தமிழ் சினிமா

1. பிரபல நடிகை சுஜாதா சென்னையில் மரணம்!
2. முடிவுற்றது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்

1. பிரபல நடிகை சுஜாதா சென்னையில் மரணம்!


தமிழ்ச் சினிமாவின் பிரபல நடிகை சுஜாதா அவர்கள் சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள்.

1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம். கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் புதன், 06 ஏப்ரல் 2011 ம் திகதி  காலமானார்.

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நன்றி tamilccn


2. முடிவுற்றது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும் 10 படங்கள்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த கிரிக்கெட் திருவிழாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய தமிழ்ப் படங்கள் வரிசையாக வெளியாகின்றன.

அடுத்த வாரத்தில் மட்டும் 10 புதிய, பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

கடந்த பிப்ரவரியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. அன்று முதல் திரைப்படங்கள் சீந்துவாரின்றி போயின. வசூல் அடியோடு பாதிக்கப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததால் 10 புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன.

இதில் தனுஷ், ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க மாப்பிள்ளை படம் வருகிற ஏப்ரல் 8-ந் தேதி ரிலீசாகிறது. இது 1989-ல் வெளியான ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் ஆகும்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள கோ படமும், முதல்வர் கருணாநிதி வசனத்தில் பிரசாந்த் நடித்துள்ள பொன்னர்-சங்கர் படமும் ஏப்ரல் 15-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை மற்றும் கவுதம் மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள கண்டேன் போன்ற படங்கள் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகின்றன.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க எங்கேயும் காதல் படம் வருகிற 29-ந் தேதியும், சிம்பு, பரத், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள வானம் படம் மே 6-ந் தேதியும் ரிலீசாகின்றன.

180 என்ற பெயரில் சத்யம் சினிமாஸ் தயாரித்துள்ள படம் மே 13-ல் வருகிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள அவன் இவன் படம் மே 20-ம் தேதியும், விக்ரம் நடிக்க விஜய் இயக்கியுள்ள தெய்வ திருமகன் படம் மே 27-ம் தேதியும் திரைக்கு வருகிறது.

நன்றி வீரகேசரி


No comments: