யுத்தத்தில் காணாமற் போன மற்றொன்று


.
- கருணாகரன்
mullivaikal-1யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்று எங்களின் வாழ்வில் வந்திருந்தது. அப்பொழுது நண்பர்கள் சந்தேகிக்கப்பட்டனர். அல்லது நம்புவதற்கு கடினமான ஒரு நிலையில் தெரிந்தனர். நண்பர்களிடம் நான் சந்தேகத்துக்குரியவனாக இருந்தேன். நானும் நண்பர்களைச் சந்தேகித்தேன். அயலவர்கள் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். அண்ணன் தம்பியைச் சந்தேகித்தான். தம்பி அண்ணனைச் சந்தேகித்தான். அக்காவைச் சந்தேகித்தாள் தங்கை. பெற்றோரைப் பிள்ளைகளும் பிள்ளைகளைப் பெற்றோரும் சந்தேகித்தார்கள். இந்த நிலை வளர்ந்து சனங்கள் இயக்கத்தைச் சந்தேகித்தனர். இயக்கம் சனங்களைச் சந்தேகித்தது. இறுதியில் இயக்கமே இயக்கத்தைச் சந்தேகித்தது. (போராளிகளே போராளிகளைச் சந்தேகித்தனர்). இப்படி எல்லோரையும் சந்தேகிக்கும் விதி ஒரு மாபெரும் வலையாக அப்பொழுது எல்லோரின் மீதும் விழுந்திருந்தது.
இது வெட்கந்தான். ஆனால், அன்றைய சூழலில் இதுதான் நிலைமை.



இல்லையென்றால் பின்னேரம் வலைஞர் மடம் கடலோரத்தில் எங்களோடு சேர்ந்து ஒரு குடிசையைப் போடுவதற்கான இடத்தைத் தேடிக்கொண்டிருந்த தானா. விஷ்ணு, இரவு எங்களுக்கே தெரியாமல் எப்படித் தப்பிச் செல்ல முயன்றிருப்பான்? (அப்படித் தப்பிச் சென்றபோது கடலில் வைத்துப் புலிகளால் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையிருந்த கதை தனியானது). அப்பொழுது நாங்களும் அங்கிருந்து வெளியேறக்கூடிய – வெளியேற வேண்டிய நிலையிலேயே இருந்தோம். இது விஷ்ணுவுக்கும் தெரியும். விஷ்ணுவும் குடும்பத்தோடு வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டேயிருக்கிறான் என்று எங்களுக்கும் தெரியும். ஆனால், அன்றிரவு எங்களுக்குச் சொல்லாமல் அவன் இரகசியமாகவே வெளியேறினான். அப்படிச் சொல்லிக்கொண்டு போவதற்கான யதார்த்தம் அங்கில்லை. மனச்சூழலும் அப்போதில்லை. அதனால், இரகசியமாகவே வெளியேறிப்போய்க் கடலில் வைத்து இயக்கத்திடம் சிக்கிக் கொண்டான்.
சொந்த நிலத்தில் இனி இருக்கவே முடியாதென்று வெளியேறிச் செல்லும்போது படையினராலும் போராளிகளாலும் ஒரே நேரத்தில் இருவழித் தாக்குதல்களுக்கும் இருவழி அபாயங்களுக்குள் உள்ளான சந்தர்ப்பம் நான்காம் கட்ட ஈழப்போரில் உருவாகியிருந்தது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் ஏறக்குறைய இது அரும்பு நிலையிலிருந்தது. ஆனால், இந்த மாதிரியில்லை. இப்பொழுது நான்காம் கட்டப்போரின்போதோ இது உச்சநிலையை எட்டியிருந்தது.
இலங்கைக்கு வெளியே யாரும் தப்பிப் போய்விடக்கூடாது என்று இலங்கைப் படைகள் கவனமாக இருந்தன. ‘தமிழீழத்தை’ விட்டு வெளியேறிச் செல்வதை அனுமதிக்க முடியாது என்று புலிகள் மிக ஜாக்கிரதையாக இருந்தனர். ஒரு சாரார் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதை விட்டு ஏனையவர்கள் தப்பிச் செல்வதைப் புலிகள் விரும்பவில்லை.

ஆனாலும் புலிகளின் பகுதிகளில் இருந்து படையினரின் பகுதிக்குச் சனங்கள் போய்க்கொண்டிருந்தனர். இன்னும் பலர் படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போவதற்கு முயன்று கொண்டிருந்தனர். அவ்வளவு காலமும் எதிரிகள் என்றும் நம்பவே முடியாதவர்கள் என்றும் கருதப்பட்டிருந்த படைகளிடம் துணிந்து செல்வதற்கு சனங்கள் முன்வந்திருந்தனர். சூழல் அப்படி. அந்தளவுக்கு உச்சமான போர் நடந்து கொண்டிருந்தது. ஆகவே படையினரிடம் சரணடைவதைத் தவிர தப்புவதற்கு வேறு வழிகளே இல்லை. எனவே ஏறக்குறைய இது ஒரு ஏகமனநிலையாக எல்லோரிடமும் உருவாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் சவாலான காரியம், புலிகளின் பிடியிலிருந்து மீள்வதே.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் அங்கே யாரும் யாருக்கும் சொல்லிக் கொண்டு வெளியேறுவது குறைவு. சூழ்நிலைச் சாத்தியங்களின் குறைவும் இதற்கொரு காரணம். மற்றது, தகவல் கசிந்து விட்டால் எல்லாமே அம்போதான். செல்லும் வழியில் இயக்கத்திடம் சிக்கிக் கொள்ள வேண்டிவந்து விடும். சிக்கினால் அவ்வளவுதான். முன்னரணுக்குப் போகவேணும். அல்லது, வட்டுவாகல், போன்ற ஏதாவதொரு சிறைக்கூடத்திலோ சீர்திருத்தப்பள்ளியிலோ சமைத்துக்கொண்டிருக்க வேண்டும். சிலருக்கு விசாரணைகளின் முடிவைப் பொறுத்து தண்டைனைகளின் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆகவே, என்னதானிருந்தாலும் ரகசியத்தைக் கசியவிடாமற் பார்த்துக் கொள்வார்கள். உயிர்ப்பிரச்சினையல்லவா!

இன்னொரு சந்தர்ப்பதில் விஷ்ணு எங்களிடம் சொல்லாமல் வெளியேறியதைப்போலrefugees-6நாங்கள் திருவருக்கு – (மு. திருநாவுக்கரசுவுக்கு) – ச் சொல்லாமல் வெளியேறினோம். இரவு ஒன்பதே முக்கால் மணிவரையில் ஒன்றாகவே வலைஞர் மடம் கடலோரத்தில், மலநாற்றமும் வேட்டோசையுமான பின்னணில் பி.பி.ஸியைக் கேட்டுக் கொண்டிருந்த நாங்கள், பிறகு வந்த ஒரு மணி நேரத்தில் எங்களுடன் கூடவே இருந்த திருவருக்குச் சொல்லாமல் அந்த இரவு கடல்வழியே வெளியேறிச் சென்றோம்.

ஆனால், அந்தக் கணங்களின் வதையைச் சொல்லவே முடியாது. கூட இருந்து நட்பாகப் பழகியவர்கள், ஒன்றாகவே இருந்து, ஒன்றாகவே பழகி, அன்பில்தோய்ந்திருந்த உறவுகள், நட்பின் நெருக்கத்தோடிருந்தவர்களை எல்லாம்  இப்படி அந்நியப்படுத்தியமாதிரி இடையில் விட்டு வெளியேறிச் செல்வதென்பது எவ்வளவு கொடுமையானது? எவ்வளவு வெட்கத்துக்குரியது? என்பதை அந்தக் கணத்தைக் கடக்க முடியாமற்  திணறும்போதே புரிந்து கொள்ள முடியும். நாங்களிருந்த நிலைமை இப்படி எங்களையும் – எல்லோரையும் மாற்றியிருந்தது.

வெட்கமும் துக்கமும் கூடிய நிலை அது. அந்நியத்தன்மையும் குற்றவுணர்ச்சியும் துக்கமும் பேரிருளாக நம் மனதை அடைக்கும் கணங்கள் அவை. இனி எப்படி நாங்கள் ஒவ்வொருவரும் எதிரெதிரே முகங்களை நோக்க முடியும்? அதற்கு மனம் எழுச்சிகொள்ளுமா? ஏனிந்த அந்நியத்தனம்? எந்த விதி இப்படி எங்களைப் போட்டு வதைக்கிறது? இப்படியானதொரு நிலையைச் சந்தப்பதற்காகவா நாங்கள் போராடினோம்? அபாய வலயத்தில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் அவரவர் தப்பிச் செல்வதென்பது மிகக் கேவலமான செயலே. அதிலும் காயப்பட்டவர்கள், உறவுகளை இழந்தவர்கள் என்று உதவிகள் தேவைப்படுவோரையே கைவிட்டு வரும் கொடுமை.

யாரையும் நம்பாமல், யார் மீதும் சந்தேகத்தையே வைத்து வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு இறுதியில் இப்படியான முடிவுகள்தான் வரும் என்று எங்கோ படித்த நினைவு வந்தது.

எல்லோருடைய விடுதலைக்காக, பொது நன்மைகளுக்காகப் போராடப் புறப்பட்ட நாங்கள், அதற்காக உயிரையே கொடுப்பதற்குத் துணிந்த நாங்கள் ஒவ்வொருவரும் இப்போது மிகச் சுருங்கி அவரவர் தப்பினாற் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தோம். வெட்கத்திலும் வெட்கமான துக்கந்தரும் வாழ்க்கை இது.

கடலிற் பயணிக்கையில் அலைக்களிக்கும் எண்ணங்களைக் கடக்க முடியாமற் திணறினேன். முன்னே விரிந்திருந்த அபாயவெளியைக் கடப்பதை விடவும் அலைக்கழிக்கும் எண்ணங்களைக் கடப்பது கடினமானதாயிருந்தது.

வழி நெடுகத் திருவரைப் பற்றியும் பாலகுமாரனைப் பற்றியும் இன்னும் நெருக்கமான அத்தனை பேரைப்பற்றியும் நினைத்துக்கொண்டு கடலில் இருந்தேன். தப்பிச் செல்ல விதியற்ற அத்தனைபேரின் நிலையும் துக்கத்தைத் தந்தது. அலைகளை விடவும் மோசமாக இருந்தது மனம்.

இரவு ஒரு கள்வனைப் போல வெளியேறி மறுநாள் மதியம் கைகளை உயர்த்தியவாறு அடிமையைப் போல கரை சேர்ந்த பயணம் அது. இத்தனைக்கும் இதெல்லாம் சொந்த நிலத்திலேயே நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள். நாம் விடுதலைக்காகப் போராடிய, குருதிய சிந்திய நிலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்.

ஈழப்போராட்டம் இப்படி எத்தனை களவான பயணங்களையும் அடிமை நிலைகளையும் தந்திருக்கிறது?
vanni tamils
இனப்பிரச்சினையினாலும் ஈழப் போராட்டத்தின் விளைவாகவும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் களவு வழிகளில் போலி முகங்களோடும் அடிமை நிலையோடும் பயணம் செய்யும் நிலை இன்னும் முடியவேயில்லை. இப்போது போர் முடிந்த பிறகும் இந்தக் களவான வழிகளில் – ஆபத்தான நிலையில் (கப்பல்களிலும் பார வண்டிகளிலும்) ஏராளம் பயணங்கள் நடக்கின்றன. (இத்தாலி தொடக்கம் கிறிஸ்மஸ் தீவுகள் வரையில் ஈழத்தமிழர்களின் இரகசியப் பயணங்கள் தொடர்கின்றன).

இதெல்லாம் சமுத்திரத்தைப் போல நீண்ட கதைகள். சொல்லித் தீராதவை. ஆகவே, இதை விட்டு விட்டு, நாம் வன்னியில் யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்றைக் கடக்க முடியாதிருந்த கதையைப் பார்ப்போம்.

நான்காம் கட்ட ஈழப்போரில் யுத்த அரங்கு விரிந்து கொண்ட போனது. அதனுடைய வாய் பெருக்கப் பெருக்க போரிடுவதற்கான ஆட்தொகையும் அதிகமாகத் தேவைப்பட்டது. இந்த நிலையில் ‘கட்டாய ஆட்சேர்ப்பு’ என்ற புலிகளின் நிலைப்பாடு எல்லா இடங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கியிருந்தது. வெளியிடங்களில் இருந்து போராட்டத்தின் அவசியத்தைப் பற்றிக் கதைத்தார்களே தவிர, யாரும் போராட வரும் நிலை இல்லை.  அதனால் வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் யாராவது ஒருவர் கட்டாயம் போராட வரவேண்டும் என்ற உத்தரவை இயக்கம் அறிவித்ததால், எல்லா வீடுகளும் கலங்கின.

அக்காவை இயக்கத்துக்கு அனுப்பப்போகிறார்களா இல்லைத் தன்னைத் தான் அனுப்பப்போகிறார்களா என்று தங்கை சந்தேகித்தாள். அம்மா தனக்குச் ‘சப்போர்ட்’ பண்ணப்போகிறாவா இல்லைத் தங்கைச்சியைப் பாதுகாக்கப் போகிறாவா என்று கலங்கினாள் அக்கா.

அண்ணா உழைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, தன்னைத்தான் போகச் சொல்லப்போகிறார்களோ என்ற ஏக்கம் தம்பிக்கு. இல்லை, தம்பி படிக்கக் கூடியவன்.  இடையில் படிப்பைக் குழப்பியதால், தன்னைத்தான் இயக்கத்துக்கு அனுப்பப்போகிறார்களோ என்ற ஐயம் அண்ணனுக்கு.

அத்தான் (அக்காவின் கணவர்) இயக்கத்திலிருக்கிறார். குடும்பத்தையும் விட இயக்கத்துக்கே அவர் விசுவாசமாக இருப்பாதால் நிச்சயமாக அவர் தன்னை இயக்கத்துக்குக் காட்டிக் குடுத்துவிடுவார் என்ற சந்தேகத்தில் கலங்கினான் மைத்துனன்.

அவர்களின் பிள்ளையை இயக்கம் கூட்டிக் கொண்டு போயிட்டுது. ஆகவே,  நிச்சயமாகத் தங்களின் பிள்ளையைக் காட்டிக் குடுக்கப்போகிறார்கள்’ என்று அயல் வீட்டாரையே சந்தேகப்பட்டனர் அதுவரையில் இயக்கத்துக்குப் பிள்ளையை அனுப்பாத வீட்டார்.

போராட வரவில்லை என்ற காரணத்துக்காக அக்காவின் கணவரை – அத்தானை இயக்கம் கூட்டிக் கொண்டு போனபோது தம்பிக்குச்சந்தேகம் வந்தது. அவர், தான் தப்பிக் கொள்வதற்காகத் தன்னைக் காட்டிக் குடுத்து விடுவாரோ அல்லது அவரைக் காப்பாற்றுவதற்காக அக்கா காட்டிக் குடுத்துவிடுவாளோ என்று. ‘யாராவது ஒருத்தர் இயக்கத்துக்குப்போகாமல் இருக்கிறதால்தான் அக்காவின் குடும்பத்துக்குள் பிரச்சினை வந்திருக்கு’ என்று சொல்லுகின்ற அம்மா, தன்னைக் காட்டிக் குடுத்து விடுவாவோ என்று சந்தேகப்பட்டான் இளைய மகன்.

தன்னுடன் படித்தவன் இயக்கத்தில இருக்கிறான். அவனைப் பிடித்துச் சேர்த்து விட்டார்கள். ஆகவே, இப்போது அவன் எங்கேயாவது தன்னைக் கண்டால் காட்டிக்கொடுத்து விடுவானோ!  என்ற ஐயம் இன்னொருவனுக்கு வந்தது.

சந்தேகிக்கும் இடங்கள் இப்படிப் பல வந்தன. இப்படியே யாரும் யாரையும் நம்பவே முடியாத நிலை.

பாசம், உறவு, நட்பு போன்ற பிணைப்புகளில் எல்லாம் சந்தேகத்தின் வெடிப்புகள் தாராளமாகவே ஏற்பட்டன.

சில குடும்பங்களில் பெற்றோரின் மீது சந்தேகம் வந்தது பிள்ளைகளுக்கு. தங்களில் யாரைப் போகச் சொல்லப்போகிறார்கள் என்று பிள்ளைகள் குழம்பினார்கள். எந்தப் பிள்ளையை அனுப்பலாம் என்று முடிவெடுக்கவே முடியாத குழப்பமும் கலக்கமும் பெற்றோருக்கு. யாரையும் அனுப்பவில்லை என்றால் அந்தக் குடும்பத்தைக் கலக்கித் தும்பெடுத்துவிடும் அளவுக்குப் பிரச்சினைகளிருக்கும். ஆகவே யாரையாவது அனுப்பத்தான் வேணும்.

ஆனால், போகமறுக்கும் பிள்ளைகளை யாராற்தான் கட்டாயப்படுத்தி அனுப்ப முடியும்? அதுவும் பெற்றவயிறுகளால் அது முடியுமா? அதையும் கடந்து போர்க்களத்துக்கு அனுப்பி, அங்கே ஏதாவது நடக்கக் கூடாதவை (சாவு) நடந்து விட்டால் அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பின்னர், அது பெருங்குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களுடைய நிம்மதியைக் கெடுத்துவிடும். அப்படி அனுப்பிப் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர் இன்னும் துக்கத்தைக் கடக்க முடியாமல் தங்களுக்குள் உக்கிக் கொண்டேயிருந்தார்கள்.

இதேவேளை கிடைக்கின்ற வழிகளால் எப்படியோ சிலர் தப்பிச் சென்று கொண்டும் இருந்தனர். அல்லது அவர்கள் எப்படியோ ஒரு வழியைக் கண்டு பிடித்து அதன்வழியே சென்றனர். சுழியன்கள், விச்சுழியன்கள் எல்லோருக்கும் விதியும் வழியும் வேறுதான் போலும். ஆனால், இதெல்லாம் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். இந்த நிலையில் தப்பிச் செல்ல முயற்சிப்பவர்கள் யாருக்காவது சொல்லிக்கொண்டு போவார்களா?

இதனால், எல்லாமே இரகசியமாகவே நடந்தன. இரகசியங்களைக் காப்பாற்றுவதிலேயே பேர் பெற்ற இயக்கத்துக்குப் பாடம் சொல்லிக்குடுக்கக் கூடியவர்களும் இருந்தார்கள். மட்டுமல்ல, இந்த மாதிரிக் கேஸ்கள் சில இயக்கத்துக்கும் இராணுவத்துக்கும் இடையில் தண்ணியைக் காட்டிக் கொண்டுமிருந்தார்கள்.

புத்திசாலித்தனமாக இரண்டு தரப்பையும் வேவுபார்த்தார்கள். ரகசிய வழிகளால் ஆட்களைக் கூட்டிச் சென்று அனுப்பும் தொழிலைக் கூடச் செய்தார்கள்.

ஆனால், இதில் யாரையும் நம்பவே முடியாது. சிலர் உண்மையாகவே தப்பிச் செல்ல உதவினார்கள். சிலர் தப்பிச் செல்வதைப் போலத் தோற்றம் காட்டி இயக்கத்திடம் தப்பிச் செல்வோரை மாட்டி வைத்தனர்.

காட்டு வழிப் பயணத்துக்கு ஒரு தொகை. காட்டு வழியாற் தப்பிச் செல்வதற்காகக் கூட்டிச் செல்ல ஒரு தொகை. இதற்கு வழிகாட்டுவதற்கு ஒரு தொகை. வழி காட்டியை ஏற்பாடு செய்ய ஒரு தொகை.

காட்டுவழி அடைபட்ட பின்னர், இரகசியக் கடற் பயணங்களுக்கு என்று ஒரு தொகை. ஓட்டிக்கு ஒரு தொகை. படகுக்கு இன்னொரு தொகை. சிலர் படகை வாங்கியே தங்களின் பிள்ளைகளை அனுப்பியதுமுண்டு.

தலையா தொகையா பெரிது என்ற ஒரு நிலை வந்தது? தலையைப் பாதுகாக்க வேண்டும் என்றால் தொகையைப் பற்றிக் கவலைப்பட முடியுமா என்ன? இதற்காகவே புலம்பெயர் நாடுகளில் இருந்து காசை அனுப்பிக் கொண்டே இருந்தனர் உடன்பிறப்புகளும் உறவினரும். (பிறகு, இவர்களே இயக்கம் தோற்கக் கூடாது என்று போராட்டங்களையும் நடத்தினார்கள் என்பதெல்லாம் வேறு கதைகள்).

ஆகவே இந்த மாதிரி அது அதற்கென்று ஏற்பாட்டார்கள். ஒழுங்கு படுத்துகிறவர்கள். வேவு பார்க்கிறவர்கள். துறைக்குக் கொண்டு சென்று விடுகிறவர்கள்ஸ இப்பிடித் தொடர் வட்டம் ஒன்று இயங்கிக் கொண்டேயிருந்தது. இதில் படையினரிடம் சிக்குகிறவர்கள் பூஸாவுக்கோ களுத்துறைக்கோ வெலிக்கடைக்கோ நாலாம் மாடிக்கோ அனுப்பப்பட்டனர். புலிகளிடம் சிக்குகிறவர்கள் வட்டுவாகல், ‘காந்தி’யின் வள்ளிபுனம், விசுவமடுச் சிறைக் கூடங்களுக்கு என அனுப்பப்பட்டனர்.

இதேவேளை இயக்கமே தன்னை மறைத்துக் கொண்டு, பொதுமக்களைப் போல இரகசிய வழிகளால் ஆட்களைக் கொண்டு போய் விடலாம் என்று சொல்லி ஆட்களையும் பிடித்துக் காசையும் கறந்ததும் உண்டு.

‘கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுபோய் விடலாம்’ என்று சொல்வார்கள்.

‘கடற்புலிகளுக்குக் காசைக் கட்டித்தான் போகிறது, ஆகவே பயப்பட வேண்டாம்’ என்று உறுதியளிப்பார்கள்.

‘கடற்புலிகளில் தெரிந்த ஒருபோராளி இருக்கிறான், அவனுடன் கதைச்சிருக்கிறம். அவன் நாங்கள் போகிற நேரத்துக்குத் தங்களுடைய கண்காணிப்பை வேறு பக்கத்துக்குக் கொண்டு போயிடுவான்’ என்ற கதையையும் விட்டுக் படகில் ஏற்றிக் கடலில் வைத்துப் பிடிக்கிறமாதிரி ஒரு ‘சீனை’ விடுகிறதும் உண்டு.

இப்படிச் செய்யும்போது எந்தெந்த ‘றூட்’களால் என்னென்ன காரியங்கள் எல்லாம் நடக்கின்றன என்று இயக்கத்துக்குத் தெரிந்து கொள்ளும். அதேவேளை தொகைகளும் கிடைத்து விடும்.

ஆகவே, ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்ற நிலையிலேயே எல்லோரும் இருந்தனர்.

இப்படித்தான் ஒரு தடவை என்னிடம் வந்த யோ.கர்ணன் கேட்டார், ‘வெளியில போறதுக்கு ஒரு வழி சரிவரும்போல இருக்கு. உங்கட மகனைப் பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீங்கள்?’ என்று.

அது கடல்வழியாகத் தமிழகத்துக்குப் போவதைப் பற்றியது. அந்த வழியே பயணிப்பதற்கு ஒரு ஏற்பாடு சரிவரும்போல அவருக்குத் தெரிந்தது. எனவே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டு வந்திருந்தார். ஏனென்றால் எங்களின் வீட்டிலிருந்த நிலவரத்தை நன்றாகக் கர்ணன் அறிந்திருந்தார். அதைப்போல அவரும் அந்தப் பயணத்தில் வெளியேறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார்.

அப்போது எங்களின் வீடே போர்க்களமாக இருந்தது. வயதுக்கு வந்த பிள்ளைகளிருந்த எல்லா வீடுகளும் ஒன்றில், போர்க்களமாக இருந்தன. அல்லது கண்ணீர்க்கடலில் மூழ்கின. எங்கள் மகனோ, தான் ‘இயக்கத்துக்குப் போவதில்லை – போருக்குப் போவதில்லை’ என்ற தீர்மானத்தில் உறுதியாகவே இருந்தான். ஆனால், அவன் ‘இயக்கத்தில் சேரத்தான் வேணும்’ என்ற அழுத்தம் உச்சமாக இருந்தது. நெருக்குவாரங்கள் அதிகரித்தன. எப்படி அவனை இணைக்கலாம் என்று பலவாறாக இயக்கத்திலிருந்த பலரும் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அது முடியாத போது எப்பிடிப் பிடிக்கலாம் என்று யோசித்தார்கள்.

இந்த நிலையில் முன்னர் தமிழகத்துக்குச் செல்வதற்குக் கிடைத்திருந்த ஒரு சந்தர்ப்பத்தை இழந்ததைச் சொல்லி அவன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இப்படியிருக்கும்போதே கர்ணன் வந்திருந்தார். கர்ணனின் யோசனை அந்தச் சூழலில் மிக வாய்ப்பானதே. ஆனால், அதேயளவுக்கு ஆபத்தானதும் கூட. மிகப் பயங்கரமான முதலைகள் நிரம்பிய இரண்டு வாய்களுக்குள்ளால் தப்பிச் செல்லவேண்டிய நிலையிலான பயணம்.

நான் கர்ணனிடம் துருவித்துருவி பயணத்தின் விவரங்களைக் கேட்டேன். அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல முடியுமா? ஆனாலும் முடிந்தவரையில் அதைப் பற்றிச் சொன்னார். இவ்வளவுக்கும் நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். இறுதியில் நான் அவருக்கு எந்த முடிவும் சொல்லவில்லை. எந்தத் தெளிவான பதிலும் சொல்லவில்லை. அதை அவரும் புரிந்திருக்கக் கூடும்.

உண்மையைச் சொன்னால் அப்பொழுது என்னால் கர்ணனிலும் முழுதாக நம்பிக்கை கொள்ள முடியவில்லை. கர்ணனைச் சந்தேகித்தேன். அவ்வளவு நட்பாக இருந்த ஒருவனைச் சந்தேகித்தேன். ‘அயலானில் நம்பிக்கை வை. அயலானை நேசி’ என்று சொல்லிய கிறிஸ்துவை யாருமே கணக்கிலெடுக்க முடியாத காலம் அது. கடவுளேஸ! எப்படியான நிலை அது? என்ன கொடுமை அது?

பிறகு கர்ணனும் வெளியேறவில்லை. அவரால் அது முடியாமற் போய்விட்டது. எங்களுடன் தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை, மாத்தளன், வலைஞர்மடம் என்று இடம்பெயர்ந்து வந்து கொண்டேயிருந்தார்.

வலைஞர் மடத்திலும் வெளியேறுவதற்கான வழிகள் தேடப்பட்டுக்கொண்டேயிருந்தன.

முன்னர்கூட இப்படியெல்லாம் இருந்த ஒரு சூழலிற்தான் த. அகிலன் வன்னியை விட்டு வெளியேறிச் சென்றார். ஒரு மதியம் எங்கள் வீட்டுக்கு வந்த அகிலன் தான் அன்றிரவு இந்தியாவுக்குப் போகப் போகிறேன் என்றார். விரும்பினால் உங்கட மகனை அனுப்புங்கோ என்றார். ஆனால், அவர் போகும் வழியைப் பற்றி நாம் முழுவதுமாகக் கேட்கவில்லை. அப்படிக் கேட்பது பொருத்தமானதும் இல்லை. அப்படிக் கேட்டு விசாரித்த பின்னர், அந்த வழியில் ஏதாவது நடந்தால் அவர்கள் பிறகு நம்மைப்பற்றியும் பலவிதமாகச் சிந்திக்கக் கூடும். என்னதான் நண்பர்களாக இருந்தாலும் எல்லாவற்றையும் சொல்ல முடியாமலும் எதையும் நம்பமுடியாமலம் இருக்கும் சூழல் அல்லவா அது.

ஆனால், பிள்ளையை அனுப்புவதானால் வழியைக் கேட்காமல், அதனுடைய உத்தரவாதங்களைப் பற்றி யோசிக்காமல் எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முடியாது. அன்றும் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவேயில்லை. அகிலனும் ஒரு எல்லைக்கு மேல் தன்னுடைய பயணத்தைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.

பிறகறிந்தேன். அந்தப் பயணத்தில் போராளியொருவரும் வேறு சிலரும் கூட வெளியேறியிருந்ததை.

அந்தப் பயணங்கள் எல்லாம் வன்னியின் நிலைமைகளில் நம்பிக்கையின்மைகளின் அடையாளங்களைக் காட்டிய குறிகள். பிறகு எத்தனையோ போராளிகள் சனங்களோடு இப்படி வெளியேறினார்கள். நாங்கள் தப்பிச் சென்ற பயணத்திலும் அப்படி நிறையப் போராளிகள் இருந்தனர். அவர்கள் எங்களோடும் வந்தனர். கடலில் வைத்தே எங்களை வரவேற்றனர். அதாவது, எங்களுக்கு முன்னரே தங்கள் குடும்பங்களோடு வெளியேறிக் கடலில், கடற்படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் இறுதியில் – இறுதியிலும் இறுதியில் போராட்டத்தைப் பற்றி வந்த சந்தேகமே.

Nantri: thenee.com

No comments: