மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 11


.
அத்தியாயம் 11                                                                        பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

முஸ்லிம் பாடல்கள்


ஈழத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் மக்களின் பங்கு மிகவும் மகத்தானது. வாழ்கின்ற இனத்தால் முஸ்லிம்களாக இருந்தாலும், வணங்குகின்ற மதத்தால் இஸ்லாமியர்களாக இருந்தாலும், பேசுகின்ற மொழி தமிழாக இருப்பதால் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்குப் பெரும்பங்காற்றிவருகின்றார்கள்.

நாட்டுப்பாடல்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் மக்களின் பங்கு மிகவும் உன்னதமானது.  கிழக்கிலங்கையில் பாரம்பரிய முஸ்லிம் கிராமங்களில் வழக்கிலிருந்த நாட்டுப்பாடல்கள் அந்த மக்களின் கவிநயத்தை துல்லியமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமது தனித்துவங்களைப் பேணிக்கொண்டு;ம், அதே வேளை பரஸ்பரம் தனித்துவங்களுக்கு மதிப்பளித்துக்கொண்டு;ம், பல்வேறு விடயங்களில் தொடர்புள்ளவர்களாக அன்னியோன்னியமாக வாழ்ந்து வந்தார்கள். இன்றும் அந்தநிலை நீடிக்கின்றது.

அதனால் நாட்டுப்பாடல்களில் தமிழ் மக்களால் பாடப்பட்டவை எவை, முஸ்லிம் மக்களால் பாடப்பட்டவை எவை என்று பாகுபடுத்தியறியமுடியாத அளவுக்கு இருசமூகங்களிலும் பொதுவாக வழக்கிலிருந்த பாடல்கள் அனேகம்.

எனினும், நிச்சயமாக முஸ்லிம் மக்களால் பாடப்பட்டோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டோ இருக்கவேண்டும் என்று முடிவுகட்டக்கூடிய அளவுக்கு வெளிப்படையான வார்த்தைகள் இடம்பெற்றுள்ள சில பாடல்களைக் கீழே காணலாம்.

தெருவால போகவெண்ணா
தேன்போல மணக்கிறது
கனியருந்த நான்வருவேன்-உன்ர,
காக்காமார் காவலுகா

பொட்டு மயிலே - என்ர,
பொலிசையிட நங்கணமே
காட்டுவழி நடக்க - உங்க,
காக்காமார் காவலாமே

இவ்விரு பாடல்களிலும் வருகின்ற காக்காமார் என்பது அண்ணன்மாரைக் குறிக்கிறது. கிழக்கிலங்கையில் முஸ்லிம் மக்கள் மூத்த சகோதரனைகக் காக்கா என்று அழைப்பது வழக்கம். உறவுமுறையில் சகோதரனாக உள்ளவரை மட்டுமன்றித் தம்மைவிட வயது கூடியவரை அழைப்பதற்கும், மரியாதையின் நிமித்தமும் காக்கா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

கீழ்வரும் பாடல்களிலே வருகின்ற உம்மா என்ற சொல் தாயைக் குறிப்பது. உம்மா என்று தாயை அழைக்கும் வழக்கம் முஸ்லிம்களுக்கேயுரிய தனித்துவச் சிறப்பானதாகும்.

ஆசைக் கிளியே என்ர
ஆசியத்து உம்மாவே
    ஓசைக் குரலாலே - உங்க,
    உம்மாவைக் கூப்பிடுகா

கோடியால வந்துநின்று
கொக்காட்டம் பண்ணாதீங்க
ஊடு நிறைஞ்ச சனம் - எங்க,
உம்மாவும் திண்ணையிலே

வாப்பாருக்கார் பன்னறுக்க
உம்மாருக்கா பாயிழைக்க
காக்காருக்கார் விற்றுவர- இந்த,
கரவாகான் வேணாங்கா.

அக்கரையில் நின்று
ஆசைக்குழல் ஊதுகிறான்
தாங்குதில்லை உம்மா- நான்,
தண்ணீருக்குப் போய்வரட்டா?

கடைசிப் பாடலில் காதல் வயப்பட்ட பெண்ணொருத்தியின் தாகம் நன்கு புலப்படுகிறது. காதலனின் குரல் காதிலே கேட்டதும் அவளால் தாங்கமுடியவில்லை. அவனைக் காணத் துடிக்கிறாள். தண்ணீருக்குப் போய்வரட்டா என்றால், தண்ணீர் அள்ளும் சாட்டிலே அவனைப் போய்ச் சந்தித்துவிட்டு வரலாமா என்று தாயிடம் அனுமதி கேட்கிறாள்.

அவளின் காதல் விவகாரத்திற்கு தாயின் அனுமதியும் உண்டு என்பது அவள் வெளிப்படையாகக் கேட்பதிலிருந்து தெரிகிறது.

பெற்றோருக்கு அதிலும் குறிப்பாக தந்தையாருக்குத் தெரியாமல் தமது காதல் தொடர்பினைப் பேணிக்கொள்வது பெண்களின் பொதுவான வழக்கம். கிராமத்துத் தந்தைமார் கண்டிப்பு மிகுந்தவர்களாகவும், பெண்கள் அந்தக் கண்டிப்பிற்கு மிகவும் பயந்தவர்களாகவும் இருந்தமையே அதற்குக் காரணம். பின்வரும் பாடல்கள் அத்தகைய சந்தர்பங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

சரிசாமம் ஆகுமட்டும் - உங்க,
செருமுதலைக் கேட்டிருந்தேன்
வந்துபேச வழியில்லாமல் - உம்மா
வழிப்பாட்டில் படுத்திருந்தா

மச்சானே இன்பம்
மணக்கின்ற சீறாவே
உச்சால சாய - வாப்பா,
உறுகாமம் போகின்றார்

வாவென் றழைப்பேன் மச்சான்
வாசலிலே பாய்தருவேன்
வாப்பா அறிஞ்சா ரெண்டால்
வாளெடுத்து வீசிடுவார்

நிலவு எழும்பட்டும்
நிக்க சனம் போகட்டும்
வாப்பா உறங்கட்டும்
வாறதெண்டால் சம்மதந்தான்

சாமம் ஒருத்துச்
சரிசாமம் ஆனபின்பு
வாப்பா படுத்தபின்னர்
வந்தழைத்தால் நான்வருவேன்
ஊரும் அடங்கினபின்
ஓருசாம மாயினபின்
வாப்பா உறங்கினபின்
வந்தழைத்தால் நான்வருவேன்

தமது கோபத்தை, வெறுப்பைக் காட்டுவதற்கும் ஏசித் திட்டுவதற்கும்கூட பாடல்களைப் பயன்படுத்தும் பக்குவம் உள்ளவர்களாக கிராமத்து மக்கள் திகழ்ந்தார்கள் என்பதை முன்னர் ஓர் அத்தியாயத்திலே விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம். அத்தகைய பாடல்களில் முஸ்லிம் மக்களோடு தொடர்புடையவை என்று அடையாளம் காணக்கூடிய சில பாடல்கள் கீழே தரப்படுகின்றன.

காட்டுப்பள்ளி அவுலியாட
காரணங்கள்  உண்டுமானால்
மாடுகொல்லி இசுமானுக்கு - ஒரு,
மானபங்கம் உண்டாகணும்

ஓதிப் படிச்சி
ஊர்புகழ வாழ்ந்தாலும்
ஏழைக்குச் செய்ததீங்கை - அல்லா,
எள்ளவும் ஏற்கமாட்டான்

அல்லாட பள்ளியில
அனுதினமும் வாங்கு சொல்ல
மோதின் களவெடுத்தல்
முறைதானோ ஊரவரே.


ஊருக்கு உறாஜி
ஓதுவது தீன்சறகு
யாருக்குத் தெரியும் அந்த,
வஞ்சகனின் உள்நடத்தை

கோளாவில் மாடுவந்து
கூரையை இழுக்குதென்று
ஏசாதகா ராத்தா - நம்மட,
எருதுவந்து போகுதுகா

மேலும் சில முஸ்லிம் பாடல்கள்

நடையழகி நளினச்
சித்திர வாயழகி
இடையழகி கதிஜா - ஒரு,
இன்பமுத்தந் தாகிளியே

காமக் கடலிலே
கைத்தோணி உண்டுமென்றால்
சாமத்திற்குச் சாமம்
சலாமுரைப்பேன் காலடியில்


கைவிவேன் என்றுஎண்ணிக்
கவலைப்படாதே கண்ணார்
அல்லா மேல்ஆணை - உன்னை,
அடையாட்டிக் காட்டுப்பள்ளி

காத்தான் குடியிருந்து - ஒரு,
கன்னிநாகு வந்திருக்கு
காசைத்தா வாப்பா நம்மட
கைமுதலாய் வாங்கிடுவோம்

ஒண்டுமில்லைகா இங்கு
உன்னுடைய மாளிகைக்கு
கலிமாப்படித் துரைக்கக்
கருகாக்க வந்தேன்கா

ஓதக்குர் ஆனிருக்க
ஓழு வெடுக்கச் செம்பிருக்க
    வேதமும் இங்கிருக்க
    வேறு ஹறாம் தின்னலாமோ

நித்திரைக் கண்ணிலேயும்
நினைவிலேயும் தோணுறது
கலிமா விரலும் மச்சான்ர
கல்பதித்த மோதிரமும்

    குத்து விளக்கெரிய
    குமாரன் குர்ஆன் ஓத
    பாலன் விளையாட  - ஒரு,
    பாக்கியம் தா ஆண்டவனே

கண்டங்கா உம்மா
களியோடைப் பாலத்திலே
வாளால் அறுத்த மரவண்டிலில்
மச்சான் போறாருகா

No comments: