உலகச் செய்திகள்

ஆப்கானில் பனிப்பாறைகள் சரிந்து வீழந்ததில் 42 பேர் உயிரிழப்பு; பலரைக் காணவில்லை


உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது


ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி


சர்வாதிகாரி பஷார் அல் அஸாத் வீழ்ச்சியடைவார்: ஒபாமா


ஆப்கானில் பனிப்பாறைகள் சரிந்து வீழந்ததில் 42 பேர் உயிரிழப்பு; பலரைக் காணவில்லை

Thursday, 08 March 2012
ஆப்கானிஸ்தானிலுள்ள படகஸானின் வட, கிழக்கு மாகாணத்தில் பனிப்பாறை சரிந்து வீழ்ந்ததில் 42 பேர் பலியாகியுள்ள அதேவேளை பலர் காணாமல் போயுள்ளனர். தாஜிகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது. ஷிகே மாவட்டத்திலுள்ள கிராமத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என அச்சம் கொண்டுள்ளதாக ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் பி.பி.சிக்கு தெரிவித்தார்.


நாட்டிலுள்ள பிராந்தியங்களில் மிகவும் வறுமையில் உள்ள தொரு பிராந்தியமாக படகஸான் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மிகக் கடுமையான பனிப்பொழிவு காணப்படும். எனினும் இவ் வருடம் மிகமிகக் கடுமையான பனிப் பொழிவு உள்ளதாக காபூலிலிருந்து பிலால் சர்வாரி பி.பி.சி. க்கு தெரிவித்தார்.

190 பேர் வசிக்கின்ற இக் கிராமத்தில் 39 பேர் பலியாகியுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவை அமைப்பின் பணிப்பாளர் நாஸிர் கிமேட் பி.பி.சி.க்கு தெரிவித்தார்.

கிராமத்திற்கு செல்வதற்கான அனைத்து வீதிகளும் பனிச் சரிவால் துண்டிக்கப்பட்டுள்ளமையால் மீட்புப் பணி மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப் பாறைச் சரிவு இடம்பெற்ற பகுதியினை மாகாண ஆளுநர் ஷா வலி சென்று பார்வையிட்டுள்ள அதேவேளை மீட்புப் பணிகளை ஹெலிகொப்டரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இவ் வருடம் படகஸ்தானில் பனியினால் 60 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன் வீடுகளிலிருந்த 1000 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. தலை நகர் பைசாபட்டிக்கும் மாகாணத்திற்கும் இடையிலான வீதிகளின் சில பகுதிகளில் 4 மீற்றருக்கும் உயரமான அடர்த்தியில் பனிப் பொழிவு காணப்படுகின்றது.

இவ் வருடம் மிக கொடூரமான பனிப் பொழிவு காணப்படுவதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். தஜிகிஸ்தானிலிருந்து மருந்துகள், சில உணவுப் பொருட்கள் போர்வைகள் என்பன கொண்டு செல்லப்பட்டிருந்த போதும் அந்நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு போதுமானவையல்ல என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தினக்குரல்
உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது

 7/3/2012

உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக் கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி வீட்டுக் கதவில் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு, பிரசாரமொன்றின் போது படுகொலை செய்யப்பட்டார்.

அந்நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த முஷாரப் அரசின் கவனக்குறைவே இச்சம்பவத்திற்குக் காரணம் என்று கூறி இது தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க அவருக்கு பிடியாணை அனுப்பியது நீதிமன்றம். ஆனால், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் தோல்விக்குப்பின் லண்டன், டுபாய் என மாறிமாறி வசிக்கும் முஷாரப் இதைப் பொருட்படுத்தவில்லை. பிடியாணை பிறப்பித்தும் முஷாரப்பைக் கொண்டுவர பாகிஸ்தான் அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து முஷாரப்பைப் பிடிக்க இன்டர்போல் பொலிஸ் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி இஸ்லாமாபாத் அருகே உள்ள முஷாரப்பின் பண்ணை வீட்டிற்கு நேற்று சென்ற அதிகாரிகள், வீட்டுக்கதவில் நீதிமன்றத்தின் பிடியாணை ஒட்டப்பட்டுள்ளது.

இதில் மார்ச் 22 இல் உச்ச நீதிமன்றத்தில் முஷாரப் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் தான் பாகிஸ்தான் குடிமகன் என்பதை நிரூபிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரிரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி

6/3/2012

ஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் கடந்த 4 வருடங்களாக அந்நாட்டின் பிரதமராக சேவையாற்றிய அவர் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார்.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அவர் சுமார் 64 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தான் நேர்மையான போட்டியொன்றின் மூலமே சுமார் 64 சதவீத வாக்குகளைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இத்தேர்தலில் பெரும் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சியினர் மொஸ்கோவில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.

புட்டின் வெற்றி பெற்றதையடுத்து ரஷ்ய கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அந்த வெற்றியை கொண்டாடினர்.

தற்போதைய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவுடன் ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றிய மெட்வேடேவ் நாட்டின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள தனது ஆதரவாளர்களுக்கு நன்றி செலுத்தினார்.

இத்தேர்தலில் அவரது நெருங்கிய போட்டியாளரான கென்னடி ஸயுக்னோவ் 17 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இத் தேர்தல் நீதியற்ற முறையில் நடத்தப்பட்டதாக கென்னடி ஸயுக்னோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நன்றி வீரகேசரி


சர்வாதிகாரி பஷார் அல் அஸாத் வீழ்ச்சியடைவார்: ஒபாமா


8/3/2012

சிரியாவில் தற்போது நிலவும் நிலைமை வேதனை தரக்கூடியது எனத் தெரிவித்த பராக் ஒபாமா , அமெரிக்கா தனித்து அங்கு இராணுவத் தலையீடு செய்வது தவறாக அமையும் எனக் கூறினார்.

ஜனாதிபதி பஷார் அல் அஸாத் ஏனைய சர்வாதிகாரிகள் வீழ்ச்சியடைந்ததைப் போன்று வீழ்ச்சியடையவுள்ளார் எனத் தெரிவித்த பராக் ஒபாமா , சிரியாவை தனிமைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா அதனை அடையும் எனக் கூறினார்.

சிரியா எங்கும் செவ்வாய்க்கிழமை உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சிரியாவின் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் தொடர்ந்து பிரிவுபட்டு நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் கடந்த 12 மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் 7,500 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டிலான ஒபாமாவின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின்போது தன்னைக் குற்றஞ்சாட்டுபவர்கள் போருக்கு செலுத்த வேண்டிய விலையை மறந்துவிடக் கூடாது என எச்சரித்துள்ளார்.

சிரியாவை லிபியாவுடன் ஒப்பிடுவதை நிராகரித்த அவர் சிரிய விவகாரம் மிகவும் சிக்கல் மிக்கது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடப் போவதாக சூளுரைத்துள்ளார்.
நன்றி வீரகேசரி


No comments: