.
உண்மை அன்பு எது என்பதையும் உயர்ந்த தியாகம் என்பது என்னவென்பதையும் பரிசுத்த வேதாகமத்தின் ஏசாயா நூல் மத்தேயு நற்செய்திகளில் காண முடியும்.
அன்பு, தியாகம் போன்றவை ஒவ்வொரு மனித வாழ்விலும் இருக்க வேண்டியவை. அன்பைப் பகிர்ந்து வாழ்வதே மனித வாழ்வின் முக்கிய செயற்பாடு. அன்பு காட்ட முடியாதவர்களே மனித உருவில் நடமாடும் மிருகங்களாக செயற்படுகின்றனர்.
ஒருவருக்கொருவர் அன்பு செய்ய வேண்டும் என்பதையே இயேசுகிறிஸ்து ஒருவன் தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்.
அன்பு இல்லாமல் நாம் நம் உயிரையே பிறருக்காகக் கொடுத்தாலும் அதில் பயனில்லை என்பதை பரிசுத்த வேதாகமம் பறைசாற்றுகிறது.
தவக்காலத்தில் கிறிஸ்தவத்தின் உயர்ந்த மாண்புகளை எமது அன்றாட செயற்பாடுகளில் பிறருக்கு வெளிப்படுத்த நாம் பின்னிற்பதில்லை. அன்பு செய்தல் தியாக செய்தல் என்பன இக்காலத்திற்கு மிகப் பொருத்தமான செயல்களாகின்றன.
அண்மையில் மொனராகலை பகுதியிலுள்ள ஒரு சகோதர இன ஆசிரியரைக் கண்டு அவருடன் சில நிமிடங்கள் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல விடயங்களை நாம் பகிர்ந்து கொண்டாலும் அவர் கூறிய ஒரு விடயம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நாம் கற்பிக்கும் பாடசாலையில் வழமையாக ஒழுங்காகப் பாடசாலைக்கு வருகின்ற நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன் ஒருவன் ஒரு வாரமாக பாடசாலைக்கு வரவில்லை. சிலவேளை அவருக்கு சுகயீனமா அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளா என அவர் தேடமுற்பட்ட போதும் அதற்கான சரியான தகவல்கள் அவருக்குக் கிட்டவில்லை.
ஒரு ஆசிரியராக மட்டுமின்றி மனிதாபிமானமுள்ள ஒரு சிறந்த மனிதனான அந்த ஆசிரியர் தம்முடன் இன்னும் சில மாணவர்களை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மாணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த வீடு பூட்டிக்கிடந்துள்ளது. அவர் அக்கம் பக்கம் விசாரித்ததில் அவர்கள் சேனைக்குச் சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் அத்துடன் நின்றுவிடாமல் மற்றுமொருநாளில் அவர்களின் சேனைக்குச் சென்றுள்ளார். எந்தவித அடிப்படை வசதியுமில்லாது அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கையை நேரில் கண்டு அவர் மனம் கலங்கியுள்ளார்.
ஏன் பாடசாலைக்கு வரவில்லை என அவர் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் வினவிய போது ‘தமது குடும்ப கஷ்டத்தையும், நகர்ப்புறத்தில் இருந்து தமக்கு தாக்குப் பிடிக்கவில்லை என்பதால் சேனைக்கு வந்து விட்டால் கூலி வேலையாவது செய்து பிழைக்கலாம் என்ற நோக்கில் தமது பெற்றோர் அத்தகைய தீர்மானத்தை எடுத்ததாகவும் அச்சிறுவன் கூறியுள்ளான்.
மிகவும் சொற்ப பணத்திலேயே அவர்கள் அன்றாட வாழ்க்கையை கழித்ததாகவும் அவர்களின் கஷ்டமான நிலைமையையும் அந்த ஆசிரியர் விளங்கினார். கேட்பதற்கே மிகவும் மனக்கஷ்டமாக இருந்தது. இது போன்று பல சிறுவர்கள் வறுமை காரணமாக பாடசாலைக்குச் செல்லாமல் உள்ளனர். இவர்களது எதிர்கால வாழ்க்கையை குடும்பக் கஷ்டமே தீர்மானிக்கின்றது.
நாம் வாழும் சுற்றுச்சூழலிலும் இதுபோன்ற அன்றாட ஜீவனத்துக்கே கஷ்டப்படும் குடும்பங்கள், கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள் பலர் இருக்கலாம். இத் தவக்காலத்தில் நாம் இத்தகையோரை சந்திப்போம். அவர்களுக்கு உதவுவோம். தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.
எல். செல்வா.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment