இலங்கைச் செய்திகள்

எல்பிட்டி திலிதுற தோட்டத்தில் தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் வீடுகளுக்கு தீவைப்பு

அக்காதங்கை வாய்ச்சண்டை இருவரது உயிரையும் பறித்தது யாழ்ப்பாணத்தில் பரிதாப சம்பவம்

நாட்டில் ஏற்படக்கூடிய பெருமாற்றத்தை தவிர்த்துக்கொள்வதற்கு உள்ளூர் ரீதியான சிந்தனை

சமயோசிதமான கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்ட கல்வி நிலை
எல்பிட்டி திலிதுற தோட்டத்தில் தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் வீடுகளுக்கு தீவைப்பு

 Monday, 16 April 2012
house_burn_காலிஎல்பிட்டி திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் மீது பெரும்பான்மையினர் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு, பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக அததெரண இணையத்தள செய்தி தெரிவிக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எல்பிட்டிதிலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ்க் குடும்பங்களை சந்தித்து தன்னை சேர் அல்லது மாத்தயா என்றுதான் அழைக்க வேண்டுமென அச்சுறுத்தி வந்துள்ளார்.


எனினும் அந்த இராணுவச் சிப்பாய்க்கு அடிபணிய திலிதுற தோட்ட தமிழ் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளனர். இதனால் இந்த மக்கள் மீது இராணுவச் சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்து வந்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி புதுவருட விடுமுறையில் வந்துள்ள இராணுவச் சிப்பாய் திலிதுற தோட்டத்திற்குச் சென்று இளைஞர் ஒருவரிடம் தன்னை சேர் என அழைக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் புதுவருடத்தில் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என குறித்த இராணுவ சிப்பாய் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அவர் சொன்னபடியே 14 ஆம் திகதி காலை 10 மணியளவில் திலிதுற தோட்டத்துக்கு வந்த இராணுவச் சிப்பாய் தன்னை சேர் என அழைக்க மறுத்த இளைஞனை அவருடைய வீட்டுக்குள் போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்த தமிழ் இளைஞர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஏன் அடிக்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார்.

இதன்போது குறித்த இடத்திற்கு திடீரென வந்த 2530 பெரும்பான்மையின இளைஞர்கள் இவ்விருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்த 7 வீடுகளை தீயிட்டு எரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் போன்றவற்றிற்கும் தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த தங்க நகை, பணம் மற்றும் வாகன உரிமம், தொலைக்காட்சி என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் இலட்சக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து எல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸாரும் அங்கு வந்துள்ளனர்.பொலிஸார் வந்து நின்றதை கண்டும் பெரும்பான்மையின இளைஞர்கள் தமிழர்களின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து நிலைமையை சமாதானம் செய்யவே அதிக முயற்சி செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்களை பொலிஸார் கைது செய்ததோடு, மேலும் சில தமிழ் இளைஞர்களை பெயர் குறிப்பிட்டு தேடி வந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமிந்தகுமார் மற்றும் சந்திரகுமார் என்ற இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிதிலிதுற தோட்டத்தில் சுமார் 520 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 3400 தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நன்றி தினக்குரல்


அக்காதங்கை வாய்ச்சண்டை இருவரது உயிரையும் பறித்தது யாழ்ப்பாணத்தில் பரிதாப சம்பவம்
Sunday, 15 April 2012

யாழ்நகர் நிருபர்


சகோதரிகள் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அரைமணி நேர இடைவெளியில் அவ்விருவரதும் உயிர்களைப் பறித்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணத்தில் புதுவருட தினமான வெள்ளிக்கிழமை மாலைஇடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கும் இலுப்பையடிச்சந்திக்குமிடையில் பலாலி வீதியில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில்இடம்பெற்ற இந்தத் துயரச்சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆங்கில ஆசிரியையான செல்வி சங்கரப்பிள்ளைசுவர்ணலதாவும் (43 வயது) அவரது சகோதரியும் கொட்டடி நமசிவாயம் வித்தியாலய ஆங்கில ஆசிரியையான செல்வி ச.கீதாஞ்சலியுமே (40 வயது) உயிரிழந்தவர்களாவர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

இவ்விருவரும் தாய் தந்தை மற்றும் இரு சகோதரிகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்தனர்.

புதுவருடம் பிறப்பதற்கு முன் இவ்விரு சகோதரிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுவணர்லதா தொலைக்காட்சி இருக்கும் அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டார். இவ்வாறான வாய்த்தர்க்கம் இடையிடையே ஏற்படுவதால் இதனை யாரும் பொருட்படுத்தவில்லை. எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அந்த அறைக்கதவை தட்டிய போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது, பல தடவைகள் அழைத்தும் பதில் வராததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பஞ்சாபியின் மேல் சால்வையால் மின்விசிறியில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வீட்டிலிருந்தோர் கத்திக்குளறியவாறு சால்வையை வெட்டி உடலை கீழே இறக்கிய போது அவர் இறந்துவிட்டதை அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சகோதரி உணர்ந்து கொண்டார்.

பதைபதைத்த பெற்றோர் கீழே கிடந்த மகளின் உடலை வாகனமொன்றில் ஏற்றி யாழ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்து விட்டாரென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்பத்திரியில் இருந்துவீடு திரும்பிய அவர்கள் மற்ற மகளைக் காணாது எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். கிடைக்காது போகவே இரவு 8.30 மணியளவில் வீட்டின்பின்புறத்திலுள்ள கிணற்றை சென்று பார்த்த போது கீதாஞ்சலியின் உடல் மிதப்பது தெரிந்தது.அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போய்விட்டனர்.

சகோதரி தூக்கில் தொங்கி உயிரிழந்ததை கண்டே அவரது உடல் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன் மற்ற சகோதரி கிணற்றினுள் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

நேற்றுக்காலை இவர்களது வீட்டிற்கு வந்த பொலிஸார் கிணற்றினுள்ளிருந்து சடலத்தை வெளியே எடுத்து யாழ் ஆஸ்பத்திரி சவச்சாலைக்கு கொண்டு சென்று சகோதரியின் உடலுடன் இவரது உடலையும் வைத்தனர்.

இருவரதும் மரண விசாரணைகளின் பின் சடலங்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆங்கில ஆசிரியைகளான இவ்விரு சகோதரிகளினதும் அவலச் சாவு யாழ். மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி தினக்குரல்

நாட்டில் ஏற்படக்கூடிய பெருமாற்றத்தை தவிர்த்துக்கொள்வதற்கு உள்ளூர் ரீதியான சிந்தனை

 Tuesday, 17 April 2012
கலாநிதி ஜெகான் பெரேராஆசியாவின் அற்புதமாக இலங்கை வளர வேண்டும் என கனாக்காணும் இலங்கை அரசாங்கத்தின் சிந்தனையினை முன்மொழிந்தவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் (இலங்கையில்) இடம்பெற்ற சர்வதேச கண்காட்சி 2012 இனை திறந்து வைத்தார். கொழும்பில் 1975 ஆம் ஆண்டில் நடைபெற்ற அணிசாரா நாடுகளின் மகாநாட்டின் போது சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மகாநாட்டு மண்டபத்திலேயே இக் கண்காட்சி இடம்பெற்றது. அப்போது இலங்கையில் தயாரிக்கப்படும் உயர் ரக உற்பத்திகள் அதாவது கைத் தொழில் உற்பத்திகள் முதல் இயற்கை / ஆரோக்கிய உணவு உற்பத்திகள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒப்பளவில் நன்கு கல்வி கற்ற இலங்கையின் தொழிற்படை இரசனை மிகுந்த இலங்கையரது வாழ்க்கைப் பாணி, பொருளாதார உள்ளார்ந்த வளம் என்பவற்றுக்கு அவை கவர்ச்சி மிகு வகையில் சான்று பகர்வனவாகக் காணப்பட்டன. இருந்த போதிலும் அவற்றைப் பார்வையிட பொது மக்கள் பெருமளவில் வருகை தந்திருந்தாலும் வெளிநாட்டில் இருந்து இவற்றைக் கொள்வனவு செய்ய வருகை தந்திருந்தோர் அளவோ பெரிதும் வரையறைக் குட்பட்டதாகவே காணப்பட்டது.

கண்காட்சியில் தமது உற்பத்திகளை பார்வைக்கு வைப்பதற்காக கடைகளை திறந்திருந்த இலங்கை ஏற்றுமதியாளர்கள் தெட்டத் தெளிவான செய்தி ஒன்றினைப் பெற்றுக் கொண்டனர். கொள்வனவு செய்யக் கூடிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அயல் நாடுகளான ஆசிய நாடுகளில் இருந்தே பெரும்பாலும் வந்திருந்தனர். அவர்களிலும் பெரும்பாலானோர் சீனாவில் இருந்தே வந்திருந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த கொள்வனவாளர்கள் எமது உற்பத்திகளின் மாதிரிகளைக் கொள்வனவு செய்து கொண்டு போய் தமது நாட்டு தொழிலாளர்களைக் கொண்டு இவற்றில் பயன்படுத்தியுள்ள பாணி, தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போலி உற்பத்திகளை செய்ய முயற்சிப்பார்கள் என எமது ஏற்றுமதியாளர்களில் சிலர் ஆதங்கப்பட்டனர். இலங்கையின் ஏற்றுமதிகளுக்குப் பிரதான கொள்வனவாளர்களான மேற்கத்தைய நாட்டு சந்தைகளைச் சார்ந்தவர்களது பிரதிநிதிகள் பெருமளவில் வராததால் இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆசிய நாடுகளில் நெருங்கிய அரசியல் ஆதரவினை இலங்கை பெற்றிருப்பதன் காரணமாக இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு பொருளாதார ரீதியிலான நன்மைகள் வழங்கக் கூடிய சர்வதேச மட்டத்திலான பொருளாதார பயன்கள் ஏதும் கணிசமான அளவில் ஏற்படப் போவதில்லை என்னும் கருத்தும் ஏற்பட்டுள்ளது.

ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெற்று மேற்குலக நாடுகளுடன் மனித உ ரிமைகள் தொடர்பாக முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தாக்கங்கள் பற்றி அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டிய தேவை உண்டு. ஆசியாவோ அல்லது மேற்குலக நாடுகளோ எவையாயினும் எமது நாட்டைப் பொறுத்து பொருளாதார நலன்களே எமக்கு மிக முக்கியமானவையாகும். முன்னர் வறுமையான நாடுகளாக இருந்த மூன்றாம் உலக நாடுகள் தமது ஏற்றுமதிகளை அடிப்படையாகக் கொண்டே பொருளாதாரத்தில் விருத்தி பெற்று இப்போதைய மாற்றங்களை அடைந்தன என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய செய்தியாகும். இந்தியாவும் சீனாவும் பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்டுள்ளன. ஆனால் அச்சந்தைகள் சர்வதேச ரீதியானதும் சிநேக பூர்வமானதுமான ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்ற சந்தைகளாக இருப்பதில்லை. ஏனெனில் அவற்றின் பெரும்பான்மையான உள்நாட்டு கொள்வனவாளர்களுக்கு

உ ள்நாட்டின் மலிவான உற்பத்திகளே ஏற்றனவாகும். ஒப்பளவில் உயர்ரக உற்பத்திகளைச் செய்யும் இலங்கை உற்பத்திகளுக்கு மேற்கத்திய சந்தைகளிலே தயாராகவும் பெரியளவிலும் சந்தைகள் நிலவுகின்றன.

மேற்கத்தைய சந்தைகள்

மேற்குலக நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதால் அந் நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே அரசியல் உறவுகளில் சீர்குலைவு ஏற்படலாம். அதனால் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புகள் மேற்குலக நாடுகளில் சுருங்குவதால் இலங்கையில் வருமானம் மற்றும் அதன் தொழில் வாய்ப்புகள் மீது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். ஏற்கனவே இலங்கை கடந்த காலங்களில் அனுபவித்து வந்த ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைகளை இழந்துள்ளது. அதனால் குறிப்பாக ஆடை தொழில்களைப் பாதித்ததனால் நூற்றுக்கணக்கான சிறிய ஆடைத் தொழிற்சாலைகள் இலங்கையில் மூடப்பட்டு விட்டன. இப்போது ஐக்கிய அமெரிக்காவின் தொழிலாளர் இயக்கம் இலங்கை மனித

உ ரிமைத் தரங்களை மீறியுள்ளதாக குற்றஞ் சாட்டி அந் நாட்டிற்கு ஜி.எஸ்.பி. சலுகைகளை வழங்கக் கூடாது எனக் கூறி அதனை தடை செய்யும் படி வழக்குத் தொடர்ந்துள்ளது.

மேற் கூறப்பட்ட வரிச் சலுகைகள் வழங்கப்படுவதற்கான தீர்மானங்கள் தொடர்புள்ள நாட்டுடனான அரசியல் நிலைவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அரசியல் உறவுகள் சுமுகமாக உள்ள நாடுகளுக்கிடையே சில குறைபாடுகளும் கவனிக்கப்படாது பொருளாதாரச் சலுகைகள் வழங்கப்படுகின்றமையும் உ ண்டு. அவ்வாறான சலுகைகள் மறுக்கப்படுவதன் காரணமாக அரசாங்கத் தலைவர்களது வாழ்வினை எது வகையிலும் அவை நேரடியாக பாதிக்கப்போவதில்லை. ஆனால் பொது மக்களை பெருமளவுக்கு பாதிக்கத்தான் செய்யும். மேற்கத்தேய நாடுகளின் மனித உ ரிமைத் தரங்களுக்கு எதிராக போராடுவதற்காக தேசியத்துவத்தினை தூண்டி விடுவதனால் இறுதியில் நாட்டினுள்ளும் சர்வதேச ரீதியாகவும் நல்லிணக்கம் அழிவுறுவதுடன் பொருளாதாரச் சுமைகளையும் இன்னல்களையும் சுமக்கவும் நேரிடும்.

ஜெனீவாவில் அடைந்த தோல்வி அரசாங்கத்திற்கு ஒரு பெரும் எதிர்மறையான விளைவாகும். இதுவரை வெற்றிகளையே அடைந்து வந்த அரசாங்கத்திற்கு அது வெளித் தோன்றாத தோல்வியின் பதிவாக இருக்கும். 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் போதான மனித உ ரிமைகள் மீறல் மீதும் மற்றும் பொறுப்புகள் கூறுவது தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதும் தனக்கு எதிரான தீர்மானத்தை வெற்றி கண்டது போன்று இவ் வருடமும் (மார்ச் 2012) ஏற்பட்ட தீர்மானத்தை வெற்றி கொள்ளலாம் என அரசாங்கத் தலைவர்கள் மனப்பால் பருகிய வண்ணமிருந்தனர். தோல்வி யுற்றதன் பின்னர் ஜெனீவாவில் ஏற்பட்டது ஒரு பக்கம் சார்ந்த அரசியல் மயப்படுத்தப்பட்ட சர்வதேச ஒழுங்கின் விளைவு என்றும் இரட்டைப் பெறுமானங்கள் நிலவுவதன் காரணமாக ஏற்பட்ட விளைவு என்றும் சாட்டு கூறிக் கொள்கின்றனர். மேற்குலக நாடுகளும் இஸ்ரேல், பஹ்ரெய்ன் போன்ற அவர்களது ஆதரவாளர்களும் பல்வேறு குற்றங்களை புரிந்து விட்டு தம்மை இது போன்ற குற்றச் சாட்டுகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றனர் என்றும் குற்றம் கூறி வருகின்றது.

இராஜதந்திர மாற்றம்

சர்வதேச முறைமையினை யதார்த்த பூர்வமாக மதிப்பீடு செய்து பார்க்கும் போது அதில் கூடிய பலம் வாய்ந்த நாடுகளின் ஆர்வங்களுக்குச் சார்பாக அது செயற்படுவதும் அம் முறையானது தொடர்ந்தும் செயற்பட பங்களிப்பவர்களுக்குச் சாதகமாக செயற்படுவதுமே கண்கூடு. அனைத்து நாடுகளுக்கும் நீதியும் நியாயமும் வழங்கக் கூடியதான உலக அரசாங்கத்தின் தோற்றம் ஏற்படும் வரையில், சர்வதேச முறைமை அதன் படிமுறை வளர்ச்சியின் செய்முறையில் இன்னும் பல வளர்ச்சிகளை காண வேண்டியுள்ளது. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி முழுமையாக ஏற்படாத நிலையில் காணப்படும் பல குறைவிருத்தி நாடுகளின் ஜனநாயக அமைப்புகளை மதிப்பிடும் போது காணப்படும் குறைபாடுகளில் இருந்து இது பெரிதும் வேறுபட்டதாக இல்லை. இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் பிரதான சிபாரிசுகளில் நாட்டில் சட்டத்தின் வாயிலான ஆட்சி அமைக்கப்படல் வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இவ்வாறான நல்லாட்சிக்கான மாற்றங்கள் வரும் வரையில் இராஜதந்திர வாழ்வுக்கான சவால்களே காணப்படும். தான் வாழப் பழகிக் கொண்டு, இரட்டை வேடங்களும் குற்றமிழைத்து விட்டு தண்டனையில் இருந்து பாதுகாக்கப்படுவதுமான நிலைவரங்களுமே நிலவும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கம் இராணுவ ரீதியாக வெற்றி கண்டமையினை மனதில் வைத்துக் கொண்டு மேற்குலக நாடுகளையும் தான் வெற்றிக் கொண்டு விடலாம் என எண்ணலாகாது. இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிக் கொண்டு நாட்டில் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் நிலை நிறுத்துவதற்காக இலங்கையின் யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரையிலும் முழு உலகமுமே இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி வந்தன. இலங்கை இப்போது எதிர்த்து மோதுகின்ற எதிர்த் தரப்பு தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளல்லர். அவர்கள் பலத்தில் விழிம்பற்ற மேற்கத்தைய உலகம் என்பதனை உணரவேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரபல்யத்தினையும் சிங்கள தேசியத்தின் வீரத்தினையும் பெரிதாக பிரேரிப்பவர்கள் சில நேரம் இந்த சமத்துவமற்ற போராட்டக் காரர்களிடையேயான போராட்டத்தில் இலங்கை வென்று விடக் கூடும் எனக் கூறலாம். அவர்கள் சமரசம் பேசுவதை விட அநீதிக்காக போராடுவதே சிறந்தது எனக் கூறுவார்கள். அரசாங்கத்தைப் பொறுத்தமாட்டில் அது இலங்கைக்குள் நீதி நிலவினால் தான் தான் பலமாக இருக்கலாம் என அதன் பாணியில் சிந்திக்கின்றதே ஒழிய, அது நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழு கூறிய குற்றம் புரிந்தவர்கள் பாதுகாக்கப்படுவது ஒழிந்து மனிதர்களுடைய ஆட்சி மாற வேண்டும் என்பதனைப் பற்றி சிந்திப்பதாக இல்லை.

மேற்குலகத்திற்கு ஆப்ரகாம் லிங்கன் கதாநாயகனாக இருக்கலாம் . ஆனால் இலங்கைக்கு மகிந்த ராஜபக்ஷவே கதா நாயகன் இருப்பதாக பெரும் பதாகைகளில் எழுதப்பட்டுள்ளது. நாட்டில் உள் நாட்டு யுத்தம் நிகழ்ந்து உயிர்களும் சொத்துக்களும் பெருமளவில் சேதமாகிய நாடுகளை இவர்கள் இருவரும் தலைமை தாங்கியவர்கள். ஒருவர் யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தைக் கொண்டு வர முயற்சித்த போது கொல்லப்பட்டார். மற்றவரோ இப்போது தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பவர். நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளை முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இவரும் கூட ஒரு கதாநாயகனாக முடியும். முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனை சூரியக் கடவுள் என்றும் எவராலும் வெல்லப்பட முடியாததும் தமிழ்த் தேசியத்தின் துணிச்சல் மிக்க தலைவராகவும் கருதப்பட்டதில் இருந்து எந்த விதத்திலும் வேறுபடாத வகையிலேயே இப்போதும் இப்போதுள்ளவர் மீதும் சொல்லாட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை துரதிர்ஷ்டவசமானதே. இவ்வாறான பொம்மலாட்டங்களில் இருந்து வெளியேறாது போனால் இலங்கை அரசாங்கம் தற்போது சென்று கொண்டிருக்கும் வளை வழியினால் ஏற்படக் கூடிய தேசியளவிலான மாமாற்றம் கொண்டு வரக் கூடிய ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.
நன்றி தினக்குரல்


சமயோசிதமான கோரிக்கை

Friday, 20 April 2012
இனநெருக்கடிக்கு இறுதித் தீர்வானது வெளிமட்ட மத்தியஸ்தத்துடன் மட்டுமே சாத்தியமாகும் என்ற வலியுறுத்தலை வருகை தந்திருக்கும் இந்திய பாராளுமன்ற உ றுப்பினர் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்துடன் ஒருவருடத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூட ஆக்கபூர்வமான பெறுபேறுகள் எதுவும் கிட்டவில்லை என்பதனாலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் இருந்து இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்புடன் மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு கூட்டமைப்பினரிடம் இந்தியக் குழுவினர் கேட்ட போதே இதுவரை பேசிப் பேசி எந்தவொரு பலாபலனும் கிட்ட வரவில்லை என்ற கவலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பேச்சை ஆரம்பிக்க எங்களுக்கும் விருப்பம் ஆனால் இரு தரப்பும் பேச்சில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அரசு அதற்கு முன் வர வேண்டும் என்று களநிலைவரத்தை சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். அதே சமயம் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலமே சகல விடயங்களும் இனி மேல் ஆராயப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இந்தியக் குழுவுக்குக் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னரான இலங்கையின் நிலைவரத்தையும் இடம்பெற்று வரும் விடயங்களையும் இந்தியா அறிந்து கொள்ளும் பொருட்டு டில்லிக்கும் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய இந்தியத் தூதுக் குழுவிடம் சம்பந்தன் கேட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.


இலங்கையில் சமூகங்கள் மத்தியில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அர்த்த புஷ்டியான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வை எட்டுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்பதே தமிழ்க் கட்சிகள் இந்தியாவிடம் முன்வைத்துள்ள ஒட்டு மொத்தக் கோரிக்கையாகும்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையானது இந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் பேச்சாகவே நீண்ட காலமாக இழுபட்டு செல்வதைக் காண முடிகிறது. வெறுமனே உணர்வுகளை தட்டி விடும் கைங்கரியங்களே இடம்பெறுவதையும் தத்தமது போட்டி அரசியலுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயன்படுத்தும் தன்மையையும் காண முடிகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள மிதவாதத் தமிழ் குரல்களை செவி சாய்க்கும் தன்மையை தமிழகத் தலைவர்கள் வெளிப்படுத்தாதபோக்கு தொடர்வதையும் அவதானிக்க முடிகிறது. கடந்த காலத்தைப் போன்றே தற்போதும் உணர்வுகளைத் தட்டி யெழுப்பும் அரசியலுக்கு தமிழகத் தலைவர்கள் முன்னுரிமை கொடுப்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் கொழும்புக்கு தனது முன்னைய பாணியில் அரசியலை முன்னெடுப்பதற்கு இது பேருதவியாக அமைந்திருப்பதாகத் தென்படுகிறது. அரசுடன் பேச்சு நடத்துவதால் எந்தப் பெறுபேறும் இல்லாத நிலையில் வெளி மட்டத் தலையீட்டை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்க் கூட்டமைப்பு நாடி நிற்கையில்; எந்தவொரு தீர்வும் உள் நாட்டில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக டில்லியுடன் முட்டி மோதும் பாதையை தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.க. தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அதன் பரம அரசியல் எதிரியான தி.மு.க. இன்னொரு படிக்கு மேலாக சென்று விடவேண்டும் என்ற உந்துதலுடன் இலங்கைத் தமிழர் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதை தி.மு.க. வின் தலைவர் கருணாநிதி இந்த வாரம் விடுத்திருக்கும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு உதவக் கூடிய வகையில் தத்தமது அரசியல் பலத்தை பிரயோகித்து அழுத்தத்தை கொடுக்கும் தன்மையை தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளிடமும் காணவில்லை. அதே சமயம் தமிழகத்தின் இந்த இருபெரும் திராவிட இயக்கக் கட்சிகளும் மாறி மாறி டில்லியில் தமது செல்வாக்கை செலுத்தும் தன்மை தொடர்ந்தும் காணப்படுவதால் இலங்கைத் தமிழர் விவகாரத்தை இக் கட்சிகள் தமது அரசியலுக்காக மாறி மாறிப் பயன்படுத்தும் தன்மையே காணப்படுகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தை கொழும்பு மேற்கொள்ளாத வரை வெறும் உமியை குற்றும் முயற்சியாகவே இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சியும் அமையும்.

யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதே முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய விடயம் என்ற மந்திர உச்சாடனங்களே கொழும்பிடம் இருந்து தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந் நிலையில் இன நெருக்கடிக்குத் தீர்வு என்பது தொலை தூரத்துக்கு தொடர்ந்தும் இழுபட்டுச் செல்லும் என்பதையே களநிலைக் காட்சிகள் காண்பிக்கின்றன. இந் நிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கோரும் சம்பந்தனின் கோரிக்கை சமயோசிதமானதாக இருக்க முடியும்.
நன்றி திங்கக்குரல்
யாழ்ப்பாண மாவட்ட கல்வி நிலை

Friday, 20 April 2012
த.மனோகரன்


தமிழரின் சொத்து கல்வி என்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தவரின் முதன்மைச் சொத்து கல்வியே தான் என்று அடித்துக் கூறுகின்றோம். அன்றிலிருந்தது அந்த உயர்நிலை. இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளதன் பெறுபேறுகளைத் தேசிய ரீதியிலான பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. யாழ்ப்பாணக் கல்வி, யாழ்ப்பாணத் தமிழரின் கல்வி இன்று நாட்டின் பின்தள்ளப்பட்டுள்ளமையை மதிப்பீடுகளும் வெளிப்படுத்துகின்றன.

இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் எலிசபெத் மகாராணியாருக்கும் கற்பித்த பெருமை யாழ்ப்பாணத்தவருக்கு உண்டு என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதாது. இலங்கையில் ஏனைய சமூகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவரின் கல்வியின் உயர்வை, மேன்மையைக் கண்டு பொறாமை கொண்ட காலம் போய் இன்று இலங்கையின் கல்வியில் பின்னடைந்த மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் ஒன்று என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலம் தீவிர சிந்தனைக்குரியது. தலை நிமிர்ந்து பெருமையுடன் திகழ்ந்த யாழ்ப்பாணக் கல்வி இன்று தொய்ந்து துவண்டுவிட்டது என்பதை வேதனையுடன் ஏற்றேயாக வேண்டும்.

யாழ்ப்பாணக் கல்விச் சமூகம் இன்றைய நிலையைச் சீர்செய்ய திட்டமிட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை ஆகியவற்றின் வருடாந்த பெறுபேறுகளை ஆய்வு செய்யும் போது படிப்படியாகக் கீழ் நோக்கியே கல்வித்தரம் நகர்ந்து வருதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த கால சூழ்நிலைகளை மட்டும் இதற்கான ஏதுவாகக்கூறிக்கொண்டிருக்க முடியாது. யாழ்ப்பாணக் கல்வி நிர்வாக ஒழுங்கமைப்பில் பாரிய குறைபாடுகளும் இதற்கான காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படக்கூடியதாயுள்ளது. அத்துடன் தேவையற்ற வெளியார் தலையீடுகளும் கல்வித்துறையின் பின்னடைவுக்கான ஒதுக்களிலொன்றாகக் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலே வலிகாமம், யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என ஐந்து கல்வி வலயங்களும் அவற்றிலடங்கும் பதினைந்து கல்விக் கோட்டங்களும் மொத்தமாக நானூற்று தொண்ணூறு (490) பாடசாலைகளும் உள்ளன. கடந்த ஆண்டு இறுதி நிலையின் படி நானூற்று இருபது பாடசாலைகள் மட்டுமே இயங்குவதாயும் எழுபது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளதாகவும் கணிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன.

யாழ்ப்பாணக் கல்வி வலயம்

யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலுள்ள நூற்றி பதின்மூன்று பாடசாலைகளில் பதினான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது இயங்கும் பாடசாலைகள் தொண்ணூற்றொன்பது (99) மட்டுமேயாகும். இக்கல்வி வலயத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் ஆகிய கல்விக் கோட்டங்கள் உள்ளன. அவற்றில் முறையே 28,40,45 என்ற எண்ணிக்கையான பாடசாலைகளடங்குகின்றன. இவற்றில் யாழ்ப்பாணக் கல்விக் கோட்டத்தில் எட்டுப் பாடசாலைகளும் கோப்பாய் கல்விக் கோட்டத்தில் ஆறுமாகப் பதின்நான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளமை வெளிப்படுகின்றது.

இவ்வலயத்தில் அதிபர்கள் தரம் கொண்ட நூற்றிப் பதின்மூன்று பேர் இருக்க வேண்டிய போதும் தற்போது அத்தரத்திலிருப்போர் எண்பத்து நான்கு பேர் மட்டுமே.

வலிகாமம் வலயம்

தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் ஆகிய நான்கு கல்விக் கோட்டங்களை உள்ளடக்கிய இக்கல்வி வலயத்தில் நூற்றி ஐம்பது பாடசாலைகளிலிருந்த போதும் தற்போது இயங்கும் பாடசாலைகள் நூற்றி இருபத் தொன்பது மட்டுமே என்பது கணிப்பிடப்பட்டுள்ளது. தெல்லிப்பளைக் கல்விக் கோட்டத்தில் பதினேழு பாடசாலைகளும் உடுவில் கோட்டத்தில் மூன்றும் சண்டிலிப்பாயில் ஒன்றுமாக மொத்தம் இருபத்தொரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளன.

அதிபர் தரம் கொண்ட ஆளணி நூற்றி நாற்பத்தி இரண்டாக இருக்க வேண்டிய நிலையில் அத்தரத்தில் எண்பத்தொருபேரே இருப்பது தெரிய வந்துள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்தில தெல்லிப்பளையில் இருபத்தெட்டு பாடசாலைகளும் சண்டிலிப்பாயில் நாற்பது பாடசாலைகளும் சங்கானையில் முப்பத்தொரு பாடசாலைகளும் உடுவிலில் முப்பது பாடசாலைகளுமே தற்போது இயங்குகின்றன.

வடமராட்சி கல்வி வலயம்

இக்கல்வி வலயத்தில் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறைக் கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்துமூன்று பாடசாலைகளில் இரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் முப்பத்தொரு பாடசாலைகளே இயங்குகின்றன. அதேபோல் கரவெட்டி கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்து மூன்று பாடசாலைகளில் இரண்டு மூடப்பட்ட நிலையில் முப்பத்தொன்று மட்டுமே இயங்குகின்றன.

மருதங்கேணி கல்விக் கோட்டத்தில் அடங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை பத்தொன்பதாகும். அவற்றிலே இயங்குபவை பதினேழாகவும் மூடப்பட்ட நிலையிலுள்ளவை இரண்டு எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளன.

வடமராட்சிக் கல்வி வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் தர ஆளணியின் எண்ணிக்கை எண்பத்தாறாக இருந்த போதிலும் தற்போது அத்தரத்தில் ஐம்பத்திமூன்று பேரே உள்ளமை தெரியவந்துள்ளது.

தென்மராட்சி கல்வி வலயம்

தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்டதாக சாவகச்சேரி கல்விக் கோட்டம் மட்டுமேயுள்ளது. இக்கல்விக் கோட்டத்தில் மொத்தமாக அறுபத்தாறு பாடசாலைகள் அடங்குகின்றன. இருந்த போதிலும் ஒன்பது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஐம்பத்தேழு பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் ஐம்பத்தெட்டு நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருந்த போதிலும் முப்பத்தாறு அதிபர் தரம் கொண்டவர்கள் மட்டுமே செயற்படுகின்றனர்.

தீவகக் கல்வி வலயம்

தீவகக் கல்வி வலயமானது வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய நான்கு கல்வி கோட்டங்களை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. இவற்றில் முறையே 34,18,10,14 என மொத்தம் எழுபத்தாறு பாடசாலைகள் அடங்கியிருந்த போதும் மொத்தமாக இருபது பாடசாலைகள் செயலிழந்த நிலையில் மூடப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

வேலணை கல்விக் கோட்டத்தில் பன்னிரெண்டு பாடசாலைகளும், ஊர்காவற்றுறையில் இரண்டும், நெடுந்தீவில் இரண்டும் காரை நகரில் நான்குமாக மூடப்பட்டுள்ள இருபது பாடசாலைகளுமுள்ளன.

ஐம்பது நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருக்கும் போது இருபத்தைந்து பேர் மட்டுமே அத்தரத்தைக் கொண்டவர்களாயுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த அரசினர் பாடசாலைகள் 490 இற்குப் புறம்பாக ஆறு தனியார் பாடசாலைகளும் செயற்படுகின்றன. குறிப்பிட்ட அரசினர் பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மத்திய கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட, ஏனையவை மாகாண கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவையாக உள்ளன.

தரம் 3 எனப்படும் ஆரம்பப் பாடசாலைகளாக யாழ்.மாவட்டத்தில் இருநூற்றி முப்பத்தைந்து பாடசாலைகள் உள்ளபோதும் நூற்றி எழுபத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் அறுபது பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணம் வரை வகுப்புகள் கொண்ட தரம் 2 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள நூற்று அறுபத்தியிரண்டு பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் நூற்றி ஐம்பத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவு வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்ட நாற்பத்தெட்டுப் பாடசாலைகளில் நாற்பத்தேழும், அதே தர வகுப்புகளில் கலை, கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய நான்கு துறைக்குமான பாடங்கள் கற்பிக்கப்படும் வகுப்புகளைக் கொண்டதாகச் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பத்தைந்து பாடசாலைகளில் நாற்பத்து மூன்று பாடசாலைகளும் தற்போது இயங்கும் நிலையில் உயர்தர வகுப்புகள் கொண்ட மூன்று பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயேயுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேயன்றி ஏனைய எந்த அழுத்தங்களுக்கும் கல்வித்துறை ஆட்படலாகாது. யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் ஆரம்பப் பயிற்சி பெற்ற முதல் மொழிக்கான ஆசிரிய தேவை நானூற்றி எண்பதாகக் கணிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வலயத்தில் குறித்த தகைமை பெற்ற ஆசிரியர்கள் நூற்றி தொண்ணூறு வரையானவர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. அதாவது ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமை கொண்ட முந்நூறுக்குக்கிட்டிய ஆசிரிய வெற்றிடங்கள் இருப்பது தெரிய வருகின்றது.

அதேபோல் வலிகாமக் கல்வி வலயத்தில் ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமைகொண்ட ஆங்கில ஆசிரியர்களின் தேவை நூற்றி இருபதாக இருக்கும் போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்தாக மட்டுமே இருப்பதும் தெரியவருகின்றது. அதேபோல் வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய வலயங்களிலும் தேவைக்குக் குறைந்த ஆங்கில ஆசிரியர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, ஆரம்ப வகுப்பில் முதல்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பாரிய தேவையுள்ள போதும் யாழ்.கல்வி வலயத்தில் ஆங்கில ஆசிரியர்கள் மேலதிகமாக பணியிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஆசிரிய வளப்பங்கீட்டின் ஒழுங்கற்ற நிலையையும் நோக்குவது தவறில்லை.

ஆசிரியர்களும் கற்பிக்கும் மனநிலையில் உரிய சூழல், பணியாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பது மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் மாணவ, மாணவியரின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உரிய காலத்தில், உரிய கல்வியைக் குறித்த பாடத்திட்டத்திற்கமைய பாடசாலைகளில் மாணவ, மாணவியர் பெற்றுக்கொள்ள வழி செய்வது கல்வித்துறையினரின் பொறுப்பேயன்றி எப்படியாவது பாடசாலைகள் செயற்பட்டால் போதும் என்ற மன நிலையில் செயற்படக்கூடாது.

அறுபது வரையான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இயங்கும் ஆரம்பப் பாடசாலைகளிலும் ஆரம்பக் கல்வியை ஆட்டங் காணச் செய்யக்கூடாது. ஆரம்பக் கல்வியில் காணப்படும், ஏற்படும் பின்னடைவு இடை நிலைக் கல்வியின் போது பிள்ளைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உயர் கல்வியைத் தொடர வாய்ப்பற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

போக்குவரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு ஏற்ற போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்துவதுடன், அதற்கேற்ற வழிமுறைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும். அதைவிடுத்து இடமாற்றம் மூலம் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது உகந்ததல்ல. இதை ஆசிரிய சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி நிர்வாகத்துறையினரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாண நகரிலிருந்து வேலணைக்கு ஒரு ஆசிரியர் பணிக்காகப் பயணிப்பது சிரமமானதென்றால் யாழ்.மாவட்டத்திலிருந்து தினமும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பயணம் செய்து பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

துவண்டு, தொய்ந்து போயுள்ளது யாழ்ப்பாணத் தமிழர் கல்வி என்பதை மறுக்க முடியாது. அதுவே யதார்த்தம். உண்மை நிலை. இதை ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். சமூக நோக்கில் சிந்திக்க வேண்டும். அன்றைய யாழ்ப்பாணக் கல்வித் தரத்தையும் இன்றைய கல்வித்தரத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். தொய்விற்குக் காரணத்தைக் கண்டறிந்து தமிழர் கல்வியைத் தூக்கி நிறுத்த வழிகாணவேண்டும்.

அரசியல் மற்றும் அதிகாரத் தரப்பாரின் தலையீடு கல்வித்துறையில் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறை நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கமைய சமத்துவமாக, சுயாதீனமாக உரியவளங்களைக் கற்கும் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுத்து தமது பணியை ஆற்ற வேண்டும்.

ஒரு பாடசாலையின் உயிர்நாடியாக முதலில் தோன்றமளிப்பவர் அப்பாடசாலையின் அதிபரே. தரமும், தகுதியும் கொண்டவர்களே ஆளுமைகொண்ட அதிபர்களாகச் செயற்படத் தக்கவர்கள். இன்றைய நிலையில் பல பாடசாலைகளில் ஆளுமையற்ற அதிபர்களின் நிர்வாகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. மறுக்க முடியாத இந்த யதார்த்த நிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

உலகப் புகழ்பெற்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டமேதைகள், கணக்காளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் என்று பல்துறைசார் புத்திஜீவிகளை உருவாக்கிய அன்றைய யாழ்ப்பாணக் கல்வி நிலையை இன்றைய கல்வி நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து தொய்ந்த இடத்தைக் கண்டறிந்து சீர் செய்ய வேண்டும். இது காலத்தின் தேவைமட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்தின் தேவையுமாகும்.

ஒரு காலத்தில் ஆண்டு தோறும் பல்துறைகளுக்குமாகப் பல்கலைக்கழகத்திற்குத் தகைமை கொண்டவர்களாக மாணவ, மாணவியினரை உருவாக்கிய மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரில சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்களிலிருந்து இன்று எத்தனைபேர் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். இந்தப் பின்னடைவின் ஏதுக்கள் கண்டறியப்பட வேண்டும்.

தமிழர் கல்வியைக் குறிப்பாக யாழ்ப்பாணக் கல்வியை மேன்மைப்படுத்த அன்று நம்முன்னோர் பாடுபட்டனர். அல்லும்பகலும் அயராது உழைத்தனர். இன்று நாம் அவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை மட்டும் நடத்தும் நிலையில் உள்ளமை கவலைக்குரியது.

யாழ்ப்பாணக் கல்வி நிலையைச் சீர்செய்ய மாணவ, மாணவியரின் கல்வித் தேவையை அதாவது அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரிய ஆளணியை ஒழுங்குபடுத்தல் முதன்மையாகின்றது. பூரணத்துவமான அதாவது ஒரு மாணவன் தான் கற்கும் சகல பாடங்களுக்கும் உரிய கற்பிக்கும் தகைமை கொண்ட ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஏனைய பௌதீக வளங்களும் உரிய படி கிடைக்கச் செய்ய வேண்டும். காலத்தின் தேவையறிந்து காலம் தாழ்த்தாது செய்யப்பட வேண்டியது இது.

கல்வியே சமூகத்தின் உயிர்நாடி. சமூகத்தின் உயர்வுக்கு ஆதாரம் கல்வி என்று மேடைப் பேச்சிலும் அறிக்கைகளிலும் மட்டுப்படாது யாழ்ப்பாணத் தமிழர் கல்வியை பண்டைய நிலைக்கு முன்னிலைப்படுத்த ஆசிரிய சமூகமும் பல்கலைக்கழக சமூகமும் பெற்றோரும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முன்வந்து செயற்பட வேண்டும்.

காலத்தில் வழங்கப்பட வேண்டிய கல்வியை, அதன் பெறுமதியை உணர்ந்து செயற்படுவது இறை பணியாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது போல் கல்விச் சேவையே சமூக சேவை, தேவை என்பதை நினைவிலிருத்தி நமது பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிதிறப்போம்.
நன்றி திங்கக்குரல்


 

No comments: