உலகச் செய்திகள்

1. ஜப்பானின் அணு உலையிலிருந்து வெளியேறும் கதிரியக்க நீரை கட்டுப்படுத்த பல மாதங்கள் எடுக்கலாம் ? அதிகாரிகள் எச்சரிக்கை

2. கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது கூட்டுப்படை விமானங்கள் தாக்குதல்

3. டீன் ஏஜ் வயதுப் பெண்ணுடன் உறவு கொண்டது தொடர்பான இத்தாலியப் பிரதமருக்கு எதிரான வழக்கு ஆரம்பம்!

4. 2012 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒபாமாவின் பிரசாரத் தொனிப்பொருள் "இது எம்முடன் ஆரம்பம்'

5. ஒபாமாவை மகனே! என விளித்து கடிதம் எழுதிய லிபிய ஜனாதிபதி

6. தேனிலவுப் பயணத்தின் போது கொல்லப்பட்ட மணப்பெண்ணின் கொலையை கணவரே திட்டமிட்டார்!

.
1. ஜப்பானின் அணு உலையிலிருந்து வெளியேறும் கதிரியக்க நீரை கட்டுப்படுத்த பல மாதங்கள் எடுக்கலாம் ? அதிகாரிகள் எச்சரிக்கை டோக்கியோ: பியுகுஷிமா அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிலிருந்து வெளியேறும் கதிரியக்கச் செறிவு மிக்க நீரினை கட்டுப்படுத்துவதற்கு பல மாதங்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணு உலைகளில் ஒன்றிலிருந்து சிறிய இடைவெளியூடாக வெளியேறும் கதிரியக்கச் செறிவுடைய நீரினை கட்டுப்படுத்துவதற்கு ஜப்பானியப் பொறியலாளர்கள் முயற்சித்து வரும் நிலையில் அதற்கு பல மாதங்கள் எடுக்கும் என அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஜப்பானில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நெருக்கடியாக பியுகுஷிமா அணு உலை வெடிப்பு உள்ளது. மேலும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான ஜப்பானின் ஏற்றுமதி எதிர்வரும் 3 மாதங்கள் வரை மிக மோசமான வீழ்ச்சியுடன் காணப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அணு உலையிலிருந்து வெளியேறும் கதிரியக்கப்பரவலின் அளவு மிக விரைவாக அதிகரித்தல் மற்றும் அணு உலை வெப்பமடைதல் என்பவற்றைத் தடுப்பதற்கு டோக்கியோ மின்சக்தி கூட்டுத்தாபனம் (ரெப்கோ) முயற்சித்து வருகிறது. அணு உலை 2 இலுள்ள வெடிப்பினை அடைப்பதற்கு சீமெந்து மற்றும் இராசாயனப் பதார்த்தங்களுடன் கூடிய மரத்தூள் மற்றும் செய்தித்தாள் கலவையை பயன்படுத்துவதற்குப் பொறியியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.மேலும் அணு உலை 2 இலிருந்தே கதிரியக்கச் செறிவுமிக்க நீர் கசிவதுடன் கடலினுள் கலந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆறு அணு உலைகளில் மூன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் ஏனையவற்றினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதற்கான காலப்பகுதி பல வருடங்களாகவோ அல்லது தசாப்தங்களாகவோ இருக்கலாம் என ஜப்பானின் அணு சக்தி பாதுகாப்பு முகவர் அமைப்பின் உபதலைவர் நிஷியமா தெரிவித்துள்ளார். மேலும் பியுகுஷிமா அணு உலை வெடிப்பானது காலநிலை மாற்றத்தில் முக்கிய பாதிப்பினை ஏற்படுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதுடன் ஜப்பானின் சக்திவலுக் கொள்கைகளை மீள் மதிப்பீடு செய்வதற்கும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு பசுமைக்குடில் வாயுனின் வெளியேற்றத்தை 25 சதவீதத்தினால் குறைப்பது தொடர்பிலான ஜப்பானின் உறுதிமொழியை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவையுள்ளதாக சூழல் அமைச்சின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஜப்பானிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை அணு உலை நெருக்கடி மற்றும் அனர்த்தங்களின் பின்னரான மனிதாபிமான நடவடிக்கை என்பன தொடர்பில் ஜப்பானியார்கள் பிரதமர் நயோடோ கான் மீது கோபமடைந்துள்ள அதேவேளை அவர் புதிய நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் ஜப்பானில் இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பம் மற்றும் கடல்கோள் அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் தொகை 11,500 இற்கும் மேலாக உயர்வடைந்துள்ளதுடன் 1,63,710 பேர் தமது இருப்பிடங்களை இழந்து நலன்புரி நிலையங்களில் வசித்துவருகின்றனர்.அத்துடன் அணு உலைகளிலிருந்து 20 கிலோ மீற்றர் வரையிலான அபாய வலயத்தை விட்டு வெளியேறிய 70,000 பேர் வரை நலன்புரிநிலையங்களில் வசிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்துஸ்தான் ரைம்ஸ்




2. கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது கூட்டுப்படை விமானங்கள் தாக்குதல்
திரிபோலி: லிபியாவின் பிரேகாஅடாபியா நகரங்களுக்கிடையில் பயணித்துக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது கூட்டுப்படை விமானமொன்று நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் மருத்துவ மாணவர்கள் மூவரும் உள்ளடங்குவதாக அடாபியா நகரிலுள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில் தாம் ஆராய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள நேட்டோ, எனினும் என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விமான எதிர்ப்புத் தாக்குதலைக் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதைத் தொடர்ந்தே இவ் விமானத் தாக்குதல் இடம்பெற்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கிளர்ச்சியாளர்களின் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை நிராகரித்துள்ள லிபிய அரசாங்கம் இது பைத்தியக்காரத்தனமான யோசனை எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் நகரங்களிலிருந்து கடாபிக்கு விசுவாசமான படைகள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அரசாங்கப் பேச்சாளர் மௌசா இப்ராஹிம் கூட்டுப்படைகளின் வான் தாக்குதல்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றமெனக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் 5 வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு உயிரிழப்புத் தொடர்பிலும் தாம் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள நேட்டோ விமானப் பறப்புத் தடை வலயத்தை அமுல்படுத்துவதில் நேட்டோ விமானங்கள் ஈடுபட்டுள்ளன.எவரேனும் எமது விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் பதில் தாக்குதல் நடத்தும் உரிமை அவற்றுக்கு உள்ளதெனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை பெங்காஸியில் போர் நிறுத்தத்தை கொண்டுவருவது குறித்து ஐ.நா.வின் விசேட தூதுவருடன் கலந்துரையாடிய பின்னர் கருத்துத் தெரிவித்த கிளர்ச்சியாளர்களின் இடைக்கால தேசிய சபை: நாம் போர் நிறுத்தத்தை எதிர்க்கவில்லை.ஆனால் மேற்குப்பகுதியிலுள்ள லிபியர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான முழுமையான சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவதுடன் முற்றுகையிட்டுள்ள நகரங்களிலிருந்து கடாபியின் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.

கடாபியும் அவரது மகன்களும் லிபியாவை விட்டு வெளியேறுவதே எமது பிரதான கோரிக்கை. இது நிறைவேற்றப்படும் வரை நாம் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். பி.பி.சி.


3. டீன் ஏஜ் வயதுப் பெண்ணுடன் உறவு கொண்டது தொடர்பான இத்தாலியப் பிரதமருக்கு எதிரான வழக்கு ஆரம்பம்!



இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரனை மிலான் நகர நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.


வயது குறைந்த ரூபி என்ற பெண்ணுடன் பணம் செலுத்தி விபசாரத்தில் ஈடுபட்டார் என்று பிரதம மந்திரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணின் உண்மையான பெயர் கரீமா அல் மக்ரூப் என்பதாகும். இவர் இரவு விடுதியொன்றில் நடனம் ஆடுபவர். இவருக்கு 17 வயதாக இருந்த போது தான் பிரதமர் இவருடன் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

13 தடவைகள் பிரதமர் இவருடன் உறவு கொண்டதாக குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர். வழக்கு விசாரணை தொடங்கிய போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவும் இல்லை.

இந்த விசாரணை நீண்டகாலம் நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விசாரணை காலப்பகுதியில் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட சாட்சி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்டவுள்ளதோடு 40 பெண்கள் உட்பட 78 பேர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

பெர்லுஸ்கோனி வழங்கிய விருந்துகளில் பெண்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதற்கான பல சான்றுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொலிவுட் நடிகர் ஜோர்ஜ் குலுனி, அவரின் காதலி, இத்தாலியின் பிரபல மொடல் அழகியும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான எலிஸபெட்டா கெனாலிஸ் ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சியமளிக்க உள்ளனர்.

இந்த வழக்கு உட்பட பிரதமருக்கு எதிராக இன்னும் மூன்று வழக்குகள் உள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரதம மந்திரிக்கு 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம்.  நன்றி  tamilcnn




4. 2012 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒபாமாவின் பிரசாரத் தொனிப்பொருள் "இது எம்முடன் ஆரம்பம்'

வாஷிங்டன்: அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று பராக் ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் இன்னமும் புதியனவாக இருக்கும் நிலையில் அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கானதும் தனது இரண்டாவது பதவிக்காலத்துக்குமான தேர்தலில் போட்டியிடுவது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை பராக் ஒபாமா விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் "எம்மால் மாற்ற முடியும்' என்ற தொனிப்பொருளுடன் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமா 2012 ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது கட்சியின் தொனிப்பொருளாக "இது எம்முடன் ஆரம்பம்'(ஐtண் ஆஞுஞ்டிணண் தீடிtட தண்) என்பதை தெரிவு செய்துள்ளார்.

யூ ரியூப் இணையத்தளம் மூலமான உரையிலேயே 2012 ஜனாதிபதித் தேர்தலுக்குரிய பிரசாரத் தொலைப்பொருளாக இது எம்முடன் ஆரம்பமாகின்றதென்பதை ஒபாமா அறிவித்துள்ளார்.

யூ ரியூப் உரையாடலை அடுத்து ஒபாமாவின் நீண்ட அறிக்கை ஒன்றும் ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்ட இமெயில் ஒன்றும் அவரால் வாசிக்கப்பட்டது. அந்த இமெயிலில் முற்றுப்பெறாத திட்டங்கள் ஒரு தொகை இருப்பதாகவும் தாம் இதுவரை நிறைவேற்றிய முன்னேற்றகரமான விடயங்களை பாதுகாக்க போராட வேண்டியுள்ளதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்பொழுது துணை ஜனாதிபதியாகவுள்ள ஜோபைடன் மீண்டும் அப்பதவிக்காக ஒபாமாவுடன் இணைந்து போட்டியிடுவாரென கூறப்படுகின்றது. ஆடம்பரமான நிகழ்வுகளுடனேயோ அல்லது விலை கூடிய தொலைக்காட்சி விளம்பரங்களுடனோ அரசியல் ஆரம்பிக்கவில்லை என்பதை நாம் நம்புவதாலேயே இதனை செய்கின்றோம் என 2012 தேர்தலுக்கு 19 மாதங்கள் உள்ள நிலையில் இதனை தெரிவித்தார்.

அத்துடன் ஆடம்பரமான பிரசாரங்கள் ஆரம்பிப்பதற்குள் நீண்டகாலம் தேவைப்படுமெனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். இந் நிதானம் மக்கள் என்னிடமும் பொறுப்புத் தந்த பணியில் நான் கவனம் செலுத்துவேன்.அதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கையானது அடுத்துவரும் ஒரு வருடகாலப் பகுதிக்கோ அல்லது அதற்கு மேலான காலப்பகுதிக்கோ முழுவேகம் அடையப்போவதில்லை. ஆனால் எமது பிரசாரத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்படுகின்றது என நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆற்றிய உரையில் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரத்திற்கு பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.2012 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை சுயாதீன தேர்தல் ஆணைக் குழுவிடம் திங்கட்கிழமை மாலை ஒபாமா சமர்ப்பிப்பாரென எதிர்பார்க்கப்பட்டது.

அதேவேளை அவரது தேர்தலுக்கான நிதி வசூலிப்பு குறித்த முதலாவது உத்தியோகபூர்வமான கூட்டம் அவரது சொந்த நகரான சிக்காக்கோவில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ரைம்ஸ் ஒவ் இந்தியா




5. ஒபாமாவை மகனே! என விளித்து கடிதம் எழுதிய லிபிய ஜனாதிபதி


 லிபிய ஜனாதிபதி கடாபி அந்நாட்டின் மீது நேட்டோ படைகள் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

ஒபாமாவுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை "மகனே" என விளித்து ஆரம்பித்துள்ளதுடன் இரண்டாவது முறையாக அமெரிக்கத் தேர்தலில் களமிறங்கவுள்ள ஒபாமாவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நேட்டோ படைகளின் தாக்குதல்கள் நியாயமற்றதெனவும் அதனை நிறுத்துமாறும் அவர் தனது மூன்று பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாட்டு மக்கள் நேட்டோவின் தாக்குதல்களால் உடல், உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவரது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில் பல இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் காணப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீரகேசரி இணையம்



6. தேனிலவுப் பயணத்தின் போது கொல்லப்பட்ட மணப்பெண்ணின் கொலையை கணவரே திட்டமிட்டார்!


கடந்த நவம்பரில் தென் ஆபிரிக்காவுக்கு தேன் நிலவு பயணம் வந்தபோது கொல்லப்பட்ட மணப்பெண் அனியின் கொலையை அவரின் கணவரே திட்டமிட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை இப்போது தென் ஆபிரிக்கப் பொலிஸார் திரட்டியுள்ளனர்.

பாதுகாப்புக் கெமராக் காட்சிகள்,கையடக்கத் தொலைபேசி ஒலிப்பதிவுகள், மற்றும் சாட்சியங்கள் உட்பட பல தடயங்கள் கிடைத்துள்ளன.

கணவர் ஷரீன் தேவானி இப்போது லண்டனில் உள்ளார் அவரை விசாரணைகளுக்காக தென் அபிரிக்காவுக்கு அனுப்புமாறு கோரப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகின்றது.

தனது கணவரோடு ஹோட்டலில் இருந்து வெளியே வந்த போது திடீரென அங்கு வாகனத்தில் வந்தவர்கள் கணவனைத் தாக்கிவிட்டு இவரை வாகனத்தில் தூக்கிச் சென்று கொலை செய்திருந்தனர்.

இது தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை தென் ஆபிரிக்கப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரிடமிருந்து இந்தக் கொலை பற்றிய பல தகவல்கள் கிடைத்துள்ளன.

அது மட்டுமன்றி சமபந்தப்பட்ட வாகனத்தில் கொலை செய்யப்பட்டவரின் கணவர் சம்பவம் நடக்க சற்று நேரத்துக்கு முன் இருந்துள்ளமைக்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி tamilcnn






No comments: