தமிழ் சினிமா

.
தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள்
ஏ.எம். றிஷாத்
தமிழ் சினிமாவின் போக்கு தற்போது சிறந்த நிலையில் சென்று கொண்டிருப்பதை சென்ற ஆண்டைப் போலவே இம்முறையும் தேசிய விருதுகளை அள்ளி நிரூபித்துள்ளது.

அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் சேர்த்து 5 தேசிய விருதுகளை குவித்து தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருதினை விமல், இனியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூட வா படத்திற்கு கிடைத்தது. சிறந்த பொழுதுபோக்குப் படமாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான அழகர்சாமியின் குதிரை பெற்றதுடன் இப்படத்தின் நாயகன் அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது.


சிறந்த எடிட்டிங்குக்கான விருதினை ஆரண்ய காண்டம் படத்திற்காக பிரவீண் - ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குனருக்கான விருதினை வென்றுள்ளார். இப்படத்தின் பின்னணி இசை பெரியளவில் பேசப்பட்டதனால் யுவன் சங்கர்ராஜாவுக்கும் விருதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது கைகூடவில்லை.

நன்றி வீரகேசரி

அரவான்18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான்.

மஹாபாரத யுத்தம் தொடங்கும் முன் களப்பலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும், அரவான் பாத்திரத்தோடு, காவல்காரர்களாகவும், கள்ளர்களாகவும் இருந்த சமூகத்தின் கலவையே இந்தப்படம்.

முதல் பாதி, கதை நடக்கும் காலகட்டத்தையும், அந்த காலகட்டத்தில் இருந்த நடைமுறைகளை, வாழ்வியல் முறைகளையும் தெளிவாக சொல்கிறது. அந்த தெளிவுதான் இரண்டாம் பாதியின் வெயிட்டை தாங்கிப்பிடிக்கிறது. 18-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களையும், பழக்கவழக்கங்களையும் நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் வசந்தபாலன். அதற்கான உழைப்பு மிக அதிகம். அதற்காக வசந்த பாலனுக்கு பாராட்டுகள். வசந்தபாலனுக்கு தோள் கொடுத்துள்ள ஒளிப்பதிவாளர் சித்தார்த்துக்கும் சிறப்பான பாராட்டுகள்.

மீண்டும் ஒரு விஷுவல் விருந்து. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியாதவாறு மிகவும் கவனமாக உருவாக்கியதற்குப் பின்னால் மிகப் பெரிய உழைப்பும் பண முதலீடும் தெரிகிறது. கதை என்று பார்த்தால் அது படத்தின் இரண்டாம் பாதியில் வருகிற ஆதியின் பிளாஷ்பேக் காட்சிகள் தான். ஆனால் படத்தின் முதல் பாதி முழுவதும் பசுபதி மற்றும் அவரது கிராமத்தாரின் வாழ்க்கை முறையை மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

வானத்து விண்மீன்களை பார்த்து களவாணி தொழிலுக்கு கிளம்புவதில் இருந்து அந்த திருட்டு நகைகளை விற்று ஊர் மக்களுக்கு தானியம் கொண்டுவருவதில் தொடங்குகிறது படம். கள்வர்கள் நிறைந்த ஊரில், கள்வர்களுக்கு தலைவராக பசுபதி. இவர்களின் ஊருக்கு வந்து சேர்கிறார் ஆதி. பசுபதி ஆதியை ஏற்றுக்கொள்ள, பசுபதியின் தங்கை ஆதியை காதலிக்க, பசுபதியும் "என் தங்கையை மணந்து கொள்" என்கிறார். ஆதி அப்போது, தனக்கு திருமணம் ஆகி விட்டது என்கிறார். ஜல்லிக்கட்டில் பசுபதி காயமுற, ஆதி தான் யார் என்ற உண்மையை சொல்லி விட்டு களத்தில் இறங்குகிறார். ஜல்லிக்கட்டில் வெல்லும் ஆதியை, அவர் சொந்த ஊர்க்காரர்கள் வந்து அடித்து இழுத்து செல்கின்றனர். ஏன் என கேட்கும் பசுபதியிடம் "ஆதி ஒரு பலியாடு. பலி ஆக வேண்டியவன்" என்கிறார்கள்.

டைவேளைக்கு பின் ஆதியின் கதை விரிகிறது. அந்த ஊர் ராஜாவின் சூழ்ச்சியால், ஆதியை பலி கொடுக்க நாள் குறிக்கின்றனர். உண்மையை சொல்லாமல் ராஜா தற்கொலை செய்து கொள்கிறார். பத்து ஆண்டுகள் மறைந்திருந்து திரும்பினால், பலி தர மாட்டார்கள் என்பதால், மறைந்து வாழ்கிறார் ஆதி. 9 ஆண்டுகள் முடிந்த நிலையில் என்னவாகிறது என்பதுதான் மீதிக்கதை.

ஆதியின் உழைப்பை என்ன சொல்லி பாராட்டுவது? படம் முழுதும் வெய்யிலில் சட்டையோ, செருப்போ இன்றி கல்லிலும் முள்ளிலும் ஓடுகிறார். 'சரசர'வென சுவற்றில் ஏறுகிறார். வெறும் உடம்புடன் மரத்தில் கட்டி தொங்க விடுகிறார்கள். ஜல்லி கட்டில் டூப் இன்றி வீரம் காட்டுகிறார் (பசுபதிக்கு டூப் போட்டது தெளிவாய் தெரிகிறது. ஆதிக்கு சிறிதும் டூப் இல்லை). கன்று குட்டியை தூக்கி கொண்டு ஓட்டப் பந்தயம் ஓடுகிறார். நீர்வீழ்ச்சி மேலிருந்து குதிக்கிறார். மாடு மேல் சவாரி செய்கிறார். சிக்ஸ் பேக் உடல் படம் முழுதும் பராமரித்துள்ளார்.

இவை அனைத்துமே கஷ்டப்பட்டோம் என சொல்ல, துருத்தி கொண்டு தெரியாமல், மிக இயல்பாக அமைந்துள்ளது. எந்திரனில் ரஜினியை 'பெண்டு' நிமிர்த்திய மாதிரி இதில் ஆதியை வேலை வாங்கி உள்ளனர். அவரது உயரம், உடலை வைத்து அவர் செய்யும் அனைத்தையும் நம்ப முடிகிறது. நடிப்பும் நிச்சயம் குறை சொல்ல முடியாத விதத்தில் உள்ளது. ஆதி என்பவர் ஸ்டார் இல்லை என்பதால், அந்த பாத்திரமே மனதில் நிறைகிறது. (ஆனாலும் விக்ரம் அல்லது சூர்யா நடித்திருந்தால் இந்த படத்தின் ரீச்சே வேறு என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஆதி அளவு உழைத்திருப்பது சந்தேகமே எனினும், அதிகளவு ரீச்சாகியிருக்கும்.

பசுபதி கள்வன் பாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளார். தேர்ந்த நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். ஆதிக்கு அடுத்து முக்கியத்துவம் உள்ள கேரக்டர் இது தான். "எவ்வளவோ ரகசியம் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா உன்னை பத்தின ரகசியம் மட்டும் தெரியவே இல்லையே" என்று ஆதியிடம் சொல்லும் இடமாகட்டும், திருட்டுக்கு கூட்டி போகவில்லையென கோபிக்கும் மகனை சமாதானம் செய்வதாகட்டும், இறுதிக் காட்சியில் ஆதியிடம் பேசுவதாகட்டும்...மிக நிறைவாய் செய்துள்ளார். தமிழில் இந்த வருடத்தின் சிறந்த துணை நடிகர் விருது அநேகமாய் இவருக்கு தான்.

ஆதியின் மனைவியாக தன்ஷிகா! 'பேராண்மை'யில் அறிமுகம் ஆனவர். அப்போது அதிகம் கவரா விட்டாலும் தற்போது தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டு விட்டார். பெண்கள் அதிகம் வெள்ளையாய் இருந்தாலும் அதிக கருப்பாய் இருந்தாலும் பிடிப்பதில்லை. கோதுமை நிறம் தான் அழகு தன்ஷிகா அந்த கேட்டகரியில் வந்து விடுகிறார். பின்னணி குரல் எடுத்தவுடன் சொதப்பினாலும் போக போக பழகிடுது.

ஆதி வாழப் போவது முப்பதே நாள் எனும் போது "உன்னிடம் பிள்ளை பெத்துக்குரேன் அவனை பார்த்தே மிச்ச வருஷம் வாழ்வேன்" என சொல்லி ஆதியை மணக்கிறார் இவர். ஆதியோ சாக போகிறோமே என வெறுப்பில் திரிகிறார். இவரை கண்டு கொள்ளவே இல்லை. இருந்தும் அவரை தன் வழிக்கு கொண்டு வருகிறார் தன்ஷிகா. பத்து மாசத்தில் பிள்ளை தயார்! என்ன இருந்தாலும் கிளைமாக்சில் 9 வருஷத்துக்கு பின் ஆதியை அப்படியே சிறிதும் மாற்றமின்றி காட்டிய இடத்தில் இயக்குநர் சறுக்கி விட்டார்.

அர்ச்சனா கவி: பசுபதி தங்கையாக, ஆதியை ஒரு தலையாய் காதலிப்பவராக வருகிறார் இந்த மாடர்ன் பெண், இத்தகைய ஒரு கிராமத்து பாத்திரத்தில், இவரை நன்கு நடிக்க வைத்தது ஆச்சரியம். திருமுருகன்: 'களவாணி'யில் வில்லன் இதில் நண்பனுக்காக பலியாகும் நபராக வருகிறார். இறக்க போகும் போதும் சிரிப்புடன், நண்பனை பற்றி உயர்வாய் பேசி விட்டு இறக்கும் தருணத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

சிங்கம்புலி: இவர் வந்தவுடன் தியேட்டரில் வந்த விசிலை பாக்கணுமே, இவருக்கு இவ்ளோ ஆதரவா என ஆச்சரியமா இருந்தது. "என் பொண்டாட்டி மேலே கண் வச்சான். அதைக்கூட பொறுத்துக்கலாம். என் மச்சினிச்சி மேலே கண்ணு வைக்கிறாம்பா என் மச்சினிச்சி மேலே அவன் கண்ணு வைக்கலாமா? நீயே சொல்லு" எனும்போது தியேட்டரே ரணகளமாகிறது.

ஆதி அம்மாவாக: T.K. கலா (பின்னணி பாடகி). வழக்கமான சினிமா அம்மா. ஆதி - தன்ஷிகா திருமணம் ஆன இரவு தன்ஷிகா உடன் இவர் பேசும் இடத்தில் மட்டுமே கவர்கிறார்.

கரிகாலன்: கஸ்தூரி ராஜாவின் 'சோலையம்மா'வில் நெகடிவ் ஹீரோவாக நடித்த கரிகாலனுக்கு வில்லன் வேடம். வித்தியாச தலை முடியுடன் ஆதியை தேடி அலைகிறார். கடைசியில் இவரின் புன்னகை பக்கா வில்லத்தனம்.

அஞ்சலி: ஓ! காட்! இது அஞ்சலியா? ஒத்துக்கவே முடியாது! 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கு முன்பே இப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் எடுத்திருப்பார்கள் போலும். செம குண்டு!

இசையமைப்பாளர் கார்த்திக்கின் பாடல்களும் சரி, பின்னணியும் சரி அவ்வளவாக சோபிக்கவில்லை. இது போன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக முக்கியமான ஒன்று. அதில் சிறப்பானதை கொடுக்க தவறிவிட்டார்கள். ஒளிப்பதிவு பிரம்மாண்டம், திரைக்கதை பாடல் கட்சிகள் தவிர வேறெங்கும் தொய்வில்லாத திரைக்கதை. அரவான் மிக நல்ல படம்.

நன்றி விடுப்பு


No comments: