அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கிய இசை வேள்வி 2012 ……. இளமுருகனார் பாரதி.

.


இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பிலே தமிழர் அதிகமாக வாழும் வெள்ளவத்தை நகராட்சிப் பிரிவில் சைவமக்களுக்கென ஒரு அம்மன்கோயில் இல்லை என்ற குறையை நிவர்த்திசெய்ய நான்கு அடுக்குகளைக் கொண்ட ஒரு முன்மாதிரியான “ஸ்ரீ ஐஸ்வர்ய இலக்குமி ஆலயம்”, தத்துவத் திருக்கோயில் அமைப்பில் கட்டப்படுகின்றது. இந்தக் கோயில் திருப்பணிக்காக நிதி திரட்டும்வண்ணம் சிட்னியில் ‘கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்த்து அளப்பரிய தமிழ்ப்பணி ஆற்றிவரும் அவுஸ்திரேலியக் கம்;பன் கழகம்’ ஒரு அற்புதமான இசை வேள்வியை அரங்கேற்றி வெற்றி கண்டுள்ளது. இந்த மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.15மணிக்கு ஹேம்புஸ் ஆண்கள் உயர்பள்ளியில் ஆரம்பித்த இந்த இசை வேள்வியின் கதாநாயகன் 21 வயது நிரம்பாத இசை மேதை செல்வன் ர.காசியப்மகேஸ் ஆவார். காசியப்மகேஸ் அவர்கள் தனது நான்கு வயதிலிருந்து புகழ் பூத்த இசைக் கலைஞர்களான பத்மபூசன் கோபாலகிருஸ்ணன், காரைக்குடி மணி ஆகியோரின் முறையான வழிகாட்டுதலில் தனத இசைப்பயணத்தைத் தொடர்ந்தவர். தனது 9ஆவது வயதிலே இசை இயக்குநர் எம். எஸ் விஸ்வநாதன் அவர்களின் நெறியாள்கையில் கலாநிதி எஸ் பி. பாலசுப்ரமணியம் அவர்களுடன் இணைந்து பாடிய பாடற்றொகுதியை (Album) வெளியிட்டவர். இது வெற்றிப் படைப்பாக அமைந்து இவரை இசைவானிலே இளஞ் சுடர்நட்சத்திரமாக ஒளிவீசத் தளம் அமைத்தது.

படங்கள்: ப. இராஜேந்திரன்


முகவசீகரமும் கணீரென்ற சாரீரமும் ஒருங்கே அமைந்தால் கேட்கவும் வேண்டுமா? தமிழ்நாட்டில் மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர,; இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா எனத் தனது கவர்ச்சியான குரல் வளத்தால் இரசிகர்களைத் தன்வசப்படுத்தி இதுவரை 1500 இற்கும் மேலான, தரமான கச்சேரிகளை அரங்கேற்றிய பெருமையை

இளமைப் பருவத்திலேயே நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கதொன்று.

சரியாக மாலை 6.15ந்து மணிக்குத் திரை நீக்கஞ் செய்யப்பட்டதும், மேடையில் வீற்றிருந்த இசை மேதைகளை அவையிலிருந்தோர் பலத்த கரகோசமிட்டு வரவேற்றனர். அரங்கின் அலங்காரம் இசைக் கச்சேரிக்குப் பொருத்தமாக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முகமாகக் கம்பன் கழகத்துடன் நெடுநாட்தொடர்புடைய திரு திருமதி குலேந்திரன் தம்பதியினர் மங்கல விளக்கினை ஏற்றினார்கள். (ஈழநாட்டில் தனது தமிழ்ப்புலமையால் எல்லோரையும் கவர்ந்த தமிழ்ப் பேராசிரியை திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள் தமிழ்;நாட்டில் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்குத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றி ஈழத்தமிழருக்குப் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது)இதைத் தொடர்ந்து கடவுள் வணக்கப் பாடலைச் செல்வி பிரநீதா பாலசுப்ரமணியன் பாடவும்; திரு கிருஸ்ணா சர்மா இராமபிரானின் திருவுருவச் சிலைக்குப் மங்கல ஆராத்தி எடுக்கவும் தொடர்ந்து உலக அமைதி நிலவவேண்டி ஒரு நிமிடம் எல்லோராலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  கலைஞர்களை செல்வி அபிராமி திருநந்தகுமார் அறிமுகம் செய்து வைத்தார்.

கம்சத்வனி இராகத்தில் ‘வாதாபி கணபதிம்..’ என்ற கணபதி துதியுடன் ஆரம்பித்த கச்சேரி தொடக்கத்திலேயே களைகட்டத் தொடங்கிவிட்டது எனலாம். சில அரிய பாடல்களைத் தொடர்ந்து “இராமனுக்கு மன்னன் முடி……” என்ற அருணாசலக் கவிராயர் இயற்றிய கீர்த்தனையை “இந்தோளம்” இராகத்தில்; பாடினார். தொடர்ந்து ‘தோடி’ இராகத்தில் அமைந்த “தேனினும் இனியவள்” என்ற கீர்த்தனையை அற்புதமாகப் பாடினார். ‘மோகன’ இராகத்தில் அருணாசலகவிராயரின் “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா” என்ற கீர்த்தனைக்குப் பலத்த கரகோசம் கிடைத்தது. இதே போல வசந்தா இராகத்தில் “கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை”……..

என்ற அருணாசலக் கவிராயரின் பாடலுக்கும் ஏகோபித்த பாராட்டுக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.“கமாஸ் இராகத்தில் “அரசாளும் மதுரை மீனாட்சி” “தாமரை மலர்கள் ஆறு” ஆகிய பாடல்களைத் தொடர்ந்து இராகமாலிகையில் அமைந்த “இராகத்தில் சிறந்த இராகம் எது?’ என்ற பாடல் பாடகரின் திறமையைப் பறைசாற்றியது.” ரேவதி இராகத்தில் “போ சம்போ…” மற்றும் இராஜகோபாலசாரியாரின் “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…” பாபநாசம் சிவன் யாத்த “என்ன தவம் செய்தனை…” மற்றும் அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய “பெற்ற தாய்தனை மக மறந்தாலும்…”என்ற விருத்தத்தையும் தயானந்த சுவாமிகள் இயற்றிய “சம்போ சிவ சம்போ…” என்ற கீர்த்தனையையும் சிறப்பாகப் பாடினார்.

அருணாசலக் கவிராயர் இயற்றிய கீர்த்தனைகளைப் பாடும்பொழுது அப்பாடலுக்குரிய சந்தர்ப்பங்களையும்

இடையிடை நல்ல விளக்கங்களுடன் கூறிக்கூறிப் பாடல்களையும் தொடராக ஒரு சொல்லுக்கூட விடுபடாமல் பாடியமை அவரின் சங்கீத வித்துவத்தன்மையை எடுத்தியம்பியது. அத்துடன் சுருதி நிரல்களைக்கொண்டு பல இன்னிசை உருவங்களை ஆக்கிப் பாடியமை மெச்சக்கூடியதாக இருந்தது. பாவேந்தர் பாரதிதாசனாரின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பஞ் சேர்க்க மாட்டாயா…’என்ற பாடலை நாம் அடிக்கடி மேடைகளில் பலர் பாடக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாட்டிற்கு உயிர்கொடுத்துப் பாடுபவர்கள் மகேஸைப்போல ஒரு சிலரே! மகேஸ் கூடுதலாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தமையும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். தெரிந்த பாடல்களைப் புரிந்த மொழியிலே மதுரம் கனிந்த இசையுடன் கேட்கும் பொழுது என்னே இன்பம்!

ஒவ்வொரு பாடலுக்கும் இரசிகர்கள் பலத்தகரகோசம் செய்தவண்ணம் இருந்தது இதை நிரூபித்தது. அத்துடன் காஸ்யப் மகேஸ் பாடும் ஒவ்வொரு பாடலையும்

தானும் இரசித்துப் பாடுவதை அவர் முகம் வெளிக்காட்டியவண்ணம் இருந்தது. பாரதியாரின் “தீராத விளையாட்டுப் பிள்ளை…” அருமை அருமை! இப்பாடலை எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காது என்பதையும் பலர் உணர்ந்திருப்பார்கள். காலத்தால் அழியாத படைப்புகள் அல்லவா? “மறுகி ஆக்கி போலோ…” இந்தி மொழியில் இயற்றப் பட்ட ஸ்ரீ சத்திய சாய் பாபாவிற்குரிய பஜனைப் பாடலை மிகவும் பத்திரசம் ததும்பப் பாடி பாபாவின் பத்;தர்களை மட்டுமல்லாது எல்லோரையும் பரவசப் படுத்தினார்.

பாலமுரளி கிருஸ்ணா இயற்றிய தில்லானாவை உற்சாகமுடன் இசைத்த பின்பு ‘உலகம் வாழ்க, தமிழ் வாழ்க, தமிழிசை வாழ்க’ என்று உணர்ச்சியுடன் உருக்கமாகசொல்லிப் பாடியது எல்லோரின் நெஞ்சையும் ஈர்த்திருக்கும். மத்தியமாவதியில் அமைந்த “அரிவராசனம்….”என்ற பாடலைத் தொடர்ந்து “ஓம்” என்று ஒலித்துவிட்டு இசைக் கலைக்கு உயிரோட்டம் நல்கிய அருணகிரி சுவாமிகள் அருளிய ‘முத்தைத்தரு பத்தித் திருநகை…’ என்ற திருப்புகழை மிகவும் அற்புதமாகப் பாடினார். இசைக்கலைஞர்கள் பாடும்பொழுது பொருள் விளக்கம் இல்லாது சொற்களைக் கூறுபோட்டு விழுங்கிவிடுதலைக் காணக்கூடியதாக உள்ள இக்காலத்தில் மகேஸ் இசைக்குழுவினரின் இன்னிசையைச் செவிமடுக்கும் பொழுது

“குழல்வழி நின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின்றிசைத்தது ஆமந்திகை…………வந்த முறையில் வழிமுறை வழாமல்..” என்ற இளங்கோ அடிகளாரின் பழம்பெரும் பாடல் நினைவுக்கு வந்தது.

தங்கள் தங்கள் துறைகளிற்; பிரசித்திபெற்ற பக்கவாத்திய இசைக்கலைஞர்களின் கருவிகள் சுரந்த இசையாவும் பாடலோடு இணைந்து மெருகூட்டிக் கச்சேரியின் தரத்தை உயர்த்தின. வுயலின் இசையை வழங்கிய ஸ்ரீ வி. சுரேஸ்பாபு அவர்கள் “வயலின் இசைமணி” “வில்லிசை மாமணி” “வில்லிசை வித்தகர்” இப்படிபல விருதுகளைபெற்றவர். மிருதங்கத்தை இசைத்த

ஸ்ரீ யோகராஜா கந்தசாமி அவர்கள் “மிருதங்க இசைமணி” “நாத லய ஆச்சாரியா”, “முழவிசைமணி” போன்ற விருதுகளைப் பெற்ற கலைஞராவர். கஞ்சிராவை வெகு அற்புதமாக இசைத்த ஸ்ரீதென்காசி பரமசிவம் அவர்கள் “பறை இசை அரசு” “நாத ஒலி” “லய ஞான சுடரொலி” போன்ற விருதுகளைத் தட்டிச்சென்றவராவர். இவர்களெல்லோரும் சர்வதேச புகழ் படைத்த முன்னணிக் கலைஞர்கள். காசியப்மகேஸ் அன்புடன் அழைத்ததன்பேரில் ‘இந்தக்; கலைஞர்களுக்கு நான் சளைத்தவன் அல்ல’ என்ற தோரணையுடன் எங்கள் உள்ளுர்ச் சகலகலாவித்தகராகிய அவுஸ்திரேலியக் கம்பன் கழக அமைப்பாளர் ஜெய்ராம் ஜெகதீசன் அவர்கள் திறம்பட “நாமுழவு” (மோர்சிங்) வாசித்துக் கச்சேரிக்கு மெருகூட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவர்களோடு கன்பராவைச் சேர்ந்த செல்வன் மயூரன் பாலசுப்பிரமணியமும் கடம் வாத்தியத்தில் சிறப்புச் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது. கூடுதலான தமிழ்பாடல்கள் இடம்பெற்று எல்லோரும்

உணர்ந்து இரசிக்கக்கூடியதாக இருந்த இந்தக் கச்சேரி வழமையான மங்களப் பாடலுடன்; நிறைவுற்றது.

இசை வேள்வியிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக இங்கு  http://youtu.be/QEsIL68QiXE பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

3 comments:

kirrukan said...

ராமர் ...சீதை இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் எதாவது கோவில் இருக்கின்றதா?இப்ப புலத்திற்க்கு வந்த பின்பு எங்களுக்கு புதுப்புது கடவுள்மாரின் அறிமுகம் கிடைக்கின்றமைக்கு என்ன காரணம்?பழைய கடவுள் மீது எமக்கு நம்பிக்கை குறைகின்றதா?சிவன் பார்வதிக்கு மாற்றீடு ராமர் சீதையோ?

Muruhan said...

போகிற போக்கைப் பார்த்தால் இராமாயணத்தில் வந்த அணிலுக்கும் கோயில் கட்டுவார்கள்

mohandas vijayaraghavan said...

nice to see this..... all the best Bharati