மௌனம் கலைகிறது 9 –நடராஜா குருபரன்


புலிகள் தம்மை அழித்துக் கொண்டிருக்க சிங்கங்கள்  ஒன்றாகி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்த தயாராகின
.
புலிகள் தம்மை அழித்துக் கொண்டிருக்க சிங்கங்கள் ஒன்றாகி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்த தயாராகின
மாற்றுக் கருத்துக்களுடன் உயிர் வாழவதற்கான உரிமையை மறுத்திருந்தமை தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அளவுகடந்த எதிரிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்தத் தூர நோக்கற்ற நடத்தையினால் - வெற்றுஇராணுவக் கண்ணோட்டத்தினால் எதிரியின் ராணுவமே பயன்களைப்பெற்றுக் கொண்டமை நான்காவது ஈழப்போரில் நிதர்சனமானது என எனது எட்டாவது தொடரிற் குறிப்பிட்டிருந்தேன்.
விடுதலைப்புலிகள் மாற்று இயக்கங்களைத் தடை செய்து அவர்களுட் பலரைக் கொன்றொழித்த போது அதனைத் துரோகிகளை அழிக்கும் ஒருநடவடிக்கையாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தினர். புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்கள் உண்மையான விடுதலைக்கு போராடவில்லை எனவும் விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என்ற விம்பமும் ஏற்படுத்தப்பட்டது.  எனவே இயக்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்ட போது பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியாகவே அதற்குத் துணைபோனார்கள்.


விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி காரணமாகவும் புலிகளின் பரவலான தாக்குதல்கள் காரணமாகவும் இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படத் தொடங்கியிருந்த காலத்தில் விடுதலைப்புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து எடுத்துக்கொண்ட முன்னிலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசியல் அடிப்படையில்லாத ஆயுத கலாசாரத்தை வீரபுருச வழிபாட்டை ஒரு இயக்கம் ஒரு தலைவன் என்கிற கோட்பாட்டை தமிழ் சமூகத்துள் வித்திடுவதற்கான அடித்தளத்தை வழங்கியது. இலங்கை இராணுவத்திடமிருந்து தமிழர்களைக் காப்பவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிற சூழ்நிலை ஏற்பட்டபோது புலிகளுடன் முரண்படுபவர்களை துரோகிகளாக தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்களாக காட்டக்கூடிய சூழ்நிலை மிக விரைவாகவே ஏற்பட்டு விட்டது. 
மற்றைய இயக்கங்களில் இருந்தவர்களை விடுதலைப் புலிகளை விமர்சித்தவர்களை ஏன் மாத்தையாவைக்கூட இந்தத் துரோகிப்பட்டியலுக்குள் அடக்கி விடுதலைப் புலிகளால் இலகுவாக அழிக்க முடிந்த போதும் கருணாவுடனான முரண்பாட்டை மட்டும் புலிகளால் சந்தடியில்லாமல் இலகுவாகக் கையாள முடியவில்லை. இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. கருணா தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடி இராணுவ வளையத்துக்குள் குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனக்கென ஒரு தளத்தைக் கிழக்கில் கொண்டிருந்தார். கருணாவினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அவர்களுக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்த போதும் கருணாவின் நேரடி ஆளுகையின் கீழேயே இருந்தனர். இதுமட்டுமன்றிக் கருணா விடுதலைப் புலிகளுள் நிலவிய பிரதேசவாத்தின் காரணமாகவே புலிகளில் இருந்து பிரிந்தார் என்கிற அரசியற் தோற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கிழக்கின் புத்திசீவிகளும் உதவியிருந்தனர். மேலும் கருணாவின் பிளவு நிகழ்ந்த நேரம் உலகத்தின் கவனமும் அன்று நிகழ்ந்து வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த முரண்பாட்டை நோக்கியும் திரும்பியிருந்தது. 
ஆயினும் புலிகள் வழமைபோலவே அரசியல் விளைவுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றிக் கருணா தரப்பையும் அவர்களது ஆதரவாளர்களையும் தேடி அழிப்பதில் முனைப்புக்காட்டியதுடன் அதற்காகாத் தமது பெருமளவு சக்தியையும் செலவிட்டனர். பதிலுக்கு கருணா தரப்பும் புலிகளையும் அவர்களது ஆதரவுத்தரப்பையும் குறிவைத்துப் பழிதீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடத்தொடங்கியது. 
தாங்கள் என்ன விதமான அரசியற் சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதையிட்டு அன்றைக்கு விடுதலைப்புலிகளின் தலைமை நிதானமுடன் சிந்தித்திருக்குமேயானால் பிற்பாடு முள்ளி வாய்க்காலில் மக்களையும் தமது ”மண்ணின் விடுதலையை” மட்டுமே சிந்தித்த பல ஆயிரம் போராளிகளையும் காவு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. கருணாவினது பிளவை அரசியல்ரீதியாகவும் இராசதந்திரரீதியாகவும் எதிர்கொள்வதை புலிகளின் இராணுவவழிப்பட்ட சிந்தனை தடுத்திருந்தது. முரண்பாடுகளுக்கு எப்பொழுது ஆயுதங்களினாலேயே தீர்வைக்கண்டு வந்த கலாசாரத்தின் வன்மப்பிடியுள் புலிகள் மீளமுடியாதபடி சிக்கியிருந்தனர்.
இலங்கை இராணுவமும் சர்வதேசமும் சேர்ந்து தம்மைச் சூழ ஒரு பயங்கரமான இராணுவப் பொறியை உருவாக்கி வருவதை அறியாமல் புலிகள் கருணாகுழுவை வேட்டையாடுவதில் முனைந்து கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த போது புலிகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட கடும்புலி எதிர்ப்பாளர்களையும் உள்ளடக்கிய ஆழ ஊடுருவும் படையணிகளையும் உளவாளிகளையும் பயிற்சியளித்து இலங்கை இராணுவம்  வன்னிக்குள் அனுப்பிக்கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பின்னர்வரும் தொடர்களில் விலாவாரியாக பார்ப்போம்.
இந்த சந்தர்ப்பத்தில் புலிகள் கருணா பிளவின் பின் நிகழ்ந்த உயிர்ப்பலிகள் அவற்றின் பின்னணிகள் அவற்றின் அரசியற்பரிமாணங்கள் குறித்தும் ஆராயவேண்டும்.
 ராஜன் சத்தியமூர்த்தியின் மரண வீடு
இதில் 2004 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் இணைக்கப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி கருணாவின் நெருங்கிய ஆதரவாளர் என்பதனால் 2004 மார்ச் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இவரது உறவினர் கந்தன் கனகசபை என்பவரும் கொல்லப்பட்டதோடு கனகசபை பாபு என்பவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார். இங்கே கவனிக்க வேண்டிய விடையம் என்னவெனில் கருணா புலிகளுடன் இருந்தபோது புலிகளின் முழுச் சம்மதத்தோடேயே 2004 ம் ஆண்டு நிகழவிருந்த பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் ராஜன் சத்தியமூர்த்தி வேட்பாளராகச் சேர்க்கப்பட்டார். ஆனால் கருணா புலிகளில் இருந்து நிரந்தரமாகப் பிரிந்ததும் திரு ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை அவர் கருணாவின் ஆதரவாளர் என்பதற்காகப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.  தேர்தல் முறை சனநாயகத்தில் பங்கு கொள்வதற்கெனத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை- தாங்களே தெரிவுசெய்த ஒருவரைப் புலிகள் சுட்டுக்கொன்றமை தேர்தல் வன்முறையாகவும் யுத்தநிறுத்த மீறலாகவும் பதிவுசெய்யப்பட்டது. 
சிவகீதா பிரபாகரன்
இதுமட்டுமல்ல இச்சம்பவம் வேண்டப்படாத இன்னொரு விளைவையும் ஏற்படுத்தியது. புலிகளின் இச்சிந்தனையற்ற வன்முறையின் காரணமாகச் சத்தியமூர்த்தி குடும்பம் புலிகளின் நிரந்தர எதிரியானது மட்டுமல்ல ராஜன் சத்தியமூர்த்தியின் மகளான சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அங்கத்துவத்தைப்பெற்று மட்டக்களப்பு மாவட்ட முதல்வராகி அரச ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டமையும் காண நேர்ந்தது. 
இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க European Union Election Observation Mission (EU EOM) Chief Observer Mr.John Cushnahan  உடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான விசேட குழுவின் தலைவர் (European Union (EU) Sri Lankan delegation head) Mr.Wouter Wilton னும் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தனர். 
புலிகளின் இந்த அல்லது இத்தகைய நடவடிக்கைகள் பின்னர் சமாதானப் பேச்சுக்களின்போது தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு பாவிக்கப்பட்டன விடுதலைப்புலிகளின் அரசியல் முகத்திற்கு அதன்வழி தமிழர்களின் அரசியல் நியாயங்களுக்கு எத்தகைய எத்தகைய பாதிப்புக்களை அல்லது தாக்கங்களைக் கொண்டு வந்தனவென்பதைப் பின்னர் பார்க்கலாம். 
2004ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளரான கிங்ஸ்லி ராஜநாயகம் 2004 ஒக்டோபர் 19ஆம் திகதி புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்கழப்பு மாவட்ட இணைப்பாளராக இருந்த இவர் புலிகளின் வற்புறுத்தலிலேயே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இவர் புலிகளுக்காகத் தனது தனிப்பட்ட நலன்கள் பலவற்றை இழந்தவர். ஆயினும் தேர்தலில் வெற்றி பெற்ற பின் கருணாவின் ஆதரவாளர் என முத்திரை குற்றப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் எடுக்காமல் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு பதவியை ராஜினாமாச் செய்வதாகக் கடிதம் கொடுக்கும்படி புலிகளால் நிர்பந்திக்கப்படார். இந்தக் கடிதத்தை கௌசல்யனே நிர்ப்பந்தித்துப் பெற்றுக் கொண்டதாக பின்னர் அறிந்தேன்.
வன்னியில் நிகழ்ந்த ஒரு ஊடகச் சந்திப்புக்காக சென்றிருந்த வேளையில் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் அலுவலகத்தில் திரு கிங்ஸ்லி ராஜநாயகம் தனது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது உறவினர்கள் சிலருடன் ஒரு ஓரத்தில் வேண்டத் தகாதவர்களாகக் காத்திருந்தனர். 
அவர் யார் எனத் தெரியாத போதும் தயா மாஸ்ரர் இவர்தான் கிங்ஸ்லி ராஜநாயகம் எனக் காட்டியது இப்போது ஞாபகம் வருகிறது.
புலிகளின் தலைமையுடன்,  தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு அந்தச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்க தேர்தலில் வெற்றி பெற்ற கிங்ஸ்லி ராஜநாயகம் புலிகளின் அரசியற் துறை அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் காத்திருந்தார்.ஆனால் பா. அரியநேந்திரன் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். இதற்கு இன்னுமொரு காரணமும் அப்பொழுது புலிகளால் முன்வைக்கப்பட்டது. வன்னித் தரப்பிற்கு ஆதரவாக இருந்த அரியநேந்திரனை தோலிவியுறுச் செய்து கிங்ஸ்லி ராஜநாயகத்தை கருணா தரப்பினர் செயற்கையாக வெல்ல வைத்தனர் என்பதே அது. இந்த நிலையில் வற்புறுத்திக் கடிதத்தை வாங்கிய பின்பும் கூட புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். இது குறித்து இவரது மரண வீட்டில் இவரது மகள் "நீங்களே பட்டியலில் இணைத்து பின்னர் நீங்களே ராஜினாமாச் செய்யச் சொல்லி பின்னர் நீங்களே கொன்றும் விட்டீர்களே” என வேதனையையுடன் கதறியதாக என் மட்டுநகர் நண்பர் சொன்னதும் இப்பொழுது ஞாபகம் வருகிறது.   இதுவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதனால் யுத்த நிறுத்த மீறலாகக் கொள்ளப்பட்டது. (அடிக்குறிப்பு 1)
 
தம்பையாவின் மரண வீடு
புலிகள் கருணாவின் ஆதரவாளர்களையும் அவரின் போரணிகளையும் இலக்கு வைக்க தானும் புலிகளின் குணாம்சத்தில் இருந்து எள்ளளவும் மாறுபடாதவர் என்பதை நிரூபிக்க கருணாவும் தயாரானார். இதன் பெறுபேறாக வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட பொருளியல் விரிவுரையாளர் தம்பையா 2004 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பில் அவரது வீட்டில் வைத்துக் கருணாதரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தம்பையாவை வன்னிப்புலிகளுக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டில் கருணாதரப்பினர் சுட்டுக் கொன்ற போது கருணாவை ஆதரித்த கிழக்குப் பல்கலைக்கழக புத்திசீவிகள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாது மௌனம் காத்தனர் இந்தச்செயலுக்கு இப்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர் ஒருவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளிநாடு சென்ற ஒருவர் மற்றும் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய இன்னுமொருவர் என சிலர் துணைபுரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 
2004 மே 31 அன்று மட்டக்களப்பு நகரில் தனது வேலைக்கு செல்லும் வழியில் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஐயாத்துரை நடேசன் என்பவரையும் கருணா தரப்பினர் பலியெடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்று அரை மணிநேரத்தில் சூரியனில் அதுபற்றி அறிவித்தோம். அப்போது எமது மட்டக்களப்பு நிருபராக இருந்த திரு துரைரத்தினம் அவர்களுக்குக் கூடத் தனது நண்பர் சுடப்பட்டது தெரியாது. நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு துயரமான சம்பவம் இடம்பெற்று விட்டது உடனேயே குறித்த இடத்திற்கு செல்லுங்கள் என வேண்டினேன். அதன்பின்னரே அவர் முதலில் அவ்விடத்தை அடைந்து நேரடி ஒலிபரப்பை வானொலிக்குத் தந்தார். இவ்வாறான எமது உடனடிச் செய்திவழங்கலை இட்டு இலங்கை இராணுவப்பிரிவும் கடும் கடுப்பைக்கொண்டிருந்தது. புளொட் மோகன் சுட்டுக்கொல்லப்பட்டதையறிந்து நான் பம்பலப்பிட்டியியில் அந்த இடத்திற்குச்சென்றபோது இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் “ சுடுகிறவர்கள் சுடுவதற்கு முன் சூரியனுக்கு சொல்லி விட்டா சுடுகிறார்கள் எனக் கடுமையான தொனியில் கேட்டார். உண்மையிலும் இந்த வகையான செய்திவழங்கல் என்பது எமது வானொலி செய்திப் பிரிவு மக்களிடமும் பல்வேறு தரப்பினரிடமும் கொண்டிருந்த தொடர்பாடற் பலம் காரணமாகவே சாத்தியமானது.
ஐயாத்துரை நடேசனின் மரண வீடு
ஐயாத்துரை நடேசனின் கொலையில் அந்நாளில் கருணாவின் அம்பாறை மாவட்டத்தளபதியாக இருந்தவரும் இன்னாளில் “அதி உத்தம ஜனாதிபதி”  மகிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும் இருக்கும் இனியபாரதியே நேரடியாகப் பங்கு கொண்டிருந்தார். இந்தப் பலி எடுப்பிற்கு கருணாதரப்புக் கூறிய காரணமும் நடேசன் வன்னிப்புலிகளுக்கு ஆதரவானவர் என்பதாகும். 
இவ்வாறு கருணாவின் பிளவோடு வாகரையில் தொடங்கி கிழக்கில் பரவிய மோதல் கொழும்பிற்கும் வந்து தொலைத்தது. 
குகனேசன், கேசவன், காஸ்ரோ. TMVP
2004 யூலை 25ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை என நினைக்கிறேன் அதிகாலை 4.15ற்கும் 4.30ற்கும் இடையில் நான் தூக்கத்தில் இருந்த போது எனது கையடக்கத் தொலைபேசி அலறியது. அதனை எடுத்த போது “அண்ணன் கொழும்பில் ஏதாவது பிரச்சனை நடந்ததா” என மறு முனையில் பேசியவர் கேட்டார்.  “இல்லை தம்பி இப்போ அதிகாலைதானே ஏதாவது நடந்திருந்தால் இனிமேல்தான் தகவல்கள் வரும் எனக் கூறினேன்.
 “இல்லை அண்ணன் ஒரு சூட்டிங்கேஸ் ஒண்டு நடந்திருக்கு ஒருக்கா செக் பண்ணிப் பாருங்கோ” எனச் சொல்லி விட்டு அவர் தொடர்பைத் துண்டித்தார்.
சரி எனக்கூறிவிட்டுத் தூங்கி விட்டேன்.  சிறிது நேரத்தின் பின் திரும்பவும் அவரே தொலைபேசியில் தொடர்புகொண்டார். “அண்ணன் ஏதாவது தகவல் அறிந்தீர்களா” “இல்லைத் தம்பி எமது செய்திப்பிரிவில் பணிபுரிபவர்கள் காலை ஐந்து மணிக்குத்தான் வருவார்கள் அவர்கள் வந்தவுடன் இது பற்றி விசாரிக்கும்படி சொல்கிறேன். அவ்வாறு நடந்திருக்கும் பட்சத்தில் எமது காலை 6.45 செய்தியில் அது ஒலிபரப்பப்படும்”  எனக் கூறினேன். 
சரி அண்ணன் ஆனால் கொழும்புக்குக் கிட்டவாக ஒரு சம்பவம் நடந்திருக்கு உங்கள் செய்தியாளர்கள் மூலம் கேட்டு உறுதிப்படுத்திக் கெதியா பிறேக்கிங் நியூசில் சொல்லுங்கோ எனக் கூறி தொலைபேசியை உரையாடலைத் துண்டித்தார். அந்த அனாமதேய அழைப்பாளரின் விடாப்பிடியான தொல்லைகாரணமாகச் சரி என்னதான் நடந்தது என விசாரிக்கலாம் எனத் தீர்மானித்து காலை 5.10 அளவில் எமது செய்திப்பிரிவிற்கு தொலைபேசி எடுத்து காலைநேரச் செய்தி ஆசிரியரிடம் கொழும்பிற்கு வெளியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அனாமதேயத் தகவல் ஒன்று வந்துள்ளது. பொலிசாருக்கு போன் செய்து விசாரியுங்கள் எனக் கூறியதுடன் சிங்கள மொழிச் செய்தி ஆசிரியருக்கும் தகவலைத் தெரிவித்தேன். அவர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனத்தெரிவித்தனர்.
மீண்டும் காலை 6 மணிக்கு அதிகாலை தொடர்புகொண்ட அதே நபர் தொடர்புகொண்டார்: “அண்ணன் ஏதாவது செய்தி வந்ததா” “இல்லைத் தம்பி எமது காலைநேரச் செய்திப்பிரிவு  பொலீஸ், குற்றத்தடுப்புபிரிவினர் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் என யாவரையும் அதிகாலையில் தொடர்புகொண்டு விசாரிப்பது வழமை. இன்றும் அவ்வாறு விசாரித்தபோது நீங்கள் குறிப்பிடும்படியான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்த்தாகத் தெரியவில்லை”
“இல்லை அண்ணன் கொட்டாவவில் கருணா குறுப்பை சுட்டுப் போட்டாங்களாம் பாருங்கள் விசாரியுங்கள்” எனக் கூறித் தொலைபேசியை துண்டித்தார்.
கருணா அணியினர் தங்கியிருந்த கொட்டாவ வீடு
மீண்டும் எமது செய்தி அலுவலகத்தினூடாகப் பொலிசாரை அணுகி விசாரித்த போதும் திரும்பவும் பொலிசார் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என மறுத்திருந்தனர். ஆனால் அந்த அனாமதேயத் தொலைபேசி நபரோ என்னை விடுவதாய் இல்லை. மீண்டும் எடுத்தார் 
“என்ன அண்ணன் ஒன்றும் வரவில்லையா” என்றார்  “இல்லை” என்றேன்.  
“சரி அண்ணன் என்ன எங்கை நடந்தது என விளக்கமாகச் சொல்லுறன் எழுதுங்கள்” என்றார். 
மகரகம கொட்டாவ சந்தியில் இருந்து உட்புறமாக செல்லும்போது வரும் சனசந்தடியில்லாத ஒரு கிராமத்தில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றினுள் கருணா தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் வரை சுடப்பட்டுள்ளார்கள். இனி விசாரித்து பாருங்கள். சிவராம் அண்ணனுக்கும் இது பற்றிச் சொல்லி இருக்கிறோம்,  அவரிடம் வேண்டுமானால் கேட்டு உறுதிப் படுத்துங்கள் என்றார். 
சற்று நேரத்தில் சிவராமே என் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டார். “இப்படிச் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது கேள்விப்பட்டாயா?” என்றார் . 
ஆம் ஆனால் பொலிசாரோ குற்றத்தடுப்புபிரிவினரோ வைத்தியசாலையோ இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தாத படியினால் இதனைச் செய்தியாகப் போட முடியாது எனவும் சொன்னேன். 
என்னடாப்பா சம்பவம் உண்மை என்றால் அதனை நாமாக உறுதிப்படுத்தினால் செய்திப் பிரிவின் பொறுப்பாளர் என்ற வகையில் நீ அதனைச் செய்தியாக வெளியிடலாமல்லவா என்றார்.
“இல்லை எங்காவது குற்றச்சம்பவங்கள் விபத்துக்கள், மோதல்கள், உயிரிழப்புகள் போன்ற விடையங்கள் இடம்பெற்றால் எமது செய்தியாளர்கள் அதனை உறுதிப்படுத்திச் செய்தி அனுப்ப வேண்டும். அல்லது அரசாங்க நிறுவனங்கள், காவற்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, அல்லது வைத்தியசாலை என ஏதாவதொன்று அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் இல்லாவிடில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தனிப்பட்ட வகையில் நானே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினேன்.
அத்துடன் உரையாடலை நிறுத்தி மீண்டும் வருகிறேன் எனக் கூறிச் சிவராம் தொடர்பைத் துண்டித்தார். இதற்கிடையில் அன்று காலை சற்று முன்னதாகவே நானும் அலுவலகம் சென்று விட்டேன். மீண்டும் அந்த அனாமதேய நபர் தொடர்புகொண்டு “என்ன அண்ணன் இன்னுமா சம்பவத்தை அறிய முடியவில்லை உங்கள் காலைச் செய்தியில் அதனை கேட்கலாம் என காத்திருந்தோம். சரி மேலும் விபரங்களைச் சொல்கிறேன் இதன்மூலமாவது உண்மையை அறிந்து விரைவில் வானொலியில் கூறுங்கள். சிவராம் அண்ணன் உறுதிப்படுத்தியும் நீங்கள் செய்தியைப் போடமறுப்பதேன்” எனக்கேட்டு என்னில் வெறுப்படைந்து தொடர்பைத் துண்டித்தார். 
மீண்டும் சிவராம் அழைப்பில் வந்தார் “என்னடாப்பா இவங்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை. சம்பவம் நடந்தது உண்மை. கெதியாக உறுதிப்படுத்திப் போடமுடியாதா” எனக் கேட்டார் நான் சொன்னேன் “சிவராம் சம்பவம் உண்மையானால் நீங்கள் தமிழ்நெற்றில் போடுங்கள் அதனை கோடிட்டு நான் வானொலியில் சொல்கிறேன் பிரச்சனை இலகுவாக முடியும் என்றேன். சரி பார்ப்போம் என கூறிய சிவராம் சற்று நேரத்தில் தமிழ்நெற்றில் புலிகளை ஆதாரம் காட்டி அதனைச் செய்தியாக பிரசுரித்தார். அதன் பின் செய்தி பரபரப்பாகி பொலிசாரும் சம்பவம் நடந்த இடத்தைச் தேடிச் சென்று அதனை உறுதிப்படுத்தினர். 
எனினும் பாதுகாப்புத்தரப்பிற்கோ பொலிசுக்கோ தகவல் தெரிவதற்கு முன்பாகவே தமிழ்நெற்றிற்கு எவ்வாறு செய்தி கிடைத்தது என்பது குறித்து பின்னர் இலங்கைப் புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முடுக்கி விட்டதாக ஞாபகம். ஆனால் இது பற்றி சிவராமிடமும் புலனாய்வுப்பிரிவு விசாரித்ததா? என்பது பற்றித் தெரியவில்லை. 
இந்த நிலையில் பொலிசார் அவ்விடம் செல்வதற்கு முன்பே தமிழ் நெற்றில் வந்த செய்தி பரவியதால் பல ஊடகங்களும் கொட்டாவ்வில் அமைந்திருந்த அந்த வீட்டைத் தேடி சென்றன. கூடவே நானும் சிங்களப் பிரிவின் செய்தி ஆசிரியர் ஒருவரும் அந்த இடத்தை தேடிச் சென்றடைந்தோம்.
அப்பிரதேசத்தின் காவற்துறை அலுவலகத்தினரின் கண்காணிப்புக்குக் கூட அகப்படாதபடிக்கு அந்த வீடு அமைந்திருந்தது அதிர்ச்சியாகவிருந்தது. யாருடைய பார்வையும் படாதபடிக்கு சுற்றிவரச் செடி கொடிகள் படர்ந்திருக்க நடுவே ஒரு அழகான மாடிவீடு. தளப்பகுதியில் ஒரு ஆடம்பரக்கார் நின்றிருந்தது. வீட்டின் சுற்றயலில் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குழுமி இருந்தார்கள். ஊடகவியலாளர்களும் மக்களும் அவ்விடத்தை அடைந்த பின்புதான் பொலிசாரும் அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் அவ்விடத்தை வந்தடைந்திருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்பேயே நாங்கள் அங்குசென்று விட்டதனால் வீட்டினுள்ளே சென்று மாடியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த அனைவரையும் காணக் கூடியதாக இருந்தது.
மேல் மாடியின் நடுவறையில் வாட்டசாட்டமான நான்கு மனித உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. அருகாமையில் உள்ள கொரிடோரில் ஒருவுடலும் மற்றொரு அறையில் இரு உடல்களும் மாடிப்படிக்கு அண்மையில் இன்னுமொரு உடலுமாக எட்டு உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தன. கொல்லப்பட்டவர்களுள்  மூவர் 17ற்கும் 19ற்கும் இடைப்பட்ட வயதினராக இருக்க வேண்டும் காரணம் அவர்கள் முகத்தோற்றத்திலும் சிறியவர்களாக இருந்தனர். மேல் மாடியில் நடு அறையில் கிடந்த நால்வரில் ஒருவர் கருணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் எனக் கருதப்பட்டவரும் அவரது நிதிப் பொறுப்பாளராக இருந்தவருமான குகனேசன் ஆவார். மற்றய இருவரில் ஒருவர் கருணாவின் அரசியல் பிரிவைச்சேர்ந்த கேசவன், மற்றவர் தாக்குதல் பிரிவைச்சேர்ந்த காஸ்ரோ. நான்காமவர் இலங்கை  இராணுவப்புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்த்தர்.
ஏனைய அறையில் இருந்த இருவரும் ரூபன், அற்பரன் எனவும் மற்றும் கொரிடோரிலும் படிக்கு அருகாமையிலும் இருந்தவர்கள் விக்கி, விமலகாந் எனவும் பிற்பாடு அடையாளம் காணப்பட்டார்கள். 
கொல்லப்பட்டவர்களிற் சிலரின் தலையணைகளுக்கு அருகில் சிறிய வாக்மன் றேடியோக்கள் இயங்கிக்கொண்டிருந்தன.  சூரியன் வானொலியே அதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான செய்தி சூரியனில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது இவர்களின் உடல்களுக்கு அருகிலிருந்த வானொலிகளிலும் அது ஒலித்துக்கொண்டிருந்தது.  
இதனை விட இவர்களின் படுக்கை அறைகளில் ஆயிரக்கணக்கான கையடக்கத் தொலைபேசிகளுக்குரிய சிம் அட்டைகளும் அவற்றிற்கு பணம் ஏற்றும் பணஅட்டைகளும் காணப்பட்டன.
இவ்வாறு நாம் அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டுச் செய்திகளை சேகரித்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு வந்து குவிந்த பாதுகாப்புப்படையினர் எம்மை வீட்டிற்கு வெளியில் அனுப்பி விட்டனர். காரணம் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டிருருந்த எட்டாவது நபர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியாவார். அவரது கட்டுப்பாட்டிலேயே கருணா குழுவின் இந்த முக்கியஸ்த்தர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த விடயத்தை ஊடகவியலாளர்கள் இனம் கண்டு துருவத் தொடங்கியதும் பாதுகாப்புத்தரப்பு தம்மை விழிப்படைந்து செய்தியாலளர்கள் யாவரையும் வெளியே அனுப்பிவிட்டது. இவற்றையும் மீறி ஊடகங்களில் இந்த விடயம் கசிந்த போது இலங்கைப் புலனாய்வுப்பிரிவு அதனை முழமையாக மறுத்திருந்தது. ஆனால் அங்கு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் புலனாய்வுப்பிரிவின் முக்கியஸ்த்தர் என்பதனை நாம் உறுதிப்படுத்திக் கொண்டோம்.
கொட்டாவ்வில் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் யூன் 2004ல் பொலநறுவையை அண்மித்த கிங்குரான்கொட பௌத்த ஆலயத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட கருணா தரப்பு உறுப்பினர்களாவார். இவர்கள் குகநேசன் உள்ளிட்ட பதின்நான்கு பேராவார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொட்டாவவில் தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால் அப்பதின்நான்கு பேரில் புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பைச் சேர்ந்த ஆறுபேர்களும் இருந்திருக்கிறார்கள் இவர்கள் சம்பவம் நடந்த இரவு மயக்கமாத்திரைகளை மற்றவர்களுக்கு உணவுடன் பரிமாறியிருக்கிறார்கள். இவ்வாறு மயக்கமருந்துண்ட கருணா விசுவாசிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஒலியடக்கித்துப்பாக்கிகளால் அவர்களை இவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டு அதிகாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு அம்பாறை போய்ச் சேர்ந்துவிட்ட்தாக பின்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் குறிப்பாகக் கொலையைப் புரிந்தவர்களே எம்முடன் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தந்தார்கள் எனவும் பின்னர் அறிந்து கொண்டேன்.
 
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் 
இந்த சம்பவமும் சமாதான காலத்தில்(2004ல்) நடந்தமையினால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சம்பவம்ந் நடந்த இடத்திற்குச் சென்று அதனைப் புலிகளின் யுத்த நிறுத்த மீறலாகப் பதிவு செய்து கொண்டனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர்  (திகதிகள் ஞாபகம் இல்லை) கொழும்பை அண்மித்த நுகேகொடவில் இலங்கை புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த கருணாகுழுவின் பெண்கள் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த முக்கியஸ்த்தர்களைப் புலிகள் தமது சாமர்த்தியத்தால் ஒரு வாகனத்தில் ஏற்றி அம்பாறைக்கு கடத்திச் சென்று பின்னர் சுட்டுக் கொன்றனர்.
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி திங்கட் கிழமை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அரசியற் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் (சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு அவர் வந்திருந்த போதும் மட்டக்களப்பிற்கு சென்றிந்த பல தடவைகளிலும் கௌசல்யனோடும் உரையாடி இருக்கிறேன். சமாதான காலத்தில் சூரியன் எவ்.எம்மிற்காகப் பல பேட்டிகளையும் அவரிடம் எடுத்திருக்கிறேன்.) மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேரு உள்ளிட்ட நால்வர் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல் கம பிள்ளையாரடி என்ற இடத்தில் வைக்கப்பட்ட கிளைமோரில் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலையும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் துணையுடன் கருணா தரப்பினரே மேற்கொண்டிருந்தனர். 
2005 டிசம்பர் 25 ஞாயிறு அதிகாலை 1.15 அளவில் கருணா தரப்பின் இரண்டு ஆயுததாரிகள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் துணையுடன் கிறிஸ்மஸ் இரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தைச் சுட்டுக் கொன்றனர். 
திரு பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முதல்நாள் இரவு சனிக்கிழமை 9 ற்கும் 9.30ற்கும் இடையில் என நினைக்கிறேன் (மரணிப்பதற்கு சுமார் 4 மணிநேரத்திற்கு முன்னர்)அவருடன் மட்டக்களப்பின் பாதுகாப்பற்ற சூழல் குறித்து தொலைபேசியில் உரையாடி இருந்தேன். நான் தொலைபேசி அழைப்பை எடுக்கும்போதெல்லாம் அவரே முதலில் எடுத்து நீங்கள் யாரென்று கேட்பார். பின்னர் குருபரன் லைனில் நிற்கிறார் என்று கூறிக் கணவரிடம் கொடுப்பார்.  அன்றைக்கும் அவ்வாறு அவருடன் உரையாடிய போது இன்னும் நான்கு மணிநேரத்தின் பின்பு இந்த மனிதரின் மரணத்தையும் அறிவிக்க நேருமென்று நான் நினைத்திருக்கவில்லை. திருமதி சுகுணம் பரராஜசிங்கத்திற்கு அவர்களுக்கு இது நினைவிலிருக்குமோ தெரியவில்லை.  மரணங்களை இலக்கச்சட்டத்தில் உள்ள உருளைகளைப்போல் தட்டித்தட்டி எண்ணவும் பின்னர் எதுவுமே நடக்காதது போல் நமது அலுவல்களைப்பார்கவும் பழகிப்போன சமூகமாக தமிழ்சமூகம் மாறிப்போனதைக் கண்டபோது எமது விடுதலைபோராட்டம் என்னவிதமான மனித விழுமியத்தைத் தந்ததென்று திகைக்கிறேன்.  
31 January 2006 காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணியாற்றிய எட்டுப்பேர் புலிகள் கருணா முரண்பாடு காரணமாகக் கிழக்கை விட்டு நீங்கி வன்னிக்குச் செல்வதற்காக பேருந்தில் புறப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் (இரண்டு பெண்கள் உட்பட்ட எட்டுப் பேரைப்) பொலநறுவைக்கு அண்மையில் வைத்துக் கருணாகுழு கடத்திச்சென்றது. கடத்தப்பட்டவர்களுள் பிறைநிதி என்ற பெண் பாலியல்வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். மற்றைய பெண்ணைக் கருணாகுழுவின் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்வதற்காகக் காப்பாற்றிக்கொள்ள மிகுதி ஆறு ஆண்களையும் அவர்கள் கொலை செய்திருந்தனர். இந்தச் செயலுக்கான நேரடி உத்தரவைக் கருணா பிறப்பிக்க அப்போது அவரின் கட்டளைத் தளபதியாக இருந்த பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திர காந்தனின் தலைமையிலான படை நிறைவேற்றிமுடித்தது. இவை யாவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துணை இராணுவக் குழவின் யுத்த நிறுத்த மீறல்கள். புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களின் கடத்தல் தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட குறிப்புக்கள் அடிக்குறிப்பு 2ல் இணைக்கப்பட்டுள்ளது.
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலையையும் இலங்கைப் புலனாய்வுப்பிரிவின் துணையுடன் கருணா தரப்பே மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக இவரது கொலையுடன் இனியபாரதி சம்பந்தப்பட்டிருந்ததாக அப்போது பரவலாகத் தகவல்கள் கசிந்திருந்தன.
நான் 2006 ஆகஸ்ட் 29 திகதி அதிகாலை கடத்தப்பட்டு பாரிய அழுத்தங்களின் பின்பு விடுவிக்கப்பட்டிருந்த நாட்களில் ஒருநாள் தொலைபேசியில் என்னைத்தொடர்பு கொண்ட
ரவிராஜ்  “அண்ணை உனக்கென்ன விசரோ இப்பவும் சூரியனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருக்கிறாய். ஒருமுறை உயிர் தப்பி விட்டாய் இது நெடுகலும் வாய்க்காது. எங்கையாவது வெளியில போய் வாழுற வழியைப்பாருங்கோ. அண்ணை நாங்கள் இந்த பாழாய் போன அரசியலில் இறங்கி விட்டோம். ஏதோ முடிந்தவரை இழுபட வேண்டும் நீங்கள் செய்யக் கூடிய அளவிற்கும் செய்து மயிரிழையில் தப்பி வந்திருக்கிறீர்கள். இது போதும் வெளிநாட்டிற்குச் சென்று செற்றிலாகப் பாருங்கள். விசப்பரீட்சை வேண்டாம் எனக் கூறினார். அன்றைக்கு நீண்ட நேரம் நாங்கள் உரையாடி இருந்தோம். 
திரு ரவிராஜ் கொல்லப்பட்ட போது நான் ஜரோப்பாவில் நின்றிருந்தேன். எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தபோது மிகவும் வேதனை அடைந்து போனேன். 
2006 நவம்பர் 19ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசி எடுத்து மிரட்டிய கருணாவின் உதவியாளர் குணாளன் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்திற்கு முன்னதாக எம்.பி பதவியை விட்டு விலகாவிட்டால் அவர்கள் அனைவரும் மாவீரர்களாகவேண்டிவருமென அம்மான் (கருணா) கூறியதாக மிரட்டியிருந்தார்.
Prof. Raveendranath addressnig a conference 
(inset) Prof. Raveendranath's wife
2006 டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 1:15 அளவில் கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ரவீந்திரநாத் காணாமல் போனார். பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தினுள் நடந்த முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச்சென்ற அவர் அதன் பின்னர் மண்டபத்திற்கு வெளியே வரவில்லை. அவருக்காகக் காத்திருந்த அவரது வாகனச்சாரதி வெற்று வாகனத்துடன் திரும்பநேர்ந்தது.   பல புலமைவாதிகள் நிறைந்திருந்த மண்டபத்தினுள் அவரைகடத்தும் துணிச்சலான உத்தரவைக் கருணா அம்மான் அரச ஆதரவுடன் வழங்கப் பிள்ளையான் அவர்கள் திறமையாகச் செய்து முடித்திருந்தார். திரு ரவீந்திரநாத் அவர்கள் காணாமல் போனதிலிருந்து அவரது குடும்பத்தினர் பட்ட துன்பத்தினை நேரடியாக கண்டுணர்ந்தவன் என்ற வகையில் இந்தப்பதிவும் கடுமையான துயரத்தைத் தருவது.. 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 2007.  நவம்பர் 19 ஆம் திகதி நிகழவிருந்த பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட முதல் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது.  என முற்கூட்டியே(  2007 நவம்பர் 16 ஆம் திகதி) எச்சரிக்கப்பட்டார்கள். அவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கும் நோக்குடன் நவம்பர் 17 திகதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி கனகபையின் மருமகன் கழுதாவளையில் வைத்துக் கடத்தப்பட்டார். 
பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் மீதான 2ஆம் கட்ட வாக்களிப்பு 2007  டிசம்பர் 14ஆம் திகதி இடம்பெற்ற போதும் இதே வகையான அச்சுறுத்தும் நடவடிக்கை முன் கூட்டியே நிகழ்ந்தது.2007 டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் சகோதரர், தங்கேஸ்வரியின் செயலாளர், ஜெயானந்த மூர்த்தியின் மருமகன் ஆகியோர் அச் சந்தர்ப்பத்தில் கடத்தப்பட்டு நிர்ப்பந்தம் வழங்கப்பட்டது.. தற்போதய மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்ரரே இந்தக் கடத்தல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்பு பட்டிருந்தார். மேற்குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டதன் பின்னர் 15ஆம் திகதி கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும்  தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது இது தொடர்பாகவும் பின்னர் எழுதுவேன்.
இந்த இடத்தில் இடைச்செருகல் என்னினும் முக்கியமானதொரு விடையத்தையும் கவனிக்க வேண்டும்
கொழும்பின் தெற்காக உள்ள சுற்று வட்ட பிரதேசங்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை இங்கே தருகிறேன்.
கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானின் உதவியாளர் ரகு காரில் சென்ற போது கருணாவினதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரதும் இணைந்த முயற்சியால் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் மகரகமவை அண்மித்த கொட்டாவ. 
மிலேனியம் சிற்றி என பலராலும் பேசப்பட்ட இடத்தில் சமாதான காலத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டபோது அவை புலிகளால் வைக்கப்பட்டதாகக் கருதப்படபோதும் பின்னர் அவை இலங்கைப்புலனாய்வுப் பிரிவினரினால் வைக்கப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டதால் சந்திரிக்காவுக்கும் றணிலுக்கும் இடையில் கடும் அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கிய இடமும் மகரகமவை அண்மித்த கொட்டாவ.
கருணா குழுவின் முக்கியஸ்த்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் மகரகம கொட்டாவ. 
கருணா குழுவினரின் மகளீர் பிரிவினர் தங்க வைக்கப்பட்ட இடம் நுகெகொட,
சிவராம் கொல்லப்பட்ட இடம் பாராளுமன்றத்தை அண்மித்த பத்தரமுல்ல. 
லசந்த விக்கிரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்ட இடம் அத்தியடி றோட் றட்மலான. 
வித்தியாரன் அவர்கள் கட்த்தப்பட்டு றோட்டில் தள்ளிவிடப்பட்ட இடம் நுகேகொட
நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இடமும் நுகெகொடவை அண்மித்த கொகுவல. 
பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்பு பட்ட பல விடயங்களை கையாளுகின்ற பல புலனாய்வாளர்களைக் கொண்ட இடம் நுகெகொடவை அண்மித்த மீரிகான. 
புலிகளால் கொல்லப்பட்ட ஜெயரட்ணம், தாப்று மற்றும் நிலாப்டீன் ஆகியோர் இயக்கிய பிரதான பொலிஸ் புலனாய்வு மையம் இயங்கியது கல்கிசை. 
இவை யாவும் கொழும்பின் தெற்காக உள்ள ஒரு சுற்று வட்ட பிரதேசங்கள். 
இந்தப் பிரதேசங்களிலேயே இராணுவ, பொலிஸ், துணை இராணுவக் குழக்களின் இரகசிய தடுப்பு முகாம்கள், வதை முகாம்கள், விசாரணை மையங்கள், விசேடமாக புலிகளில் இருந்து விலகிய கருணா மற்றும் இனியபாரதி மற்றும் பிள்ளையான் தரப்பினரின் தங்குமிடங்கள் அமைந்திருந்தன. இப்பொழுதும் அமைந்திருக்கின்றன.
முடிவாக நான் மேலே விபரித்தபடிக்கு கருணா தரப்பும் புலிகள் தரப்பும் ஒருவரை ஒருவர் பலி எடுத்துக்கொண்டிருந்த போது சிங்களப்பேரினவாத அரசு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நசுக்குவதற்கான மும்முரமான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தது.
*அடிக்குறிப்பு 1
TRO opens computer centre in Kiran 
A free computer training centre was opened last week in Kiran, Batticaloa by the TRO. Speaking at the opening ceremony, TRO's Danish Branch coordinator Mr G Anandan said the centre was part of his organisation's quest to work towards a new start for the Tamil people. A plaque to commemorate the opening was unveiled at the centre by Mr Anandan, while TRO's Batticaloa coordinator Mr Kingsley Rajanayagam declared the centre officially open. The centre will aim to train students from war affected poor families. It will cater for both Tamil and Muslim students.
*அடிக்குறிப்பு 2
31 January 2006 - 
தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் மட்டக்களப்பு வெலிக்கந்தை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டமை மனிதாபிமான பணிகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட சவால். இவ்வாறு தெரிவித்தார். தமிழர் புனர்வாழ்வக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி றெஜி வெலிக்கந்தையில் வைத்து புனர்வாழ்வுக்கழகத் தொண்டர்கள் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எங்கள் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு வன்னி, கொழும்பு ஆகிய அலுவலகற்களுக்கு முறையிட்டுள்ளோம். அதே போல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கொழும்புக் கிளைப்பொறுப்பதிகாரி மற்றும் பல்வேறு மனிதநேய அமைப்புக்கும் தெரிவித்தோம். இதே போல பாதுகாப்பு அமைச்சு சிறிலங்கா சனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச செய்தித் தாபனங்கள், வெளிநாட்டு து}தரகங்கள், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கும், தெரியப்படுத்திருந்தோம். எம்மால் வழங்கப்பட்ட தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதே வேளை இந்த இந்தக்கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களையும் தருமாறு கேட்டிருக்கிறார்கள். 
இராணுவத்துடனும், அவர்களின் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான வழிவகைகளை ஆராயுமாறும் அவர்களிடம் கூறியிருக்கின்றோம், இராணுவம் பொலிஸ், தரப்பு இப்படியான சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும் இத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனவும், தெரிவித்ததாக அவர்கள் எமக்குக் கூறியிருக்கின்றார்கள்.
ஆனால் இந்தச் சம்பவம் அநாகாரிகமான செயல் இந்தப் பணியாளர்கள் மிகவும் வறுமைக் கோட்டுக்க் கீழ்ப்பட்டவர்கள். அப்பாவித்தனமான பொதுமக்கள் தம்முடைய ஜீவனோபாயத்தைப் போக்குவதற்காகவே இதில் கடமையாற்றுகிறார்கள்.
பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அரச பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் எந்தளவு அக்கறையுடன் இருக்;கின்றார்கள் என்பதை இந்தச் செயல் எடுத்துக் காட்டுகின்றது. இதனையே இன்று அனைவரும் கேட்கிறார்கள்.
இந்தச் செயல் கோழைத்தனமானது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அதே போல சர்வதேச மட்டத்தில் அனைவரும் இதனைக் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 
கடத்தப்பட்ட 7 உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டனர்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14 மார்ச் 2007
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆம் நாட்களில் கடத்தப்பட்ட 7 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் உயிரிழந்து விட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது.
இவர்கள் பொலநறுவ மாவட்டம் வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனை இன்று புதன்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களான தம்பிராசா வசந்தராசா
சண்முகநாதன் சுஜேந்திரன்
கைலாசபிள்ளை இரவீந்திரன்
அருள்தேவராசா சதீஸ்கரன்
கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களான தனுஸ்கோடி பிறேமினி
கதிர்காமர் தங்கராசா
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காசிநாதர் கணேசலிங்கம்
ஆகிய பணியாளர்களே உயிரிழந்ததாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது.
பணியாளர்களின் உயிரிழப்பு தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழக தலைவர் சிவனடியார் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
"எமது பணியாளர்களின் விபரம் தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. கடத்தல் சம்பவம் இடம்பெற்ற ஆரம்பத்தில் பல தகவல்கள் எங்களை வந்து சேர்ந்திருந்தாலும் அத்தகவல்களை உறுதி செய்வதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நீண்ட கரிசனை செலுத்தியது.
இது பற்றி கொழும்பு நகரில் ஊடகவியலாளர் மாநாட்டையும், கடத்தல் சம்பவம் இடம்பெற்ற ஓராண்டில் ஓரு நாள் அடையாள உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளையும் நடத்தியது.
கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தியின் அடிப்படையிலும் மேலும் பல ஆய்வுகளை செய்ததன் அடிப்படையிலும் எமது பணியாளர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்பதனை உறுதி செய்துள்ளோம்" என்றார். (ஆதாரம் புதினம்)
அது அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் தொடர்பாக வந்த தகவல்கள்.

No comments: