குறளில் குறும்பு 30.- குறுகத் தறித்த குறள்

.
வானொலி மாமாவின் குட்டி நாடகம் -
குறளில் குறும்பு 30.- குறுகத் தறித்த குறள்

ஞானா: “பயனிலசொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். பாராட்டுவான் எண்டால், மெச்சுகிறவன், ஊக்குவிப்பவன், எண்டுதானே பொருள்.....   பயனில் சொல்லெண்டால், தேவை இல்லாத, பயனற்ற சொற்கள் எண்டதுதானே பொருள்......அப்பிடி எண்டால் பயனில்லாத சொற்களை எப்பிடிப் பாராட்ட முடியும்? அப்பிடிப்பட்டவனை எப்பிடி நல்ல மனிசன் எண்டு சொல்ல முடியும்......எல்லாம்
குழப்பமாய் இருக்கே.......

அப்பா: என்ன ஞானா இன்டைக்குத் தனித்தவில் வாசிக்கிறாய் போலைகிடக்கு?

ஞானா: இல்லை அப்பா....இந்தக் குறள் ஒரே குழப்பமாய் இருக்கு.......அதுதான்.......அப்பா: திருக்குறள் குழப்பமாய் இருக்கோ இல்லாட்டில் நீ குழப்பிப்போய் இருக்கிறாயோ ஞானா.

ஞானா: நான்தான் குழப்பிப்போய் இருக்கிறன் அப்பா. அதுகிடக்கட்டும்......தனித்தவில் வாசிக்கிறது எண்டால் என்ன அப்பா?.

அப்பா: அதுவந்து ஞானா, இந்த மேளக்கச்சேரியளிலை கூட்டமாய் வாசிக்கிறதுதான் வழக்கம். ஆதாவது ஒரு கூட்டம் மேளம் என்டால் இரண்டு நாதசுரம், இரண்டு தவில் சேர்ந்துதான் இருக்கும். இந்தக் கூட்டம் சேர்ந்து வாசிச்சால் கச்சேரி நல்ல சிறப்பாய் இருக்கும்.

சுந்தாரி : என்ன தகப்பனும் மேளுமாய் இன்டைக்குக் குறள் கச்சேரியை விட்டிட்டு மேளக் கச்சேரியிலை இறக்கி இருக்கிறியளே?

அப்பா: வாரும் சுந்தரி....வாரும்....நீர் இல்லாமலும் கச்சேரி நடக்குமே.......இவள் பிள்ளை தனித்தவில் வாசிக்கிறது எண்டால் என்னெண்டு கேட்டாள்........அதுதான்

சுந்தரி: உது தெரியாதே ஒரு மேளம் தனிய வாசிக்கிறதைத்தான் தனித்தவில் வாசிக்கிறது ஏண்டு சொல்லிறது. அது போக சில ஆககளையும் தனித்தவில் வாசிக்கிறார் எண்டும் சொல்லிறவை. ஒரு கூட்டத்தோடை சேர்ந்து செயற்பட மாட்டாத ஆக்களை “அவர் தனித் தவில்தான் வாசிப்பார் எண்டு பகிடி பண்ணிறவை எல்லே.

ஞானா: அதாவது வந்தம்மா.....ஒரு வநயஅ ஆய் இயங்க மாட்டாத ஆக்களை உப்பிடிச் சொல் லிறது எண்டு சொல்லுறியள்.

அப்பா: ஓம் ஞானா.....உப்பிடி உங்கை கனபேர் இருக்கினம். நாலுபேரோடை சேர்ந்து. பொது நன்மைக்காக தங்கடை அழுங்குப் பிடியளை விட்டுக் குடுத்து நடக்காமல், தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு நிக்கிற ஆக்கள்.

ஞானா: அப்பா......அப்பா.......கொஞ்சம் நில்லுக்கோ. இப்ப கொஞ்சத்துக்கு முந்தி என்னை நீங்கள் “தனித் தவில் வாசிக்கிறியோ” எண்டு கேட்டது மெத்தப் பிழையெல்லோ? நான் இந்தக் குறள் விளங்கேல்லை எண்டு நினைச்சுக் கொண்டு இருந்தனான். நான் ஒரு team spirit  இல்லாத ஆளில்லையே. உங்கள் எல்லாரோடையும் கலந்து பகிர்ந்துதானே திருக்குறள் படிக்கிறன்.

அப்பா: பிள்ளை ஞானா நான் சும்மா ஒரு பகிடிக்குச் சொன்னனான். நீ தனிய இருந்தாய் பின்னைக் கதை குடுப்பம் எண்டிட்டுச் சொன்னனான்.

சந்தரி: எந்தக் குறள் உனக்கு விளங்கேல்லை ஞானா. எங்களுக்கும் சொல்லன். நாங்களும் கொஞ்சம் குறள் படிப்பம். 1330 திருக்குறளும் எல்லாருக்கும் மனப்பாடமே. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தானே தெரியும்.

அப்பா: அதெண்டால் உண்மைதான் சுந்தரி. கற்றது கைம்மண்ணளவு......கல்லாதது உலகளவு. ஞானா நீ அந்தக் குறளைச் சொல்லு பாப்பாம்.

ஞானா: அப்பா திருக்குறளிலை 20ம் அதிகாரம் பயனில் சொல்லாமை. அந்த அதிகாரத்திலை   196 வது குறள். இதுதான் அந்தக் குறள்.

“பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.”

இந்தக் குறளிலை பயனில்லாத சொற்களை ஆரும் பாராட்ட முடிமோ? அப்பிடிப் பாராட்டிற ஆளை நல்ல மனிசன் என்டு சொல்ல முடியுமோ?

அப்பா: கொஞ்சம் பொறு பிள்ளை ஞானா. நீ வந்து திருக்குறள் புத்தகத்தைக் கையிலை வைச்சுக் கொண்டு அதிலை உள்ள கருத்தை வாசிச்சு விளங்காமல், எழுந்தமானத்துக்கு உன்ரை பாட்டிலை பொருள் சொல்ல வெளிக்கிட்டால் உப்பிடித்தான் எடக்கு முடக்கு வரும்.

சுந்தரி: அப்பா அவள் பிள்ளையும் தன்பாட்டிலை பொருள் சொல்லிப் பழகத்தானே வேணும்.

அப்பா: வேணும்தான், சுந்தரிஆனால் அதுக்குக் கொஞ்சம் அனுபவமும் வேணும். ஞானா நீ வந்து பாராட்டுவான் எண்ட சொல்லிலை தடக்குப் பட்டு நிக்கிறாய். இந்தக் குறளிலை பயனில்சொற் பாராட்டுவான் என்டதுக்கு பயனற்ற சொற்களை மெச்சிறது எண்ட கருத்தில்லை. பயனற்ற சொற்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிறது எண்டதுதான்
பொருள்.

சுந்தரி: ஞானா சும்மா ஏன் சிக்கலுக்கை போவான். நீ அந்தப் புத்தகத்திலை உள்ள கருத்தைப் படியன். அப்ப விளங்கும்.

ஞானா: இதுதான் அம்மா கருத்து.....பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்! பயனற்ற சொற்களைத் திரும்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பவனை மனிதன் என்றா சொல்லுவது!.......மக்கள் பதடி எனல்!....மனிதருக்குள் பதர் என்று சொல்ல வேண்டும்.

அப்பா: பாத்தியே ஞர்னா திருவள்ளுவப் பெருந்தகையின்ரை திறமையை. பயனற்ற வார்த்தைகளைத திருப்பத் திரும்பப் பேசிறத்துக்கு ஆசைப் படுகிறவனை...பயனில்சொற் பாராட்டுவான் என்றார். பிறகு அப்படிப்பட்டவனை ....மகனெனல் என்டு ஒரு கேள்வியைப் போட்டு மனிதன் என்டு சொல்லலாமா என்றார். வுpடையாக, சொல்லமுடியாது மக்கட் பதடி என்றார். அதாவது அவன் மனிதருக்குள் பதர் என்டு மறுமொழி சொன்னார்.

ஞானா: அது சரி அப்பா......உயிருள்ள மனிதனுக்கு உயிரில்லாத நெல்லுச் சப்பியை ஏன் உவமை சொல்லியிருக்கிறர்?

அப்பா: நல்ல கேள்விதான் ஞானா. பதடி என்டால் தானியங்களுக்கை கிடக்கிற பதர்.  அதுக்குள்ளை மாப்பொருள் இருக்காது. ஒரு சத்தும் இல்லாத சாவட்டை. மனிதருக்குள்ளை, சத்தில்லாத சொற்களைப் பேசுகிறவர்களை இந்தச் சத்தில்லாத பதருக்கு உவமை சொன்னார்.

சுந்தரி: ஏனப்பா......உந்தக் குறளை வள்ளுவர் இப்பிடி எழுதியிருக்கலாம் தானே? பயனில்சொற் பாராட்டு வான் மகனல்ல மக்கட் பதடி யெனல்
நல்ல லேசாய் இருந்திருக்கு மெல்லே?

அப்பா: சுந்தரி......நீரும் நானும் குறள் எழுதினால் அப்பிடித்தான் எழுதியிருப்பம். இது வள்ளுவப் பெருந்தகை. கடுகைத் துளைச்சு ஏழு கடலைப் புகட்டுவார்.

ஞானா: உதுக்குள்ளை என்னப்பா ஏழுகடல்?

அப்பா: ஞானா இதிலை திருவள்ளுவர் ஒரு இலக்கணக் கடலைப் புகுத்தியிருக்கிறார். அதாவது வந்து மகனெனல்......பதடியெனல் எண்ட இரண்டு சொல்லிலும் வைச்சிருக்கிறார் சூட்சுமம்.

ஞானா: அதென்னப்பா சூட்சுமம். விளங்கச் சொல்லுங்கோவன்.

அப்பா: ஞானா அந்த இரண்டு சொற்களும் வினைச் சொற்கள்.

ஞானா: அதெப்பிடி அப்பா மகனெனல் வினைச்சொல்லாகும்? வினைச் சொல் ஒரு செயலைக் குறிக்கவெல்லோ வேணும்?

அப்பா: மகனெனல் எண்டு சொல்லிறது ஒரு செயல்தானே ஞானா. அதுபோலைத்தான் பதடியெனல் எண்டு சொல்லிறதும் வினைச்சொல். இந்த இரண்டு சொற்களிலும் ஒரு நுட்பம் இருக்கு. அதாவது இரண்டு சொற்களும் அல் எண்ட விகுதியிலை முடியிது. இதை இலக்கணத்திலை அல்விகுதி வியங்கோள் எண்டு சொல்லிறது. சுந்தரி நீர் என்ன சொல்லுறீர்.?

சுந்தரி: நான் என்னத்தைச் சொல்ல அப்பா. அந்நாளிலை தமிழ் இலக்கண வகுப்பிலை ஏமிலாந்திக் கொண்டுதான் இருக்கிறனான். எனக்குத் தலை கிறுகிறுக்குது.

ஞானா: அப்பா அதாவது வந்து திருவள்ளுவர் இந்தத் தலைகிறுகிறுக்கிற இலக்கணத்தையும் மறந்து போகாதையுங்கோ படிச்சு வைச்சுக்கொள்ளுங்கோ என்டு சொல்லிறார். அப்பிடித்தானே.

அப்பா: வேறை என்ன ஞானா. இன்னும் ஒரு நுட்பம் இருக்குப் பார் பிள்ளை. முன்னுக்கு வந்த மகனெனல் என்ட சொல்லிலை மனிதன் என்டு சொல்லலாமா? சொல்ல முடியாது என்ட எதிர்மறைப் பொருள் வருகுது. பிறகு வாற பதடியெனல் என்ட சொல்லிலை பதடிஎன்று சொல்லலாமா? ஆம் சொல்லவேண்டும் என்ட உடன்பாட்டுப் பொருள் வருகுது. இந்த அல்விகுதி வியங்கோள் விளையாட்டு எப்பிடி இருக்கு ஞானா?

ஞானா: அப்பா உது விளையாட்டில்லை. உண்மையிலை குறும்புதான். பிழையாய் விளங்காதையுங்கோ. இவ்வளவு பொருளையும் குறுகத் தறிச்சுக் குறும் பாவாக வைச்சிருக்கிறார் எண்டு சொல்லிறன்.

சுந்தரி: அப்பா எல்லிப்போலை எலுமிச்சம்புளித் தண்ணி குடிச்சால்தான் இந்தத் தலை கிறுகிறுப்பு மாறும். வாருங்கோ உங்களுக்கும் கரைச்சுத் தாறன்.

(இசை)

No comments: