மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள்..


.


கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையொன்றும் பஞ்சணையல்ல.. அவர் கடந்து வந்த பாதையில் நடந்த அனைத்துச் சம்பவங்களும் அனுபவப் பாடங்களை அடுக்கிக் கொண்டே வந்தன.  அவைதான் அனேகமாக பாடல்களின் பல்லவிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கவிஞர்கள் பெரும்பாலும் மென்மையானவர்கள்.  சுக துக்கங்களை மற்றவர்கள் பெறுவதைவிட உணர்ந்து அதை பிரதிபலிக்கத் தெரிந்தவர்கள்! எத்தனையோ உதாரணங்கள் இதற்கு உண்டு - என்றாலும் சொல்கிறேனே இங்கு ஒன்று! தமிழ்த்திரையுலகில் காலடி பதித்துத் திசையைத் தீர்மானித்து பயணம் துவங்கிய கவிஞர்..


உடன் பிறந்த தங்கைகளின் திருமணம் தொடர்பாய் விரைவில் பொருளீட்டி வந்துவிடுவேன் என்று கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தக் காலக்கட்டம்! இதோ.. அதோ என்று காலச்சக்கரம் சுழல.. அடுத்து வந்தது ஒரு தந்தி.. அவசர அவசரமாய்.. தங்கையின் உடல்நிலை கவலைக்கிடம் என .. உடனே புறப்பட்டார்.. வானூர்திவாயிலாக மதுரை சென்று அங்கிருந்து காரைக்குடி செல்ல.. ஒரு மணி நேரம் தாமதம் என வானூர்தி நிலையத்தில் அறிவிப்பு.. சோகத்தில் ஆழ்ந்திருந்த அச்சமயம்.. அடுத்துவந்த செய்தியில் அதிர்ந்துபோனார் கவியரசர்.. ஆம்.. தங்கையின் மரணச்செய்தி.. மனதையே உலுக்கிப் போட.. நிலைகுலைந்த நெஞ்சத்தோடு நெக்குருகி வலுவிழந்தார். இதயத்தில் விழுந்த அடியை ஏட்டிலே வடித்தெடுத்தார்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் - அண்ணன்
வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்..

அமைதி என்பதற்கு நிரந்தர உறக்கம் என்றொரு பொருளும் உண்டு.. அன்புமலராய் கண்ணில் நிறைந்தவள்.. தன்னுதிரம் என்பதாக தன்னுடனே பிறந்தகொடி.. கண்ணெதிரே சாய்ந்ததனைக் கற்பனையால் சமைக்கின்றார்..

அற்புதமாய் ஒரு பாடல் முழுக்க முழுக்க கவிஞரின் சுய சோகத்தில்உதித்த இப்பாடல்..

பாசமலர் திரைப்படத்தில் அண்ணன் தங்கையின் எதிர்காலவாழ்வை எண்ணிடும் கனவாக.. கனிந்த இப்பாடலின் பின்னணியில் இத்தகு சோகம் புதைந்திருப்பது சற்றும் தெரியாமல்..

சுகமான கற்பனை போல் .. நடிகர் திலகத்தின் நயமான நடிப்பில்..
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில்.. இன்றும் நாம் கேட்டு மகிழ்கிறோமே..

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்.. டி.எம்.செளந்திரராஜன் குரலில்..
ரோஜா மலரின் அடியில் உள்ள முள்பட்ட உணர்வோடு..

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்


--

என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

No comments: