.
லிபிய உள்நாட்டுப் போரும் மேற்குலகின் வியூகங்களும்
லிபிய உள்நாட்டுப் போரும் மேற்குலகின் வியூகங்களும்
வட ஆபிரிக்காவில் டியூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் கிளர்ச்சிகள் கண்ட முடிவமைதிக்கு முற்றிலும் வேறுப்டடதாகவே லிபியாவின் கிளர்ச்சி அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. டியூனீசியாவில் இருந்து இரவோடிரவாக ஜனாதிபதி பென் அலி குடும்பத்தினர் சகிதம் விமானத்தில் ஏறித் தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியைத் துறந்து தலைநகர் கெய்ரோவில் இருந்து வெளியேறி வேறு ஒரு நகரத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் உண்மையில் எகிப்தில் இல்லையென்றும் வேறு நாட்டுக்கு சிகிச்சைக்காகச் சென்று விட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகியிருந்தன. லிபியாவில் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அதிகாரத்தில் இருந்துவரும் கேணல் மும்மர் கடாபிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்த வேகத்தை அவதானித்த போது அவரும் சில தினங்களில் நாட்டைவிட்டுத் தப்பியோடி விடுவாரென்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனது அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்கு எதிராகத் தனது ஆதரவாளர்களைத் திரட்டி கடாபி எதிர்த்தாக்குதல்களை மூர்க்கத்தனமாக மேற்கொள்ள ஆரம்பித்ததையடுத்து முழு அளவிலான உள்நாட்டுப் போர் மூண்டு பல நாட்களாக நீடித்துக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்திற்குள் கணிசமான பிரிவினர் திரும்பத் தொடங்கியபோது கடாபியினால் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதென்பது சாத்தியமில்லை என்றே கருதப்பட்டது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக விமானப்படையையும் டாங்கிகள் போன்ற கனரக ஆயுதங்களையும் கூலிப்படையினரையும் பயன்படுத்தி கடாபி மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகக் கடந்த சில தினங்களாக கிளர்ச்சிக் காரர்களினால் பெரும் முன்னேற்றங்களைக் காண முடியாமல் இருக்கிறது. கிளர்ச்சிக்காரர்களும் கடாபி ஆதரவுப் படைகளும் சக்திகளும் மாறிமாறி நகரங்களைக் கைப்பற்றுவதும் பின்னர் கடுமையான மோதல்களையடுத்து நகரங்களை இழப்பதுமாக ஒரு இழுபறி நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடாபியின் நெருங்கிய நண்பரான வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் கடாபிக்கும் இடையே சமரச முயற்சியை மேற்கொள்ள முன்வந்தாரெனினும் கிளர்ச்சியாளர்கள் கடாபி அதிகாரத்தைத் துறந்து நாட்டில் இருந்து வெளியேறுவதை மாத்திரமே தாங்கள் வேண்டி நிற்பதாகத் திட்டவட்டமாக அறிவித்ததனால், அந்த முயற்சி பயனற்றுப் போய்விட்டது. நாட்டைவிட்டு வெளியேறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு கடாபி விடுத்ததாகக் கூறப்படும் அழைப்பையும் கூட கிளர்ச்சியாளர்கள் நேற்றைய தினம் நிராகரித்துவிட்டதாகவும் தாங்கள் கைப்பற்றிய நகரங்களைத் தொடர்ந்தும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்கள் போராடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
எகிப்தில் இடம்பெற்ற கிளர்ச்சியின் திசைமார்க்கத்தைத் தீர்மானித்ததில் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகளினாலும் செலுத்தக் கூடியதாக இருந்த செல்வாக்கை லிபியாவில் காண முடியவில்லை. முபாரக்கைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதற்கு சூழ்ச்சித்தனமாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காமல் போனதன் பின்னரே அவரைக் கைவிடுவதற்கு மேற்குலகம் தீர்மானித்தது. ஆனால், கடாபியின் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவரைப் பழிவாங்குவதற்கு தங்களுக்குக் கிடைத்த அரியவாய்ப்பாகவே மேற்குலகம் மக்கள் கிளர்ச்சியை நோக்குகிறது. கிளர்ச்சி செய்யும் சக்திகளுக்கு அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் உதவிவருகின்றன என்பது அம்பலமாகியிருக்கிறது. அத்துடன் எந்த நேரத்திலும் லிபியாவில் இராணுவத் தலையீட்டைச் செய்வதற்குத் தயாரான நிலையில் அமெரிக்க படைகள் மத்திய தரைக் கடலில் குவிக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச சமூகத்துடன் இணைந்தே லிபியா விவகாரத்தில் அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கும் என்று கூறியிருக்கும் ஜனாதிபதி பராக் ஒபாமா கேணல் கடாபி லிபியாவை ஆட்சிசெய்வதற்கான நியாயபூர்வத் தன்மையை இழந்து விட்டதால் அவர் வெளியேற வேண்டுமென்றும் பிரகடனம் செய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
மேற்குலக ஊடகங்கள் லிபியாவில் சர்வதேசத் தலையீடு என்ற பெயரில் அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் இராணுவ ரீதியான தலையீட்டுக்கு வசதி செய்யும் நோக்குடனேயே உலக அபிப்பிராயத்தை உருவகித்துக் கொண்டிருக்கின்றன என்பதை இச்சந்தர்ப்பத்தில் அவதானிக்கத் தவறக்கூடாது. லிபியாவின் ஆகாயப் பரப்பில் விமானங்கள் பறப்பதற்குத் தடைவிதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையூடாக தீர்மானமொன்றைக் கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் ஆலோசித்து வருகின்றன. ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு முன்பாக அதன் ஆகாயப் பிராந்தியத்தில் இத்தகைய விமானப் பறப்புத்தடை வலயமொன்றை அமெரிக்கா பிரகடனம் செய்ததை உலகம் மறந்துவிடவில்லை. கடாபியின் அரசியல் வாழ்வில் அவரிடம் காணப்படக் கூடியதாக இருந்த அமெரிக்க விரோத, மேற்குல விரோத நிலைப்பாடுகளில் அடையாளம் காணப்பட்ட ஆரோக்கியமான அம்சங்கள் மூன்றாம் உலக நாடுகளின் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், ஏனைய அரபுலக எதேச்சாதிகார ஆட்சியாளர்களைப் போன்றே அவரும் ஊழல் தனமான ஒரு சர்வாதிகாரியாகவும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதில் நாட்டம் கொண்டவராகவும் மாறியிருக்கிறார் என்பதிலும் சந்தேகமில்லை. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கோரி லிபிய மக்கள் ஆரம்பித்த கிளர்ச்சி தற்போது வல்லாதிக்க மேற்குலக சக்திகளினால் பயன்படுத்தப்படுகின்ற ஆபத்தான சிக்கல் நிலைக்குள் மாட்டுப்பட்டிருக்கிறது. மக்கள் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு கடாபி கையாளும் மூர்க்கத்தனமான அணுகுமுறையின் விளைவாக தீவிரமடைந்திருக்கும் உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி அமெரிக்காவும் மேற்குலக சக்திகளும் லிபியாவில் இராணுவத் தலையீட்டைச் செய்யுமேயானால், அரபுலகில் வியாபகமடைந்து கொண்டிருக்கும் ஜனநாயக ஆதரவு அரசியல் அலை பெரும் பின்னடைவைச் சந்திக்கக்கூடிய ஆரோக்கியமற்ற சூழ்நிலை தோன்றும். எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கில் அராஜக சக்திகளின் கையோங்கக் கூடியதாக ஜனநாயக ஆதரவுச் சக்திகள் பலமிழக்கச் செய்யப்படுமேயானால் அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்குமே இறுதியில் வாய்ப்பாகிப் போய்விடும்.
நன்றி தினக்குரல்
No comments:
Post a Comment