இந்தியச் செய்திகள்

*  இலங்கை அகதிகளுக்கு தனிச்சட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் வலியுறுத்தல்

* கேரளா பொலிஸாரால் 37 இலங்கையர்கள் கைது

இலங்கை அகதிகளுக்கு தனிச்சட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் வலியுறுத்தல்



Sunday, 25 செப்டம்பர் 2011

இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு உடனடியாக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று துவாரகா நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்த சந்தரகுமார் (வயது 39) போலிக்கடவுச்சீட்டு மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்றபோது டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 6 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கையில் தனக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால் நாடு திரும்ப இலங்கை அகதி சந்தரகுமார் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக அவர் சார்பில் வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இதில் சந்தரகுமாருக்கு பிணை கிடைத்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் இருக்கிறார்.

ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் துவாரகா நகர நீதிபதி அருள் வர்மா 20 ஆம் திகதி தீர்ப்பளித்தார். பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. அகதிகளை வரவேற்கும் இந்தியா அவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முன்வராதமை வருந்தத்தக்கது. அவர்களைக் கட்டாயப்படுத்தி நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் முடியாது. அகதிகளுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றுவது அவசியம் என்று இந்திய சட்ட ஆணையமும், தேசிய மனித உரிமை ஆணையமும் வலியுறுத்தியுள்ளன. இதை கருத்தில் கொண்டு அகதிகளுக்கு தனிச் சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது; திகார் சிறையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைப்பது இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது. அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாக போராட உள்ளேன். நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இந்த தீர்ப்பினால் சிறையில் வாடும் இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படமாட்டார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேறிய இலங்கைத் தமிழர் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் கும்மிடிபூண்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்களை அணுகும் சில முகவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப உதவுவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்குகின்றனர். இதனால் சிக்கும் அகதிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சந்தரகுமாரைப் போல் திகார் சிறையில் ஏராளமான இலங்கை அகதிகள் உள்ளனர். இதில் பெண்களும் உள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது ஆதரவாக வாதாட யாரும் முன்வருவதில்லை. இதனால் நீதிமன்றத்துக்கும் சிறைக்கும் என அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மன உளைச்சலுக்கு ஆளாகும் இவர்கள் வேறு வழி இன்றி தங்கள் நாட்டுக்கே செல்ல விரும்புவதாக நீதிபதி முன்பு தெரிவித்து விடுகின்றனர். இதையடுத்து வெளிநாட்டுப் பதிவு அலுவலகத்தில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு தங்கள் நாட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். கடந்த ஆண்டு சுதர்ஷனி, கஜநாதன், ரோஷன்,சிவபாலன், கணேசன், பாலன் ஆகியோர் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நன்றி தினக்குரல்

கேரளா பொலிஸாரால் 37 இலங்கையர்கள் கைது
26/9/2011
ஏராங்குளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியில் 37 இலங்கையர்கள் இன்று கேரளா பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 26 ஆண்கள், ஏழு பெண்கள்;, குழந்தைகள் நால்வரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறுபட்ட அகதி முகாம்களில் இருந்து கொத்தமங்கலத்திற்கு வந்து வாடகை வீடொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச் செல்வதற்காக இவர்கள் தங்கியிருந்ததாகவும் இவர்கள் தொடர்பிலான உண்மையான ஆவணங்களை தேடி கண்டறியும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நன்றி வீரகேசரி

No comments: