.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்குத் தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வேந்தன்பட்டி என்னும் சிற்றூர். சிறிய ஊராக இருந்தாலும் பெரும் செல்வச் சீமான்கள் வாழ்கின்ற ஊராகத் திகழ்கிறது வேந்தன்பட்டி.
இவ்வூரின் தனிச்சிறப்பு – நந்தி எம்பெருமான் இவ்வூரில் நெய் நந்தீஸ்வரராக அருள் பாலிக்கின்றார். தனது தோற்றம் முழுவதிலும் பசு நெய்யினைப் பூசிக் கொண்டு தன்னை வழிபடுவோர்க்கு நலன்கள் பல வழங்கி அருள்பாலிப்பதில் தலைசிறந்து விளங்குகின்றார். நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள் பாலிப்பது இவ்வூரில் மட்டுமே. அதனால் இவ்வூர் தமிழகத்து ஊர்களில் தனிசிறப்பிடம் பெறுகின்றது.
ஊருக்குள் நுழைந்ததும் கண்களில் தென்படுவது நெய் நந்தீஸ்வரர் ஆலயம்தான். இவ்வூர் நகரத்தார் பெருமக்களின் மேற்பார்வையில் கோவில் நிர்வாகப் பொறுப்பு உள்ளது. சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோயில். எட்டுமுறை கும்பாபிஷேகம் கண்ட பெருமை உடையது. சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் மற்றும் நவக்கிரக விக்கிரகங்களும் உள்ளன. ஆனாலும் இங்க நெய் நந்தீஸ்வரரே முக்கியக் கடவுளாக உள்ளார். இதனால் இக்கோவில் சிவன் கோவிலாக இருந்தாலும் நந்தி கோவில் என்றே ஊர் மக்களால் அழைக்கப்படுகிறது.
கோவிலுக்குள் நுழைந்தாலே நெய் மணக்கும். உள்ளே சென்றதும் முதலில் நாம் பார்க்கின்ற கடவுள் நெய் நந்தீஸ்வரர். இவருடைய தோற்றம் முழுதும் பசு நெய் அப்படியே உறைந்துள்ளது. அப்படி உறைந்திருக்கும் நெய்யில் ஈக்கள், எறும்புகள், பூச்சிகள் எதுவும் மொய்க்கவில்லை. இதைப் பார்க்கின்ற யாருக்கும் கண்டிப்பாக ஆச்சரியம் மேலிடும்.
நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் மிகவும் சிறப்பானது. தஞ்சாவூர் நந்தியின் தோற்ற அமைப்பில் ஏறத்தாழ முக்கால்பங்கு உயரமும் அதே அளவு பருமனும் கொண்டது.
தஞ்சாவூர் நந்தி சோழ அரசன் தந்த பிரம்மாண்டம்.
வேந்தன்பட்டி நந்தி – நகரத்தார்கள் உருவாக்கிய நெய்த்தோற்றம்.
இரண்டு நந்திகளும் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து ஒரே கல்லால் செய்யப்பட்டவை.
பிரதோஷ நாளில் நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நெய் நந்தீஸ்வரரை சுற்றிலும் அமர்ந்து பிரதோஷ விழாவை கண்டுகளிக்கின்றனர். அன்று நெய் நந்தீஸ்வரருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுக்க நிறைந்து தரையில் வழிந்து தேங்கி நிற்கிறது. மறுநாள் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நெய்க்கிணற்றில் கொட்டுகிறார்கள்.
வேந்தன்பட்டியைச் சுற்றி எட்டு கிராமங்கள் உள்ளன, இந்தக் கிராமங்களில் பசுமாடு வைத்திருப்பவர்கள் பாலைக் கறந்து, காய்ச்சி, நெய் எடுத்து ஸ்ரீநெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ சொந்த உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ளவோ செய்கிறார்கள். இந்தப் பழக்கம் இன்னும் இந்த ஊர்களில் நடைமுறையில் இருக்கிறது.
நெய் நந்தீஸ்வரருக்கு தனப்ரியன் என்ற ஒரு பெயரும் உண்டு. இரு கொம்புகளுக்கு இடையே சக்கரம் ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இந்த அமைப்பு இந்தியா முழுதும் உள்ள எந்த நந்தீஸ்வரரின் தோற்ற அமைப்பிலும் நிச்சயம் கிடையாது. நெய் நந்தீஸ்வரரின் தோற்றத்தில் இந்தச் சக்கரம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. உலகமே அழியும் நிலை வந்தாலும் தான்இருக்கும் ஊர் அழிய சம்மதிக்காதவர் இந்த நெய் நந்தீஸ்வரர் என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள். பல வருடங்களாகக் குடியிருந்த தங்கள் சொந்த வீட்டையே நெய் நந்தீஸ்வரருக்காக விட்டுக் கொடுத்தவர்கள் கூட இவ்வூர் மக்களில் பலர் உண்டு.
வருடந்தோறும் வருகின்ற தை மாதத்தில் மாட்டுப் பொங்கல் அன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா என்ற ஒரு விழாவினை ஊர் மக்கள் நடத்தி வருகிறார்கள். நந்தி விழா தினத்தன்று அபிஷேகங்கள் முடித்த பிறகு 21 வகையான மாலைகளால் அழகுபடுத்தி பல்வேறு தீப ஆராதனைகள் நடத்துகின்றனர். எந்த ஊரிலும் நடைபெறாத இந்த நந்தி விழா இவ்வூரில் மிகவும் சிறப்புடன் நடைபெறுகின்றது.
நந்தி எம்பெருமானுக்கு குளப்பிரியன், பிரதோஷப்பிரியன் என்கிற பெயர்களும் உண்டு.
கோயிலின் உள்ளே வடக்குப்பக்கத்தில் நந்தவனத்தின் உள்ளே ஈசான்ய மூலையில் நெய்க்கிணறு என்ற அதிசய அமைப்பு உள்ளது. அபிஷேகத்தின் போது தரையில் வழியும் நெய்யை பாத்திரத்தில் எடுத்து இந்த நெய்க்கிணற்றில் கொட்டுகிறார்கள். இந்தக் கிணற்றின் உள்ளே தேங்கியிருக்கும் நெய்யில் கூட ஈக்கள், எறும்புகள் பூச்சிகள் எப்போதும் மொய்ப்பது கிடையாது.
வேந்தன்பட்டியில் உள்ள கச்சேரிக்கூடம் என்னும் பகுதியில் 90 ஆண்டுகளாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றியிருக்கிறார். மிகப்பழமை வாய்ந்த இந்த வேப்ப மரத்தில் நெய் நந்தீஸ்வரரின் முகம் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு மிகுந்த பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
மாதந்தோறும் வருகின்ற பிரதோஷ நாட்களிலும் வருடந்தோறும் வருகின்ற முக்கியத்திருவிழா நாட்கள், பண்டிகை நாட்களில் நெய் நந்தீஸ்வரரைப் பார்க்க வருகின்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் மிகுந்த சுவையுடையது என்று சொல்கிறார்கள்.
இந்த அபூர்வக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்றார்கள். சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடி பேருந்துகள் உள்ளன. பொன்னமராவதியில் இருந்து வேந்தன்பட்டி வருவதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.
காலை 7.00 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கிறது.
இந்த அதிசய நந்திக்கு சுத்தமான, கலப்படம் இல்லாத பசு நெய்தான் காணிக்கைப் பொருள். எனவே நெய் நந்தீஸ்வரை பார்க்க வருகிறவர்கள் வரும் போது ஒரிஜினல் பசு நெய் கொண்டு வர வேண்டும். இது ரொம்ப முக்கியம்.
கவியரசர் கண்ணதான் அவர்கள் வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரரைப் பற்றிப் பாடிய கவிதை
கொடும்பாளூரில் பிறந்தவராம்கொடுக்கும் வரம் பெற்றவராம்வேந்தன்நகர் வளர்ந்தவராம்வேண்டும் வரம் அளிப்பவராம்அண்ணன் அவன் தஞ்சையிலேதம்பி இவன் வேந்தனிலேபெருமையுடன் விளங்குகின்றபெருமகனார் இருவருமேஒரு கருவில் உருவாகி – மறுபிறவிஒரு கல்லில் உருவானஎம்பெருமான் நந்தி இவர்கம்பீரத் தோற்றம் இவர்கலியுக வரதன் இவர்தன் மேனி நெய்குளிக்கஅர்ச்சகரும் அதை எடுத்துதீபத்தின் உயிரூட்டகுருதி வெள்ளம் பெருகியதேதன்னருகில் வந்து நின்றுதன்மேனி ஆழம் கண்டஅடியோனை குஷ்டமெனக் காட்டியது அளவென்றுநெய்நின்று அண்டாது ஐந்து வகை ஜீவன்கள்நெற்றியிலே தாங்கியுள்ளார்பெருமைமிகு சக்திதனைதனித்து மட்டும் இல்லாதுசிவனார்க்கும் வழிவிட்டஎம்பெருமான் நந்தி இவர்மணிமாலை அணிவித்துமலர்களினால் அலங்கரித்துகச்சையொன்று கட்டுவித்துவேந்த நகர் பவனிவரும்எம்பெருமான் நந்தி இவர்பாரெங்கும் புகழ் பரப்பிவேந்தநகர் செழித்தோங்கிஎன்றென்றும் துணையிருப்பாய் நந்தி எம்பெருமானேஎன் தெய்வம் கண்ணபிரான்விரும்புவதும் நெய்தானேஎன்றென்றும் குறைவில்லாதுஅவனுக்கதை அளித்திடுவாய் நந்தி எம்பெருமானே.
இந்தக் கோயிலின் 9வது கும்பாபிஷேகம் 07 பிப்ரவரி 2011 (தை மாதம் 24ம் தேதி) அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
nantri:vadakkuvasal
No comments:
Post a Comment