இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா

.


8/3/2012

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா நேற்று அதிகாரபூர்வமாக முன்வைத்துள்ளது.

இந்தத் தீர்மானத்தில்:

1. இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

2. அதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையைக் கூற வேண்டும்.

3. ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் விசாரணை முழுமையானது அல்ல என்கிற கவலையையும் இந்தத் தீர்மானம் உள்ளடக்கியதாக இருக்கிறது.
நன்றி வீரகேசரி
இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்தது
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19   ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்றை அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது.'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது சர்வதேச சட்டங்களின் மீறல்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளை போதுமானளவு ஆராயவில்லை என்ற கரிசனையை சுட்டிக்காட்டுவதுடன்,
1) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின்  ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கோருவதுடன் தொடர்புடைய சட்டக் கடப்பாடுகளை நிறைவேற்ற தேவையான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம், பொறுபுடைமை, மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான, சுயாதீன நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உறுதிபூணுமாறும் கோருகிறது.
2) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கும் இடம்பெற்றதாக கூறப்படும்  சர்வதேச சட்ட மீறல்களை ஆராயவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை விபரிக்கும் முழுமையான செயற்திட்டமொன்றை இயன்றவரை விரைவாக சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருகிறது.
3) மேற்படி நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட விசேட தொடர்புடைய நடைமுறைகள் வழங்குவதையும் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்கிறது. அத்துடன் அத்தகைய உதவி வழங்கல் குறித்து 22 ஆவது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கோருகிறது.' என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: