அரசும், அரச இயந்திரங்களும் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணியாற்ற வேண்டும். சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
கடந்த ஆண்டு நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிப்புற்ற வவுனியா வடக்கு வலயத்தில் அமைந்துள்ள மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இப்பாடசாலையின் நிலையை நேரில் கண்டறிந்த வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இப்பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து ,கழுத்துப்பட்டி (ரை) மற்றும் சமையல் பாத்திரங்கள் என்பன அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தினரால் (ATBC )அவர்களது நேயர்களின் நன்கொடைகளினூடாக 21.09.2010 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவற்றை சிவசக்தி ஆனந்தன் கொள்வனவு செய்து பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
நிகழ்ச்சிக்கு பாடசாலையின் அதிபர் சி.இராசரத்தினம் தலைமைதாங்கினார். வரவேற்புரையை ஆசிரியர் க.கங்காதர கீர்த்தி வழங்கினார். பெற்றோர்கள் சார்பில் சயம்பு செல்லத்துரை உரையாற்றினார் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் பரமேஸ்வரன் கலந்துகொண்டார்.
இதன்பொழுது சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமைக்கு பயங்கரவாதத்தையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையையும் அரசாங்கம் காரணமாகக் கூறிவந்தது. இப்பொழுது யுத்தம் முடிவுற்றதாக அரசாங்கம் அறிவித்து விட்டது. அத்துடன் அரசாங்கத்திற்கு தான் எதிர்பார்த்த பெரும்பான்மையும் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை.
மாரிகாலம் தொடங்கிவிட்டதால் அரச இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு எமது மக்களுக்கான உட்கட்டுமானங்களை விரைந்து செயற்படுத்த வேண்டும். காலநிலை மாறுபாட்டால் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுப்பதற்கும் நோயாளர்களைக் குணப்படுத்துவதற்கும் மீள்குடியேறிய அனைத்து கிராமங்களிலும் உடனடியாக மருத்துவமனைகளை அமைப்பது மிகவும் அவசியமாகும்.
2 comments:
இன்பத்தமிழ் ஒலி பற்றிய செய்தியாக இருந்தால் இதில பலர் பின்னூட்டம் விட்டிருப்பினம் ...
ATBC என்றபடியால் ஒருத்தரும் பின்னூட்டம் விடவில்லைபோல...
இந்த வலைப்பதிவை நடாத்துபவர்கள் ATBCகாரர்கள். அவை இன்பத்தமிழ் ஒலியைத்தான் குறை சொல்ல பல பெயர்களில் கருத்து எழுதிவினம்
Post a Comment