ஆன்மீகம்

 முதலாழ்வார்கள்  


இம் மண்ணுலகில் மானுட கோடிகளின் மாயை என்னும் இருளை போக்கி ஞானம் என்னும் ஒளியை காட்ட பகவான் தன் பரிவாரங்களை இந்த மண் உலகத்தில் ஆவதரிக்க செய்தார்.
அவர் திரு உள்ளம் படி துவாபர யுகத்தின் முடிவில் ஆவதரித்தவர்கள் முதல் மூன்று ஆழ்வார்கள். இந்த வாரம் அவர்களை பற்றி காண்போம்.
பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் என்னும் ஊரில் பொய்கை கு ளத்தில் மலர்ந்த தாமரை மலரில் அவதரித்தார்.
இவர் அவதரித்த மறுநாள் பகவானின் கதை அம்சமான பூதத்தாழ்வார்( பூத யோகி) 



மாமல்லபுரம் (இப்போது மஹபலிபுரம்) என்னும் இடத்தில் குறுக்கத்தி மலரில் அவதரித்தார்..
இவர் பிறந்த மறுநாளே திருமாலின் வாளின் (நந்தகாம்ஸம்) அவதாரமாக திருமயிலை என்னும் திவ்ய தளத்தில் உள்ள ஆதிக்கேசவ பெருமாள் கோவில் அடுத்து உள்ள கிணற்றில் செவ்வல்லி  பூவில் பேயாழ்வார் அவதரித்தார்.
இந்த மூன்று ஆழ்வார்களின் இளமை பருவம் பற்றிய கதை அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் சந்தித்த ஆச்சரியமான கதையை பற்றி பார்ப்போம்.
ஆழ்வார் மூவரின் சந்திப்பு
எல்லா உயிர்கட்க்கும்  நாதனான அந்த பகவானின் திருவருளால் அவதரித்த இந்த மூன்று பரம புருஷர்களும் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளில் நீங்காத பக்தி கொண்டு இருந்தனர். பிற பாகவதர்களிடம் அன்போடும், ஒரே இடத்தில் நித்திய வாசம் செய்யாமல் காடு, மேடுகளில் எல்லாம்  திரிந்து எப்போதும் பகவானின் சிந்தையில் ஆழ்ந்து இருந்தனர். இவர்கள் மூவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு இன்றி  தம் பிறந்த இடத்தில் இருந்து புறப்பட்டு, அந்த பகவான் அவதரித்த ஊரை எல்லாம் தரிசித்தும் , பாடியும் வந்தனர்.
அதே போல் ஒரு நாள் இந்த மூன்று ஆழ்வார்களும் தற்செயலாக பெண்ணை நதி தென்கரையில் உள்ள உலகம் அளந்த பெருமாள் கோவிலை அடைந்து பக்தி பரவசத்தில் பாடி ஆடினார்.
அன்று இரவு பொழுது பலத் சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது. பொய்கை ஆழ்வார் ஒரு பக்தரின் வீட்டை அடைந்தார். அன்று இரவை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் நாமம்களை தியானம் செய்த வண்ணம் இருந்தார். வெளியில் மழையும் காற்றும் பலமாக இருந்ததால், தற்செயலாக  பூதத்தாழ்வாரும் அதே வீட்டை அடைந்து கதவை தட்டினார். இரவு பொழுதை போக்க இடம் வேண்டினார்.
அதர்க்கு, பொய்கையாழ்வார் சுவமின்! இங்கு ஒருவர் படுக்கவும், இருவர் அமரவும் இடம் உண்டு என்று கூறி அவரை அன்போடு வரவேற்றார்.
 இரண்டு ஆழ்வார்களும் மிக்க ஆனந்தத்தோடு அந்த பகவானின் கல்யாண குணங்களை பற்றி பேசி அமர்ந்து  இருந்தனர். அப்போது  மற்றொரு முறை எதிர்பாராத விதமாக மூன்றாவது ஆழ்வார் கதவை தட்டினார்.
அதை கேட்ட இரு ஆழ்வார்களும், இங்கு ஒருவர் படுக்கவும்,  இருவர் அமரவும், மூவர் நிற்கவும் இடம் உள்ளது என்று கூறி அவரை அன்போடு உள்ளே அழைத்து கொண்டனர்.
மூவரும் இருளில் நின்ற வண்ணம் ஒருவரை ஒருவர் அறிமுக படுத்தி கொண்டனர்.
முதலில் பொய்கை ஆழ்வார் ப ஞ்சராத்திரதில் இருந்து
" பகவச் ஏச  பூதோஹம்  அநந்யார்ஹொ சிதஹ் பரஹ"
அர்த்தம்: உலகியல் வாழ்க்கையில் இருந்து மாறுபட்டவன். நான் அந்த பரம புருஷனின் வேலைக்காரன் என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டார்.
பின் பூதத்தாழ்வார் நாரதீய புராணத்தில் இருந்து எடுத்து காட்டி தன்னை அறிமுக படுத்தி கொண்டார்.
"தாஸோ  ஹம்  வாசுதேவச்ய  சர்வலோக மஹாத்மநஹ"
அர்த்தம்: நான் மூவுலகுக்கும் அதிபதியான  அந்த பகவான் வாசுதேவரின்  வேலைக்காரன்.
பின் பேயாழ்வார் தன்னை ராமாயணத்தில் இருந்து எடுத்து காட்டி தன்னை அறிமுக படுத்தி கொண்டார்
"தாஸொஹம் கௌஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஸ்த கர்மநஹ "
அர்த்தம்: நான் கோசலை நாட்டு மன்னனான ராமச்சந்திரனின் வேலைக்காரன்.
பிறகு ஆழ்வார்கள் மூவரும் பகவானின் லீலைகளை மற்றும் அவன் கருணை குணத்தையும் பற்றி பேசி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது பக்த ரக்ஷகன் ஆன அந்த பரந்தாமன் தன் பக்தர்களுக்கு அருள் புரிய அவர் மூவர் இடையே தானும் தோன்றினான். மூவர் நிற்கும் இடத்தில் மற்றொருவ ரும் வந்ததால் நெருக்கம் ஏற்பட்டத்தை உணர்ந்த ஆழ்வார்கள் காரணம் அரியாது திகைத்தனர். உடனே விளக்கேற்றி பார்க்க வேண்டும் என்று எண்ணி முதல் இரு ஆழ்வார்களும் அன்பினாலும் ஞான வைராக்கியத் தினால்  ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு இனிய செந்தமிழ் பாடல்களால் தெய்வ ஞான விளக்கை ஏற்றி வைத்தனர் .
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய 
சுடரொளியான் அடிக்கே சூட்டினேன் சொன்ன மாலை
இடராழி நீங்குகவே என்று ---- [திவ்ய பிரபந்தம்  முதல் திருவந்தாதி ]
அர்த்தம்:
உலகையே விளக்காகவும், கடலையே எண்ணையாகவும், சூரியனை நெருப்பாகவும் ஏற்றி இந்த அறியாதவரை கண்டுபிடிப்போம் என்று பாடினார்.
பொய்கை ஆழ்வாரின் பாடலை கேட்டு மிகவும் களிப்பு அடைந்த பூதத்தாழ்வார் தான் ஞான விளக்கை ஏற்றினார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரி யா - நன்புருகி 
ஞான சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞான தமிழ் புரிந்த நான்  --- [திவ்ய பிரபந்தம் இரண்டாம்  திருவந்தாதி ]
அர்த்தம்:
பகவானிடம் உள்ள அன்பையே விளக்காகவும், அவன் மீது உள்ள உருக்கத்தை எண்ணையாகவும் அவன் மீது உள்ள சிந்தனையை திரியாகவும் வைத்து ஞான விளக்கு ஏற்றினார்.
 இரு ஆழ்வாரின் பாடல்களை கேட்ட பேயாழ்வார், தன் ஞான விளக்கை ஏற்றி பகவானை கண்டு கண்ணீருடன் அவனை கண்ட காட்சியை பாடினார்.
திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும்  கண்டேன் - செருகிளரும்  
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று -- [திவ்ய பிரபந்தம் மூன்றாம் திருவந்தாதி ]
சங்கு சக்கிரதாரியான அந்த பகவானை லக்ஷ்மி தேவியுடன் கண்டு உள்ளம் குளிர்ந்தார்.
உடனே அங்கு ஒளி வெள்ளத்தோடு சங்கு, சக்கிரம், கதை, கட்கம், வைஜயந்திமாலையுடன் அந்த பகவான் ஸ்ரீமன் நாராயணன்  தன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
பகவானை நேரில் கண்ட ஆழ்வார்கள் அவனை புகழ்ந்து 100 பாடல்கள் பாடினார். இவை வட மொழியில் உள்ள ரிக், யஜுர் , சாம  வேதங்களின் சாரத்தை செந்தமிழில் பாடி வைய மாந்தர் உய்ய வழி காட்டினார்.
பின் மூன்று ஆழ்வார்களும், திவ்ய தேசங்களை தரிசித்து திருமழிசை அடைந்தனர். அங்கு பல சமயங்களிலும் புகுந்து மன அமைதி தேடிக்கொண்டிருந்த திருமழிசை  ஆழ்வாரை  கண்டு அவருக்கு "ஸ்ரீமன் நாராயணனே” பரம் பொருள் என்று உணர்த்தி அவரை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை தரிசித்து அங்கு சில காலம்  தங்கி இருந்தனர். பின் திருமழிசை ஆழ்வாரை அங்கு விட்டு விட்டு மூன்று ஆழ்வார்களும் தேசம் முழுதும் உள்ள திவ்ய தேசங்களை பாடி தரிசித்து தன் காலத்தை கழித்து பின் பக வான் திருவடி எய்தினர்.
ஆழ்வார்களின் கதையில் இருந்து நாம் எல்லோரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் தாஸர்கள் என்னும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
உண்மையான பக்தியுடன் அவனை அணுகினால் அவன் நம்மை காப்பது உண்மை என்று தெரிந்து கொண்டோம். ஆகையால் நாமும் அவர் காட்டிய வழியில் அவன் நாமம்களை பாடி மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும் அன்புடன்,
ஆண்டாள்

No comments: