கொழும்பு வழியே ஒரு பயணம்.. - வித்யாசாகர்!

.
காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரை நோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம்.

என் தாயின் மடி தொடும் உணர்வில் - விமானம் நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும் திறக்கவிருக்கும் கதவு நோக்கி நின்றுக் கொண்டேன். விமானம் அறிவித்திருந்த நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் நோக்கி தரையிறங்கியது.

விமானப் பணிப்பெண் ஒருவள் அவசரமாக என்னிடம் ஓடி வந்து, விமானம் தரையிரங்குகையில் அமர்ந்துக் கொள்ளவேண்டும் நிற்கக் கூடாது என்று கட்டளையிட 'என் தேசத்தின் சுவாசக் காற்றினை முதன் முதலாக சுவாசிக்கும் தருணத்திற்குக் காத்திருப்பவனாய், இரண்டு கைகளையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு, அருகிலிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து ஜன்னல் வழியே கொழும்பு நகரத்தின் இயற்கை அழகுகளை பார்த்து ரசித்தவாறே இருந்தேன்.


சற்று நேரத்தில் விமானம் நின்று முன்பும் பின்புமாய் கதவுகள் திறக்க, எல்லோரும் தற்காலிக படியின் வழியாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் முன்பக்க கதவின் வழியே இறங்கி மெல்ல என் ஈழத்து மண் பார்த்து கீழிறங்கினேன். இறங்க இறங்க உள்ளே ஒரு படபடப்புப் பற்றிக் கொண்டது. 'ஏனோ என் தாயின் தலை மேல் பாதம் பதிக்கப் போகிறோமோ எனும்போல் ஒரு எண்ணம் வந்தது.

என் பின்னால் இறங்கியவர்கள் நான் முன்செல்லக் கொண்ட தயக்கம் பார்த்து, அவர்களே ஒதுங்கி எனை கடந்து விட, நான் இறங்கிய படிக் கட்டின கடைசி பரப்பில் நின்று சுற்றி ஒருமுறை பார்த்தேன். தரை தொடும் முன் கீழே குனிந்து முதலில் ஒரு கைப்பிடி மண்ணெடுத்து என் ஈழத் தாயே என கண்களில் ஒற்றிக் கொண்டேன்.

உள்ளே இம்மண்ணின் விடுதலைக்கென இத்தனை வருடங்களாய் சிந்திய ரத்தம் அனைத்தும் ஒரு நொடி எனக்குள்ளும் சுட்டு குளிர்ந்தது. வெகு நாளின் ஆசை இது. எங்கோ என்றோ பிரிந்து போன உறவுகளின் ஸ்பரிசம் என்னுள்ளே பட்டுவிட, ஊரெல்லாம் சுற்றியலைந்த நான் இன்று எனக்கான ஒரு தேசத்தில் கால் பதித்து விட்டதாய் எண்ணி மகிழ்ந்தேன். அதிலும் இத்தனை வருட என் காத்திருப்பிற்கு வெகுமதியாக எனக்கு கிடைத்தது வெறும் நான்கு மணி நேர தங்கும் அவகாசம் தான், இங்கு.

நானொரு லண்டன் செல்லவிருக்கும் பயணி. இடையில் நான்கு மணிநேரம் கொழும்பு விமானத்தில் விமானம் தரையிறங்கி காத்திருக்க வேண்டுமென்பது ஸ்ரீலங்கன் விமானத்தின் நிர்வாக பயணத் திட்டம். அதன்மூலம் என் மண்ணினைத் தொட்டுக் கடந்து போக இந்த பதினேழு வருட வெளிநாட்டுப் பயணத்தில் இன்றுதான் இப்படி ஒரு வாய்ப்பமைந்தது.


விமான நிலையம் மிக சுத்தமாகவும், காண கலாச்சார பார்வை பொருந்தியதாகவும், புத்தர் இருந்துச் சென்ற வாசத்தை காற்றில் மிச்சம் வைத்துக் கொண்டும் 'அழகாக காட்சியளித்தது.

ஒரு பரவசத்தோடு இயற்கை வளம் பொருந்திய அந்த அழகிய கொழும்பு நகரத்தின் நாலாப்புறமும் சுற்றிப் பார்க்கிறேன். கண்ணாடிகளின் வழியே தென்படும் மலைப்பாங்கு பிரதேசங்களும்; மரங்களின் ஏற்ற இறக்க அமைப்புக்களோடு கண்ணைப் பறிக்கும் பசுமையின் கொள்ளை அழகும் ஒரு ரசனையான மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும் காட்சிகளையும் கண்டு அதனூடே என் மூதாதையர் வாழ்ந்த பெருமையை எல்லாம் எண்ணி நிறைவடைந்துக் கொள்கிறேன். அடுத்த ஒரு அரை மணி நேரத்திற்கு, இங்குமங்குமாய் விமான நிலையத்தினுள் சுற்றித் திரிந்துவிட்டு, எங்கேனும் அமைதியாக உட்கார எண்ணி, ஆட்கள் குறைவாக உள்ள ஓர் அமைதியான இருக்கைப் பார்த்து அமர்ந்துக் கொண்டேன்.

மனதிற்குள், வருவதற்கு முன் நடந்த அத்தனை நிகழ்வுகளும், ஒவ்வொன்றாய் நினைவில் வந்து இழையோடிக் கொண்டிருந்தன. ஏதோ பெயருக்கு வாழ்வதாய் எண்ணிக் கொள்ளுமொரு வாழ்க்கை தானே இது. போன மாதமெலாம், என்று போய் என் ஊர் உறவு மக்களோடு புழங்கிக் கிடப்பேனோ என்று ஏங்கிக் கிடந்தேன்.

பின், விடுமுறை கிடைத்து ஊருக்கு சென்று யாரை பார்த்தேன் யாரை பார்க்க வில்லை, என்ன செய்தோம், என்ன செய்யவில்லை என்று கூட யோசிக்கும் முன், ஒரு மாத விடுமுறை முடிந்து, என் கை பிடித்தழுத உறவுகள் நண்பர்கள் என எல்லோரையும் விட்டுவிட்டு இப்படி தனியே வந்தமர்ந்துக் கிடப்பதும், மீண்டும் ஊர் செல்லவிருக்கும் அந்நாளுக்காய் வருடங்களை நோக்கிக் காத்துக் கிடப்பதும் 'ச்ச..' ஓர் வாழ்வா என்று தோன்றியது..

எதையோ இழக்கிறோம், ஏதோ கிடைக்கிறதென்று; அவ்வளவுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுதும் இப்படித் தான் நாமெல்லாம், என்று உள்ளே மனம் நொந்து, கண்ணிமை நனைய, அக்கம்பக்கம் திரும்பி யாரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டேன்.

கண்கள் வெறிக்க சில மணித்துளிகள் வரை தூரத்தில் காற்றினால் ஆடிக் கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக் கொண்டிருக்கையில், மீண்டும் தனக்குள்ளே தான் நொந்துப்போக வேண்டிதானிருந்தது. அங்கே வசந்தமும் மரம் செடி கொடிகளும் இருக்கத் தான் செய்கின்றன, ஆனால் காற்று வீசுவதை கண்ணாடிக்குள்ளிருந்து பார்க்க மட்டுமே நாம் விதிக்கப் பட்டிருக்கிறோம். நம் வாழும் வாழ்க்கையும் இப்படித் தானே; எல்லாமிருந்தும் இடையே பணம் எனும் ஒரு கண்ணாடி எல்லாவற்றையும் மறைத்துக் கொண்ட வாழ்க்கை தானே நம் வாழ்க்கையும் என்று எண்ணிக் கொள்ள, மனது மீண்டும் விக்கித்தது.

இனம்பாரா வருத்தத்தில் கண்களை மூடிக் கொள்ள, எதேச்சையாய் யாரோ என்னை நோக்கி வருவதாய் உணர்ந்து எதிர்புறம் நோக்கித் திரும்பினேன், இரண்டு பேர் ஆர்மி காரர்கள் துப்பாக்கியோடு என்னை பார்த்து ஓடி வந்துக் கொண்டிருந்தனர்.
--------------------------------------------------------------------------------

தொடரும்..

No comments: