சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்வு - செ.பாஸ்கரன்

.
படப்பிடிப்பு ராஜன்
சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மாலைவரை இடம் பெற்றது.இந்நிகழ்வை சிட்னி தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவோடு  Castle Hill Show Ground  இல்  நடாத்தியது. இரண்டாயிரத்து ஜநூறுக்கும் மேற்பட்ட இலங்கை இந்திய மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்.உள்ளுர் கலைஞர்களின் பாரம்பரிய நடனம், காவடியாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்வுகளோடு இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த கிராமிய பாடல்கள் புகழ்  கலைமாமணி  புஸ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி ஆகியோரின் இசை நிகழ்வும் இடம் பெற்றது.காசல்கில் Show Ground மைதானம் ஒரு திருவிழா போன்றே காட்சியளித்தது. இந்திய இலங்கை உணவுகளைக்கொண்ட உணவுச்சாலைகள் குழந்தைகளைக் கவருகின்ற ராட்சத விளையாட்டு காசல்கள், புத்தக சாலைகள், வானொலி விற்பனை நிலையம், வங்கி நிறுவனம், ஒஸ்ரேலிய முதலுதவி அமைப்பு என்று மைதானம் எங்கும் கடைகள் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. மின்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த (கோண்டாவில் புலவரின் ஒலிபெருக்கிகள் போன்று) ஒலிபெருக்கிகளில் உறுமி மேளம் ஒலிக்க கிராமியப்பாடல்கள் மைதானம் எங்கும் மிதந்து வந்தது என்னை யாழ்ப்பாணத்திற்கே கொண்டு சென்றுவிட்டது


கும்மிப்பாடல்களை புஸ்பவனம் குப்புசாமி அவர்கள் பாட அங்கே பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பல பெண்கள் கிராமிய நடனங்கள் ஆடி அபிநயம் செய்ய கரகோசம் பிரதேசம் எங்கும் எதிரொலித்தது. நாம் ஒஸ்ரேலியாவில்தான் நிற்கின்றோமா என்ற கேள்வி மனதில் எழுந்து வந்தது அந்த அளவுக்கு கிராமிய இசையோடு ஒரு கிராமத்து திருவிழாவாகவே சித்திரைத் திருவிழா அமைந்திருந்தது.  இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததன் மூலம் இலங்கை இந்திய தமிழ்மக்களை ஒன்றுசேர்த்த சிட்னி தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக்கழகத்தினருக்கும் குறிப்பாக திரு அனகன்பாபு, திரு.சுந்தரவடிவேல், திரு. முத்து ராமச்சந்திரன், திரு.முரளி கணேசன் போன்றவர்கள் பாராடப்பட வேண்டியவர்களே. இந்த நிகழ்வை நடாத்துவதற்கு ஆதரவளித்த ஒஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கும் பாராட்டுக்கள்.முதல் நிகழ்ச்சியையே ஒழுங்காக அமைத்தவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இப்படி சிறப்பாக செய்வார்கள் மக்களும் நல்லதொரு திருவிழாவை கண்டு கழிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்..


No comments: