உலக பணக்காரர்கள் வரிசையில் 19-வது இடத்தில் முகேஷ் அம்பானி


.
Millioner
முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், அசிம் பிரேம்ஜி, சாவித்ரி ஜின்டால், இந்து ஜெயின்)
நியூயார்க், மார்ச் 8: உலக பணக்காரர்கள் வரிசையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 19-வது இடத்தில் உள்ளார். மெக்ஸிகோவைச் சேர்ந்த 72 வயதான தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம், தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 6,900 கோடி டாலர்களாகும். இந்திய மதிப்பில் இவரது சொத்து மதிப்பு ரூ. 3.45 லட்சம் கோடியாகும்.
 மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 6,100 கோடி டாலராகும். வாரன் பஃபெட் 4,400 கோடி டாலருடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
 உலகின் பெரும் பணக்காரர்களைப் பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் இதழில் உலக பணக்காரர்கள் அவர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 1,226 கோடீஸ்வரர்களின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இதழ் வெளியானபோது இடம்பெற்ற பணக்காரர்களில் 140 பேர் இப்போது பட்டியலில் இடம்பெறவில்லை. பட்டியலில் இடம்பெற்றுள்ள கோடீஸ்வரர்களின் சராசரி சொத்து மதிப்பு 370 கோடி டாலராக உள்ளது.

 
இந்தியாவிலிருந்து 48 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது தவிர, இந்திய வமிசா வளியினர் 9 பேரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தோனேசியா, அயர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.
 இந்தியாவில் வாழும் 48 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 19,400 கோடி டாலராகும் (இந்திய மதிப்பில் ரூ. 9,70,000 கோடியாகும்).
 54 வயதாகும் முகேஷ் அம்பானி சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,230 கோடி டாலராகும். ஆர்சிலர் மிட்டல் உருக்கு நிறுவனத் தலைவர் லட்சுமி மிட்டல் 2,000 கோடி டாலர் சொத்துகளுடன் 21-வது இடத்தில் உள்ளார். ஆனால் கடந்த ஆண்டை விட மிட்டலின் சொத்து 1000 கோடி டாலர் இப்போது குறைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 6-வது இடத்தில் மிட்டல் இருந்தபோது இவரது சொத்து மதிப்பு 3,100 கோடி டாலராக இருந்தது. அதிகரித்து வரும் உருக்கு விலை, ஐரோப்பிய நாடுகளில் தேவை அதிகரிப்பு ஆகியவை இவரது சொத்து மதிப்பு குறைவுக்கு முக்கியக் காரணமாகும். விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 1,590 கோடி டாலருடன் பட்டியலில் 41-வது இடத்தில் உள்ளார்.
 இந்தியாவிலிருந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஜின்டால் குழுமத்தின் சாவித்ரி ஜின்டால் 80-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1,000 கோடி டாலராகும். பென்னட் கோல்மன் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் 578-வது இடத்தில் உள்ளார்.
 பார்தி ஏர்டெல் குழுமத்தின் தலைவர் சுநீல் மிட்டல் 2,200 கோடி டாலருடன் பட்டியலில் 113-வது இடத்தில் உள்ளார். அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி 118வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 780 கோடி டாலராகும்.
 ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் தலைவர் கே.பி. சிங் (640 கோடி டாலர்), ஹெச்சிஎல் ஷிவ் நாடார் (500 கோடி டாலர்), மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மல்வீந்தர் சிங் (350 கோடி டாலர்), கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ் (180 கோடி டாலர்), இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி (170 கோடி டாலர்), பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
 இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி, அஜய் பிரமிள், அஞ்ஜி ரெட்டி, கெற்தரம் தாப்பர் ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிற இந்திய கோடீஸ்வரர்களாவர்.
 ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா 1,075-வது இடத்தைப் பிடித்துள்ளார். விஜய் மல்லையா, பூபிந்தர் குமார் மோடி ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
 பட்டியலில் 96 ரஷியர்கள், 95 சீனர்கள், 55 ஜெர்மானியர்கள் 37 இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 25 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஜப்பான், தைவானில் தலா 24 கோடீஸ்வரர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

No comments: