உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது இடைநடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை அணி 32.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.





துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் 4 ஓட்டங்களுடனும் தரங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தையளிக்க தொடர்ந்து களமிறங்கிய ஜயவர்தன சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதும் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

களத்தில் சங்ககார 73 ஓட்டங்களுடனும் சமரவீர 34 ஓட்டங்களுடனும் உள்ளனர். இதில் சங்ககார 7 பௌண்டரிகளுடன் உலகக் கிண்ண போட்டிகளில் தனது 6 ஆவது அரைச் சதத்தைப் பெற்றார்.

எனினும் மழைக்குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டதுடன் தொடர்ந்து போட்டியை நடாத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இங்கிலாந்து ஆறு ஒட்டங்களால் வெற்றி

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஸ்டோர்ஸ் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழக்க தொடர்ந்து பீட்டர்சன் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய தோர்ட் 52 ஓட்டங்களையும், பெல் 5 ஓட்டங்களையும், போப்ரா 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும், பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மோர்கல் 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 172 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்று 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் அமலா 42 ஓட்டங்களையும், ஸ்மித் 22 ஓட்டங்களையும், கலிஸ் 15 ஓட்டங்களையும், வில்லியர்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் போர்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவராஜ் சிங், அரைச் சதத்தைப் பெற்று வெற்றிக்கு வித்திட்டார்.

பெங்களுரில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 47.5 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சில் யுவராஜ் சிங் ஐந்து விக்கெட்டுக்களையும் சகீர் கான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.

இந்திய அணியை அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் தடுமாற செய்தனர், ஷேவாக் வந்த வேகத்திலேயே ஐந்து ஓட்டங்களுடன் வெளியேறினார். டெண்டுல்கர் 38 ஓட்டங்களுடனும் கோலி 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில், 100ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது இந்தியா. எனினும் யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் இணைந்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். யுவராஜ் சிங் 75 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பதான் 24 பந்துகளில் 30 ஓட்டங்களையும் குவித்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது, பந்துவீச்சிலும் கலக்கிய யுவராஜ் சிங் தெரிவானார்

உலகக் கிண்ண ஒரே ஆட்டத்தில் அரை சதமடித்ததோடு, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை எட்டினார் யுவராஜ் சிங்.

5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் யுவராஜ். உலகக் கிண்ணத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது இந்தியர் யுவராஜ். இதற்கு முன் கபில் தேவ், ராபின் சிங், வெங்கடேஷ் பிரசாத், அசிஷ் நெஹ்ரா ஆகியோர் உலகக் கிண்ண போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்தியா தான் விளையாடிய 18 ஆட்டங்களில் 12-ல் வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் இதுவரை இந்தியா தோல்வியடையாதமை குறிப்பிடத்தக்கது.

5 விக்கெட் வித்தியாசத்தில் கனடா வெற்றிபெற்றது

கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கனடா வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்த உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யா 50 ஓவர்களில் 198 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய கனடா 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கென்ய அணி ஓட்ட எண்ணிக்கையை தொடங்குவதற்கு முன்பே அவ்மாவின் விக்கெட்டை இழந்தது. மறுபுறத்தில் இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வோட்டர்ஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களம் புகுந்த சி. ஒபுயா அதிரடியாக விளையாடி 1 ஆறு ஓட்டம், 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். டி.ஒபுயா 2, டிக்கோலோ 12 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 57ஓட்டஙக்ள என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது கென்யா. பின்னர் இனைச் சேர்ந்த மிஸ்ராவும் அணித் தலைவர் கமான்டேவும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். கமான்டே 22 ஓட்டங்களிர் ஆட்டமிழக்க ஓடோயோ களம் புகுந்தார். மிஸ்ரா சிறப்பாக ஆடி அரைசதமடிக்க அந்த அணி 39.3 ஓவர்களில் 150 ஓட்டங்களை கடந்தது. மிஸ்ரா 51 ஓட்டங்களில் ஆட்டமிழக்க மீண்டும் சரிந்தது கென்யா. 50-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஓடோயோ 51 ஓட்டங்களில் ஆட்டமிழக்க கென்யாவின் ஆட்டம் 198 ஓட்டங்களுக்கு முடிவுக்கு வந்தது.

கனடா தரப்பில் ஒசின்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும். 199 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது கனடா. ரிஸ்வான் சீமா குணசேகரா ஆகியோர் ஆரம் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே சீமா அதிரடியாக விளையாடினார். 13 பந்துகளை சந்தித்த அவர் 1 ஆறு ஓட்டம், 2 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஒட்டினோ பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த சர்க்காரி 10 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 48 ஓட்டங்களை எட்டியபோது நிதானமாக ஆடிய குணசேகரா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு இனைச் சேர்ந்த அணித் தலைவர் பகாயும் ஹன்ஸ்ராவும் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹன்ஸ்ரா 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 2 ஆறு ஓட்டங்கள் 7 பவுண்டரிகளுடன் அவர் இந்த ஓட்டத்தை எடுத்தார். இறுதியில் அந்த அணி 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது. பகாய் 64 ஓட்டங்களுடனும், டேவிசன் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ஒசின்டே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது
நெதர்லாந்துடனான உலகக் கிண்ண போட்டியில் 05 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டிய இந்திய அணி இம்முறை உலகக் கிண்ண தொடரில் முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

உலகக் கிண்ணத்தில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறத்தில் நெதர்லாந்து 4 போட்டிகளில் ஒன்றில்கூட வெல்லாமல் கலிறுதி வாய்ப்பை பறிகொடுத்தது.

டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பி பிரிவுக்கான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி ஆரம்ப விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. எனினும் அடுத்த 8 ஓட்டங்களை பெறுவதற்குள் நெதர்லாந்து ஆரம்ப ஜோடியை இழந்தது. நெதர்லாந்து சார்பில் பின்னர் வந்த வீரர்களும் நின்றுபிடித்து ஆடத்தவறினர். இதனால் அந்த அணி 46.4 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கே சுருண்டது. கடைசி வரிசையில் வந்த அணித் தலைவர் பீட்டர் பொர்ரன் அதிகபட்சமாக 36 பந்துகளில் 3 பெளண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றார்.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சஹீர் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பியூஷ் செளலா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 வீழ்த்தினர். இதில் கடந்த 2003ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ண போட்டி ஒன்றில் களமிறங்கிய அஷிஷ் நெஹ்ரா ஒரு விக்கெட்டை பதம்பார்த்தார்.

இந்நிலையில் இலகுவாக இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திய அணி 36.3 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 191 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியீட்டியது. அதிரடியாக ஆடிய ஷெவாக், சச்சின் ஆரம்ப ஜோடி 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றது. இதில் ஷெவாக் 26 பந்துகளில் 5 பெளண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கலாக 39 ஓட்டங்களை விளாசினார். மறுபுறத்தில் சச்சின் டெண்டுல்கர் 22 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் 27 ஓட்டங்களை குவித்தார். தொடர்ந்து வந்த யுவராஜ் சிறப்பாக செயல்பட்டு 73 பந்துகளுக்கு 7 பெளண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சீலர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்ரன், புக்காரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியா சார்பில் சிறப்பாக செயல்பட்ட யுவராஜ் ஆட்ட நாயகனாக தெரிவானார்.


நியூசிலாந்து அணி வெற்றி யீட்டியது.


கனடாவுடனான உலகக் கிண்ண ‘ஏ’ பிரிவுப் போட்டியில் நியூசிலாந்து அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றி யீட்டியது.


Brendon McCullum celebrates his ton against Canadaஇதன்மூலம் நியூசிலாந்து ‘ஏ’ பிரிவில் 8 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே இந்த பிரிவில் இலங்கை அணி தனது காலிறுதியை உறுதி செய்து கொண்டுள்ளது.

மும்பை, வென்கட் அரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடியது.

இதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் பிரென்டன் மெக்கலம் அதிரடியாக செல்பட்டு தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

109 பந்துகளுக்கு முகம்கொடுத்த மெக்கலம் 12 பெளண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கலாக 101 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணித் தலைவர் டானியல் விட்டோரி விளையாடவில்லை. அவருக்குப் பதில் அணித்தலைவராகச் செயற்பட்ட ரொஸ் டெய்லர் மீண்டும் ஒரு முறை அபாரமாக செயற்பட்டு 44 பந்துகளில் 6 பெளண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கலாக 74 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து தொடரில் அதிகபட்சமாக 12 சிக்ஸர்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

கனடா சார்பில் எச். பைட்வான் 84 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய கனடாவினால் 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 261 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதிக பட்சமாக பகாய் 84 ஓட்டங்களைப் பெற்றதோடு ஹன்ஸ்ரா ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் ஓரம் 3 விக்கெட்டுகளையும் மில்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

அதிரடி சதம் பெற்ற மெக்கலம் ஆட்ட நாயனாகத் தெரிவானார்.


அவுஸ்திரேலியா 60 ஓட்டங்களால் வெற்றி

உலகக் கிண்ணப் போட்டியின் குழு ஏ பிரிவில் நேற்று பெங்களூரில் அவுஸ்திரேலியா கென்ய அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 60 ஓட்டங்களால் போராடி வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலிய அணி  போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 324 ஓட்டங்களைக் குவித்தது. அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வொட்சன், ஹடின் ஆகியோர் களமிறங்கினர்.

இரண்டு பேரும் கென்ய அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து ஓட்டங்கள் பெற்றுக் கொண்டிருந்த போது வொட்சன் 21 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஆட்டமிழந்து சென்றார். பின்னர் ஹடினுடன் சோடி சேர்ந்த அணித்தலைவர் பொன்டிங் இருவரும் சிறப்பாக ஆடி அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.

அப்போது நன்றாக அடித்து ஆடிக்கொண்டிருந்த ஹடின் 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் 79 பந்துகளை எதிர்கொண்டு 9 பெளண்டரி, 1 சிக்சர் அடித்திருந்தார்.

அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 127 ஆகும். பின்னர் பொன்டிங்குடன் ஜோடி சேர்ந்த கிளார்க் அடித்தாட அடித்தளமிடுகையில் பொண்டிங் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

கிளார்க்குடன் ஜோடி சேர்ந்த வைட் இருவரும் ஆஸி அணிக்கு சரியான ஓட்ட வேகத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வைட் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

பின்னர் காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்படாமல் இருந்த மைக்கல் ஹஸி தனது முழுத் திறமையையும் காட்டி இப்போட்டியில் 54 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.இதேவேளை மறுமுனையில் நின்ற மைக்கல் கிளார்க் தனது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் 80 பந்துகளை எதிர்கொண்டு 7 பெண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கலாக 93 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார். கிளார்க் சதம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் பெற முடியாமல் ஆட்டமிழந்து சென்றார். அவுஸ்திரேலிய அணியின் ஸ்மித், மிச்சல் ஜோன்சன் முறையே 17, 12 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை ஓடியம்போ 3 விக்கட்டையும், கமாண்டே 2 விக்கட்டையும் ஒபுயா ஒரு விக்கெட்டையும் பதம் பாரத்தனர்.

கென்ய அணி கடின இலக்கான 325 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட விரர்களாக ஒயுமா, ஒபண்டா களமிறங்கினர். ஒயுமா 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஒபண்டா 14 ஓட்டங்களுக்கு ஆட்மிழந்தார். டி. ஓ ஒபுயா 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவ்வணியின் சி. ஓ. ஒபுயா ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களையும், மிஷ்ரா 72 ஓட்டங்களையும் பெற்று அணியை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தாலும் அவ்வணி  போட்டியில் போராடி தோற்றுள்ளது. கென்ய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது. கென்ய அணி 60 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. பந்து வீச்சில் டைட் 2, லீ 1 விக்கெட்டையும் பதம் பார்த்தனர். ஆட்ட நாயகனாக ஒபுயா தெரிவானார்.

















No comments: