நவராத்திரி வழிபாட்டின் தத்துவம் - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

இப்பொழுது நவராராத்திரி பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனால் நவராத்திரி வழிபாட்டின் தத்துவம் பற்றிய ஒரு நோக்கினை இக்கட்டுரையின்மூலம் அவதானிப்போம்.

சைவசமயம் ஓர் அன்பு நெறி.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்கின்றது திருமந்திரம்.


கடவுள் உண்டா இல்லையா என்கின்ற கேள்வியை எழுப்பி, அதற்கு இல்லை என்கின்ற பதிலை அழுத்தம் திருத்தமாகக் கூறிச் சிரிக்கின்ற மனிதர்கள் வாழுகின்ற காலம் இது. கடவுள் இல்லை என்று சொல்வதற்கான அறிவைக்கூட அவர்களுக்கு, தொல்லை இருப்பிறவிச் சூழும் தழை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்குகின்ற எல்லையில்லாத அந்த இறைவன்தான் கொடுத்தான் என்பதைக்கூட அவர்கள் உணர்வதில்லை.

இவர்களைப் பார்த்துத்தான் திருமூலர் சொல்கிறார்,

முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்ட காண்பதே ஆனந்தம்
மகற்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லுகென் சொல்லுமாறு எங்ஙனே.

ஒருபெண் தனது கணவனோடு அனுபவித்த இல்லற இன்பத்தினை, அதில் அடைந்த சுகத்தினை, பெற்ற திருப்தியினைப் பற்றித் தனது பிள்ளைக்கு எப்படிச் சொல்லி விளக்க முடியும். சொல்லித் தெரிவதில்லையே அந்தச்சுகம். சாதாரண சிற்றின்ப விடயமே இப்படியென்றால் அந்தப் பேரின்பத்தை எவ்வாறு சொல்லி விளக்க முடியும்.

விறகில் தீயினனாய், பாலில் படுநெய்போல் மறைய நிற்கின்ற மாமணிச் சோதியனான அந்த இறைவனை மனக்கண்ணினால்தான் காண முடியும். அவனைக் காண்பதால் உண்டாகும்; பேரானந்தத்தை அனுபவத்தினால்தான் அடைய முடியும், அனுபவித்தால்தான் உணரமுடியும்.

மனதினால் இறைவனைக் காண்பதென்றால் அது எப்படிச் சாத்தியமாக முடியும். இறைவன் எந்த வடிவிலே இருக்கின்றான். எங்கே இருக்கின்றான் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

அப்பர் சுவாமிகள் இறைவனின் தோற்றத்தைப் இப்படிப் பாடுகின்றார்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தற் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

குனித்த புருவம், கொவ்வைக் கனிபோன்று சிவந்த உதடுகள், பனித்த சடை, பவளம்போன்ற மேனி, அந்த மேனியிலே பால்போன்ற வெள்ளை நிறத்திலே திருநீற்றுப் பூச்சு, தூக்கிய திருவடி இத்தகைய அழகுடன் தோன்றுகின்ற இறைவனைக் காணமுடியுமென்றால் இந்த உலகத்திலே மனிதனாகப் பிறவியெடுப்பது தேவையானதுதான், என்பது அப்பர் சுவாமிகளின் கருத்து. இந்தத் தேவாரத்திலே இறைவன் எப்படியிருப்பான் என்பதைக் கூறியிருக்கின்றார்.

ஆனால் அதே அப்பர் சுவாமிகள்,

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி” என்று தொடங்குகின்ற மற்றுமொரு தேவாரத்திலே,

‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்று பாடியுள்ளார். அப்படியானால் அப்பர் சுவாமிகள் இறைவனைப்பற்றி இரண்டுவிதமாகச் சொல்கின்றாரா என்று நினைக்கத் தோன்றும். இல்லை. அவர் இரண்டு விதமாகச் சொல்லவில்லை. இறைவனின் இரண்டு நிலைகளைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார்.

இறைவனுக்குச் சொரூபநிலை, தடஸ்த நிலை என்று இரண்டு நிலைகள் உண்டு. சொரூபநிலை என்பது குணம், குறிகளுக்கு எட்டாத நிலை. உருவமற்ற நிலை. அருவத்திரு நிலை. அதுவே இறைவனின் உண்மையான நிலை. அதைத்தான் அப்பர் சுவாமிகள், இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என்று பாடினார்.

தடஸ்த நிலை என்பது, ஆன்மாக்களுக்கு அருள்புரியவேண்டி இறைவன் சொரூபநிலையினின்றும் இறங்கி நிற்கும் உருவம் பெற்ற நிலை. மனிதர்கள் விரும்பிய உருவில் தோன்றி அருள்புரிகின்ற நிலை.

இதைத்தான் பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்

போர்வையெனக் காணார் புவி என்று திருவருட்பயனிலே உமாபதி சிவாசாரியார் அவர்கள் கூறுகின்றார்.

காட்டிலே விலங்குகளைப் பிடிப்பதற்கு ஏற்கனவே நன்கு பழக்கப்பட்ட விலங்குகளைப் பயன் படுத்துவது போல, மனிதர்களுக்குப் பழக்கமான மனித உருவிலே தோன்றி இறைவன் அருள்புரிகின்றான். அந்த தடஸ்த நிலையிலே உள்ள இறைவன்தான் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும் கொண்டு மனித்தற்பிறவிகளுக்குத் தோற்றமளிக்கின்றான்.

ஆன்மாக்களில் அன்புள்ள இறைவன் ஆன்மாக்களுக்க அருள்புரிவதற்காக அவரவர்களுக்குப் பழக்கப்பட்ட உருவத்திலே காட்சி தருகின்றான். அவரவர் தம்நெஞ்சிலே இறைவனைக் கொண்டுள்ள வடிவத்தில் தோன்றுகின்றான்.

அன்பு உணர்ச்சி என்பது மனிதர்களுக்குப் பொதுவானது. உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் அல்லது பலரிடம் அன்பு செலுத்தியே ஆகவேண்டும். பெற்றோருக்குப் பிள்ளைகளிலே அன்பு. பிள்ளைகளுக்குப் பெற்றோரிலே அன்பு. கணவனுக்கு மனைவியிலும் மனைவிக்குக் கணவரிலும் அன்பு. சகோதரர்களுக்கிடையே, காதலர்களுக்கிடையே, நண்பர்களுக்கிடையே, தலைவர்கள் தொண்டர்களுக்கிடையே இப்படி மனிதர்கள் ஏதோ ஒரு விதமான அல்லது பலவிதமான அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாகவே உள்ளமை இயற்கையின் நியதியாகும். இவ்வாறு மனிதர்களுக்கிடையே நிலவுகின்ற அன்பினால் விளைவது இன்பம். அது சிற்றின்பம். அந்த இன்பத்தில் முழுமையாக மூழ்கித்திளைக்கின்ற மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். செல்வம் தங்கும்.

மனிதர்கள் மற்றைய மனிதர்கள் மேல் செலுத்துகின்ற அத்தகைய அன்பினை இறைவனை நோக்கித் திருப்ப முயன்றால், இறைவனிடம் அன்பு செலுத்த முனைந்தால் கிடைப்பது பேரின்பம். இறைவனிடம் உண்மையான அன்புகொண்டவர்களுக்குத் துன்பங்கள் தோன்றுவதில்லை. அவலங்கள் அவர்களைத் தீண்டுவதில்லை. கல்லோடு கட்டிக் கடலில் வீசிய போதும் அப்பர் சுவாமிகள் கலங்கவில்லை. இறைவன்மேல் செலுத்துகின்ற அன்பு இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் அளிக்கும்.

இதனையே வள்ளுவரும்

‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’ என்று கூறினார்.

இறைவன் மீது அன்பு செலுத்தி உய்வடைந்தவர்களில் சமய குரவர்கள் நால்வரும் மிக முக்கியமானவர்கள். தமிழ்கூறும் நல்லுலகில் சைவசமயத்தின் அன்புநெறியினை தழைத்தோங்கச் செய்ததில் அந்த நால்வருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. திருஞான சம்பந்தர் இறைவனைத் தன் பெற்றோராகக் கொண்டு அன்பு செலுத்தி சற்புத்திர மார்க்கத்திலே நின்று இறைவனை அடைந்தார். அப்பர் சுவாமிகளான திருநாவுக்கரசர் இறைவனைத் தன் எஜமானாக நினைத்து, இறைவனுக்குப் பணிவிடைசெய்து தாசமார்க்கத்திலே இறைவனடியை ஏகினார். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நண்பனாகக் கொண்டு அன்பு பூண்டார். அது சகமார்க்கம் எனப்படுகிறது. மாணிக்கவாசகர் சன்மார்க்க நெறியிலே தன்னை இறைவனுக்குச் சமர்ப்பித்தார். நால்வருமே இறைவன்மேல், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் மேல் தீராத அன்புகொண்டு, செந்தமிழால் பாடி சிவநெறியைப்பரவச் செய்தார்கள்.

இறைவனைக் காதலனாகக் கொண்டு அன்பு செலுத்திப் பாடிய மணிவாசகரின் திருவாசகப் பாடல்கள் இறைவன்மீது செலுத்தும் அன்புப் பெருக்கை நன்கு வெளிப்படுத்துகின்றன.

கேட்டாயோ தோழி கிறிசெய்தவாறொருவன்
காட்டாதனவெல்லாம் காட்டிச் சிவம்காட்டி
தாழ்தாமரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி….
என்றெல்லாம் ஒருத்தி இறைவன் தன்மீதுகொண்ட அன்பைப்பற்றித் தன் தோழியிடம் சொல்வதுபோல மணிவாசகர் அருளிய திருவம்மானையிலே வருகின்றது.

‘சூடுவேன் பூங்கொன்றை, சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன், கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன், உள்ளுருகித் தேடுவேன்’ என்று இறைவனோடு இரண்டறக்கலந்து சேர்கின்ற நிலையை மனிதக்காதல் நிகழ்ச்சிகளைப் போல மணிவாசகப் பெருமான் பாடியுள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலாக, திருவெம்பாவையிலே சிவன்மீது அன்புகொண்டபெண்ஒருத்தி, தனக்குக் கணவனாக ஒரு சிவனடியாரே வரவேண்டும், அதற்கு நீ அருளவேண்டும் என்று சிவனை வேண்டுவதாக அமைந்த பாடல் அன்பினால் இறைவனை அடைய வழிகாட்டும் சைவசமய வழிபாட்டு முறையினை நன்கு உணர்த்தி நிற்கின்றது.

‘முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாழ்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவர் ஆவார், அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையுமிலோமேலோர் எம்பாவாய்’

மேலும், இறைவன்மேல் அன்புகொண்டபெண், உரிமையோடு இறைவனிடம் வாதிட்டு வேண்டுவதுபோன்ற காட்சியையும் திருவெம்பாவையிலே நாம் காணலாம்.

‘எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எங்கொன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்’

அதாவது, எங்கள் தலைவனே! சிவபெருமானே!. உனக்கு ஒரு விடயம் சொல்கிறோம் கேட்டுக்கொள். எங்களது மார்பகங்கள் உன்னிலே அன்புடையவரல்லாத வேறு யாரின் தோளுடனும் சேரக்கூடாது. அதாவது உன் அன்பர் அன்றி வேறு யாரும் எங்களை மணக்கக் கூடாது. உனக்கு அல்லாது வேறு யாருக்கும் எங்களது கைகள் எந்த வேலையும் செய்யக்கூடாது. பகலிலும், இரவிலும் உன்னையன்றி வேறு எதையும் எங்கள் கண்கள் பார்க்கக்கூடாது. இவ்வளவையும் நீ எங்களுக்கு அருள்புரிந்தால் சூரியன் எந்தப்பக்கம் உதித்தாலும் எங்களுக்குக் கவலையில்லை பெருமானே என்று சொல்கிறாள்.

இவ்வாறு, அன்பே வடிவான இறைவனின் கருணையை அவன்மேல் அன்புசெலுத்திப் பெற்று உய்வதற்கு வழிகாட்டும் வகையிலேதான் சக்தி வழிபாடு சைவசமயத்திலே கற்பிக்கப்படுகின்றது.

தாய் என்பவள் அன்பே வடிவானவள். தாயைத் தெய்வமாக வணங்குவது சைவ மரபு. தமிழ்ப் பண்பாடு.

இறைவனின் சக்தியிலேயே உலகம் இயங்குகின்றது. அந்தச் சக்தியினை இறைவியாக, பெண்ணாக, அன்னையாக கற்பித்து வழிபாடுசெய்வது சைவசமயத்தில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவன் அன்புவடிவானவன் ஆன்மாக்களிடத்தில் அன்புடையவன், அதனாலேதான் இறைவனின் சக்தியை இறைவியாகக் கற்பித்து வழிபடுகின்றோம்.

நாம் வாழம் பூமியையும் தாயாக வணங்குகின்றோம்.

பூமிக்கு வளம் சேர்க்கும் கடலையும் அன்னையாக வணங்குகின்றோம். நாட்டுக்கு வளம் தரும் நதியையும் அன்னையென்று பெயரிட்டு அழைக்கின்றோம். அன்புசெலுத்துவதிலும், பாசத்தைப் பொழிவதிலும், கருணையைக் காட்டுவதிலும் அன்னைக்கு நிகர் யாருமில்லை. அதனாலேதான் அன்பேயுருவான இறைவனின் வல்லமையை அன்னையாய் வழிபடுகின்றோம்.

இறவன் எப்படிப்பட்டவன் என்பதைத் திருமூலர் சொல்கிறார்,

தீயினும் வெய்யன், புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல்லன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ் சடையோனே

இதைத்தான் மணிவாசகப்பெருமான் திருவாசகத்திலே,

தாயினும் நல்ல தயாவான தத்துவன் என்றார்

திருஞான சம்பந்தப் பெருமான்,

தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள் என்று திருக்கோணமலைப் பதிகத்திலே பாடியருளினார்.

பிறப்பிறப்பற்ற பேரானந்தப் பெருவாழ்வை நமக்குத் தருவதற்காக, பேதித்து நம்மை வளர்த்தெடுக்கும் பெய்வளையான இறைவன், இந்த வையகத்தில் நாம் வாழ்வாங்கு வாழ்வதற்காக நமக்கு ஈந்தருளும் ஆதாரங்கள் மூன்றாகும். அவை கல்வி, செல்வம், வீரம் ஆகியவை. இம்மூன்றையும் குறைவில்லாது நமக்கு அருளும்படி தாயினும் நல்ல தலைவனான இறைவனை வணங்கி வேண்டுதல் செய்யவேண்டியது நமது கடமையாகும்.

கல்வியைத் தருமாறு இறைவனை வேண்டும்போது அவனின் சக்திக்குக் சரஸ்வதி என்று பெயரிட்டு வணங்குகின்றோம். செல்வத்தை அருளும்படி இறைவனைப் பணியும்போது இலக்குமி என்று இறைஞ்சுகின்றோம். வீரத்தைக்கேட்டு வேண்டிநிற்கும்போது துர்க்கை என்ற பெயரால் துதிக்கின்றோம். இவ்வாறு கலைமகள் என்றும், மலைமகள் என்றும், அலைமகள் என்றும் நாம் கைகூப்பித் தொழுகின்ற தெய்வங்கள் இறைவனின் சக்திகளே. இம்மூவரும் இறைவனின் தேவிகள் என்பதாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்முன்று தேவியர்களுக்கான வழிபாடுகள் புரட்டாதி மாதத்தில் அமாவாசையை அடுத்து வருகின்ற ஒன்பது இரவுகளிலும் தொடர்ந்து நடாத்தப்படுவது வரலாற்றில் அடங்காத காலத்திலிருந்து வழக்கமாகிவிட்டது.

மானிடராகப் பிறந்த நமக்கு இந்தப்பூவுலகிலே வாழ்வதற்கு எத்தனையோ வகையான வீரம் தேவைப்படுகிறது. உடலிலே வீரம் தேவை. உள்ளத்திலே வீரம் தேவை. உணர்விலே வீரம் தேவை.

உடலிலே வீரம் என்பது நோய் நொடியற்ற உடல், கடமைகளை ஆற்றுவதற்கான அற்றல், சந்ததியை விருத்தி செய்வதற்கான சக்தி, இல்வாழ்வின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கான வல்லமை. உள்ளத்திலே வீரம் என்றறால், நல்லவைகளை எண்ணுவதற்கான தெளிவு நமக்குத் தேவைப்படுகிறது.

உணர்விலே வீரம் என்றால் மேலோரைப் பணிந்தொழுகும் சிந்தை நமக்குத் தேவைப்படுகின்றது. உற்றாரிடமும், உறவுகளிடமும், மற்றோரிடமும் மட்டுமன்றி எல்லா உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் காட்டுகின்ற பண்பு நமக்குத் தேவைப்படுகின்றது. எனவே மானிடராகிய நமக்கு உடலிலும் உள்ளத்திலம். உணர்விலும் வீரம் அவசியமாகின்றது.

இவையனைத்தும் இல்லையென்றால் இப்பிறப்பின் நோக்கத்தினைப் பூரணமாக நிறைவேற்ற முடியாதவர்களாகிவிடுவோம். இப்பிறப்பின் நோக்கம் நிறைவேறவில்லையென்றால் பிறப்பிறப்பில்லாப் பேரின்பப் பெருவாழ்வை அடைய முடியாதவர்களாகிவிடுவோம்.

எனவேதான், இப்பிறப்பின் கடமைகளை ஆற்றுவதற்கான ஆற்றலை அருளவேண்டும் என்று, வீரத்தைக் கொடுக்கவேண்டும் என்று, வல்லமையை வழங்கவேண்டும் என்று அன்னை துர்க்கா தேவியை வேண்டுகின்றோம்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள். இவ்வுலகில் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மைப் பராமரிக்கவும், நமது கடமைகளை முன்னெடுக்கவும் நமக்குப் பொருள் தேவைப்படுகின்றது. நமக்குத் தேவையான பொருளை நல்ல வழிகளில் ஈட்டவேண்டிய பொறுப்பு நமக்கு இரக்கின்றது. அவ்வாறு பொருளீட்டும் செயற்பாட்டில் நமக்கு வெற்றியைத் தருமாறும், நமது முயற்சிக்கு ஏற்ற பலனை முழுமையாகத் வழங்குமாறும், வறுமையற்ற வாழ்வை அருளுமாறும் இலக்குமி தேவியை இறைஞ்சுகின்றோம். காத்தல் கடவுளான திருமாலின் சக்தியாக விளங்குகின்றவள் இலக்குமி. அவளே பொருளுக்கு அதிபதியாகப் போற்றப்படுகின்றாள்.

கல்விக்குத் தெய்வம் கலைவாணி. இவ்வுலகில் கல்விக்கு நிகரான சொத்து எதுவுமே இல்லை.

“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்”
என்பது தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கு.

கல்வியைப் பெறாதவர்களது முகத்திலே இருக்கின்ற கண்கள் இரண்டும் உண்மையிலேயே கண்களல்ல, அவை வெறும் புண்களே. கண்களே கண்களாக மதிக்கப்படுவது ஒருவன் கற்றவனாக உள்ளபோதுதான் என்பது அதன் கருத்து.

இப்பிறப்பின் நோக்கத்தை அறியவும், இவ்வுலகில் அறத்தின் வழி நல்வாழ்வு வாழவும், இவ்வுலக வாழ்வை நீத்தபின்னர் பிறப்பிறப்பில்லாப் பெரின்பப் பெருவாழ்வைப் பெற்று இறைவனோடு சேரவும் நமக்கு நல்வழிகாட்டுவது கல்வியாகும். அத்தகைய நல்ல கல்வியை நமக்கு அருளும்படி கல்வித் தெய்வமாம் கலைமகளிடம் வேண்டுகின்றோம்.

முதல் மூன்று இரவுகளும் துர்க்கா தேவிக்கும், அடுத்த மூன்று இரவுகளும் இலக்குமி தேவிக்கும், கடைசி மூன்று இரவுகளும் சரஸ்வதிதேவிக்கும் வழிபாடுகள் குறித்தொதுக்கப்பட்டு நடைபெறுகின்றன. ஒன்பது இரவுகள் செய்யப்படும் வழிபாடுகள் என்பதால் நவராத்திரி என்று வடமொழியிலிருந்து தமிழுக்குவந்து சேர்ந்த திசைச் சொல்லால் இந்த வழிபாடு அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. பத்தாவது நாள் வெற்றித்திருநாள். அதுவும் விஜயதசமி என்று அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அன்றுதான் ஆயுத பூசை செய்யப்படுகிறது. கல்விகற்கவும், கலைகள் பயிலவும் குழந்தைகளுக்கு தொடங்கப்படுகின்றது.

நவராத்திரிகாலங்களில் ஆலயங்களில் விழாக்கள் நடைபெறும். கல்விச் சாலைகளில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். வீடுகள் தேவிகள் மூவரின் பூசைகளால் சிறப்புறும். மக்களின் மனங்களெல்லாம் மகிழ்வுறும்

மக்களின் வாழ்வில் இடம்பெறும் மற்றைய பண்டிகைகளைப்போலவே நவராத்திரி வழிபாடும் நடைபெறும்.

மற்றவருக்குத் தீமைபயக்காத, தன் மனச்சாட்சிக்கு எதிரல்லாத வீரத்தைத் தருமாறு நிலமகளிடமும், பழிக்கு அஞ்சி, நல்வழியில் தேடப்பட்டு மற்றவருக்கும் பயன்படத்தக்க செல்வத்தைத் தருமாறு திருமகளிடமும், மெய்ப்பொருள் காண்கின்ற நற்கல்வியைத் தருமாறு கலைமகளிடமும் வேண்டி நிற்போமாக.

No comments: