தரமான இலக்கியங்களை எவ்வாறு அடையாளம் காண்பது ?


.
-                                                                                                     முருகபூபதி

 ‘ வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் || என்றார் மகாத்மா காந்தி.
காந்தி சொல்லிய பல நல்ல அறிவுரைகளை, குறிப்பாக அகிம்சையை கவனிக்கத்தவறியதுபோன்றே, இந்த வாசிப்பு தொடர்பான அவரது சிந்தனையிலும் எம்மவர்கள் கருத்தூண்றவில்லை.
 மரக்கறிக்கடை, இறைச்சி, மின் கடைகள், நகை,புடவைக்கடைகள், உணவு விடுதிகள், பலசரக்குக்கடைகள், பியுட்டி பாலர்கள், சலூன்கள் இவற்றுக்கெல்லாம் வாரமோ மாதமோ தவறாமல் போய் வந்து விடுவோம்.
எமது தேவைகளையும் எப்படியோ- கையிலே பணம் இல்லாது போனாலும் கிரடிட்கார்ட், விசாகார்ட் முதலான கடன் அட்டைகளின் தயவினால் பூர்த்தி செய்துகொள்வோம்.
 ஆனால், எத்தனைபேர் புத்தகக்கடைகளுக்கு ஒழுங்காகப் போய் வருகிறோம்? எத்தனை பேர் நாள்தோறும் பத்திரிகை படிக்கின்றோம். மாதம் தவறாமல் இலக்கிய இதழ்களைப் படிக்கின்றோம்?
 கோயிலுக்குப் போகின்றோம், பிறந்தநாள், திருமண வைபவம் உட்பட பல குடும்ப ஒன்றுகூடல்களுக்கெல்லாம் தவறாமல் போய் வந்துவிடுவோம்.
 ஆனால், நூலகங்களின் பக்கம் தலைவைத்துப் படுக்கவும் தயங்குகிறோம்.
ஏன் இப்படி? எனக்கேட்டால்,  கௌரவமான  ஒரு பதில் எப்பொழுதும் இருக்கிறது.

‘நேரம் இல்லை|.
 

  உணவில் ருசி பேதம் இருப்பது போன்று கருத்திலும் பேதம் இருக்கும் என நம்புகிறேன். உணவு சமைக்கப்பட்டால் அதனைப் படையல் என அழைப்பதுபோன்று இலக்கியம் சிருஷ்டிக்கப்பட்டால் அதனைப் படைப்பு என்கின்றோம்.
 பிரபல தமிழ் இலக்கிய விமர்சகர் க.நா.சுப்பிரமணியம் (க.நா.சு) ஒரு சந்தர்ப்பத்தில் இப்படிக்கூறியிருக்கிறார்.
 ‘ இலக்கியத்தில் தேர்ச்சியுள்ளவர்கள் பழசைத்தாண்டி புதுசு பக்கம் வரமறுத்திருக்கிறார்கள். புதுசை மட்டும் அறிந்தவர்கள் பழசின்பக்கம் போக மறுத்திருக்கிறார்கள்.|| அவர் மேலும் சொல்கிறார்:- “ இது எனக்குப் பிடிக்கிறது என்று சொல்கிறபோது ‘எனக்கு| என்பதில்தான் சாதாரணமாக அழுத்தம் விழுகிறது. இந்த ‘எனக்கு| என்பவனின் பயிற்சி, தேர்ச்சி, இலக்கிய ரஸனை எல்லாவற்றையும் கொண்டு அவனுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ளலாம், ஒதுக்கலாம். ஆனால், ஏற்றுக்கொண்டாலும் ஒதுக்கினாலும் ஒரு மனிதனின் அபிப்பிராயம் என்கிற அளவில் அதற்கொரு மதிப்பு இருக்கும்.|
  2002 ஆம் ஆண்டு நாம் சிட்னியில் இரண்டாவது எழுத்தாளர் விழாவை நடத்தியபொழுது, ஒரு இளைஞர் சொன்ன கருத்து எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது.
  அவர்சொன்னார்:- “ வாசகர் மாத்திரம் தனது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லாதீர்கள், எழுத்தாளர்களும் தமது படைப்பின் தரத்தை உயர்த்திக்கொள்ளவேண்டும்.||
  இந்த எழுத்தாளர்களிடம் ஒரு வகையான பலவீனம் இருக்கிறது.
அதாவது தமது எழுத்துக்கள் தொடர்பாக வாசகர்களிடம் உயர்ந்த அபிப்பிராயம் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது. சக எழுத்தாளர்களின் படைப்புகளைப்படிக்கமாட்டார்கள், ஆனால் தமது எழுத்தைப்படித்தீர்களா? என்று கேட்கவும் தவறமாட்டார்கள்.
 இரண்டுபேர் சந்தித்துக்கொண்டால் பலதும் பத்தும் பேசுவார்கள். அரசியல் முதல் ஊர்வம்பு வரையில் அலசப்படும்.
 ஆனால், “இறுதியாக என்ன படித்தீர்கள்.?|| என்ற கேள்வியை பரஸ்பரம் கேட்பவர்கள் எம்மத்தியில் அபூர்வம்.
 சுந்தரராமசாமி வாழும் காலத்தில் கனடாவில் வசிக்கும் அ.முத்துலிங்கத்திடம் அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்புகொண்டு “சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்?|| எனக்கேட்பாராம். அதேசமயம் அவர் தமது படைப்புகள் தொடர்பாக ஒரு அபிப்பிராயமும் சொல்கிறார் இல்லையே என்ற ஆதங்கம், முத்துலிங்கத்திற்கு இருந்ததாம.;
 இன்றைக்கும் கல்கியின் பொன்னியின்செல்வனைப்படித்துக்கொண்டிருப்பவர்கள்... அதாவது திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருப்பவர்கள் எம்மத்தியில் அநேகர்.
பொன்னியின்செல்வன், பார்த்திபன் கனவு பல பதிப்புகளைக் கண்டுவிட்டபோதிலும்;, நிர்வாகம் மாறிய பின்னரும் ‘கல்கி| இதழ் மீண்டும் பார்த்திபன் கனவு தொடர் நவீனத்தை மறுபிரசுரம்செய்திருக்கிறது.
முன்பு ஓவியர் மணியம் இந்நவீனத்துக்கான ஓவியங்களை வரைந்தார். இப்பொழுது அவரது மகன் மணியம் செல்வன் வரைந்தார்.
 ஒரு சமயம் ஜெயகாந்தனிடம், “ நீங்கள் சரித்திரக்கதைகள் படிப்பதில்லையா? || எனக்கேட்டபொழுது, அவர் ‘ தனக்கு அம்புலிமாமா கதைகள் மிகவும் பிடித்தமானது | என்றார்.
 இன்றும் பல வாசகர்கள் பொன்னியின் செல்வனுக்கு அப்பால் ரமணிசந்திரனுக்கு அப்பால் நகரவில்லை என்ற உண்மையையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
 தொடர்ச்சியான வாசிப்புப்பழக்கம் இருந்தாற்தான் தரமான இலக்கியங்களையும் இனம்காணமுடியும்.
 இந்தப்பழக்கமும் ஒருவகைப்பயிற்சிதான். அதுபோன்று படைப்பு முயற்சியும் ஒருவகையில் பயிற்சிதான்.
 ஒரு நாளில் 24 மணித்தியாலங்கள்.
 இதில் உண்பது,உறங்குவது, வேலைசெய்வது. . . . இப்படியாக நேரம் ஒதுக்கிக்கொள்ளும் நாம் தினசரி வாசிப்பதற்கென்று எத்தனை நிமிடங்களை ஒதுக்கிக்கொள்கின்றோம்?
 இன்று தமிழில் மாத்திரம் ஒருவருடத்தில் சுமார் ஆயிரம் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதாவது இலங்கை, தமிழகம், தமிழர் புலம்பெயர்ந்த நாடுகள் மற்றும் மலேஷியா, சிங்கப்பூர். இங்கெல்லாம் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் யாவற்றிலும் கதைகள், கவிதைகள், விமர்சனங்கள் வெளியாகியவண்ணம் இருக்கின்ற அதேசமயம், இணைய இதழ்களினூடாகவும் படைப்புகளைப் பார்க்க, வாசிக்க முடிகிறது.

படைப்பாளி


படைப்பு

பிரசுரமாகும் களம்                                    வாசகர்


ரஸனை


கருத்து                                          விமர்சனம்


படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே உருவாகும் உறவு

 படைப்பாளி எழுதுகிறார். அது பிரசுரமாகின்றது. வாசகர் படிக்கின்றார். தமது ரஸனையை அபிப்பிராயமாக மற்றவருக்குச் சொல்லுகிறார். அல்லது விமர்சனமாக குறிப்பிட்ட படைப்பு வெளியான பத்திரிகைக்கு அனுப்புகிறார்.
பத்திரிகை ஆசிரியரோ, அந்த விமர்சனம் தரமாக இருக்கும் பட்சத்தில் பிரசுரிக்கின்றார். இங்கே பத்திரிகை கருத்துக்களமாக மாறுகின்றது.
 படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே பத்திரிகை உறவுப்பாலம் அமைக்கின்றது.
  எனவே ஒரு படைப்பாளி படைப்பை எழுதுவதுடன் பணி முடிவடையவில்லை.
  கைலாசபதி தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் இளங்கீரனின் தொடர்கதையொன்று அதில் வெளியாகிக்கொண்டிருந்தது.
அத்தொடர்கதையில் ஒரு பாத்திரம் பத்மினி. அந்தப்பாத்திரத்தை நாவலாசிரியர் கதையில் சாகடிக்கப்போகிறார் என்பதை தொடர் வாசிப்பின்மூலம் அறிந்துகொண்ட ஒரு அபிமான வாசகர் ஒரு அஞ்சலட்டையில், “ பத்மினி சாகக் கூடாது || என்று எழுதியிருந்தாராம்.
கைலாசபதி. சிறந்த விமர்சகர். பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதியபொழுது இந்த சுவாரஸ்யமான தகவலையும் பதிவு செய்தார்.
 வாசகர் தரமான இலக்கியத்தை அடையாளம் காண்பதற்கு இந்தத் தகவல் உதவும் என நம்புகின்றேன். வாசகர் இலக்கியப்படைப்புடன் ஒன்றிப்போதல், தன்னையும் படைப்பில் வரும் பாத்திரத்துடன் ஒப்புநோக்குதல். குறிப்பிட்ட ஒரு படைப்பில் தமக்குப் பிடித்தமான பாத்திரத்தின் பெயரை தமக்குப்பிறக்கும் அல்லது உறவினருக்குப்பிறக்கும் குழந்தைக்குச் சூட்டுதல்.
இப்படியெல்லாம் எங்கள் தமிழ் சமுதாயத்தில் நிகழ்ந்துதானிருக்கிறது.
      ஒரு சாதாரண வாசகர் ஒரு எழுத்தாளரை எதிர்பாராதவிதமாக சந்திக்கும்பொழுது ( அபிமான எழுத்தாளராக இருக்கும் பட்சத்தில்) உங்களுடைய இந்தக்கதை படித்தேன் நன்றாக இருந்தது என்று அல்லது மோசமாக இருந்தது என்று ஏதோ ஒரு அபிப்பிரயத்தைச்சொல்லக்கூடும். அல்லது சொல்லாமலும்விடக்கூடும். இன்னுமொரு சிக்கலும் உண்டு. “உங்கள் கதை படித்தேன். அது உங்களின் சொந்தக்கதையா?|| எனக்கேட்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்.
   கேரள இலக்கிய மேதை தகழிசிவங்கரன்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
   அவரது மகளுக்கு கல்லூரியில் பரீட்சை நடந்திருக்கிறது. வீட்டுக்கு வந்தபின்னர் தாயார் மகளிடம் கேட்டார், “ எப்படியம்மா பரீட்சை ? கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதில் எழுதினாயா?||
  மகள் சொன்னாள் :- “ இந்த ஆண்டு கேரளத்தில் யாருக்கு சாகித்திய அகடமி பரிசு கிடைத்தது? பரிசு கிடைத்த அந்த நூலைப்பற்றிய உமது கருத்து-விமர்சனம் என்ன?” இந்தக்கேள்விக்கு மாத்திரம் பதில் தெரியாதமையினால் எழுதவில்லை.||
   உடனே தாயார், “ஐய்யய்யோ இதுக்கு நீ பதில் எழுதவில்லையா? உங்க சேஷ்சனுக்குத் (அப்பாவுக்கு) தான் கிடைத்தது.” என அதிர்ச்சியோடு
சொன்னாராம்.
    ஒரு வீட்டுக்குள்ளேயே படைப்பாளிக்கும் வாசகருக்கும் உள்ள உறவு எப்படி இருந்திருக்கிறது என்று பாருங்கள்.
   கல்விப்படிப்பிற்காக படிக்கும் இலக்கியம்-- இலக்கிய ரஸனைக்காக படிக்கும் இலக்கியம் என்ற வேறுபாடு இங்கே உருவாகின்றது.
   இந்தத் தகவல்பின்னணிகளுடன் தரமான இலக்கியங்களை இனம்காணும் முயற்சியில்தான் நானும் தொடர்ந்து ஈடுபடுகின்றேன்.
   மீண்டும் உணவுக்கே வருகின்றேன். வீட்டிலே தினமும் காலை வேளை உணவாக பாணும் பருப்பும் கிடைத்தால் என்னசெய்வோம் ? என்ன சொல்லுவோம் ? “ நாக்குசெத்துப்போச்சப்பா, நூடில்ஸ், பாஸ்டா, இட்லி,தோசை,புட்டு,இடியப்பம், அப்பம் இல்லையா? ||
  தொடர்ச்சியாக  ஒருவருடைய எழுத்துக்களையே படிக்கும் வாசகர் அதில் சலிப்பு ஏற்படும் பட்சத்தில் வேறு ஒருவருடைய எழுத்தை நாடுவது இயல்பு.
இந்த அனுபவம் எல்லா வாசகர்களுக்கும் இருந்திருக்கும்
கல்கியைப்படித்து, மு.வரதராசன், புதமைப்பித்தனிடம்சென்று, ஜெயகாந்தனிடம் திரும்பி    ஜானகிராமனை தரிசித்து அசோகமித்திரனைப்பார்த்துக்கொண்டு இடைக்கிடை சுஜாதா பக்கமும் கடைக்கண்ணை வைத்தவாறு கி.ராஜநாராயணனையும்
பார்த்து சுந்தரராமசாமியையும் ஜெயமோகனையும் சாருநிவேதிதாவையும் அம்பையையும் ஒரேகாலகட்டத்தில் பார்த்துவிட்டு ராமகிருஷ்ணனிடம் வந்திருக்கிறேன்.
   இலங்கையை எடுத்துக்கொண்டால் இலங்கையர்;கோன்;;, சம்பந்தன்,வயித்திலிங்கம், இரசிகமணி கனகசெந்திநாதன், செ.கணேசலிங்கன், இளங்கீரன், எஸ்.பொ.,டொமினிக் ஜீவா, டானியல் ரகுநாதன், வ.அ. இராசரத்தினம், எஸ.;பொ, மு.தளையசிங்கம், காவலூர் இராஜதுரை, சில்லையூர் செல்வராசன், சோமகாந்தன் இப்படியாக ஒருதலைமுறையைப்படித்துவிட்டு செங்கைஆழியான், செம்பியன்செல்வன், செ.யோகநாதன், தெணியான், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம்.இராமையா, தி. ஞானசேகரன், மாத்தளைசோமு, சாந்தன், சட்டநாதன், ராஜஸ்ரீகாந்தன், திக்குவல்லை கமால், பத்மா சோமகாந்தன் , கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி என்று நான்காவது தலைமுறையையும் படித்துவிட்டு போர்க்காலஇலக்கியங்களையும் புலம்பெயர்ந்தோர் படைப்புகளையும் படித்துக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில், சேரனையும், ஜெயபாலனையும் முத்துலிங்கத்தையும் ஷோபா சக்தியையும்  கருணாகரமூர்த்தியையும், அவுஸ்திரேலியாவில் கந்தராஜாவையும், நடேசனையும், சுதாகரனையும் ஆவுரானையும் அருண்.விஜயராணியையும், பாடும்மீன் ஸ்ரீகந்தராஜாவையும்
 படிக்கின்றேன். அத்துடன் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து எழுதப்படும் படைப்புகளையும் படிக்கின்றேன்.
 மேலே குறிப்பிட்ட படைப்பாளிகளின் ஆக்கஇலக்கியங்களான கவிதை, சிறுகதை, நாவல் முதலானவற்றை தொடர்ச்சியாக வாசித்துவந்தமையினால்தான் எது தரமானது எது தரமற்றது என்ற இனம்காணல் சாத்தியமானது.
   ஒரு வாசகருக்கு படைப்பின் உள்ளடக்கம் பிடிக்கும், மற்றுமொரு வாசகருக்கோ உருவம் பிடிக்கும்.
  இலக்கியத்தில் உருவமா உள்ளடக்கமா முக்கியம் என்ற சர்ச்சைகூட ஒருகாலத்தில் நீடித்தது.
 இன்றைக்கு ‘இஸங்கள்| குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன. சிறுகதை, நாவல் வடிவங்கள் மேனாட்டினரிடமிருந்து எமக்கு வரவாகியது போன்று, இந்த ‘இஸங்களும்| வந்துள்ளன. இதனால் குழப்பங்களும் உண்டு.

   வழக்கமாக என்ன நடக்கிறது என்றால், அறிமுகமானவர்களின் படைப்புகளை மாத்திரம் வாசிப்பது என்ற பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டவர்களும் எம்மத்தியில் அநேகர்.
காரணம் புரியம்.
  தரமாக இருக்கிறதோ தரமில்லையோ முகஸ்துதிக்காகவாவது ஏதாவது சொல்ல நேருமே என்பதற்காகவும் படிப்பது.
 எழுத்து எப்படி ஒருவகையில் பயிற்சியோ, அப்படித்தான் வாசிப்பும் ஒருவகையில் பயிற்சி என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். தேர்ந்த ரஸனையுள்ள ஒரு வாசகர் (எழுத்தாளராகவும் இருக்கலாம்) மற்றுமொரு வாசகருக்கு தான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு படைப்பைப்பற்றிய தகவலைச்சொல்வது இயல்பாகவே பழக்கத்தில் வருவது நன்று.
  நான் சிறுவயதில் எனது பாட்டியிடம்தான் கதைகேட்டிருக்கிறேன். பாட்டி சிறந்த கதைசொல்லி. வளர்ந்த பிற்பாடுதான் அக்கதைகளில் யதார்த்தமும் நம்பகத்தன்மையற்ற கற்பனாவாதமும் சோடிக்கப்பட்டிருந்ததை புரிந்துகொண்டேன். ஆனால் பிற்காலத்தில் நானும் கதைகள் எழுதப்புறப்பட்டபோது பாட்டிதான் எனக்கு மனசீக குருவாக வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை புலப்பட்டது. இன்று கதை சொல்ல வேண்டிய பாட்டிமார் தொலைக்காட்சி சீரியல்களுக்குள் மூழ்கிவிட்டார்கள். தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் பாட்டிமாரை எப்போது முதியோர் விடுதிக்கு அனுப்பலாம் என்ற யோசனைதான் அதிகம். பேரர்களுக்கு கதைசொல்ல இன்று பாட்டிமார் இல்லை. ஆனால் பாட்டிமாரின்வேலையை தற்போது கம்பியூட்டர் செய்கிறது.
 இணையத்தளங்கள் பாட்டிமாரை மறக்கச்செய்துவிட்டன. அதனால் புதியதலைமுறைக்கும் முதுமை வரும்போது இலக்கியவடிவமும் மாறிவிடலாம். ஊடகமும் புதுக்கோலம்கொள்ளும்.
 எனவே இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் விடுத்து நிகழ்கால புதுமைகளை இலக்கியத்தில் தேடுவதுதான் ஆறுதல்.

                 ----0---
                 


No comments: