இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 07

.
ஆரியச் சக்கரவர்த்தி


பாண்டியரின் மேலாதிக்கத்தில் அமைந்த இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் ஓரு சுதந்திரமான இராச்சியத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் ஏற்படுத்தினார்கள்.

அவர்கள் பாண்டிய மன்னர்களுக்குச் சேவகம் புரிந்த ஆரியச் சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்ற சேனாதிபதிகளையும் உயரதிகாரிகளையும் செகராச சேகரமாலை மூலமாகவும் பாண்டியரின் சாசனங்கள் மூலமாகவும் அறியமுடியும்.
முதலாம் புவனேகபாகுவின் ஆட்சியின் முடிவிலே பாண்டியர்கள் சேனாதிபதியான ஆரியச் சக்கரவர்த்தி தென்னிலங்கையின் மீது படையெடுத்துச் சென்று இராசதானியாகிய யாப்பாகூவாவைக் கைப்பற்றி, அங்கிருந்த புத்தபெருமானுடைய பிட்ஷாப் பாத்திரம், தந்த தாது ஆகியவற்றைக் கவர்ந்துசென்று, பாண்டிய மன்னர்களில் முதன்மையானவனாகிய மாறவர்மனிடம் ஒப்படைத்தான்.
அவனது படையெடுப்பின் விளைவாகத் தென்னிலங்கையின் இராசதானி சீர்குலைந்தது.

இராசதானியையும் அரசுடைமையையும், சேனாதிபதியாக வந்த ஆரிய சக்கரவர்த்தியோ அவனது உறவினன் ஒருவனோ வட பிராந்தியத்திற் பாண்டியனின் சார்பில் நிர்வாக அதிகாரங்களை மேற்கொண்டான்.

காலப்போக்கில் அவனின் பதவி வம்சாவளி உரிமையானது.
மாறவர்மன் குலசேகரன் ஆட்சியை அடுத்து, பாண்டிய இராச்சியம் சீர்குலைந்த போது, ஆரியச் சக்கரவர்த்திகள் அரச பதவிபெற்று தங்களது அதிகாரத்தை இலங்கையின் வடகிழக்கிலும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் நல்லூரில் இராசதானி அமைத்தார்கள். யாழ்ப்பாணக் குடாநாடும் அதனைச் சுற்றியுள்ள தீவுப் பகுதி, மன்னார், மாதோட்டம், பூநகரி முதலான பகுதிகளில் அவர்களின் நேரடியான ஆட்சி ஏற்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற் சிறப்பாக உள்ள நிர்வாக முறைமையை அவர்களே ஏற்படுத்தினார்கள்.

அவர்களோடு படையெடுத்து வந்த பாண்டிய பிரதானிகளுக்கு நிர்வாகத்தில் உயர் பதவிகளை வழங்கினார்கள். வேளாண்மை, வாணிபம், கடற்தொழில் முதலியன அவர்களின் ஆட்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன.

மன்னார்க் கடலில் முத்துக்குளிப்பின் மூலமாக மிகுந்த வருவாய் கிடைத்தது. வாணிபத்தின் மூலம் நாணயப் புழக்கம் அவர்களின் ஆட்சியிற் கணிசமான அளவு ஏற்பட்டது.

அவர்கள் வழங்கிய நாணயங்கள் பெருந்தொகையானவையாகவும் கலை வனப்புடையனவாகவும் காணப்படுகின்றன. ஆரியச் சக்கரவர்த்தி வழங்கிய நாணயங்களில் அவர்களுடைய பெயர்கள் பொறிக்கப்படுவதில்லை.

காலப்போக்கில் நாணயத்தின் ஒருபுறத்தில் மிகுந்த வனப்புடைய காளை வடிவம் பொறிக்கப்பட்டது. இரு புறத்திலும் குத்துவிளக்குகள் பொறிக்கப்பட்டன. செம்பு, பொன், வெள்ளி ஆகிய உலோகங்களிலும் அமைந்திருந்தன. சேது என்பது மங்கல மொழியாக எழுதப்பட்டது.

14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து 'ராஜலிய' என்னும் சிங்கள வரலாற்று நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

யாழ்ப்பாணப் பட்டினத்தில் ஆரியச் சக்கரவர்த்தி ஆட்சிபுரிந்தான். பேராதனை நகரில் அழககோனார் தங்கியிருந்தான். கம்பளையில் விக்கிரமபாகு ஆட்சிபுரிந்தான். இம்மூவருள் படைப்பலத்திலும் பொருளாதாரத்திலும் ஆரியச் சக்கரவர்த்தியே முதன்மையானவன்.

ஒன்பது துறைமுகப் பட்டினங்களில் அவனால் திறை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆரியச் சக்கரவர்த்தியின் மேலாதிக்கம் 14ஆம் நூற்றாண்டிலே ஏற்பட்டிருந்தமையை இந்நூல் குறிப்பிடுகின்றது. வேறு நூல்களும் இதனைத் தெளிவுப்படுத்துகின்றன.

தொடரும்..

கலாநிதி சி.பத்மநாதன்

ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: