ஏலம் (சிறுகதை) - முருகபூபதி

.
வாகனத்திற்கும் வாழ்க்கைக்கும் நிறைய பொருத்தம் இருப்பதாக குகனேஸ்வரன் புரிந்துகொள்ளத்தொடங்கியது மகள் சபீனாவுக்கு கார் வாங்க அலைந்தபோதுதான்.

பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் சிறந்த சித்திபெற்றுவிட்டால் நிச்சயமாக கார் வாங்கித்தருவதாக ஏதோ பேச்சுவாக்கில் மகளுக்குச்சொல்லிவிட்டார். சொன்ன சொல்லை காப்பாற்றவேண்டும். அதற்காக கார்விற்பனைக்காட்சிக்கூடங்களுக்கும் அலைந்தார். இணையத்தளங்களிலும் தேடினார். இலவசமாக வீட்டு தபால் பெட்டியில் சேரும் பத்திரிகை கார் விளம்பரங்களில் கண்களை மேயவிட்டார். குடும்ப நண்பர்களிடமும் ‘வரன்’ விசாரிப்பதுபோன்று சொல்லிவைத்தார்.

மாதங்கள் ஓடின. ஆனால் மகளுக்குப்பிடித்தமான கார்தான் இன்னமும் வீட்டு வாசலுக்கு ஓடிவரவில்லை.

“ இவளுக்கு ஒரு நல்ல கார் தேடி வாங்கிக்கொடுப்பதற்கே இவ்வளவு சிரம்படுறியள். மாப்பிள்ளை எப்படி தேடப்போறீங்க..?” – என்று மனைவி வேறு சீண்டத்தொடங்கிவிட்டாள்.

அப்பொழுதுதான் குகனேஸ்வரனுக்கு வாழ்க்கையும் வாகனமும் ஒன்றுதானோ என்று மனதில் உறைக்கத்தொடங்கியது.

வாகனத்தை மாற்றுவதுபோல் வாழ்க்கைத்துணையையும் மாற்றும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் விதியை நொந்துகொண்டார். அவரது தொழிலகத்தில் ஒருவன் இதுவிடயத்தில் பலே கில்லாடி.

வெள்ளை இனத்தவன் என்பதனால் வெள்ளை மனத்தினன் என்பதும் குகனேஸ்வரனின் முடிவு. எதனையும் அவன் இவரிடம் ஒளிவு மறைவின்றி பேசுவான்.

“ குகேன்... வாகனமும் வாழ்க்கையும் எங்களுக்கு ஒன்றுதான். நீங்கள் ஆசிய நாட்டவர் என்பதனால் நான் சொல்வது உங்களுக்கு புதிராகவும் இருக்கலாம். ஒரு கார் வாங்கி ஓடுகிறோம். சில சமயம் அது பழுதாகிவிடலாம். திருத்தி ஓடுவோம். பிறகும் பிரச்சினை தரலாம். என்ன செய்வோம்? அதனை விற்றுவிட்டு அல்லது அப்புறப்படுத்திவிட்டு வேறு புதிய கார் வாங்குவோம். சில வேளை வீதியில் ஓடும்போது விபத்துக்குள்ளாகி உயிர் தப்பினால் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். இனி ஓடுவதற்கே தகுதியற்றது என்று அறிந்தால் வேறு ஒரு புதிய கார் வாங்குவோம். இப்படித்தான் வாழ்க்கைத்துணையும்.”

அவன் சொன்னதை அப்படியே வந்து வீட்டில் மனைவியிடம் அவர் சொன்னபோது, “ஓஹோ... நாளை ஒருநாள் நானும் உங்களுடன் பிரச்சினைப்பட்டால், விட்டுப்போட்டுப்போய் வேறொன்று தேடுவீங்களாக்கும். அவன் கிடக்கிறான். அது அவன்ர நாகரீகம். அவன் நம்பும் கலாசாரம். வாழ்க்கையை வாழ்க்கையாகத்தான் பார்க்கவேணும். வாகனத்தை வாகனமாகத்தான் பார்க்கவேணும். இந்த விசர் கதையளை விட்டிட்டு அடுத்த புதன் கிழமை லீவு எடுங்கோ... சபீனா தன்னை கார் ஏலத்துக்கு விடும் அல்டோனா என்ற இடத்துக்கு தன்னை கூட்டிக்கொண்டு போகட்டுமாம். என்ன... போறியளே...”

குகனேஸ்வரன் ஒருகணம் ஆழ்ந்து யோசித்துவிட்டு,” ஏலத்தில் கார் எடுக்கலாம் என்று எனக்கும் தெரியும். ஆனால், எப்படி நல்லகார் தெரிவு செய்யிறது? ஓடிப்பார்க்க முடியாது. ஏற்கனவே விபத்துக்குள்ளான கார்தானா என்பதையெல்லாம் அறியமுடியாது. ஏலத்தில் வாங்கிப்போட்டு பிறகு ஏதும் எஞ்சின் கோளாறு என்றாலும் அங்கேபோய் முறையிட முடியாது. பழுதடைஞ்ச கார்களையும் வடிவா பெயின்ற் அடிச்சு புதுக்கார் மாதிரி மாற்றி எங்கட தலையில் கட்டிவிடுவாங்கள். அதுதான் யோசிக்கிறன்.”- என்றார்.

“ இப்படி யோசிச்சுக்கொண்டிருந்தியளெண்டால் மகளுக்கு கார் வாங்கின மாதிரித்தான். எதுக்கும் ஒருக்கால் அவள் சொல்ற அந்த அல்டோனாவோ பெல்டோனாவோ... அங்கே அடுத்த புதன் கிழமைக்கு கூட்டிக்கொண்டுதான் போங்கோவன். காசைப்பற்றி யோசிக்கவேணாம். பல்கலைக்கழகம் போனால் கார் வாங்கித்தருவன் என்று அவளுக்கு வாக்குக்கொடுக்க மாத்திரம்தான் உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் அவளுக்காக ஏலச்சீட்டும் போட்டு பத்தாயிரம் டொலர் எடுத்துவைச்சிருக்கிறன்.”

“ஏலச்சிட்டு, ஏலத்தில் கார். இப்படியே போனால் வாழ்க்கைத்துணைகளும் ஏலத்தில்தான் வருங்காலத்தில் கிடைக்குமோ...?” என்றார் குகனேஸ்வரன்.

“ உந்த விசர் கதையளுக்கு மட்டும் உங்களிட்ட குறைச்சல் இல்லை. என்னையும் ஏலத்திலா எடுத்தனீங்கள்? படம்பார்த்து, பொருத்தம் பார்த்து உங்கட கொம்மா சீதனம் பேசி... இப்படி எத்தனைக்குப்பிறகு வாழ்க்கைப்பட்டன்.”

“ சரி.. சரி... புலம்பாதையும்.... புதன்கிழமைக்கு லீவுபோடுறன்.

*           *             *               *              *                  *                      *                     *
புதன் கிழமை வந்தது. கார் ஏலமிடும் அல்டோனாவுக்குப்போவதற்கு குகணேஸ்வரனும் மனைவியும் மகள் சபீனாவும் தயாரானார்கள். மனைவி சான்ட்விச் தயாரிப்பதற்கு குகனேஸ்வரன் வெங்காயம் தக்காளி நறுக்கிக்கொடுத்தார். பால்கோப்பி தயாரித்து ஃபிளாஸ்கில் விட்டு எடுத்துச்செல்ல மனைவி தயாரானபோது அவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

“ என்ன பிக்னிக்கா போறோம். பாய், தலையணையும் கொண்டு வரப்போறீரோ...அங்கே கோப்பி தேநீர் எல்லாம் கிடைக்கும். சான்ட்விச் மாத்திரம் போதும்.”

மகள் அவரது காரில் அவருக்குப்பக்கத்தில் அமர்ந்து வீதி ‘மெப்’பை பார்த்து வழிகாட்டினாள்.

மனைவி பின் ஆசனத்தில் அமர்ந்து, கார் வாங்கியவுடன் எந்தக்கோயிலுக்குப்போய் காருக்காக அர்ச்சனை செய்து கார்ச்சில்லுகளுக்கு அடியில் எலுமிச்சம்பழம் வைத்து நசுக்குவது என்று யோசிக்கத்தொடங்கினா.

அவுஸ்திரேலியாவில் கோயில்களுக்கு குறைவில்லை. அவர்களின் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தகாலப்பகுதியில் மெல்பனில் ஒரு கோயில்தான் இருந்தது. கடவுளர்களுக்கும் பக்தர்கள் தனிக்குடித்தனம் தரவெளிக்கிட்டதனால் வௌ;வேறு இடங்களில் கோயில்கள் எழுந்துவிட்டன.

மகள் பல்கலைக்கழகம் பிரவேசித்தவுடன் எந்தக்கோயிலுக்கு அழைத்துவந்தார்களோ அந்தக்கோயிலுக்கே மகள் ஏலத்தில் வாங்கப்போகும் காரையும் கொண்டுவந்து அர்ச்சனை செய்து எலுமிச்சம்பழம் நசுக்கவேண்டும் என்று தாய் தனக்குள் தீர்மானித்துக்கொண்டா.

மகள் கார் ஓட்டப்பழகி சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றபோதும் அதே கோயிலுக்குத்தான் நேர்த்திவைத்ததும் அவவுக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“ அப்பா... இப்பவே ஒன்பது மணி ஆகிட்டுது. கெதியா போவோம். பத்து மணிக்கு ஏலம் தொடங்கிவிடும். அரைமணிநேரம் முன்பே போனால் கார்களை பார்த்து மனதுக்குள் தெரிவுசெய்துகொள்ளலாம்.” என்றாள் மகள் சபீனா.

“ கிட்டத்தட்ட ஒரு சுயம்வரம்தான்.” என்றார் குகனேஸ்வரன்.

“ சுயம்வரம் எண்டால் என்னப்பா?” என்று கேட்டாள் நான்குவயதில் அவுஸ்திரேலியா பார்த்த சபீனா.

“ சுயம்வரம் என்றால் பி;ள்ளை... இராமாயணத்தில் சீதை இராமனை தெரிவுசெய்த மாதிரி, மகாபாரதத்தில் திரௌபதி பாண்டவர்களை தெரிவுசெய்த மாதிரி. அப்பா வாகனத்துக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சுப்போடுறார். அப்பாவுக்கு வயசுபோகுது. கொஞ்சக்காலமாக இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கொட்டுகிறார்.” என்று சொன்ன தாயை திரும்பிப்பார்த்து சபீனா சிரித்தாள்.

“தாயும் மகளும் கூட்டணி அமைச்சிட்டீங்களாக்கும்.” என்றார் குகனேஸ்வரன்.

*                    *                            *                                 *                                 *                            * 

மகள் இடம், வலம் என்று வழிகாட்ட, கார் ஏலம் விடும் அல்டோனாவுக்கு ஏலம் ஆரம்பிப்பதற்கு அரைமணிநேரத்துக்கு முன்பே வந்துவிட்டது குகனேஸ்வரனின் கார்.

சபீனா விசாரணைப்பகுதிக்குச்சென்று பதிவிலக்கம் பெற்று, அன்றையதினம் ஏலம் விடப்படும் கார்களின் பெயர் விபரம், உற்பத்தி செய்த ஆண்டு, எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கிறது முதலான விபரங்கள் பதிவுசெய்த கையேடுகளின் பிரதிகளையும் பெற்றுவந்தாள்.

அந்தத் திறந்தவெளியில் கார்கள் பார்வையிட வந்த, வாங்க வந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம் இருக்கும்.

பழைய கார்களை ஏலத்தில் வாங்கித் திருத்தி நல்ல லாபத்துடன் விற்கும் கார் தரகர்கள், காதலிகளுக்கு கார் வாங்கித்தருவதாக வாக்குக்கொடுத்த காதலன்கள், பிள்ளைகளுக்காக கார் தெரிவுசெய்ய வந்த பெற்றவர்கள், கார்ச்சந்தையில் கார்களின் சமகால விற்பனை விலை பற்றி அறிந்துகொள்ள வந்த கார் வியாபாரிகள், கார் உதிரிப்பாகங்களுக்காக விபத்துக்குள்ளான கார்களை குறைந்த விலையில் ஏலத்தில் பெற்றுக்கொள்ள வந்த கார் மெக்கானிக்குகள்....இப்படி பலதரப்பட்டவர்களுமாக அந்தப்பிரதேசம் கார்களுடன் நிரம்பியிருந்தது.

அந்த விசாலமான மண்டபத்துக்குவெளியே திறந்தவெளியில் ஏராளமான கார்கள் ஒழுங்காக வரிசைக்கிரமத்தில் நின்றன. சில கார்களுக்கு இலக்கத்தகடு இல்லை. பினான்ஸில் எடுத்து பணம் ஒழுங்காக கடன் வட்டியுடன் செலுத்தாதமையால் பறிக்கப்பட்ட கார்கள் என்று மகளுக்கு விளக்கம் சொன்னார் குகனேஸ்வரன். அத்துடன் அவர் நின்றிருக்கலாம். சொன்னபடி சீதனம் தரவில்லையென்று பெற்றவர்களிடம் அனுப்பப்படும் பெண்களைப்போன்றதுதான் இந்த இலக்கத்தகடு இல்லாத கார்களும் என்று மேலதிக விளக்கம் அவர் சொன்னதைக்கேட்டு மனைவிக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

“ உந்த விசர் மனுஷனுக்கு எங்கே என்ன பேசுவது என்று தெரிய இல்லை. சபீனா கெதியா காரை வாங்கு... இனி உன்னோடதான் நான் இனி வெளிய வெளிக்கிடுறது. இந்த மனுஷன் பேசிப்பேசியே எனக்கு டென்ஷனை ஏத்திப்போடும்.”

“ அம்மா மெதுவா பேசுங்க....உங்கட பிரச்சினைகளை வீட்டிலை வைச்சுக்கொள்ளுங்க.... அப்பா... அந்தப்பக்கம் அரசாங்க அலுவலகங்களில் பாவிச்ச கார்கள் நிற்குது. அந்தக்கார்கள் நல்ல கண்டிஷன்ல இருக்கும்.” என்று சொன்ன சபீனா, தகப்பனை அந்தப்பக்கம் அழைத்துச்சென்றாள்.

தாய், மகளின் பிறந்த திகதிக்குப்பொருத்தமான வாகனத்தகடுகளின் இலக்கங்களை எண் சோதிடப்பிரகாரம் மனதில் கூட்டிப்பார்த்துக்கொண்டு கார்களைச் சுற்றி வலம்வந்துகொண்டிருந்தா. அவற்றின் முன்புறக்கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த காகிதத்தில் பதிவாகியிருந்த குறுந்தகவல்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

சபீனாவும் குகனேஸ்வரனும் கார்களின் பொனட்டையும் திறந்து பார்த்து எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கின்றன என்பதையும் தயாரிப்பு ஆண்டையும் கவனித்து கையேட்டில் குறித்துக்கொண்டார்கள். தெரிவுசெய்யக்கூடிய கார்களை சிவப்புமை பேனாவினால் அடையாளம் இட்டனர்.

இடையில் தாயைத்தேடிக்கொண்டு வந்த சபீனா, மண்டபத்தின் உள்ளே அழைத்துச்சென்று கோப்பியும் வாங்கிக்கொடுத்தாள்.

“ என்ன பிள்ளை இன்றைக்கு நல்ல கார் ஒன்று கிடைக்குமா?” சற்று கவலையுடன் கேட்ட தாயிடம், “ பார்ப்போம் அம்மா. ஒரு முயற்சிதானே.” என்றாள் சபீனா.

பத்துமணியானதும் ஏலம் ஆரம்பமாகப்போவதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

ஏலம் நடக்கும் மண்டபத்தின் பக்கம் சென்றபின்புதான் அங்கு முதல்தடவையாக வந்தவர்களுக்கு சில உண்மைகள் தெரிந்தன. அடுத்தடுத்து ஐந்து மண்டபங்கள். ஒவ்வொன்றிலும் ஆசனங்கள். எந்தக்கார் எந்த மண்டபத்துக்கூடாக பிரவேசிக்கும் என்பது தெரியாத நிலை.

வந்தவர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். திருமதி குகனேஸ்வரன் சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றா. ஐந்தாம் இலக்க மண்டபத்துக்குள் சென்று பார்த்துவிட்டு மூன்றாம் இலக்க மண்டபத்துக்குள் நின்ற மகளிடம் ஓடிவந்து, “ பிள்ளை அந்த ஹோலுக்கை ஐநூறு டொலருக்கும் வடிவான கார் ஏலத்துக்கு வருது பிள்ளை.... வா... அங்கே போவோம்.” என்றா.

“ அம்மா... அந்தக்கார்களை வாங்கினால் தெருவிலதான் நிக்கவேண்டிவரும். பிறகு ஆயிரக்கணக்கில் செலவழிக்கவேணும். அவசரப்படவேணாம். கொஞ்சம் பொறுங்கோ.”

ஓவ்வொரு மண்டபத்திற்கூடாகவும் விதம் விதமான கார்கள் வந்துகொண்டிருந்தன. ஏலம் கூறுபவர்கள் கையிலே சிறிய சுத்தியலை வைத்துக்கொண்டு உரத்த குரலில் காரின் விபரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குரலில் தாள லயம் இருந்தது.

இரண்டாயிரமாம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு காரின் விலை ஏழாயிரத்து ஐநூறு என்று ஏலம் கூறப்பட்டபோது சபீனா தன்வசம் இருந்த இலக்கம்பதிவான அட்டையை தூக்கிக் காண்பித்தாள்.

ஏலமிட்டவருக்கு அருகில் நின்ற ஒரு யுவதி சபீனாவை அருகே அழைத்து ஒரு ஆசனத்தில் அமரவைத்தாள். பெற்றவர்களும் மகள் கார் தெரிவுசெய்த பெருமிதத்தில் மகள் அருகில் சென்றனர்.

அடுத்தடுத்து சில கார்கள் ஏலம் கூறப்பட்டும் கூறப்படாமலும் நகர்ந்துகொண்டிருந்தன.

கைவசம் காருக்காக பத்தாயிரம் டொலர் வைத்திருக்கும் சபீனாவின் அம்மாவுக்கு மகள் ஏழாயிரத்து ஐநூறுக்குள் காரை தெரிவுசெய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி வந்துவிட்டது. எஞ்சிய இரண்டாயிரத்து ஐநூறு டொலருக்கு மகளுக்கு புதிய அட்டியல் வாங்கலாம் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டா.

சபீனாவை அழைத்த அந்த யுவதி, ஓரு காகிதத்துடன் அருகில் வந்தாள். எல்லாம் சரிதான். இனி காருடன்தான் வீட்டுக்கு திரும்பப்போகிறோம் என்ற பூரிப்பில் சபீனா அந்த யுவதியைப்பார்த்து புன்னகைத்தாள்.

கை நீட்டி குலுக்கிக்கொண்டாள். பெற்றோரையும் அறிமுகப்படுத்தினாள்.

வந்த யுவதி சொன்ன தகவல் அவர்களுக்கு சற்று அதிர்ச்சியூட்டியது.

“ மன்னிக்கவும். நீங்கள் தெரிவுசெய்த காரின் பெறுமதி 12 ஆயிரம் டொலர்கள். அந்த விலைக்கு வந்தால்தான் விற்பது என்று எங்கள் நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.”

“ அப்படியென்டால் என்ன மசிருக்கு இந்த ஏலம்” குகனேஸ்வரன் மனதிற்குள் தமிழில் புலம்பினார்.

சபீனாவுக்கு சலிப்பு வந்தது.

“ போவோம்... அப்பா....இந்த ஏலம் எங்களுக்குச்சரிவராது. கார் வாங்குறதும் லக் பை சான்ஸ்தான்.” சபீனா பெருமூச்சுவிட்டாள்.

சுமார் மூன்று மணிநேரத்தில் அந்தத் திறந்தவெளியில் நின்ற பல கார்கள் அந்த மண்டபங்களுக்கூடாக வந்து ஏலம் கூறப்பட்டு மற்றும் சில வாயில்களால் வெளியேறிவிட்டன. கார்களை தெரிவுசெய்தவர்கள் முற்பணம் கட்டுவதற்கு வரிசையில் நின்றார்கள்.

“ கார் தெரிவுசெய்வதும் லேசுப்பட்ட வேலை இல்லைத்தான் என்னம்மா...” சோர்வுடன் வந்த மகளின் தோள்பற்றிச்சொன்ன மனைவியின் முகம் பார்த்து, “ வாழ்க்கைத்துணை தெரிவு செய்வதும் லேசுப்பட்ட வேலை இல்லைத்தான்” என்று சொல்வதற்கு குகனேஸ்வரன் நினைத்தார்.

ஆனால் சொல்லவில்லை.




No comments: