மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 2


.
கணவன்-மனைவி ஊடல்
கணவன் மனைவிக்கிடையிலான ஊடலும், கூடலும் சம்பந்தமான பாடல்கள் இவ்வத்தியாயத்தில் தொகுக்கப்படடுள்ளன.

கணவன் மனைவிக்கிடையில் சிறு கருத்து வேறுபாடு. சண்டை, சச்சரவு என்று பெரிதாக எதுவுமில்லை.  ஊடல்தான்! அதனால் அன்றிரவு ஒன்றாகப் படுத்திருந்தாலும் மனைவி ஒருக்களித்துப் படுத்துக் கொள்வாள்.  காலையில் எழுந்து களனிக்குப் போனவனுக்கு வேலை முடிந்து வீடு திரும்பும்போது விரகதாபம் தலைக்கேறியிருந்தது.  மனைவியின் அணைப்புக்கு ஏங்கி அதையே நினைத்திருந்தவனுக்கு உள்ளம் கசிந்தது.  உடலும் கசிந்தது.  வீட்டுக்கு வரும்போது வழமைபோல வாசலுக்கு வந்து வரவேற்கும் மனைவி அன்று வரவேயில்லை. அதனால் மனைவியை அழைப்பதுபோலப் பாடுகிறான்.

கண்டு வம்மிப் பூநிறத்தாள்
கவரிபுள்ளி மான் குயிலாள்
அரும்புகசு பூமுலையாள்
ஆசனையில் நித்திரையோவீட்டினுள்ளேயிருந்த அவளுக்கு விளங்கிவிட்டது.  அவளது கணவனின் மனதை அவளுக்குத் தெரியாதா என்ன.?  இருந்தாலும் ஊடுதல் காமத்திற்கு இன்பம் அல்லவா?  ஆதனால் இன்னும் கோபமாக இருப்பதுபோலக் காட்டி அறைக்கதவைப் ப+ட்டிவிட்டு உள்ளே இருந்து விடுகிறாள்.  பலாத்காரமாக உள்ளே சென்று அவளை அணைக்க அவனால் முடியும்.  இருந்தாலும் ஊடலின் சுகத்தை அனுபவிப்பதில் உள்ள இன்பத்தை இழக்க அவன் விரும்பவில்லை.  ஊடலுக்குப் பின்வரும் கூடல்தான் இவ்வுலகப் பேரின்பம் அல்லவா?  அத்தோடு அவள் நேற்றிரவு சொல்லிய வார்த்தைகள் அவனது நெஞ்சில் இப்போதும் நிழலாடியது.  அவள் இப்படிச் சொல்லியிருந்தாள்.

கல்லோட கல்லணைய
கடலோட நீரணைய
உன்னோட நானணைய
என்ன குற்றம் செய்தேனோ

அவளது கோபத்தை முதலில் தணிக்கவேண்டும். அதனால்,கூடலுக்கு ஏற்ற சூழல் நிலவுவதைக் குறிப்பால் உணர்த்தி அவளைத் தன்வயப்படுத்த எண்ணுகிறான். அதனால் அறைக்கு வெளியிலிருந்து அவனது குரல் ஒலிக்கிறது.

பொடுபொடென்ற மழைத்தூற்றல்
பூங்காரமான நிலா
    கடுமிருட்டு மாலை வெள்ளி நீ,
    கதவுதிற கண்மணியே

அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அவனது எண்ணம் பலிக்கவில்லை. கதவும் திறக்கவில்லை.

இருமனம் கலந்து ஒருமித்த உறவில்தான் கிராமத்து மக்கள் இன்பம் கண்டார்கள்.  வாவென்று அழைத்தபோது வருகின்ற மனைவியுடன்; உறவுகொள்ளும் பண்பாடு அவர்களிடம் இருந்தது.  வற்புறுத்தி அழைப்பதும், வலிந்து உறவு கொள்வதும் அவர்களுக்கு வழக்கமானதல்ல. அதனால், அவன் இபப்படிப் பாடுகிறான்.

திண்ணைக்குள் படுக்கவொண்ணா
தௌ;ளுக்கடி பொறுக்கவொண்ணா
கதவுதிற கண்மணியே
களங்கமறக் கதைச்சிருப்போம்

களங்கமறக் கதைச்சிருப்போம் என்பது எவ்வளவு பொருத்தமான வார்த்தைப் பிரயோகம்! உடல் உறவுக்கு உன்னை வற்புறுத்த மாட்டேன், மனம் திறந்து கதைத்திருக்கலாம் வா என்று இதைவிடச் சிறப்பாக எப்படி அழைக்க முடியும்? ; எப்படியாவது அவளது ஊடலைப் போக்கிவிட வேண்டும் என்பதுதான் அவனது நோக்கம்.  அதனால் எப்படியெல்லாம் அவளை மகிழ்வ+ட்ட முடியுமோ அப்படியெல்லாம் முயல்கிறான்.  அதனால் சிறுபிள்ளைத்தனமாக இப்படிப் பாடுகிறான்.

முந்திரியும் பழமும்
மூணுவகை முட்டாசியும்
கற்கண்டும் தாறன் நீ
கதவுதிற கண்மணியே

அவளென்ன சிறுபிள்ளையா?  கணவன் படும் பாட்டைக் கண்டு மனதிற்குள் சிரிப்பு வந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளேயிருந்தவாறே பதில் சொல்கிறாள்.

திறக்கவொண்ணா என்கதவு
திண்ணையில் வேணுமெண்டா
இறப்பால பாய்தருவேன்
என்னவாச்சும் செய்திருங்க

கதவைத் திறக்கமாட்டேன் என்று அவள் சொல்லவில்லை.  அது மரியாதையில்லை என்பதால்!  என்கதவு திறக்க முடியாதது என்றுதான் சொல்கிறாள்.  மனக்கதவையும் சேர்த்துத்தான் அவளது மறுமொழி அமைகிறது.  அதேவேளை கணவன்வெறுந்தரையில் படுக்கக்கூடாது என்பதால் இறப்பிலிருந்து பாயொன்றை எடுத்துப் போடுகிறேன் என்கிறாள்.

அப்போது கூட அந்தப் பாயில் படுங்கள் என்று சொல்லவில்லை.  அப்படிச் சொல்லி விட்டால் வெளியிலே படுக்கச் சொல்லி விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிடுமே. குடும்பப் பெண்ணுக்கு அது அழகல்ல என்பதை அவள் அறிவாள்.  அதனால்தான் என்னவாச்சும் செய்திருங்க என்கிறாள்.  கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே என்பது அவளது எண்ணம்.  அவனோ,

கட்டிக் கறந்த நாகு
கணுவடிக்கு வந்த நாகு
தட்டிச் சொறிஞ்ச நாகு - இப்போ,
தலைக்கிளப்பிப் பார்க்குதில்லை

என்று பாடி பழைய நினைவுகளை மீட்டு அவளைப் பக்குவமாக வழிக்குக் கொண்டு வரப் பார்க்கிறான்.  உன்மனம் புண்பட நடக்க விருப்பமில்லை.  அதனால், விரகதாபம் வந்தும் வெளியிலே பட்டினி கிடக்கிறேன் என்பதை அவன் உணர்த்தும் அழகு இரசிக்கத்தக்கது.

பால் என்றால் குடித்திடுவேன்
பழமென்றாலத் தின்றிடுவேன்
நூலென்றால் நெய்திடுவேன் உன்னை
நொய்ய விளையாடுவேனோ

அத்தோடு அவன் விடவில்லை.  அவளிலும், அவளோடு கொள்ளும் உறவிலும் தனக்கு உள்ள ஆசையை ஓர் அப்பாவிபோலப் பிதற்றுகிறான்.

கத்தி எடுத்துக் கதிர்
அரியும் வேளையிலே
கள்ள எண்ணம் வந்து - என்ர,
கையறுத்துப் போட்டுதடி

பற்றை இடறிப்
பசுமாட்டில் கொண்டுழுந்து
இருட்டில் வழிநடந்தேன் - என்ர,
இளவயதுப் புத்தியால

இவ்வாறு அவன் பாடவும், உள்ளேயிருந்த அவளுக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிட்டது.  ~கிளுக்| என்று சிரித்து விட்டாள்.  ஊடல் உடைந்து விட்டது என்பதை அவன் உணர்ந்து விடுகிறான். இதுவே தருணம் என்றறிந்து, நீ எனக்கு இன்பம் தர மறுத்தால் என்னால் என்ன செய்ய முடியும் பேசாமல்ப படுக்கிறேன் என்ற பொருள்பட பெருமூச்சோடு பாடுகிறான்.

துவரம் பழமே என்ர
தொட்டிகையிற் தேன் வதையே
இச்சை வைத்த கைப்பொருளே - நீ,
இல்லையென்றால் என்னசெய்வேன்

இனியும் அவனை வாட்டுவது அவளுக்கு உடன்பாடாக இல்லை.  ஏனென்றால் வாடுவது அவன் மட்டுந்தானா, அவளுந்தானே!  எனவே கூடலுக்குத் தன் சம்மதத்தை குறிப்பாலுணர்த்திப் பாடுகின்றாள்.

அம்மியடியிலே
அருகுவளைத் தொங்கலிலே
துறப்புச் சொருகிருக்கு
துறந்துவந்தாச் சம்மதந்தான்

பாட்டைக் கேட்டதும் பாய்ந்தெழும்பிய அவன் எப்படித் திறப்பை எடுத்தான், எப்படித் திறந்தான் என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாது.  கண்ணிமைக்கும் நேரத்தில் அவளருகே சென்று விட்டான்.  அவளது கைகளைப் பற்றி காதுக்குள் மெதுவாகப் பாடுகிறான் -

உள்ளுடு கூட்டிருக்கா?
உள்ளதெல்லாம் வைச்சிருக்கா?
சாயப்பாய் போட்டிருக்கா?
வாமயிலே சாப்பிடத்தான்!

 அவளை அணைத்துக்கொண்டு அறையினுள் செல்கிறான். இருவரும் ஒன்றானார். இவ்வுலகை மறந்தார். பாட்டு வரவில்லை.  மௌனமொழியில் இலக்கியம் படைத்தார்கள்.

No comments: