கவிதை- அகஸ்டஸ்


.

பிரார்த்தனையின் தீவிரத்தில் குவிந்து மூடிய கைகள்
இறுகிக் கொள்ள உன்
கை ரேகைகள் வழியாகத்தன்
வேர்களை வலையாகப் பின்னி
உன்னை இருட்குகைக்குள் வைத்திருக்கும்
உன் கடவுளின் தூக்கம் கலையாமல்
உன் விரல்களை மெல்ல விலக்கி
வெளியுலகம் காணாது
தொழுது அழுது கொண்டிருக்கும்
உன்னை வெளியே கொண்டுவந்து
இதுதான் உலகம் என்று
சொல்ல விரும்புகின்றேன்

இங்கு கடவுள் எதற்காகவும் நம்மை
உச்சி முகர்வதில்லை
இதன் காற்றிற்குள்
வேறு எந்த ஆவிகளுமில்லை
என்று சொல்ல நினைக்கிறேன்


ஆனால் உன்னை வெளியே
கொண்டு வருமுன்னென்
தவறுகளில் தடுக்கி
உன்னை விட்டு விடுகின்றேன்
உன் பிரார்த்தனைகள் இறுக
நீ இன்னும் ஆழமான இருளுக்குள் செல்கின்றாய்


என்றாலும் அம்மா
உன்னுடைய ஒரே வெற்றி
உன் கடவுள்
என் இருளுக்குள்
இருளாகி இறங்கி
விஷமெனப் பரவிக்கொண்டிருக்கிறார்
என் உலகில்

-அகஸ்டஸ்

No comments: