.
பின்பு 2ஆம் இராஜேந்திரன் காலத்தில் அவனது மூத்த புதல்வனும் பெரு வீரனுமாகிய இராஜேந்திர சோழன் இலங்கேஸ்வரனாக முடிசூடிக் கொண்டான். இலங்கேஸ்வரன் உத்தம சோழன் என்னும் சிறப்புப் பெயர் கொண்டு வழங்கப்பட்டான்.
அவனது அதிகாரிகளில் ஒருவனாகிய பல்லவராயன் என்னும் மூவேந்தன் வேளான் அநுராதபுரத்திலே புத்தமித்திரனின் பெயரால் சைத்தியமும் பள்ளிகளும் எழுப்பி, போதிசிறி ரமணவர் எனும் சங்கநாயகருக்கு வனப்புடைய குடையொன்றினையும் கவிபீலிச் சயனத்தையும் வழங்கினான் என்று கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ள சாசனம் குறிப்பிடுகின்றது.
திருகோணமலையில் அமைந்த ராஜராஜ பெரும் பள்ளி எனும் பௌத்த விகாரையை அங்குள்ள பௌத்தர்கள் புனர்நிர்மாணம் செய்தார்கள். புதிதாக அமைக்கப்பட்ட கோயில் திராவிடக் கலைப் பாணியில் அமைந்தது. அது ஒரு படிமாகரமாக, வழிப்பாட்டுக்குரிய கோயிலாக அமைந்தது. அதன் வளாகத்திலே பரிவார தேவர் கோயில்களைப் போன்ற சிறு கோயில்களும் இருந்தன.
அதன் சுற்றாடல்களில் 16 சாசனங்கள் கிடைத்தன. பெரும்பாலானவை முதலாம் இராஜேந்திரன் காலத்தவை, இரு சாசனங்கள் 12 ஆம் 13ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. அவை சில சோழ பிரதானிகளும் வேறு சிலரும் வழங்கிய நன்கொடைகளை குறிப்பிடுகின்றன.
தமிழகத்தில் போன்று இலங்கையிலும் பாடல்பெற்ற தலங்களிலே சோழராட்சியில் புதிதாகக் கோயில்கள் அமைக்கப்பட்டன. மாதோட்டத்திற் பழைய கோயில்கள் இருந்த இடத்தில் இராஜராஜேஸ்வரன் என்ற பெயராற் புதிய கோயில் ஒன்றைத் தாழிகுமரன் எனும் பிரதானி அமைத்தான். அவன் மாதோட்டப் பகுதியில் நிருவாக அதிகாரம் பெற்றிருந்தான்.
அவனைச் சோழமண்டலத்துச் சத்திரிய சிகாமணி வடநாட்டு வேளார் நாட்டு சிறுகூற்ற நல்லூர் கிழவன் என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பொலன்னறுவை, பதவியா, யாழ்ப்பாணம், அநுராதபுரம் முதலிய இடங்களில் இக்காலத்தில் சோழரினால் பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் கட்டப்பட்டன. அவை பெரும்பாலும் சோழர் கலைப் பாணியில் அமைந்தவை. மேலும், இக்காலத்தில் உலோக வார்ப்புக் கலையும் இலங்கையில் வளர்ச்சி பெற்றது.
அது இந்து சமயம் தொடர்பானது. அது சோழர்கலைப் பாணியில் ஒரு கிளை மரபாகும். சோழரின் நேரடியான ஆட்சி பெரும்பாலும் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் அமைந்திருந்தது. அவற்றுக்கப்பால் அமைந்த பெரும்பாலான பகுதிகளில் நானாதேசி வணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அங்கு அவர்கள் தங்களது வியாபார தளங்களையும் வீரதளங்களையும் அமைத்து கொள்ள முடிந்தது.
இலங்கையை கைப்பற்றுவதற்கு நானா தேசிகளின் படைகள் சோழருக்கு உதவி புரிந்தன என்றும், பதவியா, பொலன்னறுவை முதலிய நகரங்களை அவர்களே கைப்பற்றினார்கள் என்று சொல்வதற்கும் இப்பொழுது சாசனங்களில் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
இலங்கையிலும் குறிப்பாக அங்கு வாழ்ந்த தமிழர்களிடையும் சோழர் ஆட்சி பெரும் செல்வாக்கினை ஏற்படுத்தியது. சோழர் காலத்தில் உருவாகிய சமய, பண்பாட்டு மரபுகள் இலங்கையில் பரவின. மொழி வழக்கிலும் எழுத்து முறையிலும் சோழரின் செல்வாக்கு மிகுந்த அளவில் காணப்படுகின்றது. சைவ சமயத்திலே சோழமண்டலம் முதலான பிராந்தியங்களில் ஏற்பட்ட வளர்ச்சிகள் இலங்கையிலும் பரவி வழமையாகின. அவர்கள் இராசதானியாக அமைத்த பொலன்னறுவை, அவர்களின் ஆட்சி முடிந்த பின்பும் தொடர்ந்தும் இராதானியாக நிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கலிங்க மாகன்
1215ஆம் ஆண்டு படையெடுத்து வந்த மாகன் பொலன்னறுவையில் ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டியனைதோற்கடித்துவிட்டு, அங்கிருந்து நெடுங்காலம் ஆட்சி அதிகாரம் செலுத்தினான். மானாபரணன் முதலான படைத் தலைவர்கள் மாகனை அரசனாக அபிஷேகம் செய்தார்கள் என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மாகன் நெடுங்காலம், 40 வருடங்கள் ஆட்சி புரிந்தான்.
அவன், வடகிழக்கில் முன்னர் இருந்த இராச்சியத்தையும் கைப்பற்றி விட்டான். திருக்கோணமலை, கொட்டியாரம், ஊர்காவற்துறை, மன்னார், மாதோட்டம், பதவிய, குருந்தனூர் (முல்லைத்தீவு மாவட்டம்) முதலான இடங்களிலே படைநிலைகளை அமைத்தான் என்று சொல்லப்படுகிறது. அவன் விஜயபாகு என்ற பெயரினை கொண்டிருந்தான். 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நிகாய சங்கிரகய என்ற நூல் குறிப்பிடுகின்றது. அவன் வழங்கிய சாசனங்களோ நாணயங்களோ இதுவரை கிடைக்கவில்லை.
ஆனாலும் அவன் காலத்தவை என்று கொள்ளத்தக்க மூன்று தமிழ்க் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றில் இரண்டு பொலன்னறுவையில் ரங்கொத் விகாரைக்குச் சமீபமாகவுள்ளன. அவற்றில் ஒன்று இலங்கையின் சில பகுதிகளை கைப்பற்றிய மலைமண்டல நாயக்கனான வேளைக்காரன் சேதுராஜயனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
அத்துடன் சாசனம் அவனை சேபாகு தேவன் வேளைக்காறன் என்று வர்ணிக்கின்றது. மகாவம்சமானது மாகனின் துணை அரசனாகிய ஜயபாகு பற்றிக் குறிப்பிடும்போது கலிங்கமாகன், ஜயபாகு எனும் தமிழ் அரசர் இருவரும் நெடுங்காலம் ராஜரட்டையில் ஆட்சி புரிந்தார்கள் எனக் கூறுகின்றது.
இச்சாசனம் குறிப்பிடும் ஜயபாகு அரசனை மாகனுடைய துணை அரசன் என்று கொள்ள முடிகிறது. பொலன்னறுவைச் சாசனத்தில் உள்ள வரிவடிவங்கள் 13ஆம் நூற்றாண்டுக்குரியதென்பதால் இவ்வாறு கொள்ள முடிகின்றது.
மலைமண்டல நாயக்கனாகிய சேதராயன் திருக்கோணமலைப் பிராந்தியத்தின் அதிபனாக இருந்தான் என்று கொள்ள முடிகின்றது. திருக்கோணமலை வன்னியனாரை மலையில் வன்னியனார் என்று கங்குவேலியில் உள்ள சாசனம் குறிப்பிடுகின்றமை இங்கு கவனத்தில் கொள்ளப்பப்படவேண்டியது.
பொலன்னறுவையில் உள்ள இரண்டாவது சாசனம் குவலாலபுர பரமேஸ்சிரன், கங்காகுலோத்தமன், காவேரி வல்லவன் என்ற பட்டங்களைப் பெற்ற நந்திரிநாதன் என்னும் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அவன்அதிகாரத்தின் கீழ் மண்டலநாயனாகச் சேவை புரிந்த வேளைக்காறன் ஒருவன் செய்துகொண்ட சத்திய வாசகத்தினை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
நந்திகிரிநாதன் தமிழ் நாட்டில் இருந்து வந்தவன். 13ஆம் நூற்றாண்டில் அங்கு வடபகுதியில்அதிகாரம் செலுத்திய கங்கைகுலத்துப் பிரதானியன் என்பøதத் தெளிவாக்குகின்றது. இவனுடைய பட்டங்கள் சிலவற்றை அங்குள்ள அமராபுரனன், சீயகங்கன் முதலான சிற்றரசர்களுடன் தொடர்புடைவை என்று கூறப்படுகிறது.
கலிங்கமாகனுக்கும் இவனுக்கும் இடையில் உள்ள தொடர்பு யாதென்பது பற்றித் தெளிவில்லை. நந்திகிரிநாதன் பற்றிய கல்வெட்டுக்கள் 13ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதிக்குரிய வரிவடிங்களில் எழுத்தப்பட்டவை.
கலிங்கவாகனுடைய அதிகாரம் நிலவிய காலத்திற் பொலன்னறுவையிலும் மாகனின் ஆட்சிக்குட்பட்ட வடகிழக்குப் பகுதிகளிலும் தமிழ்ப் பிரதானிகள் உயர் பதவிகளைப் பெற்றிருந்தனர். தம்பலகாமத்திற் கிடைத்த சாசனம் ஒன்று மாகஉடையாரைக் குறிப்பிடுகின்றது. சாசனம் துண்டமாகியதால் விபரங்கள் தெரியவில்லை. அதிலே ஜெகதப்ப கண்டன் தானம் என்ற படையின் நிலை குறிப்பிடப்படுகின்றது.
மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் மாகனைப் பற்றிப் பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சமுதாய அமைப்பில் மாகனுடைய காலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதாக அறிய முடிகிறது.
தொடரும் ...
கலாநிதி சி.பத்மநாதன்
ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்
No comments:
Post a Comment