மழலையின் பாட்டு - கவிதை


.
விண்மீன்களையும் வெள்ளிநிலவையும் காட்டி,
மடியில் கிடத்தித் தொட்டில் போல் ஆட்டி
குழந்தையை உறங்க வைக்கிறவளின் வானம்
முகிலாடையால் மூடிக் கிடந்தது

எங்கோ நடுங்கிய பூமியின் அதிர்வால்
பொங்கிடலாம் கடல் என்றார்கள்

வயிற்றுக்காக வலைவீசப் போயிருந்த
சொந்தங்களின் நினைப்பால்
கலங்கிய மனதைக் காட்டிக் கொள்ளாமல்

வீசும் காற்று பிடில் வாசிக்க
பாசத்துடன் பாடுகிறாள்
கண்ணே கண்ணுறங்கென.

கேட்ட கடலோரக் கூழாங்கற்களும் சிப்பிகளும்
நாளெல்லாம் உருண்ட களைப்பில்
சொகுசாய் மணலுள் புதைந்து
கண் அசர


சமுத்திரத் தாயின் அதட்டலுக்குப் பயந்து
சமர்த்தாக அலைகள் சுருண்டு
பின் வாங்க

கரையின் நீண்ட மணற்பரப்பு
நெட்டி முறிக்கிறது
அயர்வாக.

உறைந்திருந்த அமைதியில்
மறைந்திருந்த அச்சங்களைக்
கரைத்துக் கொண்டிருந்த
அன்னையின் தாலாட்டுக்கு

‘ம்.. ம்..’ எனக் குழந்தை இசைத்த
எதிர்ப்பாட்டை எடுத்துக் கொண்டு
விரைகிறது முகிலொன்று

ஆழ்கடலுக்குள் சென்றிருந்த தந்தையின்
ஓடம் தேடி..
***

13 ஏப்ரல் 2012, வல்லமை சித்திரைச் சிறப்பிதழில்..,நன்றி வல்லமை!
படம் நன்றி: 
tamilamudam.blogspot இணையம்

No comments: