இலங்கைச் செய்திகள்

.
புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நிதி திரட்டும் நடைபயணக் குழுவுக்கு யாழ்நகரில் வரவேற்பு
Tuesday, 26 July 2011

தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறைவரை, யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்று நோய் சிகிச்சைக் கூடமொன்றை நிறுவுவதற்கு நடைப்பயணம் மூலம் நிதிதிரட்டி யாழ்ப்பாணம் வந்த குழுவினரை யாழ்ப்பாண சமூகம் பொதுவரவேற்பளித்து கௌரவிக்கவுள்ளது.

இந்நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான டில்சான், முரளிதரன், அஞ்சலோ மத்தியுஸ், மஹேல ஜயவர்தன ஆகியோர் விருந்தினராகக் கலந்து கொள்வதுடன், நடைப்பயணத்தை ஆரம்பித்து வைத்த "நாளை நமதே' இளைஞர் அமைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அமைச்சர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், லயன்ஸ்கழக பிரமுகர்கள் என பலரும் பங்கு கொள்வார்கள்.

நிதிதிரட்டும் பணியில் ஜனசக்தி இன்சூரன்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, மொபிற்றல் தொலைத்தொடர்பு நிறுவனம், சிலிங்கோ காப்புறுதி நிறுவனம், டி.எச்.எல்.என பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.


புற்றுநோய் சிகிச்சை நிலையத்தை அமைக்க 254 மில்லியன் ரூபா தேவைப்படுகின்ற நிலையில் நடைப்பயணத்தில், இதுவரை 129 மில்லியன் ரூபாவை திரட்டியிருப்பதாகவும் ஓரிரு தினங்களில் இலக்கையடைய முடியுமென நிகழ்ச்சித்திட்ட ஒருங்கமைப்பாளர் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினக்குரல்

உள்ளூராட்சி தேர்தல்கள் மூலம் தமிழ் மக்கள் விடுத்த செய்தி
Tuesday, 26 July 2011

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளூராட்சித் தேர்தல்களில் தென்னிலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றன. வாக்களிப்பு நடைபெற்ற 65 உள்ளூராட்சிசபைகளில் சுதந்திர முன்னணி 45 சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18 சபைகளையும் கைப்பற்றிய அதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணி இருசபைகளை வென்றெடுத்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினாலும் ஜனதா விமுத்தி பெரமுனை (ஜே.வி.பி.)யினாலும் ஒருசபையைத்தானும் கைப்பற்ற முடியாமற் போய்விட்டது. தென்னிலங்கையில் ஆளும் கட்சியின் பெருவெற்றி ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால் தேர்தல் முடிவுகள் எந்தவிதமான அதிர்ச்சியையும் தரவில்லை. எந்தவொரு தேர்தல் முடிவுகளிலும் அதிர்ச்சியைத் தரக்கூடிய மாறுதலை ஏற்படுத்தக்கூடிய மக்கள் செல்வாக்கை எதிரணிக் கட்சிகள் குறிப்பாக ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் அண்மைய எதிர்காலத்தில் பெறுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.

தமிழ்ப்பகுதிகளில் அதுவும் குறிப்பாக, வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களில் இத்தடவை ஆளும் சுதந்திர முன்னணி காட்டிய அதீத அக்கறை முடிவுகள் தொடர்பில் உள்நாட்டில் மாத்திரமல்ல, வெளியுலகிலும் பெரும் எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்திருந்தது. இத்தடவை முன்னைய தேர்தல்களை விடவும் அரசாங்கத்தரப்பின் முழுமையான பலத்துடன்கூடிய பிரசாரங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. அரசு இயந்திரத்தின் முழுமையான அனுசரணையுடன் மக்களுக்குப் பல்வேறு வகையான இலவசங்களையும் வழங்கிப் பிரசாரங்களை சுதந்திர முன்னணி முன்னெடுத்திருந்த போதிலும் கூட, அதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெருநிலப்பரப்புக்கு அப்பால் தீவுப்பகுதிகளில் மூன்று பிரதேச சபைகளை மாத்திரமே கைப்பற்றக்கூடியதாக இருந்தது. மார்ச் 17 ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்ட உள்ளூராட்சித் தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் 12 சபைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தடவை 18 சபைகளைத் தனதாக்கியிருக்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபைக்கான தேர்தல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த நியமனப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டதால், தமிழர்விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டிய நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டது. அதனால் அவ்விரு சபைகளிலும் கூட்டணியினால் பெறக்கூடியதாக இருந்த வெற்றிகளுக்கான காரணத்தைப் புரிந்துகொள்வதில் சிரமமேதுமில்லை.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப்பிறகு இருவருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்து விட்ட போதிலும் கூட தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதில் அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உருப்படியான அரசியல் சமிக்ஞையைக் காட்டவில்லை என்பது தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் கடுமையான விசனம் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புடைமை குறித்து சர்வதேச சமூகம் கிளப்பிவரும் சர்ச்சைகளின் விளைவாக இராஜதந்திர உலகில் பெரும் நெருக்கடியை அது எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளில் மானசீகமான அக்கறையைக் காண்பிக்காமல் வெறுமனே பழைய பாணியில் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயங்களையே கடைப்பிடித்துவரும் நிலையில் தங்களது பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கு உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலமாகக் கிடைத்த வாய்ப்பை வடபகுதி மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகளை அரசியற்கட்சிகள் அவற்றின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப வியாக்கியானம் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வடபகுதி மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டியதற்குக் காரணம் இனப்பிரச்சினைக்குக் கௌரவமான அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற அவர்களின் உறுதியான நிலைப்பாடேயாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. தமிழ் இனவாதத்தைக் கக்கும் அரசியல் போலிகளின் பொய்ப்பிரசாரங்கள் மூலம் மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் திணிக்கப்பட்டிருப்பதாக வடபகுதியில் சுதந்திர முன்னணியின் பிரசாரங்களை முன்னின்று நடத்திய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். அதேவேளை, சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டுமென்ற ஆணையையே வடபகுதி மக்கள் வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எம்மைப் பொறுத்தவரை போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இதுவரையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை புதிய வடிவில் முன்னெடுப்பதற்கான ஐக்கியப்பட்ட அணுகுமுறைகளை உகந்த முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வகுத்துச் செயற்படுவதாக நாம் கருதவில்லை. போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையும் குறிப்பாக வடக்கு,கிழக்கில் காணப்படுகின்ற இராணுவமயப்படுத்தப்பட்ட நிருவாக முறைமையுமே இதற்கு அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அரசியல் பிரதிநிதித்துவத்தைச் சிதைத்துச் சீர்குலைத்து எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் கோரிக்கைக்காகவும் வலுவான முறையில் குரலெழுப்ப முடியாதவர்களாகத் தங்களை வைத்திருப்பதற்கான பேரினவாதச் சதித் திட்டங்களைத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளத்தைப் பேணிப்பாதுகாக்கக்கூடிய கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான செயன்முறைகளை முன்னெடுக்க வல்ல அரசியல் சக்திகளை வலுப்படுத்த வேண்டுமென்ற தமிழ் மக்களின் அக்கறையே தேர்தல் முடிவுகள் மூலமாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு என்பதிலும் பார்க்க அரசாங்கத்துக்கு அதன் சமகால அணுகுமுறைகள் தொடர்பிலான தங்களது வெறுப்புணர்வை உணர்த்துவதற்காக உள்ளூராட்சித் தேர்தல்களை வடபகுதி மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதே மிகவும் பொருத்தமான மதிப்பீடாக இருக்கமுடியும். அதேவேளை, அரசாங்கத்துக்கு தங்களது செய்தியைத் தெரிவிப்பதற்கு தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பயன்படுத்தக் கூடிய அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எதுவும் தங்கள் மத்தியில் இல்லை என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இந்த உண்மையை கூட்டமைப்பின் தலைவர்கள் முறையாக ப் புரிந்து கொள்ள வேண்டும்!

நன்றி தினக்குரல்

கறுப்பு ஜூலை நினைவாக...
Saturday, 23 July 2011

இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றில் ஒரு எல்லைக் கோடாக அமைந்த கறுப்பு ஜூலை இனவன்செயல்களின் துவக்கத்துக்கு இன்றுடன் சரியாக 28 வருடங்கள் கடந்து விட்டன. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதியான வாய்ப்பாகப் பயன்படுத்திய தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதல் 28 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்திலேயே யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்றது. 13 இலங்கை இராணுவத்தினரைப் பலியெடுத்த அந்தக் கெரில்லாத் தாக்குதலையடுத்து நாடுபூராவும் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் இலங்கையில் எதுவுமே முன்னரைப் போன்று இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்திய அனர்த்தமிகு அனுபவங்களை எமக்குத் தந்தது.

அந்தக் காலகட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைகளின் கொடூரம், அதனால் விளைந்த உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் வேரூன்றிய வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் உண்மையில் கணிப்பிட முடியாதவையாகும். கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த உள்நாட்டுப் போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் அவற்றின் விளைவான அவலங்களும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றைவிட எத்தனையோ மடங்கு அதிகமானவை என்ற போதிலும் அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப் போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் வரலாற்றில் அதற்கு பிரத்தியேகமான எதிர்மறைக் குறியீடு இருக்கிறது. கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு இராணுவத் தீர்விலேயே அக்கறை காட்டிச் செயற்பட்டன.

சகல ஜனாதிபதிகளுமே உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றிப் பேசினார்களே தவிர, இராணுவத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்கு தங்களாலியன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் பங்களிப்போ இலங்கையின் அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதையே உறுதிசெய்தன. இறுதியில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்தன. போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டே தனது சகல அரசியல் வியூகங்களையும் வகுத்து சிங்கள மக்கள் மத்தியில் உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ அறுவடை செய்யக்கூடியதாக இருக்கிறது.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவு கூருவது இது மூன்றாவது தடவையாகும். இன்றைய கட்டத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது? கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் 10 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். உள்நாட்டில் தமிழர்கள் போரின் அவலங்களில் இருந்து இன்னமும் விடுபட முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு அவசியமான ஜனநாயகச் சூழ்நிலை வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு இன்னமும் திரும்பவில்லை. போரின் முடிவுக்குப் பிறகு தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதை அரசாங்கம் தீவிரப்படுத்துவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தங்களது சொந்தப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு அரசாங்க அனுசரணையுடனான குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலின் இனவிகிதாசாரம் மாற்றியமைக்கப்படுகின்ற ஆபத்தை தமிழ் மக்கள் பாரதூரமாக எதிர்கொண்டிருக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான உருப்படியான அரசியல் சமிக்ஞைகளை தமிழ் மக்களுக்கு அரசாங்கம் இதுவரை காட்டவேயில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதை நோக்கிய செயன்முறைகளில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை என்பதை சர்வதேச சமூகம் தெளிவாக உணரத் தொடங்கியிருக்கிறது. இன்று இராஜதந்திர ரீதியில் சர்வதேச அரங்கில் அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி இதன் விளைவானதேயாகும். போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புடைமை குறித்து சர்வதேச சமூகம் காட்டுகின்ற அக்கறை இலங்கைக்கு பாரியதொரு நெருக்கடியாக மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு பழைய பாணியிலான (காலத்தை இழுத்தடிக்கும்) செயன்முறைகளிலேயே நாட்டம் காட்டுகின்றது.

அதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் மக்களை விரோதிகளாகக் காண்பித்து வெறித்தனமான பிரசார இயக்கங்களைச் சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுத்து தேசிய நல்லிணக்கத்துக்கான எந்தவொரு முயற்சிக்குமே குந்தமாக அமையக் கூடிய அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயம் இல்லாத நிலையில் அவர்களுக்காக சர்வதேச சமூகம் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறது. இது எந்தளவுக்கு தங்களது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பயனுறுதியுடைய முறையில் அமையும் என்பதில் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு வேறுமார்க்கம் இன்று இல்லாத பரிதாப நிலை!

நன்றி தினக்குரல்

மர்ம முகாம்களில் 5 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகள் தடுத்துவைப்பு
27/7/2011
அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட தேசிய மூலச் சட்டத்திற்கு முரணான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரகசியமான மர்ம முகாம்களில் 5 ஆயிரம் வரையிலான தமிழ் இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களினதும் மர்ம முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்களினதும் விபரங்களை நாம் விசேட நடவடிக்கைகள் ஊடாக பாராளுமன்றில் சமர்பிக்க நேரிடும் என்றும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க கூறுகையில்,

1983 ஆம் ஆண்டில் ஜுலை மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம் ஆயுதப் போராட்டம் என்று இன முரண்பாடு தீவிரமடைந்தது. இலங்கை வரலாற்றில் கறுப்பு புள்ளியாய் பதிந்துள்ள கறுப்பு ஜுலையின் சுவடுகளை அகற்ற வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும்.

ஆனால் தற்போது முப்பதாண்டுகால யுத்தம் முடிவடைந்தும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுகின்ற போதிலும் அதனை முறையாக பயன்படுத்துவதில் நடைமுறை தலைமைத்துவம் தோல்வி கண்டுள்ளது. ஜனநாயகம் மீதும் தேசிய அரசியல் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமையவும் இல்லை.

நாடு துண்டாடுவதை தடுப்பதற்கு முயற்சித்த அதே ஈடுபாட்டுடன் இனங்களுக்கு இடையே ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும் முயற்சிக்க வேண்டும். கடந்த 10 வருடத்திற்கும் அதிகமான காலங்களாக தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் இரகசிய முகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எமது தேடல்களில் மூலம் மேற்படி சட்ட விரோதமான தடுத்து வைத்தல் இனம் காணப்பட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பாகவோ, அரசியல் கைதிகள் தொடர்பாகவோ விசாரணைகளை முன்னெடுப்பதும் இல்லை. விபரங்களை வெளியிடுவதும் இல்லை. பலரின் அழுத்தங்களையும் புறக்கணித்து நாட்டின் மூலச் சட்டத்தை மீறி தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறை வைத்துள்ளது. பயங்கரவாதம் இல்லாத போதிலும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றில் கூட விசாரணைகள் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தல் போன்ற சட்ட வழிமுறைகள் உள்ளன.

ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவலில் øவக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு எந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதே தெரியவில்லை. எனவே அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காக்காமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும். தம் வசம் குறிப்பிட்ட விபரங்கள் உள்ளது. அவற்றை விரைவில் பாராளுமன்றில் சமர்பிப்போம். தொடர்ந்தும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

நன்றி வீரகேசரி

புதூர் வங்கியில் கொள்ளையிடப்பட்ட 2 கோடி பெறுமதியான நகைகள் மீட்பு; கல்கிசையில் தமிழ்ப் பெண் கைது

மட்டக்களப்பு புதூர் அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்ட 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியானவை கல்கிசைப் பகுதியிலும் மட்டக்களப் பிலும் இரகசியப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. புதூர் அரச வங்கியொன் றில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35 லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன.இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கைதான பெண் கல்கிசையிலும், தெஹிவளையிலும் இரு வீடுகளை வாடகைக்குப் பெற்றிருந்தார். அந்த இரு வீடுகளி லும் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. இதன் பின்னர் மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி பெறுமதியான 10 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. வென்னப்புவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இந்த வங்கிக் கொள்ளையை மேற்கொண்ட குழுவின் தலைவன் எனக் கருதப்படும் பிரதீபன் என்பவரிடம் பெறப்பட்ட தகவல்களை அடுத்தே மேற்படி பெண் கைது செய்யப்பட்டார் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பெண் கைது செய்யப்படுவதற்கு முன்னர் வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் கொள்ளையில் நேரடியாக பங்கேற்றதாக கருதப்படும் பிரதீபன், கண்ணன் ஆகியோர் கைதாகியிருந்தனர். இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு இரகசியப் பொலிஸ் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நன்றி தேனீ



No comments: