திமுக அவலத்தின் உச்சம் -சின்னக்கருப்பன்


.

திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.
முதலமைச்சராக இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஒரு கும்பல் கைதட்டும் என்பதற்கு இந்த வரிகளே உதாரணம். சங்கரமடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மகன் அல்ல ஜெயேந்திரர். ஜெயேந்திரரின் மகன் அல்ல விஜயேந்திரர். எந்த சங்கரமடத்திலும் மகன் பதவி ஏற்பதில்லை. திருமணம் செய்த பின்பு வாழ்க்கை வாழ்ந்த பின்பு சன்னியாசம் வாங்கிகொண்டு ஜீயர்களாக ஆகும் ஜீயர் மடங்களிலும் மகன்கள் பதவிக்கு வருவதில்லை. ஆனால் சங்கரமடமா என்று கேட்ட திமுகவின் நிலை கேவலத்திலும் கேவலமாக அசிங்கத்திலும் அசிங்கமாக பொதுக்குழுவா பொதுகக்கூசா என்று கேட்கும் வண்ணம் அசிங்கப்பட்டு கிடக்கிறது.


இது கடுமையான வார்த்தைகள் அல்ல. ஒரு காலத்தில் திமுகவின் ஆதரவாளர்களாக இருந்தவர்களின் குமுறல் இது. காலம் காலமாக கருணாநிதியே தலைவராக இருந்ததை கூட ஒருவிதத்தில் அங்கீகரித்துகொண்டு சென்ற திமுகவினர் இன்று கருணாநிதியின் இரு மகன்களே பட்டத்து இளவரசர்களாக சண்டை போடும் காட்சியை பார்த்துகொண்டிருக்கிறார்கள். சிந்திக்கட்டும். திமுகவினரே, இன்று அண்ணா உயிரோடு இருந்தால் கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் கருணாநிதியின் மகன் அழகிரியும் கட்சியின் தலைமைப்பதவிக்கு சண்டை போடுவதையும் அவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் கருணாநிதியின் மகன்கள் என்பது மட்டுமே என்பதையும் பார்த்து என்ன சொல்வார் என்று சிந்தித்து பார்க்கட்டும்.
ஸ்டாலின் மிசாவில் அடிவாங்கினார் என்று ஆரம்பிக்கும் ரொம்ப அறிவுஜீவி பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு வார்த்தை. மிசாவில் வேறு யாருமே அடிவாங்கவே இல்லையா? அதில் இறந்த்வர்களும் உண்டே. ஏன் ஸ்டாலினுக்கு மட்டும் தனி மரியாதை? அவர் கருணாநிதியின் புத்திரன் என்பது தவிர அவருக்கு என்ன அருகதை? ஸ்டாலினா அழகிரியா என்று திமுக தொண்டர்கள் சண்டை போடும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிட்டு வெற்றி எக்களிப்பு செய்வது கருணாநிதிதான். இதுதான் ஜனநாயகமா? வெட்கம் கெட்டவர்கள்.
அழகிரிக்கும் மாறனின் புத்திரர்களுக்கும் சண்டை வந்தால் மதுரை பற்றி எரிகிறது. இதுதான் ஜனநாயக கட்சியா? யாரிடம் பேசுகிறார்கள்? தாகிருஷ்ணன் கொலைவழக்கும் நம் நாட்டின் அவல வரலாற்றின் ஒரு அங்கமாக நின்றுகொண்டிருக்கிறது.
திமுக பல தோல்விகளை சந்தித்த ஒரு கட்சி, இந்த தோல்வியும் போய் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கருணாநிதி கூறுகிறார். அது உண்மையாகவும் ஆகலாம். ஆனால், திமுக ஒரு ஜனநாயக கட்சியாக ஏற்கெனவே தோற்றுவிட்டது. திராவிட கழகமும் வீரமணியின் மகனின் சொத்தாகிவிட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மூச்சுக்கு முன்னூறுதடவை பேசுபவர்கள் தனது மகன்களுக்கு அந்த ரூல் பொருந்தாது என்கிறார்கள். எந்த கொள்கைக்கு எதிராக தன்னை நிறுத்திகொண்டனவோ அந்த திராவிட கட்சிகள் இன்று பிறப்பு வழி உரிமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. பார்ப்பனனின் மகன் பார்ப்பனன் என்ற ஒரே காரணத்துக்காக பூசாரியாக ஆகக்கூடாது என்று பேசியவர்கள், அதனையே முக்கிய கொள்கையாக முன்னே வைத்து ஆட்சியதிகாரம் அமைத்தவர்கள், இன்று மந்திரியின் மகன் மந்திரி, முதலமைச்சரின் மகன் முதலமைச்சர் என்பதை கொள்கையாக கொண்டு கோஷம் போடுகிறார்கள். கேவலம். கவனியுங்கள். நான் திராவிட முன்னேற்ற கழக தலைவரின் குடும்பத்தினர், அவரது மகன்கள் ஆகியோர் சனீஸ்வர பகவானின் கோவில்களுக்கு சென்று பிராயச்சித்தம் செய்வதை நான் விமர்சிக்கவில்லை. அது அவர்களது சொந்த விஷயம்.
மாறிவரும் நகரமயமாதலில் சாதியம் கழன்று விழுந்துகொண்டிருக்கிறது. பார்ப்பனர்களின் பிள்ளைகள் சமையல் செய்கிறார்கள், சவ அடக்கம் செய்கிறார்கள், பன்னாட்டு நிறுவனங்களில் கணினி விற்பன்னர்களாகவும் பல்கலைக்கழகங்களில் ஆய்வாளர்களாகவும் இருக்கிறார்கள். முதலியார்கள் சவர கடை நடத்துகிறார்கள். சவரத்தொழில் செய்துகொண்டிருந்தவர்களின் பிள்ளைகள் பிட்சா கடை நடத்துகிறார்கள். நாடார்கள் சாப்பாட்டுக்கடையும், பாத்திரக்கடையும் நடத்துகிறார்கள். தலித்துகளின் மகன்கள் இன்று தொழிலதிபர்களாகவும், ஐ.ஏ.எஸ் ஆபீசர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களில் கணினி விற்பற்றனர்களாகவும் இருக்கிறார்கள். உதாரணத்துக்குத்தான் இவை சொல்கிறேன். ஒரு சாதி ஒரு காலத்தில் எந்த தொழிலை கேவலமாக கருதியதோ அதே தொழிலை நவீன பின்னணியில் அதே சாதியை சேர்ந்தவர் செய்வதை இன்று பார்க்கலாம். வேள்ளமென பெருகிவரும் நகரமயமாதலின் விளைவுகள் இன்று அனைவரும் அடித்துச் செல்கின்றன. ஆனால், சுமார் 60 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனைகள் மூளையில் இறுகிப்போனவர்கள், மாறிவரும் உலகத்தை கண்டுகொள்ளாமல், போலி இனவாதம் பேசி ஏமாற்றி தனது மகன்களில் ஒருவருக்கு பட்டம் கட்டிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். இது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அமைச்சராக தனது மகனை அடுத்த மாவட்டத்தலைவராக ஆக்குவதற்கு தூண்டிவருகிறது. அவர்கள் மக்கள் அளித்த வாக்குக்களில் தூசிகளாக தூக்கி எறியப்பட்டார்கள்.
இது புரிந்துகொள்ள கடினமானது அல்ல. கருணாநிதியை தாண்டி திமுக நிற்கும் என்று நம்பிக்கை கொள்ள ஒரு முகாந்திரமும் இல்லை. அவரது கேரிஸ்மா அவரது மகன்களுக்கு இல்லை. தெரிந்தோ தெரியாமலோ கருணாநிதி பின்னால் ஒரு கூட்டம் நிற்கிறது. மாபெரும் மக்கள் திரளை அவரது மகன்களால் நிச்சயம் காப்பாற்றவோ அல்லது தக்கவைக்கவோ முடியாது.
இந்தியாவின் அறிவுஜீவிகள் கூலிக்கு மாரடிப்பவர்கள். இந்தியாவின் பட்டத்து இளவரசர் ராகுல்காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர் மற்ற “அறிவுஜீவியினரை” சந்திக்க செட்டப் செய்து தருபவர்கள். அந்த பட்டத்து இளவரசர் எவ்வளவு அறிவுஜீவிகளிடம் பேசினாலும் உளறலை நிறுத்துவதாக தெரியவில்லை. ஆலோசனை கொடுக்கும் அறிவுஜீவிகளின் லெவலே அப்படியா என்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட வம்சங்களுக்கு சொம்படிக்கும் அறிவுஜீவிகள்தான் இது போன்ற “பிறப்பொக்கா எல்லா உயிர்க்கும்” என்ற நவீன திமுக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்ன?
திமுகவினர் இரண்டு கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுக்க முயற்சி செய்யலாம். ஆனால், தமிழக வாக்களர்கள் மடையர்கள் அல்ல என்று பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். அவர்களது முடிவு இந்த பட்டம் கட்டும் முயற்சிகள் எல்லாம் வீண் என்று திமுகவினருக்கு நிரூபித்து தரும் என்று கருதுகிறேன்.

No comments: