சாயிபாபா சமாதியடைந்து ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பேரணி

                         
22/04/2012
  பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா மகா சமாதியடைந்து ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு நாட்டில் அமைதி, ஒற்றுமை, அன்பு, சகோதரத்துவம், சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அஹிம்சை நற்குணங்களோடு மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்காக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் அமைதிப் பேரணியொன்று இன்று காலை நடைபெற்றது.

கல்லடி, தாமரைக்கேணி, மட்டக்களப்பு, வந்தாறுமூலை, ஆரையம்பதி முதலிய பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா சேவா நிலையங்களின் ஏற்பாட்டிலும் ஸ்ரீ சத்திய சாயி பாபா கிழக்குப் பிராந்திய சேவா நிலையத்தின் அனுசரணையுடனும் இடம்பெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் பெருமளவான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தாமரைக்கேணி ஸ்ரீ சத்திய சாயிபாபா நிலையத்திலிருந்து மங்கள ஆராத்தியுடன் ஆரம்பமான இம்மாபெரும் பேரணி பார் வீதி ஊடாக மட்டக்களப்பு திருமலை வீதியை ஊடறுத்து மட்டக்களப்பு ஸ்ரீ சத்திய சாயிபாபா நிலையம் வரை சென்றடைந்தது.

இதேவேளை கல்முனைப் பிராந்தியத்துக்கான ஊர்வலத்தை கல்முனை, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, வீரமுனை, காரைதீவு, வளத்தாப்பிட்டி ஆகிய சேவா நிலையங்கள் இணைந்து கல்முனைப் பிராந்தியத்திலும் அக்கரைப்பற்று, தம்பிலுவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, விநாயகபுரம் ஆகிய சேவா நிலையங்கள் இணைந்து ஏறபாடு செய்த ஊர்வலம் அக்கரைப்பற்றிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

No comments: