உலகச் செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம்
Monday, 25 July 2011

ஜப்பானில் 6.2 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதனால் அங்கு மிகமோசமான அழிவுகள் ஏற்பட்டன.எனினும் மீண்டும் அப்பகுதியிலேயே தற்போது 6.2 ரிச்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் அளவீட்டு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டோக்கியோவிலிருந்து 282 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த இப்பூகம்பமானது பியுகுஷிமாவிலிருந்து 94 கிலோ மீற்றர் தொலைவில் பசுபிக் சமுத்திரத்தில் 35.6 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,கடந்த சனிக்கிழமை குறித்த இப்பகுதியில் ஹொன்சு கடற்கரைக்கு அப்பால் 6.4 ரிச்டர் அளவிலான பிறிதொரு பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தின்போது 23,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பியுகுஷிமா அணுஉலை வெடிப்பினால் உருவான கதிரியக்கப் பரவலினால் 80,000 பேர் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்

ஒற்றுக்கேட்டல் விவகாரத்தில் கேட்டும் அவரது குடும்பமும் இலக்கு Monday, 25 July ௨௦௧௧

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவியும் கேம்பிரிட்ஜ் சீமாட்டியுமான கேட் மிடில்ரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் ஒற்றுக்கேட்டல் விவகாரத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.


கேட், அவரது குடும்பத்தினர் மற்றும் அரச குடும்பத்தின் பல உறுப்பினர்கள் இவ் விவகாரத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இவ் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட அரச குடும்பத்தினரின் வட்டம் முன்பு கருதியதை விடவும் பெரிதாக இருப்பதாக "சண்டே ரெலிகிராப்' தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளில் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி மற்றும் ஏனைய அரச குடும்ப உறுப்பினர்கள் மூவர் இவ்விவகாரத்தில் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது கேட், அவரது குடும்பத்தினர் மற்றும் ஏனைய அரச குடும்ப உறுப்பினர்களின் "வொய்ஸ் மெயில்களும்' ஒற்றுக்கேட்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

அண்மையில் அரச குடும்ப அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்த பெரலிஸின் அவர்களது "வொய்ஸ் மெயில்கள்' ஒற்றுக்கேட்கப்படுவது குறித்த முன்னெச்சரிக்கையொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

நன்றி தினக்குரல்

சேதமடைந்த ரயில் பெட்டியிலிருந்து 21 மணித்தியாலத்தின் பின் குழந்தை மீட்பு
Monday, 25 July 2011

சீனாவில் அதிவேக புல்லட் ரயில்கள் ஒன்றுடனொன்று மோதிய விபத்து இடம்பெற்று 21 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தை ஒன்று சேதமடைந்த ரயில் பெட்டி ஒன்றிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை சீனாவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 35 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேதாரங்களை அகற்றும்போது ரயில் பெட்டி ஒன்றிலிருந்து நினைவிழந்த நிலையில் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவித்த இடத்தைத் துப்புரவு செய்யும் பணிகள் பூரணமடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரைம்ஸ் ஒவ் இந்தியா (நன்றி தினக்குரல்)


மொரோக்கோவில் விமான விபத்து: 30 பேர் பலி

26/07/2011 

மொரோக்கோ நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் மலைப்பாங்கான பகுதியொன்றில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த சுமார் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இந்த விபத்தின் போது 79 பேர் விமானத்தில் இருந்ததாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் குறிப்பிடுகின்றன.

ஹேர்குயலஸ் சி- 130 என்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை

நன்றி வீரகேசரி

லிபிய கிளர்ச்சியாளர்களை சட்டரீதியான அரசாக ஏற்றது பிரித்தானியா: நிதியுதவி அளிக்கவும் திட்டம்

2 7/7/2011
லிபியாவில் கடாபி அரசுக்கெதிரான கிளர்ச்சிக் குழுவை சட்டரீதியான அரசாங்கமாக தாம் ஏற்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை விடுவிக்கவுள்ளதாகவும் அவற்றின் மூலம் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாகவும் ஹோக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியாவிலுள்ள லிபியாவின் தூதரக அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை லிபிய தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய கடாபி ஆதரவு ஊர்வலமொன்றில் லொக்கர் பீ விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி மொஹமட் அல் மெகிராய் தோன்றியமைக்கும் ஹோக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

லிபியப் புலனாய்வுத் துறை முன்னாள் அதிகாரியான 59 வயதான மெகிராய், 1988 இல் பெருமளவான அமெரிக்கர்கள் உள்ளிட்ட 270 பேரின் உயிர்களைப் பலிகொண்ட லொக்கர் பீ விமானத் தகர்ப்பு சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 2001 இலிருந்து ஸ்கொட்லாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த இவர 2009 ஆகஸ்டில் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால் வெறும் 3 மாதங்கள் வரையே உயிருடன் இருப்பார் என அப்போது நம்பப்பட்டது.

எனினும் அவர் இன்று வரை உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கந்தஹார் நகர மேயர் பலி Wednesday, 27 July 2011

bomb_blastஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கந்தஹார் நகர மேயர் குலம் ஹைடர் ஹமீடி கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக உயர்மட்ட அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெறுவது அதிகரித்துள்ள நிலையில் கந்தஹார் நகரமேயர் குலம் ஹைடர் ஹமீடி மீதான தற்கொலைத் தாக்குதலும் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேயர் ஹமீடி,கந்தஹார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதல்தாரி தலைப்பாகையினுள்ளிருந்த குண்டுகளை வெடிக்க வைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தஹார் பகுதியிலுள்ள லொய் வாலா பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த 200 வீடுகளை இடிப்பதற்கு ஹமீடி உத்தரவிட்டிருந்த நிலையில், அது தொடர்பாகவே நகர மண்டபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்ததாகவும் அதன்போதே தாக்குதல் இடம்பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இரு வாரங்களுக்கு முன்னர் ஆப்கான் ஜனாதிபதி ஹமிட்கர்சாயின் சகோதரரான அஹ்மட் வாலி கர்சாய்,கந்தஹார் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கந்தஹாரில் உள்ள அரசியல்வாதிகளில் வாலி ஹர்சாய் மற்றும் ஹமீடி ஆகியோர் அதிகளவான செல்வாக்குக் கொண்டவர்கள் எனவும் இவர்களின் மரணம் அங்கு பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வாலிகர்சாயின் மாகாணசபைத் தலைவர் பதவிக்கு ஹமீடி மாற்றப்படலாம் எனும் எண்ணப்பாடு காணப்பட்டதாக ஏ.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரச உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரி ரேயன் குரோக்கர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பி.பி.சி. (நன்றி தினக்குரல்)



No comments: