பணப்புழக்கத்தில் ஆதிக்கப்போர்

.


2007, 2008 இல் டொலர் வீழ்ச்சி பற்றிப் பேசப்பட்டது.உலகப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்குள் இன்று ஒரு புதிய அச்சுறுத்தல் தோன்றியுள்ளது.அதுவே பணப்புழக்க ஆதிக்கப் போர்.இதன் விளைவால் 1930 களில் நிகழ்ந்த மாபெரும் வீழ்ச்சி கிரேட் டிப்ரஷனை நோக்கி உலகம் செல்வதாகத் தோன்றுகிறது.

யு.எஸ்.பெடரல் ரிசர்வ் பணப்புழக்கச் செலாவணியில் சீன ஆதிக்கத்தை எதிர்த்து க்யூஈ என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆங்கிலத்தில் க்யூர்ஈ என்றால் க்வாண்டிட்டேட்டிவ் ஈசிங் வேண்டுமென்றே டொலரை மதிப்பிழக்கச் செய்வது சீனா யுவான் மதிப்பைக் குறைத்து மலிவு விலையில் ஏற்றுமதி செய்வதுபோல் அமெரிக்காவும் தொடங்கிவிட்டது.சீனா தொடங்கி வைத்த செயலை இப்போது அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாமே

அவரவர் பணத்தை மதிப்பிழக்கச் செய்துள்ளன.பிரேசில் மட்டும் இப்படிச் செய்தால் உலகமே படுகுழியில் விழுந்து விடுமென்று எச்சரித்துள்ளதுடன் உண்மையில் இவ்வாறு அவரவர் தங்களது பணத்தை மதிப்பிழக்க வைத்துப் பெருக்கினால் மீண்டும் உலக வர்த்தகம் சீர்குலையுமென்றும் உலக வர்த்தகச் சட்டத்தை மீறும் செயலாக மாறி மீண்டும் இரு நாட்டு வர்த்தகமே தலைதூக்குமென்றும் பிரேசில் நிதியமைச்சர் கைடோ மாண்டேகா எச்சரித்துள்ளார்.

அதேநேரத்தில் எல்லோரும் கெட்டிக்காரர்களாயிருக்கும்போது பிரேசில் மட்டும் இளிச்சவாய் இல்லையென்று தொடர்கிறார்.சொல்லப்போனால் பணப்புழக்கச் செலாவணியில் ஆதிக்கப் போர் அதாவது கரன்சிவார் என்ற சொல்லாட்சியையும் மாண்டேகாவே கண்டுபிடித்து முதலில் கூறியவர்.பிரேசில் இனி தனது பணத்தை அசல் மதிப்பில் வைக்காமல் எல்லோரையும் போல் நாங்களும் பணமதிப்பைக் குறைத்து ஒரே குட்டையில் ஊறும் மட்டைகளாக்கிவிட்டோமென்றும் கூறியுள்ளார்.ஏற்றுமதியை உயர்த்தவே பணத்தின் மதிப்பை சீனா குறைத்து உலகின் பல நாடுகளில் மலிவான சீனப் பொருள்கள் குவிந்து வருவதைப் பார்க்கிறோம். 2009 இல் அமெரிக்க டொலர் வீழ்ச்சியால் டொலரின் அசல் மதிப்புக் குறைக்கப்பட்ட சூழ்நிலையில் பிரேசில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கு இலாபம் இல்லாமல் போனது.

அமெரிக்காவும் சீனாவும் நிகழ்த்தும் பணவிளையாட்டால் நாங்கள் தோற்றுவிட மாட்டோமென்று கூறிய கைடோ மாண்டேகா,அவரவர் தங்கள் நாட்டின் பணமதிப்பைக் குறைத்து ஏற்றுமதியை உயர்த்தும் போக்கு உலக இராஜதந்திரமாகிவிட்டது என்று கூறி வேதனைப்பட்டு ஒரு நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் போக்கு சரியானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரமே கடந்த ஆண்டில் பணக்குழப்பத்தால் ஆடிப்போயுள்ளது.பணப்புழக்க ஆதிக்கப்போர் என்ற சொல்லை ஊடகங்கள் அதிகமாகப் பயன்படுத்தின பொதுவாக பேசும்போது ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் பணமதிப்பைக் குறைக்கின்றன.இதனால் ஏற்றுமதி உயர்கிறது. இறக்குமதி செய்யும் நாடுகளில் பொருள் மலிவாகிறது.ஒரு நாடு ஏற்றுமதியை உயர்த்தி அதுதான் வளர்ச்சி என்று கோடிட்டுக்காட்டும்போது பணவீக்கம் குறையாமல் மென்மேலும் வீக்கமுற்று அத்தியாவசியப் பொருள் விலைகள் உள்நாட்டில் உயரும் அதைத்தான் இன்றைய இந்தியாவில் பார்க்கிறோம்.

அதிகமாக மலிவு விலையில் ஏற்றுமதி செய்யப் பணமதிப்பைக்குறைப்பதால் இறக்குமதி செய்யப்பட வேண்டிய பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும்.இறக்குமதி குறைந்தும் ஏற்றுமதி அதிகரித்தும் இருந்தால் அன்னியச் செலாவணி அதிகமாகக் கிடைக்கும்.

ஏற்றுமதிக்குரிய பொருள் உற்பத்தி அதிகமாகும்.இதே கொள்கையை சீனாவைப் பார்த்து இந்தியா கடைப்பிடிக்கும்.இந்தியாவைப் பார்த்து பாகிஸ்தான் பின்பற்றும்.அமெரிக்காவைப் பார்த்து பிரேசிலும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளும் பின்பற்றும்.

இப்படி ஒவ்வொரு நாடும் பணமதிப்பைக் குறைத்து செலாவணி ஆதிக்கத்தைச் செலுத்தும் போது அடுத்த நடவடிக்கை மலிவு ஏற்றுமதியைத் தடை செய்தல் அல்லது இறக்குமதி வரியை உயர்த்துதல் என்ற போக்கு ஏற்பட்டு மெல்ல மெல்ல 1930 களில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டு உலக வர்த்தகம் மீண்டும் பாதிப்புறலாம்.

பணமதிப்பைக்குறைப்பது என்பது நயவஞ்சக நரி வேலையாகும்.இன்று ஏற்றுமதியை முன்னிறுத்தும் சீனஅமெரிக்க நாடுகள் இப்படிப்பட்ட நரித்தந்திரத்தைக் கையாள்கின்றன.இன்றைய உலக வர்த்தகப் பொருளாதாரம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.இந்தச் சிக்கலை அவிழ்ப்பது சிரமமென்றாலும் இச்சிக்கலில் தோன்றும் மூன்று பிரச்சனைகளைக் கவனிப்போம்.முதலில் அமெரிக்கா,சீனா மீது சாட்டும் குற்றச்சாட்டுச் சீனா யுவான் பணமதிப்பைக் குறைத்துவிட்டதன் காரணமாக அமெரிக்காவில் பெரிய வர்த்தகப் பற்றாக்குறை இடைவெளிடிரேட் டெஃபிசிட்சீனாவால் ஏற்பட்டுள்ளது.ஆகவே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் யோசனையில் யு.எஸ்.காங்கிரஸ் புதிய சட்டம் போடவுள்ளது.

இதை உலக வர்த்தக அமைப்பு விதிகளுக்கு முரணானதென்று சீனா எதிர்ப்பதுடன் இவ்வாறு கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்கா விதிக்கும்பட்சத்தில் தங்களின் தொழில் முடங்குமென்று கூறும் சீனா அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை இது ஈடுசெய்து விடாதென்றகிது.ஜப்பானின் யென்,அமெரிக்க டொலரைவிட மதிப்பாயிருந்த சூழ்நிலையில் கடந்த செப்டெம்பரில் பணச்சந்தையில் 2 ட்ரில்லியன் யென் விற்கப்பட்டுப் பண மதிப்பைக் குறைத்துக்கொண்டது.அதே கொள்கையை தெற்கு வியட்நாம் செய்தபோது ஜப்பான் எதிர்ப்பைத் தெரிவித்தது.

முதல் பிரச்சினையான சீனாவின் யுவான் மதிப்பிழப்புக்குப் பதிலடி தந்த அமெரிக்காவின் க்யூஈ2 இரண்டாவது பிரச்சினை கடந்த நவம்பரில் யு.எஸ்.அரசு பெடரல் ரிசர்வ் 600 பில்லியன் டொலர் செலவழித்து அரசுக்கடன்

பத்திரங்கள் மற்றும் வேறு கடன்களை அடைத்து இதைக் காரணம் காட்டி 1.8 ட்ரில்லியன் டொலர் (1,800 பில்லியன் அதாவது 1800000000 டொலர், நோட்டடித்து டொலரின் மதிப்பைக் குறைத்தது.இதன் பெயர் க்யூஈ 2 என்று கூறப்படுகிறது.

இந்த க்யூஈ2 கொள்கையால் நீண்டகாலம் கடனின் வட்டி குறையும் அதேசமயம் வெளிநாட்டு முதலீடும் குறையும். டொலர் மதிப்பிழப்பதால் பல பக்கவிளைவுகள் உண்டு.வளரும் நாடுகளிலிருந்து வரவேண்டிய வருமான அவளவும் குறையும்.

இந்தியாவைத் தவிர வேறு பல வளரும் நாடுகள் மதிப்பிழந்த டொலர் முதலீடுகளை இப்போதெல்லாம் வரவேற்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை.இப்படி அதிகப் பணப்புழக்கத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்கிறது.இன்றைய இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்படுவதாயில்லை.

சீனாவும் அமெரிக்காவும் வரிந்து கட்டிக்கொண்டு அவரவர் பணமதிப்பைக் குறைத்து அந்நியச் செலாவணி ஆதிக்கப் போரை நிகழ்த்தி வரும் சூழ்நிலையில் மூன்றாவது பிரச்சினை வளரும் நாடுகள் இனி அந்நிய முதலீடுகளின் வரவுக்குத் தடை விதிக்கலாம்.

அந்நிய முதலீடுகளின் வரவில் ஆர்வம் காண்பிக்காமல் ஏற்றுமதி வணிகத்தைக் குறைந்து உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும். ஏனெனில் 2010 இல் அனைத்துலக நிதி நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி வளரும் நாடுகளில் புகுந்துள்ள அந்நிய மூலதனம் 825 பில்லியன் டொலர் என்றும் இது 2009ஐ விட 42 சதவீதம் உயர்வும் ஆகும்.

வளரும் நாடுகளில் வளர்ச்சிக்காக வட்டிவீதம் குறைக்கப்படுகிறது.மூலதனம் எங்கு விருத்தியாகுமோ அதிக வட்டிபெற வளரும் நாடுகளிலிருந்தும் மூலதனம் அங்கு வெளியேறும் சூழ்நிலையில் ஹாட் மணி என்ற முத்திரையில் அமெரிக்க டொலர் உள்ளே நுழையும்போது வளரும் நாடுகளின் பொருளியல் பாதுகாப்பும் வளரும் நாடுகளின் செலாவணிப் பாதுகாப்பும் பிரச்சினையாவதால் லத்தீன் அமெரிக்க நாடுகளும் கிழக்காசிய நாடுகளும் ஹாட் மணிக்கு தடை வைக்கின்றனர்.

உதாரணமாக பிரேசிலில் மைய வங்கி கடந்த ஜனவரியில் 988 பில்லியன் யு.எஸ்.டொலரை "ரிசர்வ் கரன்சி ஸ்வாப்' செய்துள்ளது. அதாவது, மதிப்பிழந்த டொலரை வாங்கித் தங்களது இருப்பு நிதியை உயர்த்திக் கொண்டது.உள்ளூர் நிதி அமைப்புகளின் இருப்பு நிதியை உயர்த்தச் செய்து "ஸ்பெகுலேட்டிவ் டிரேட்' என்று கூறப்படும்.வர்த்தகச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.இப்படிச் செய்வதன் மூலம் யு.எஸ்.டொலர் ஆதிக்கத்தை முறியடிக்கலாம்.இறக்குமதி வரியை உயர்த்தவும் திட்டமிடுகிறது.சிலி நாட்டில் தினமும் 50 மில்லியன் டொலர் வாங்கி அன்னியச் செலாவணி இருப்பை ஜி.டி.பி.யில் 17 சதவீதமென்று கணக்கிட்டு 12 பில்லியன் டொலர் அளவில் அந்நியச் செலாவணி விலையில் தலையிட்டுள்ளது.கொலம்பியா ,மெக்சிக்கோ ,பெரு போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் தம்மை யு.எஸ்.டொலர் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் யோசனைகளைச் செய்து தங்களது செலாவணியை உயர்த்தும் முயற்சியில் உலக வர்த்தக விதிகளைத் தூளாக்கி வருகின்றன. கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து ,தைவான்,தென்கொரியா போன்ற நாடுகள் சீன வழியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன.தென்னாபிரிக்கா,துருக்கி இஸ்ரேலும் தத்தம் அந்நியச் செலாவணியைக் காப்பாற்ற சீனா யு.எஸ்.நரித்தந்திரங்களுக்கு எதிர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

செலாவணியில் ஓர் ஆதிக்கப் போர் இப்படியே தொடர்ந்து சென்றால் விளைவு எப்படியிருக்கும்? உலக வர்த்தகம் அஸ்தமனமாகலாம்.ஏற்றுமதிஇறக்குமதி வர்த்தகப் பாதுகாப்பு சிரமமாகும்.உலக வர்த்தக அமைப்பு தொடங்குமுன் நிலவிய நிலையைவிட ஒரு மோசமான சூழ்நிலை உருவாகும்.ஒவ்வொரு நாடும் தத்தம் பணத்தைச் செயற்கையாக மதிப்பிழக்கச் செய்யும்போது எல்லா நாடுகளும் இறக்குமதி வரியைக் கூட்டும் இவற்றால் ஏற்பட்ட பணப்புழக்கச் செலாவணி ஆதிக்கப் போர்க் குழப்பத்தை ஈடுசெய்ய மீண்டும் ஒரு டங்கல் வந்து உலக வர்த்தகத்தைச் சீர்செய்வாரா என்பது நாலானது பிரச்சினை!

தினமணி (நன்றி தினக்குரல்)
No comments: