ஆன்மீகம்

.

                                                          நம்மாழ்வார்
"அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது"  அத்தகய மானிட பிறவியின் பயனை மறந்து நாம் அற்ப ஆசைகளில்  நாட்டம் கொண்டு அந்த பகவானை பல சமயங்களில் மறந்தும் விடுகிறோம். ஆனால் அந்த பக்த ரக்க்ஷகனோ  நம்மை எப்போதும் மறப்பது இல்லை. நம்மை வழிநடத்த  பல அடியார்களை யுகம் தோறும்  ஆவதரிக்க செய்கிறார். இப்படி அவரை  எளிய முறையில் அடைய  வழி  கட்டியவர்களில் நம் ஆழ்வார்கள் முதன்மையானவர்கள் . அவர்களில் " நம்மாழ்வார் " என்று பிரியமாக கருதப்பட்ட நம்மாழ்வார் பற்றியும் அவரின் சீடரான மதுரகவி ஆழ்வாரை பற்றியும் இந்த வாரமும் அடுத்த வாரமும் காண்போம்.


நம்மாழ்வார், பிறந்தது கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் 7 ம் நூற்றாண்டில்  கரியர், உடைய நங்கையார் என்போரது திருமகனாய், வெல்லாளர்  மரபில் பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில், அதாவது திருக்குருகூரில் பிறந்தார். இவரது பிறப்பே, ஒரு அதிசய பிறப்பாகும்.
ஆழ்வார்  பிறந்த  உடன்  கண்களை திறக்காம லும், பால் பருகமலும், புன் முறுவலோடு  அசைவற்று இருந்ததை கண்டு  அவர் பெற்றோர் மிக்க வேதனை அடைந்தனர்.  அந்த குழந்தை பிறந்த 11 வது நாள்  ஒரு தொட்டிலில் இட்டு ஆதிபிரான் சன்னதியில் முன் வைத்து பகவானை பாடி வணங்கி நின்றனர்..  அப்போது அதிசயமாக அந்த குழந்தை தவழ்ந்து சென்று கோவிலில் உள்ள  “திருபுளி”  என்னும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டதை கண்டு  எல்லோரும் வியந்தனர். இப்படியே அந்த குழந்தை 16 ஆண்டுகள் யோக நிலையில் இருந்தது.
உண்மையில் அந்த பகவானின் பரிவாரங்களான “விஷ்வக்சேனர்”   நம்மாழ்வார் ஆகவும்,  “ஆதிசேஷன்” திருப்புளி மரமாகவும் பகவன்  மஹிமையை பரப்ப ஆவதரிதனர்.
வட நாட்டில், அதாவது அயோத்தியில், மதுரகவியாழ்வார்(இவரை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்)  ராமபிரானை தரிசித்த பின்னர் மாலை போதில் தென் திசை நோக்கி வரும் போது ஒரு புதிய ஜோதியை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.  பின் அவர் தென் நாட்டில் உள்ள பல திவ்ய திருப்பதிகளை ( திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சசோலை, திருவில்லிபுத்தூர் )ஆகிய திவ்ய தேசங்களை தரிசித்து கொண்டு திருகுருகூர்  அடைந்தார். அப்போது அந்த ஜோதி ஆதிப்பிரான் சன்னதியில் நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.
வயோதிகரான மதுர கவியாழ்வார், அச்சிறுவனைப் பார்த்த மாத்திரத்திலே, அவனை இறைவனின் அவதாரமாகக் கண்டுவிட்டார். அவர், நம்மாழ்வாரைப் பேச வைப்பதற்காக, அவரிடத்தில் இவர் ஒரு புதிர் போட்டார்.
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?
இக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை அளித்தார்.
அவருரைத்த பதிலாவது,
அதைத் தின்று; அங்கே கிடக்கும்.
அர்த்தம்:
அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.
எப்போது அந்த உயிர் உண்மையை  உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.
இரண்டு வரியில் எத்தனை உண்மை.?
இந்த பதில் கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உள்ளம் குளிர்ந்து, உண்மை விளங்கியது. உடனே அவர் நம்மாழ்வரிடம் தன்னை மாணவனாக ஏற்க வேண்டும் என்று வேண்டினார்.
நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக  ஏற்று அருள் புரிந்தார். அது மட்டுமல்லாது, நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம்  ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும்  நம் மதுரகவியாழ்வாரே!
நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே சென்றது இல்லை , அவர் மன கண்ணாலே 108 திவ்ய தேசங்களில் உள்ள பகவானின் பெருமைகளை தன்  திவ்ய பிரபந்த பாடல்களால் பாடி நமக்கு கொடுத்து உள்ளார்.
திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.
திருவாசிரியம் - 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.
பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.
திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.
இவர் வேதத்தின் சாரத்தை தன் பாசுரங்களின் மூலம் கொடுத்ததால் இவரை  'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்க படுகிறார்.
   'உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று இருந்தவர் நம்மாழ்வார்,   பிறக்கும் போதே "சடம்" என்னும் வாயுவை தடுத்து வென்று உலக பந்த பசங்களில் இருந்து விடுதலை பெற்றதால்  இவருக்கு "சடகோபர்" என்று ஒரு பெயரும் உண்டு.
இவ்வாறு 35 ஆண்டுகள்  நம்மாழ்வார்(சடகோபர்) தன் அருமை சீடனுடன் வாழ்ந்த பின்னர், தன்னை இந்த மண்ணுலக வாழ்வில் இருந்து கரையேற்றி பரமபதம் அடைய அந்த பகவானை தியானம் செய்தார்.
பகவானும் ஆழ்வாரின் ஆசைக்கிணங்க அவருக்கு காட்சி அளித்து அவரை தன் திருவடியில் சேர்த்துக்கொண்டார்.
 இப்படி ஆழ்வாரின் வரலாற்றில் இருந்து பகவானை அடைய குலம் ஒரு தடை இல்லை. பகவான்  எல்லோருக்கும் எந்தவித வேறுபாடு  இன்றி உண்மையான பக்தர்களுக்கு அருள் புரிவது உண்மை. மேலும் நம்மாழ்வாரிடம் இருந்து இந்த பிறவியின் பயனே அவனை நினைப்பதர்க்கும்,  பாடுவதற்குமே என்று தெரிந்து கொண்டோம், ஆகையால் வாருங்கள் நாமும் அவர் நாமம்களை பாடி மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
ஆண்டாள்


No comments: