கயிறுகள்

.

உறவா? உணர்வா? எவையும் தரியா!
என்றோ ஒருநாள் விடைபெறுமே!
உறவா?பிரிவா? தேர்வும் வாழ்வில்
திரும்பத் திரும்ப நடைபெறுமே!
உறவில் தங்கி காலிற்கெஞ்சி
உதிர்ந்த கண்ணீர் உலர்ந்திடுமே!
உறவும் உந்தன் உணர்வை உதறி
இன்னோர் உறவிற் கலந்திடுமே!


இழிந்த வாழ்வில் நலிந்த மாந்தர்
விழுந்த வலைகள் அறுபடுமா?
இழிந்த கோலக் கணிப்புகள் எம்மேல்
திரும்பத்திரும்ப எறிபடுமா?
இழிந்த ஓலக் குரல்வழி எங்களின்
உளறல்கள் அலறல்கள் செவிபடுமா?
இழிந்த நாளில் இன்றைய போதில்
உதறிய உறவுகள் திரும்பிடுமா?

பிணைந்தவர் பிணைப்பினில்! அணைந்தவர் அணைப்பினில்!
பிடுங்கிய பொழுதினில் உயிரழுமே!
பிணைப்பினில் உயிர்த்திடும் நினைவுகள் இருக்கையில்
பிதற்றிய படியொரு கவிவருமே!
பிணைப்புகளறுத்திட துயர்வலி பெருக்கிட
பிதுங்கிய விழிசுடு துளிதருமே!
பிணைபடல் அறுபடல் பிணைப்பியல் புகளென
பிணைந்தறப் பிணைந்தறப் புரிந்திடுமே!

இதுவரை உறவொடு இருக்கிற கணங்களும்
இறக்கிற வழிவரை உடன்வருமே!
இதுவரை பிரிவொடு உயிர்க்கிற சுகத்துயர்
இறக்கிற பொழுதிலு மினித்திடுமே!
இதுவரை இணைத்தவை உணர்வெனும் கயிறுகள்!
இக்கணம் சட்டென அறுபடுமே!
இதுவரை தொடர்ந்தவை அறுபட, முடிந்தன!
இனியொரு கயிறில்லை அறுபடவே!

- ஆதித்தன். 

No comments: