இலங்கைச் செய்திகள்


 கொழும்பு யாழ். பேருந்துகளில் பயணப் பொதிகளை விசமிகள் அபகரிப்பதாக பயணிகள் முறையீடு

பிக்குகள் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நால்வர் கைது



யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு கணவனும் மனைவியும் படுகாயம்

யாழ்.ஆஸ்பத்திரிக்கு அருகிலே கருக்கலைப்பு நிலையம் முற்றுகை டாக்டர் தப்பினார்

பேசிப்பேசியே......!


யாழ்.மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் பொதுமக்களின் பாவனைக்கு அனுமதி

பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறையை கண்டித்து யாழ் நகரில் மௌனப் பேரணி


கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி தேவை










கொழும்பு யாழ். பேருந்துகளில் பயணப் பொதிகளை விசமிகள் அபகரிப்பதாக பயணிகள் முறையீடு
Wednesday, 21 March 2012 

யாழ்ப்பாணம் கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் இடைநடுவில் ஏற்றப்படும் பயணிகளால் பெரும் பாதிப்புக்களை தாம் எதிர் கொள்வதாக ஏற்கனவே ஆசனப் பதிவு செய்து செல்லும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறிய தொகை வருமானத்துக்காக இவ்வாறு இடைநடுவில் ஏற்றப்படும் பயணிகளால் தமது பெருமளவு தொகை இழக்கப்படுவதுடன் பல்வேறுபாதிப்புகளை தாம் எதிர் கொள்ள நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இச் சம்பவங்கள் தொடர்பாக பேருந்து சாலைகளுக்கு முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் தாம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பயணிகள் போக்குவரத்து சேவையில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் குறிப்பிட்டதாவது;

கடந்த திங்கட்கிழமை இரவு ஏழு மணிக்கு கொழும்பிலிருந்து யாழ். நோக்கி புறப்படும் பயணிகள் போக்குவரத்துச் பேருந்தில் ஆசனப்பதிவை பெற்மேற்கொண்டு பயணம் செய்திருந்தேன்.

அண்மையில் இந்தியாவிற்கு சென்று பல ஆயிரம் ரூபா பெறுமதியான புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தேன் இப்பயணத்தின் போது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட புடைவைகளையும் ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.

இவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கையில் இடை நடுவில் பல இடங்களிலும் பயணிகள் ஏற்றப்பட்டனர். குறிப்பாக புத்தளம் மற்றும் அனுராதபுரப்பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கி வந்தனர்.

இந் நிலையில், அனுராதபுரம் பகுதியில் நாம் பயணித்த வாகனம் பழுதடைந்தமையால் உடனடியாக பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். நானும் இறங்கி நிற்குமாறு கேட்கப்பட்டேன்.

தொடர்ந்து குறித்த வாகனத்தின் திருத்த வேலைகள் முடிவடைந்தவுடன் பயணிகளை ஏறுமாறு கூறப்பட்டது. அவ் வேளை ஏறிப் பார்த்த போது பேரதிர்ச்சி ஏற்பட்டது அதாவது நான் கொண்டு வந்த பொருட்கள் முழுவதும் காணாமல் போயிருந்தன.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாகவே நடத்துநருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் வாகனத்தின் பல பகுதிகளிலும் சோதனையிடப்பட்டது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

அதாவது இடை நடுவில் ஏற்பட்ட பயணி ஒருவர் வாகன திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் எனது பொருட்களை களவாடிக் கொண்டு சென்று விட்டார். என்பது தெரியவந்தது.

ஆயினும் இதற்கு தாம் ஒன்றும் செய்ய முடியாது என நடத்துநர் கூறியதையடுத்து உடனடியாக இலங்கை போக்குவரத்துசபைக்கு தெரிவிக்கப்பட்டதாக மேற்படி பயணி மேலும் கூறினார்.

நன்றி தினக்குரல்


பிக்குகள் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நால்வர் கைது


21/3/2012

கோட்டே, ரஜமஹாவிகாரையில் இருபிக்குகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் மிரியான மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்தார்.

நேற்றிரவு 9.45 மணியளவில் கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலரே குறித்த விகாரையில் இருந்த பிக்குகள் இருவரையும் கொலை செய்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இதனை தீவிர விசாரணையை மேற்கொண்ட மிரியான பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

நன்றி வீரகேசரி


யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு கணவனும் மனைவியும் படுகாயம்
Thursday, 22 March 2012

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் புதன்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் இராஜேந்திரா பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த 15 பேர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள்வெட்டை மேற்கொண்டதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிஹேர தெரிவித்துள்ளார்.

மடுத்தின் சகாயராசா (வயது 50) இவரது மனைவியான சகாயராசாரதி (வயது 45) ஆகிய இருவருமே வாள் வெட்டில் படுகாயமடைந்தவர்களாவர்.

வாள்வெட்டை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் 5 பேரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனைய 10 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழ்.ஆஸ்பத்திரிக்கு அருகிலே கருக்கலைப்பு நிலையம் முற்றுகை டாக்டர் தப்பினார்
Thursday, 22 March 2012

 யாழ்.நகரில் போதனா வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்று புதன்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டது. இந்தக் கருக்கலைப்பு நிலையமானது கடந்த பல மாதங்களாக செயற்பட்டு வந்ததாகவும் இங்கு இளைஞர்கள் தினமும் இளம் பெண்களை ஏற்றிக்கொண்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் கருக்கலைப்பு நிலையத்திற்கு சென்ற 40 வயதுடைய பெண்ணொருவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட இரத்தப் போக்குக் காரணமாக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலேயே இந்த கருக்கலைப்பு நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர். ஆனாலும் இங்கிருந்து கருக்கலைப்பு செய்த வைத்தியர் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த வைத்தியரை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தினக்குரல்





பேசிப்பேசியே......!
Thursday, 22 March 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை பொறுப்பேற்றப்போது நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாகவும் நாட்டின் இறுதி உயிலை சிலர் எழுதிக் கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கேகாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் தெரிவித்திருக்கிறார்.

அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வழங்குவதில் தாராளமனம் கொண்டவர்களெனவும் அவற்றை நிறைவேற்றுவதில் தான் கஞ்சத்தனத்தைக்காட்டுவதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு தேர்தல் மேடையில் அரசியல்வாதி பேசக்கூடிய பேச்சை ஜனாதிபதியின் செயலாளர் பேசி இருக்கிறார். ஆனால், அவரது உரையில் உண்மை இல்லாமலுமில்லை. எமது நாட்டைப் பொறுத்தமட்டில் காலத்துக்குக்காலம் தேர்தல்கள் நடத்தப்பட்டு எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் பயன்படுத்தும் மந்திரச் சொல்தான் திறைசேரி காலியான அல்லது மோசமான நாட்டையே பொறுப்பேற்றிருக்கின்றோம், நாம் காலூன்றும் வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்பதுதான்.

லலித் வீரதுங்கவின் கூற்றுப்படி மோசமான நாட்டை பொறுப்பேற்றதாகக் கூறும்போது அதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த கட்சி எதுவாக இருக்க முடியும் என்பதைப் பார்க்கும் போது எம்மால் புரிதலற்ற நிலையே ஏற்படுகின்றது. எதிரணியிடமிருந்து ஆட்சி கைமாறியிருந்தால் அவரது கூற்று நியாயமானதாக இருக்க முடியும். ஆனால், ஜனாதிபதி அங்கம் வகித்த கட்சியே அப்போதும் ஆட்சி பீடத்திலிருந்தது. கட்சித் தலைமைத்துவம் மாத்திரமே மாற்றம் கண்டுள்ளது.

அப்படியானால், அவரது கட்சியின் கடந்த கால ஆட்சியும் மோசமானது என்பதைத் தான் உறுதிப்படுத்தியிருக்கின்றார். அரசியல்வாதி கூட மறந்தும் இப்படிப் பேசமாட்டார். ஒருவகையில் ஜனாதிபதியின் செயலாளர் உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றார். நாடு சுமார் 10,15 வருடங்களாக படுமோசமான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம் உட்பட சகல மட்டத்திலும் பாரிய பின்னடைவையே காண முடிகிறது.

ஒரு காலகட்டம் வரை யுத்தத்தைக் காரணம் காட்டி வந்தனர். யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இன்னமும் மீட்சி பெற முடிவதில்லை. எதிர்க்கட்சிகளின் கடந்த காலத்தவறுகளை விமர்சித்துக் கொண்டிருப்பதிலேயே காலம் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நாளாந்தம் அபிவிருத்தி முன்னேற்றம் பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஊடகங்களில் அபிவிருத்தி தொடர்பாக விளாசப்பட்டு வருகின்றது. ஆனால், அபிவிருத்தியையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ கண்கூடாகக் காண முடியவில்லை. மக்களின் வாழ்வாதாரம் இன்று மிக மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் உட்பட சகல பொருட்களும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் டொலரின் விலை ரூபா 126.40 சதமாக இருந்தது. இன்று அது 131 ரூபா 63 சதமாக அதிகரித்து விட்டது. ரூபாவின் பெறுமதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரக்கூடிய நாட்கள் நிலைமையை மேலும் மோசமானதாக்கிவிடக்கூடிய நிலையே காணப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் கட்டியெழுப்புவதற்காக உறுதியான பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படாமல் அரசாங்கம் சில்லறைக் கடை நடத்துவது போன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதையே காண முடிகிறது.

நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் கூட எமது நாட்டுக்கென்று ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப்படவில்லை. காலத்துக்குக்காலம் ஆட்சிகள் மாறுகின்ற போது அந்தந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கேற்பவே நாட்டின் பொருளாதாரக் கொள்கையும் அமைந்து காணப்படுகின்றன.

நாம் யாருடைய தயவிலும் தங்கி நிற்காமல் எமது கால்களில் நிற்க வேண்டுமானால் எமது தேசத்துக்கென ஒரு தேசிய பொருளாதாரக்கொள்கை வகுக்கப்பட வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரம் நிலை குலையாமல் பாதுகாக்கப்படுவதற்கு அது ஒன்றே சரியான மார்க்கமாக இருக்க முடியும். அதை விடுத்து அரசியல் வாதிகளோ, அவர்களது கையாட்களோ கண்டபடி தாளம் போடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

தங்களது அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு நாட்டு மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.

ஒருநாள் நாட்டு மக்கள் விழித்துக் கொள்ளும் போது ஏமாறியது யார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். இதை உணர்ந்து செயற்பட வேண்டுமென்பதையே அதிகாரத்திலுள்ளவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சொல்லி வைக்கின்றோம்.
நன்றி தினக்குரல்



யாழ்.மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் பொதுமக்களின் பாவனைக்கு அனுமதி
Friday, 23 March 2012

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் பொதுமக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளதாக பழைய மாணவர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இத்தடாகத்தை பாடசாலை நாள்களில் பிற்பகல் 3 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை பயன்படுத்த முடியும். எனத் தெரிவித்த அவர் இத்தடாகத்தை அவர்கள் பயன்படுத்துவதற்கு சில ஒழுங்கு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்தடாகத்தை பயன்படுத்த விரும்புவோர் வருடாந்த அங்கத்துவப் பணமாக ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும். நீச்சல் தடாகத்தை ஒரு மணி நேரம்வரை பயன்படுத்த 100 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும்.

வருடாந்த அங்கத்துவம் பெறாதவர்கள் இத் தடாகத்தை பயன்படுத்த விரும்பினால் வருடாந்த அங்கத்துவம் பெற்றவர்களின் அனுமதியுடன் ஒரு மணித்தியாலத்திற்கு 200 ரூபா கட்டணமாகக் செலுத்த வேண்டும்.

இந் நீச்சல் தடாகத்தில் விசேட பயிற்சி பெற்ற உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீச்சல் பயிற்சி பெறவருபவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவுள்ளது. அத்துடன் ஆண்கள் நீச்சலில் ஈடுபடும்போது ஆண் உத்தியோகத்தர்களும் பெண்கள் நீச்சலில் ஈடுபடும்போது பெண் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுவர்.

இந்தநீச்சல் தடாகம் பிரதி வியாழக்கிழமைகளில் பெண்களின் பாவனைக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாளில் ஆண்கள் நீச்சல் தடாகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பாடசாலை மாணவர்கள் தடாகத்தை பயன்படுத்துவதாயின் தமது பாடசாலை அதிபரின் அனுமதியுடன் யாழ்.மத்திய கல்லூரி அதிபரின் அனுமதியையும் பெற்று நீச்சலுக்கான குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். அத்துடன் பாடசாலை மாணவர்கள் மாலை 6 மணிக்கு பின்னர் தடாகத்தை பயன்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி தினக்குரல்


பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறையை கண்டித்து யாழ் நகரில் மௌனப் பேரணி
Friday, 23 March 2012
jaffna_protest_



















யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை கண்டித்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை மௌப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

தேவை நாடும் மகளிர் அமைப்பு மற்றும் மனித உரிமைகள் இல்லம் ஆகியன இணைந்து இப்பேரணிக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தன.

நேற்றுக்காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்னறலிலிருந்து ஆரம்பமான இப்பேரணி கோயில் வீதி வழியாக சென்று பிரதான வீதியை அடைந்தது. பின்னர் அங்கிருந்து கண்டி வீதி வழியாக யாழ். மாவட்ட செயலகத்திற்கு சென்றடைந்தது.

jaffna_protest_2



















மௌனத்தைக் கலைப்போம் வாழ்வை வெற்றி கொள்வோம் இச்சையுடன் கூடிய மனிதா? ஏன்? துளிர்களை தின்னுகிறாய் நிறுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்போம் மகளிர் சக்தி மாபெரும் சக்தி சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி சுலோக அட்டைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.அரச அதிபர் தலைமையில் சிறிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதோடு அங்கு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
jaffna_protest_3

jaffna_protest_4

jaffna_protest_5

நன்றி தினக்குரல்


கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி தேவை
Friday, 23 March 2012

அண்மைக்காலமாக நாட்டில் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு கொள்ளை, கொலை, திருட்டு, கப்பம், கற்பழிப்புச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. நாளாந்தம் ஏதாவதொரு மோசமான சம்பவம் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றது.

முன்னொருபோதுமில்லாத விதத்தில் குற்றச்செயல்கள் கூடிக்கொண்டே போகின்றன. சமயப்பண்பாடுகளைக் கொண்ட பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்றதொரு நாட்டில் ஒழுக்கம், கலாசாரச் சீரழிவுகள் மேலோங்குவதன் காரணமாக எமது அடுத்த சந்ததியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயத்தை நாடு எதிர்கொள்ளும் நிலை உருவாகி வருகின்றது.

அன்றாடம் நடக்கும் கற்பழிப்பு, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு என்னதான் விழிப்புடன் செயற்பட்டாலும் கூட எங்காவது ஒரு இடத்தில் அடுத்தடுத்து குற்றச் செயல்கள் நடந்த வண்ணமே உள்ளது. மக்களால் வெளியே நடமாடுவது ஒருபுறமிருக்க வீடுகளில் கூட அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியாத நிலையே காணப்படுகின்றது.

நேற்று முன்தினம் கோட்டே பௌத்த விகாரையின் விகாராதிபதியும் மற்றொரு புத்தபிக்குவும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புராதன விகாரையில் இரத்தினக்கல் பதிக்கப்பட்ட மன்னர் காலத்தில் பாவிக்கப்பட்ட வாளைத் திருடும் நோக்கத்தில் வந்த மூவரடங்கிய கொள்ளையர்களே இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டு இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. ஒருவாரத்துக்கு முன்னர் கொழும்பு நூதனசாலையில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தங்க முலாம் பூசப்பட்ட வாள்கள் 93 தங்க நாணயங்கள் 18 வெள்ளி மோதிரங்கள், 50 வெள்ளி நாணயங்கள், இரத்தினக்கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் 9 செப்புக்காசுகள் 34 பழைய நாணய நோட்டுகள், தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட நுகவெ அதிகாரம் என்ற மன்னர் பாவித்த வாள், இரத்தின மடங்களான இரண்டு கைத்தடிகள், தங்கத்தினாலான இடுப்புப்பட்டி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேபோன்று அண்மையில் கஹவத்தையில் தாயும் மகளும் வெட்டிக்கொல்லப்பட்டனர். மினுவாங்கொடையில் ஒரு வர்த்தகரிடம் பெரும் தொகைப் பணத்தைக் கப்பமாகக் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவை சில சம்பவங்களே ஆனால், நாட்டில் இன்று நடக்கும் சம்பவங்கள் 1977 க்கு முன்னர் இடம்பெற்ற குற்றச் செயல்களையும் விஞ்சியுள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது. இடம்பெற்றுவரும் பல சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளும்தொடர்பு பட்டிருப்பதுதெரியவந்துள்ளது.

அதுவும் ஆளும்தரப்பு அரசியல்வாதிகளே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இது வேலியே பயிரை மேயும் நிலைக்கு ஒப்பானதாகவே உள்ளது.

நாட்டில் தொடர்ந்தேச்சையாக இடம்பெற்று வரும் ஒழுக்கக்கேடான கலாசாரத்தைக் கட்டுப்படுத்த அல்லது முற்றுப் புள்ளி வைக்க காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டம், அதிகாரம் மாத்திரம் இதனைச் செய்ய முடியாது. மக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாகும். மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகியுள்ள இளம் சந்ததியினரும் பாதாள உலகக் கோஷ்டியினரும் இந்தச் சீர்கேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை சீரழியாமல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் இன்று உருவாகியுள்ளது.

இதற்கான விழிப்புணர்வுத் திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் மத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளை ஒன்றிணைத்து இந்த விழிப்புணர்வுக் குழுக்களை அமைத்து பிரதேசங்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதோடு கலாசாரச் சீரழிவைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசரப் பணியாகவே கருதுகின்றோம். குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்த வேண்டும்.

குற்றவாளிகள் தப்புவதற்கு இடமளிக்கப்படக்கூடாது. சட்டத்தின் பிடிகள் இறுக்கமாக்கப்பட வேண்டும். சட்டத்தில் காணப்படும் ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டிய தேவையும் இன்று உருவாகியுள்ளது. இன்றேல் ஒழுக்கம், கலாசாரச் சீரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவது கடினமானதாகும்.
நன்றி தினக்குரல்

























No comments: