமன்னன் எல்லாளன் மீண்டும் வருவான்)

No comments: