இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா. பேரவையில் வெற்றி : ஆதரவாக 24 நாடுகள்; எதிராக 15 நாடுகள்!

.
22/3/2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை வெற்றியளித்துள்ளது.

இந்த வாக்களிப்பின் போது அமெரிக்காவுக்கு ஆதரவாக 24 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைத்ததெனவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 வருட கால அவகாசம் இருந்ததாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம், அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேரணை குறித்த விவாதத்தின்போது சபையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, மொகான் பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை தரப்பு வாதங்களை முன் வைத்து விசேட தூதுவர் மகிந்த சமரசிங்க உரையாற்றியிருந்தார்.

அமெரிக்காவின் பிரேரணை 9 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேறியது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஷ்யா உட்பட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டு அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த சீனப் பிரதிநிதி, "இலங்கையின் இறைமைக்கு ஊறு விளைவிக்கும் இத் தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாகவும் இத்தீர்மானம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் ஒரு செயல்" எனவும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம் மெக்சிகோ தீர்மானத்துக்கு ஆதரவாகவும் மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.

ரஷ்யா இத் தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்தது. உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.

இதேவேளை கியூபா இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்தது. இலங்கையில் விசாரணை நடத்த வேண்டுமென எதிர்பார்க்கும் அமெரிக்கா, ஏன் லிபியாவில் நேட்டோ படைகள் மேற்கொண்ட பொதுமக்கள் மீதான தாக்குதல்களை விசாரணை செய்ய முன்வரவில்லை என கேள்வி எழுப்பியது.

இவ் வாக்கெடுப்பின் போது உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஒருதலைப் பட்சமானது என்றும் இத் தீர்மானமானது இலங்கையில் விடுதலைப் புலிகளை மீண்டும் தமது நடவடிக்கையைத் தொடர வழி செய்வதாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
நன்றி வீரகேசரி

இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா
கவின் 22/3/2012

மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்தியா இம்முடிவை எடுத்ததாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க உறுப்பினர் அரசிற்கான தமது ஆதரவினை வாபஸ் பெறப் போவதாக அறிவித்தமையே இதில் முக்கிய பங்குவகிப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இந்தியாவின் இந்நடவடிக்கையானது இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான இராஜதந்திர உறவில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நன்றி வீரகேசரி

உள் விவகாரத்தில் தலையீடு தெளிவாகத் தெரிகிறது சீனா கண்டனம் Friday, 23 March 2012


china_flag_ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை கடுமையாகச் சாடிய சீனா பேரவையின் உறுப்பு நாடொன்றின் உள் விவகாரத்தில் தலையிடுவதற்கான தெளிவான முயற்சியே இந்தத் தீர்மானம் என்று குறிப்பிட்டது. அதேவேளை, இந்தத் தீர்மானமானது அழுத்தத்தைத் திணிக்கும் முன்னகர்வென சீனா வர்ணித்துள்ளது. ஜெனீவாவில் வாக்கெடுப்பின் போது இக்கருத்தை சீனப் பிரதிநிதி தெரிவித்திருக்கும் அதேநிலையில் இதற்கு முன்பாகவே காலை சீனாவின் வெளிவிவகாரப் பேச்சாளர் கொங் லீ நிருபர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில் நாடொன்றை விசேடப்படுத்திக் கொண்டுவரும் இத் தீர்மானத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். தமது சொந்த விவகாரங்களைக் கையாள்வதற்கான ஆற்றல் இலங்கை அரசுக்கும் அதன் மக்களுக்கும் உள்ளதாக தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமைகளை மேம்படுத்துவதில் முன்னேற்றகரமான விடயங்களை இலங்கை மேற்கொண்டிருப்பதாகவும் தேசிய நல்லிணக்கத்தை வென்றெடுக்கும் முன்னகர்வை அது மேற்கொண்டிருப்பதாகவும் சீனப் பிரதிநிதி கூறியுள்ளார். மனித உரிமைகள் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு அடிப்படை அம்சமாக பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்புமே இருக்கின்றதென சீனா நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஸ்திரத்தன்மையை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதே உதவியாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, உகண்டா, மாலைதீவு, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இலங்கையுடன் மிக நெருங்கிய நட்புறவை மாலைதீவு கொண்டிருப்பதாகவும் யுத்தத்தின் போது இலங்கை எதிர்நோக்கிய நெருக்கடி நிலையை மாலைதீவு விளஙங்கிக்கொண்டுள்ளதாகவும் தமதுரையில் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் தீர்மானம் அவசியமற்றது எனவும் அவர் மேலும் கூறினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகசாசம் தேவையென அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இறைமையுள்ள அரசாங்கமொன்றிற்கு எதேச்சாதிகாரமான முறையில் அறிவுறுத்தலை வழங்கும் முயற்சியாக இத்தீர்மானம் உள்ளதாகவும் அதனால் இதனை எதிர்ப்பதாகவும் ரஷ்யப் பிரதிநிதி தமதுரையில் குறிப்பிட்டார். உள்விவகாரங்களைக் கையாள்வதற்கு இறைமையுள்ள நாட்டிற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும் ஆதலால் தீர்மானத்தை உறுப்பு நாடுகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமெனவும் ரஷ்யப் பிரதிநிதி தெரிவித்தார். ஈக்குவடோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை விவகாரம் உலக காலக்கிரம மீளாய்வில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமெனவும் அந்நிலையில் ஏன் சடுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் ஈக்குவடோர் கேள்வியெழுப்பியது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டுமெனவும் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல் ரீதியான விருப்பமானது இலங்கையிடமிருந்து தெளிவான முறையில் வெளிப்பட்டிருப்பதாகவும் ஈக்குவடோர் பிரதிநிதி குறிப்பிட்டார்.
நன்றி தினக்குரல்
























No comments: