இலங்கைச் செய்திகள்

யாழ். மத்தியஸ்தர் சபை

* 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ்கள் புறப்படக்கூடாது: பொலிஸார்

* கொழும்பு யாழ். பயணிகள் பஸ் சேவைக்கு இராமகிருஷ்ண மிஷன் அருகில் இடம்

* வட பகுதி மக்களுக்கு போதியளவு சர்வதேச உதவி கிடைப்பதில்லை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு .

யாழ். மத்தியஸ்தர் சபை

Monday, 26 September 2011

குழாய்நீர் விநியோகம் குறைவடைந்ததால் பாஷையூர் பகுதி மக்கள் குடிநீருக்காக அலைந்து திரிகின்றனர்.

கடந்த சில வாரங்களாக யாழ். மாநகர சபையின் நீர் விநியோக நேரம் குறைக்கப்பட்டு, நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகின்றது. வழமையாக 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை நாளாந்தம் காலையில் நீர் விநியோகம் பாஷையூர் பகுதிக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது 15 நிமிடம் முதல் 20 நிமிடமாக குறைக்கப்பட்டு வழங்கப்படுவதால் இப்பகுதி மக்கள் குடிநீர் பெறுவதற்காக மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன், குழாய்நீர் நிலைகளில் வெற்று வாளிகள், குடங்கள் காலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அடுக்கி வைக்கப்பட்டு தமது கட்டம் வரும் வரை பார்த்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. பல தடவைகள் குழாய் நீர் நிலைகளில் மக்கள் வாய்த்தர்க்கங்களில் ஈடுபட வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. கடமை செய்வோர் நேரத்துக்குப் போக முடியாத நிலையும், பாடசாலைப் பிள்கைள் கூட பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. இதுபற்றி யாழ்ப்பாண மாநகர சபை நீர்விநியோகப் பகுதியினர் கவனமெடுத்து ஆவன செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தினக்குரல்

30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ்கள் புறப்படக்கூடாது: பொலிஸார்


26/9/2011
யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்கள் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து புறப்படக்கூடாது. அப்பகுதியில் பயணிகளை ஏற்றவும் கூடாது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குமிடையில் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சு வார்த்தையின் போதே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபடும் தனியார் சொகுசு பஸ்கள் வெள்ளவத்தை பகுதியிலிருந்தே பயணிகளை ஏற்றிக்கொண்டு இதுவரை காலம் சேவையில் ஈடுபட்டு வந்தன. பொலிஸாரின் இந்த அறிவிப்பினால் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையிலிருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பிரதேசத்திலிருந்து பஸ்கள் புறப்படுவதனை 30ஆம் திததிக்குப் பின்னர் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் வெள்ளவத்தைப் பிரதேசத்துக்கு வெளியிலிருந்து புறப்படுவது தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனைவிட சொகுசு பஸ்களுக்கு சட்டவிரோதமாக ஆசனப் பதிவு செய்வது தவறு என்றும் அத்தகைய நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் பாதை அனுமதிப் பத்திரம் பெறாத பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படக்கூடாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் இந்த அறிவிப்பையடுத்து யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபடும் பஸ்களின் உரிமையாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை பாதை அனுமதிப்ப த்திரம் இல்லாது யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபட்டுவந்த 8 பஸ்களை வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றியதுடன் அவற்றை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்றிருந்தமையும் குறிப்பிடத்கத்கதாகும்.
நன்றி வீரகேசரி

கொழும்பு யாழ். பயணிகள் பஸ் சேவைக்கு இராமகிருஷ்ண மிஷன் அருகில் இடம்


வீரகேசரி நாளேடு 9/28/2011 10:31:43 AM

கொழும்பு யாழ். பயணிகள் பஸ்கள் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் அருகாமையில் உள்ள உணவுக் களஞ்சியசாலை வளவிலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் அதுவரையில் வழமைபோலவே வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து பயணிகள் பயணத்தை தொடர முடியுமெனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொழும்பு யாழ். பயணிகள் பஸ்கள் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து புறப்படுவதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் அனுமதி வழங்கப்படாதென வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவித்ததாக பஸ் உரிமையாளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் மிலிந்த மொறகொடவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

வெள்ளவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே மிலிந்த மொறகொடவின் கவனத்துக்கு பஸ் உரிமையாளர்கள் இப்பிரச்சினையைக் கொண்டு வந்தபோது இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் பொறுப்பை மிலிந்த மொறகொட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் இ. அங்கஜனிடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து பஸ் சேவைகளின் உரிமையாளர்களை அழைத்துச்சென்று கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுக்கள் நடத்தினார்.

இதன்போது வெள்ளவத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலிருந்து கொழும்பு யாழ். பயணிகள் பஸ்கள் புறப்படுவதில் உள்ள பிரச்சினைகள், பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் விளக்கமளித்த அங்கஜன் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் அருகில் உள்ள கூட்டுறவு அமைச்சுக்கு சொந்தமான உணவுக் களஞ்சியசாலை வளவிலிருந்து பஸ்கள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரினார்.

அங்கஜனின் இக்கோரிக்கையை கவனத்தில் எடுத்த பிரதி பொலிஸ் மா அதிபர் குறித்த இடம் தொடர்பிலான வீடியோ படத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அனுப்புமாறு கூறினார். இதனையடுத்து வெள்ளவத்தை பொலிஸாருடன் டிப்டொப், எஸ்.பி.எஸ். கருணா ஆகிய பஸ் சேவைகளின் உரிமையாளர்களை அழைத்துச் சென்று உணவுக் களஞ்சியசாலை வளவினைப் பார்வையிட்டு அதனை வீடியோ படம் பிடித்து பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு பிரதிப்பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மூலம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கிடையில் கொழும்பு யாழ். பயணிகள் பஸ்கள் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும்வரை முன்னைய இடங்களிலிருந்து புறப்படுவதற்கு அனுமதி வழங்குவதாகவும், பயணிகளுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் போக்குவரத்தை மேற்கொள்ள தான் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க அங்கஜனிடம் உறுதியளித்தார்.

இதேவேளை, வழித்தட அனுமதியின்றி சில பஸ்கள் கொழும்பு யாழ். சேவையில் ஈடுபடுவதாகவும் சில பஸ் சாரதிகள், நடத்துனர்கள், பஸ் உரிமையாளர்கள் தரமான சேவை வழங்குவதற்கு மறுப்பதாகவும் பஸ்களின் உரிமையாளர்களில் சிலர் தெரிவித்த முறைப்பாடுகளுக்கு அமையவே சில நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்ததாகவும் தெரிவித்த அங்கஜன் இப்பிரச்சினையை சிலர் அரசியலாக்க முற்படுவதாலேயே தேவையில்லாத தடைகள் ஏற்படுவதாகவும் எனவே யாரும் இப்பிரச்சினையை அரசியலாக்க வேண்டாமெனவும் கேட்டுள்ளார்

வட பகுதி மக்களுக்கு போதியளவு சர்வதேச உதவி கிடைப்பதில்லை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிப்பு .


Friday, 30 September 2011

இலங்கையின் வட பகுதி மக்களுக்கு போதியளவுக்கு சர்வதேச உதவி கிடைப்பதில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்பு யுத்தப் பிரதேசங்களாக இருந்த இடங்களில் சாதாரண மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குரல்கொடுத்துள்ளது.

யுத்தத்துக்கு பின் மீள்குடியேறிவருவோர் பெரும்பான்மையாக இருந்துவரும் இப்பிரதேசங்களில் இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படையான வசதிகள் கூட இல்லை என்றும் சர்வதேச உதவி வழங்கும் நாடுகளிடமிருந்தும் இவர்களுக்கு போதிய அளவு உதவியில்லை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் வடக்கில் ஒரு இலட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடும் வாழ்வாதாரமும் குடிநீர் கழிப்பறை வசதிகளும் உடனடியாகத் தேவைப்படும் நிலையே இருந்துவருவதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க கூறினார்.

இலங்கையிலிருந்து மனித உரிமை பிரச்சினைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதால் கொடையாளி நாடுகள் உதவிகளை வழங்கத் தயங்குகின்றனவோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததால் சர்வதேச சமூகத்தின் உதவி முயற்சிகள் தளர்ந்து போயுள்ளன என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

ஆனால், செஞ்சிலுவைச் சங்கத் தலைவரின் விமர்சனத்தைத் தாம் ஏற்க முடியாது என இலங்கைக்கு உதவும் முக்கிய கொடையாளிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னார்ட் சேவெஜ் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான உதவிகள் வழங்கத் தாங்கள் தயங்குவதில்லை என அவர் கூறினார்.

இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் ஆதரித்து வரவே செய்கிறது என்றும் உறைவிடம் வாழ்வாதாரம், நிரந்தர வீடுகள் தொடர்பாக இலங்கையில் அடுத்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்படுகின்ற உதவித் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி வழங்கி வரவே செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல் நிலைவரம், மனித உரிமைகள் நிலைவரம் இவற்றையெல்லாம் கண்டு மனிதாபிமான உதவிகள் விடயத்தில் மாற்றங்கள் வர தாங்கள் அனுமதிப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் உதவி வழங்கும் நாடுகளின் உதவிகள் குறைந்து வரத்தான் செய்கின்றன.

ஐ.நா. சபை மிகச் சமீபத்தில் வெளியிட்ட மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றிய அறிக்கையில் இலங்கை இந்த வருடம் ஐ.நா. முன்னெடுக்கவுள்ள உதவித் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியில் சர்வதேச உதவியாளர்களிடமிருந்து நான்கில் ஒரு பங்கு நிதிதான் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி தினக்குரல்


No comments: