குறளில் குறும்பு- சோம்பலோ! சோம்பல்! -

.


வானொலி மாமா நா மகேசன்

எழுதிய குட்டி நாடகம்







--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறளில் குறும்பு- சோம்பலோ! சோம்பல்!

ஞானா: அம்மா.......அம்மா......எங்கை போட்டியள் அம்மா.......

சுந்தரி: இஞ்சைதான் நிக்கிறன் ஞானா.....என்ன? சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி ஓடித்திரியிற   நீ......இன்டைக்கு ஓய்வாய் இருக்கிறாய் போலை கிடக்கு.

ஞானா: அப்பிடி இல்லை அம்மா.......உங்களுக்குக் கலன் என்டால் என்னெண்டு தெரியுமே?

சுந்தரி: உது தெரியாதே! ஆறு போத்தல் கொண்டது ஒரு கலன்......

அப்பா: (வந்து சிரித்து) வட்டுக்கோட்டைக்குப் போற வழி எது எண்டு கேட்டவனுக்குத் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு எண்டு சொன்னமாதிரி இருக்குச் சுந்தரி உம்மடை மறுமோழி.......அவள் பிள்ளை கலன் எண்ட தமிழ்ச் சொல்லுக்குக் கருத்துக் கேக்கிறாள்.... நீர் போய் இங்கிலீசுக் gallonக்கு மறுமொழி சொல்லுறீர்.

சுந்தரி: ஆமோ!.....எடிபிள்ளை ஞானா நீவந்து எந்தக் கலனுக்கு விளக்கம் கேட்டனி.

ஞானா: நான் தமிழ் கலனைத்தான் கேட்டனான் அம்மா.

சுந்தரி: அதை அப்பாவிட்டை எல்லோ கேட்டிருக்க வேணும் ஞானா. என்னை ஏன் சும்மா குறும்புக்கு இழுக்கிறாய்.

ஞானா: நான் குறும்பு விடேல்லை அம்மா......பரிமேலழகர் கலன் எண்ட சொல்லிலை ஒரு சின்னக் குறும்பு விட்டிருக்கிறார்......அதுதான் கலனைப் பற்றிக்கேட்டனான்.

அப்பா: பிள்ளை ஞானா நான் உனக்கு முன்னமே சொல்லியிருக்கிறன்...... இந்தப் பழந்தமிழ் அறிஞர்களை இறக்கிப் பேசக்கூடாது எண்டு.

ஞானா: அப்பா.....நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே எண்டு சொன்னதும் பழந்தமிழ் அறிஞர் நக்கீரர் தானே அப்பா?

அப்பா: ஞானா இன்டைக்குத் திருவள்ளுவரை விட்டிட்டு, திருக்குறளுக்கு உரை எழுதிவைச்சபாமேலழகரிலை போய் நிக்கிறாய். பறவாயில்லை...... நீ குறும்பை விடு.

ஞானா: அப்பா திருக்குறளிலை சோம்பலைப் பற்றி ஒரு அதிகாரம் இருக்குத் தானே.

அப்பா: ஓம் இருக்கு......நான் நினைக்கிறன் அது மடியின்மை எண்ட தலைப்பிலை இரக்கு.

ஞானா: சரியாய்த்தான் சொல்லிறியள் அப்பா. அது 61 வது அதிகாரம்.

சுந்தரி: ஞானா அந்த அதிகாரத்துக்கும் கலன் எண்ட சொல்லுக்கும் என்ன தொடர்பு எண்டு கேக்கிறன்?

ஞானா: அதைத்தான் சொல்ல வந்தனான் அம்மா. அந்த அதிகாரத்திலை அஞ்சாவது குறளிலை வருகுது கலன் என்ட சொல்லு.....இதுதான் அந்தக் குறள்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீர் காமக் கலன்.

இந்தக் குறளுக்குப் பரிமேலழகர் என்ன கருத்துக் சொல்லியிருக்கிறார் தெரிமோ? சோம்பல், காரியங்களைச் செய்யத்தாமதம், மறதி, நித்திரை இந்த நான்கும் இறக்கும் இயலபுடையார் விரும்பி ஏறும் மரக்கலம். இதிலை மரக்கலம் எங்கை வருகுது எண்டு எகன்கு விளங்கேல்லை.

அப்பா: ஞானா உனக்கு விளங்கேல்லை எண்டதுக்காக பரிமேலழகர் சொன்னது பிழை எண்டு சொல்ல முடியாது. அவர்வந்து இந்த நாலு குணங்களும் உள்ளவர்கள் மெத்த விருப்பமாய் சோம்பி இருப்பினம். ஆனால் காலக் கிரமத்திலை அந்தக் குணங்களே அவர்களுக்குத் துன்பமாய் மாறும் எண்டதைப் பரிமேலழகர் மக்கள் விரும்பி ஏறிய ஒரு மரக்கலம் நடுக்கடலிலை கவிழ்ந்து தந்தளிக்க விட்டது போலை இருக்கும் எண்டு சொல்லியிருக்கிறார்..கலன் எண்டு குறளிலை வந்த சொல்லை வைச்சுத்தான் அவர் அப்பிடிச் சொல்கிறேன் எண்டும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லை.....இந்தக் கலன் என்ட சொல்லுக்கு விரும்பி அணியும் ஆபரணம் எண்டும் சிலர் பொருள் செய்வார்கள் எண்டும் சொல்லியிருக்கிறார்.



-2-

ஞானா: நானும் அவற்றை உரைப் புத்தகத்திலை உதைப் பாத்தனான் அப்பா. உது மட்டும் இல்லை. கெடு நீரார் எண்டதுக்கு இறந்து போகும் இயல்புடையவர்கள் எண்டும் பொருள் சொல்லியிருக்கிறார். எல்லா மனிதரும் இறந்து போகிறவர்கள் தானே. ஆனால் எல்லா மனிதர்களும் சோம்பிக் கொண்டா இருக்கிறார்கள். நான் சொல்லிறன் உதிலும் பாக்க இலகுவான கருத்தும் இருக்குது எண்டு.. .

சுந்தரி: இஞ்சருங்கோ.....உவள் பிள்ளை நாமகல் இராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய கருத்தைச் சொல்லப் போறாள் போலை கிடக்கு.
ஞானா: ஓம் அம்மா. அவர் கலன் எண்ட சொல்லுக்கு அணிகலன் எண்ட பொருள் சொல்லியிருக்கிறார்;. மற்றது கெடு நீரார் எண்டதுக்கு வாழ்க்கையில் கெட்டுப்போகும் தன்மை உள்ளவர்கள் எண்டும் பொருள் சொல்லியிருக்கிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

எண்ட குறளுக்கு நாமக்கல் கவிஞருடைய கருத்தைக் கோளுங்கோ அம்மா. அதாவது, காரியத்தில் தாமதம், கடமைகளை மறந்திருப்பது, சோம்பல், மிகுந்த து}க்கம் ஆகிய நான்கும் கெட்டுப் போகிறவர்கள் மிகவும் ஆவலோடு விரும்புகின்ற ஆபரணங்கள். எண்டு இந்தப் புத்தகத்திலை சொல்லியிருக்கிறார். எவ்வளவு இலகுவான விளக்கம்.

அப்பா: பிள்ளை ஞானா நான் உனக்கு எத்தினையோ முறை சொல்லியிருக்கிறன். திருக்குறளுக்கு எத்தனையோ விளக்கங்கள் குடுக்தலாம் எண்டு. இதிலை பரிமேலழகர் பிலாப்பழத்தை வெட்டி இரண்டாய்ப் பிளந்துவைச்சார். இராமலிங்கம் பிள்ளை அவர்கள், எண்ணெய்தொட்டுப் பால் ஒட்டிறதை மாத்தி, குந்துகளை அகற்றிச்
சுளையை எடுத்து வைச்சிருக்கிறார். நீ லேசாய் எடுத்துச் சாப்பிடுறாய். அவ்வளவுதான். அறிஞர் இரண்டுபோருடைய நோக்கமும் ஒண்டுதான்.

ஞானா: அது சரிதான் அப்பா. ஆனால் எனக்கு நாமக்கல்லாற்றை விளக்கம்தான் பிடிச்சிருக்கு. தற்காலத்துக்கு ஏற்ற விளக்கம்.

சுந்தரி: திருக்குறளுக்கு முதலிலை உரை எழுதின அறிஞரிலை சிறப்பானவர் பரிமேலழகர் ஏண்டுதானே எல்லாரும் சொல்லுகினம். நான் நினைக்கிறன் அப்பா....பரிமேலழகர் நெடுநீர் எண்ட சொல்லைக் கண்டவுடனை கடல் எண்டு நினைச்சிட்டார் போலை.

அப்பா: சுந்தரி! நீர் வந்து இவள் பிள்ளை ஞானாவில் பாக்கப் பெரிய குறும்பு விடுகிறீர் போலை கிடக்கு. நெடுநீh, மறவி, மடி, துயில் எண்ட நாலும் நாலு குணங்கள் எண்டுதானே பரிமேலழகர் சொல்லியிருக்கிறார். பிறகு நெடுநீர் எண்டதை;க் கடல் எண்டு எடுத்தால் மற்றக் குணத்துக்கு எங்கை போறது? எண்;டு கேக்கிறன்?........... சுந்தரி. காட்டுக்கை இருந்து மணத்த பலாப்பழத்தை வெட்டி எடுத்து வெளியிலை கொண்டுவந்து வைச்சவையிலை பரிமேலழகரும் ஒருவர் எண்டதை நாங்கள் மறக்கக்கூடாது.

ஞானா: மறக்காமல் இருக்கத்தானே அப்பா நான் இப்ப பரிமேலழகருடைய உரையையும் படிக்கத் துவங்கியிருக்கிறன். அவர் வாழ்ந்த காலம் வேறை நாங்கள் வாழுற காலம் வேறை.. இரண்டையும் ஒப்பிட்டு எது இந்தக்காலத்துக்குப் பொருந்துதோ அதை எடுக்கிறது நல்லது தானே.

அப்பா: ஓமோம் அது சரி. ஆனால் ஏறிவந்து ஏணியை எட்டி உதைக்காமல் பாத்துக்கொள்ளவேணும்.

சுந்தரி: அப்பா......ஏணி என்டவுடனைதான் ஞாபகம் வருகுது. அந்த ஏணியை எடுத்துக் கொண்டந்து உதிலை சுட்டுப் போன அந்த பல்பை மாத்திவிடுங்கோ அப்பா.

அப்பா: சரி சரி...........செய்யிறன் சுந்தரி........பிள்ளை ஞானா நீயும் வாமகள் இரண்டு பேருமாய் அந்த ஏணியைத் து}க்கியருவம்.

(இசை)





No comments: