மகளிர் தினம் = களியாட்டவிழா - செ .பாஸ்கரன்


.
101 வது மகளிர் தினம் சென்றவாரம் உலகமெல்லாம் கொண்டாடப்பட்டது. பல வடிவங்களையும் பல பரிமாணங்களையும் பெற்று இன்று அமரிக்காவின் ஆசீர்வாதத்துடன் ஒரு களியாட்ட விழாவாக இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட வேலை நேரத்திற்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் ஒரு சில பெண்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கிய முதற்புள்ளி தொடர்ந்து உலகமெல்லாம் உள்ள போராட்ட குணம்கொண்ட பெண்களால் தொடரப்பட்டது. அதற்கான பலன்களும் நிட்சயமாக மேற்கத்தைய நாடுகளில் அந்தப் பெண்களுக்கு கிடைக்கப்பெற்றது மறுக்கப்பட முடியாத உண்மை.



பெண்களின் போராட்டத்தை அடக்கியவர்களே அதைக் கொண்டாடுகின்ற துர்ப்பாக்கிய நிலை இன்று காணப்படுகின்றது. பெண்களின் நலன்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையே சுரண்டுகின்ற பெரும் வர்த்தக ஸ்தாபனங்களும் தொலைக்காட்சிகளும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வர்த்தகமாகவே இன்று அதை மாற்றி விட்டது.
பெண்களை போதைப்பொருள்போல் பாவிக்கின்றார்கள் அது ஆணாதிக்கத்தின் வக்கிர வெளிப்பாடுகள் என்று குரல்தந்த பெண்கள் சமுதாயத்தின் அதே பெண்களை இன்று அவர்களாகவே விரும்பிச்செல்லும்  விளம்பர மொடல்களாக பங்கேற்க வைத்து வியாபாரமாக்கியதும் அதே தொலைக்காட்சி நிறுவனங்கள்தான் இன்று இந்த மகளிர் தினத்தின் கேளிக்கை கொண்டாட்டங்களையும் கண்கவர் வண்ணங்களில் காட்டிக்கொண்டிருக்கின்றது.

போதாக்குறைக்கு புலம்பெயர்ந்த நம்மவர்கைகளின் கைகளில் வளற்சிபெற்ற ஊடகங்களும் அதே களியாட்டங்களை பின்பற்றுகின்றது. எதற்காக ஏற்பட்டது இந்த நாள் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களாக படித்தவர்கள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , புத்தியீவிகள் என்று எல்லோருமே இந்தக்கழியாட்டத்தில் அள்ளுப்பட்டு செல்கின்றார்கள். பெண்கள் தினத்திற்காக பெண்களின்; பாடல்கள் ஒலிபரப்புவதும். அம்மாவிற்கான பாடல்கள் அக்காவிற்கான பாடல்கள் என விளாசித்தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது நாம் புலம்பெயர்ந்து வாழும் மேலைத்தேய நாடுகளில் பெண்அடக்குமுறைகள் ஆதிக்கம் என்பன சட்டரீதியாக ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வேலையில்கூட பாகுபாடு காட்ட முடியாத நிலை உருவாகிஉள்ளது. இதனால் இந்தப் பெண்களால் முன்வைக்கப் படவேண்டிய போராட்ம் என்பது அருகிவிட்டது இதன்காரணமாகத்தான் போராட்டத்திற்கு பதிலாக களியாட்டமாக மாறிஇருக்கிறது.



ஆனால் உலகெங்கும் போர்நடந்துகொண்டிருக்கும் அல்லது நடந்து முடிந்திருக்கும் நாடுகளில் முதலில் பாதிக்கப்படுவதும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதும் பெண்கள்தான். பாலியல் வதைகள் பாலியல் வல்லுறவுகள் என்பதை விடவும் குடும்ப சுமைக்காக வேலைக்கு செல்லும் இடங்களிலும் சுயமரியாதையோடு தொழில்பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. இவை பற்றிய முன்னெடுப்புகள் இந்தநாளில் செய்யப்படுகின்றதா என்றால் இல்லை என்பதுதான் விடையாகின்றது.
அண்மையில் இலங்கையின் நெடுந்தீவில் பருவமடையாத பள்ளிச் சிறுமிகள் கற்பளிக்கப்பட்டார்கள் ஒரு சிறுமி கொல்லப்பட்டாள். அரபு நாட்டிற்கு பஞ்சத்தை போக்க வேலைக்குச் சென்றபெண் குற்றவாளிக் கூண்டில் ஆதரவற்று நிற்கிறாள். வுன்னிப் பிரதேசம் எங்கும் கணவனை இழந்த பெண்கள் இராணுவத்தாலும் நம்மவர்களாலும் பாலியல் பலாத்காரங்களுக்கும்  பயமுறுத்தல்களுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள். ஆப்கானிதானில் பாதுகாக்க சென்ற மீட்பர்களால் சிதைக்ப்படுகின்ற பெண்களின் பட்டியல்கள் தொடர்கின்றது. ஈராக், லிபியா இப்படி எத்தனை நாடுகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இவற்றைப்பற்றிப் பேசாத இந்த மீடியாக்கள் களியாட்டங்களாக மகளிர்தினத்தை கொண்டாடுவதை மாற்றுவதற்கு நாம் முனையவேண்டும் அதுதான் மகளிர் தினம் உருவான நோக்கத்தையும் கொண்டதாக இருக்கும்.


சென்றவாரம் யாழ்நகரில் மகளிர்தினத்தை ஒட்டி நடந்த ஒரு சம்பவம் கூர்ந்து பார்க்கவைத்தது. தொழில் இல்லாது குடும்பத்தை தாங்கவேண்டிய விதவைப்பெண்கள் சிலருக்கு முச்சக்கரவண்டி வாங்கிகொடுத்து ஓட்டுனர் பயிற்ச்சி அனுமதிப்பத்திரம் என்பவற்றையும் எடுத்துக்கொடுத்து முதல்முறையாக பெண்சாரதிகளை ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியதே. அதே வேளை அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையையும் உறுதிப்படுத்த வேண்டும் இல்லாது விட்டால் அந்த முயற்சி பலன் அற்றுப்போய்விடும் சம்பந்தப் பட்டவர்கள் செய்வார்களா?

1 comment:

Ramesh said...

"யாழ்நகரில் மகளிர்தினத்தை ஒட்டி நடந்த ஒரு சம்பவம் கூர்ந்து பார்க்கவைத்தது. தொழில் இல்லாது குடும்பத்தை தாங்கவேண்டிய விதவைப்பெண்கள் சிலருக்கு முச்சக்கரவண்டி வாங்கிகொடுத்து ஓட்டுனர் பயிற்ச்சி அனுமதிப்பத்திரம் என்பவற்றையும் எடுத்துக்கொடுத்து முதல்முறையாக பெண்சாரதிகளை ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியது உண்மையிலேயே பாராட்டப் படவேண்டியதே"

நல்ல கட்டுரை பலர் சிந்திக்காத விதத்தில் பாஸ்கரன் சிந்திக்கின்றார்.
இன்னொன்றையும் சொல்லியிரக்கலாம் என்று நினைக்கிறேன் அதிக பிரசங்கித்தனம் என்று நினைக்கமாட்டீர்கள். ( நினைத்தாலும் பரவாயில்லை) மேதின ஊர்வலமும் இப்போ கேளிக்கையான நிகழ்ச்சியாக தானே நடக்கிறது முதலாளிமாரும் ஆளும்கட்சியும் தானே ஒழுங்கு செய்கிறது. எனக்குமுன்னைநாள் கோசம் ஒன்று நினைவிற்கு வருகிறது மிருசு நத்துவ ஒதி கணவா, சீனி நத்துவ ரீ பொணவா. விளங்குகிறதா.