கவிதைகுற்றமிழைத்தவனொருவன்

பேரூந்தில் - ரயிலில்
முட்டிமோதிப் பயணிக்கையில்,
பணப்பையினால்
முச்சக்கரவண்டிக் கூலியைச்
சுமக்க முடியாமல்
போகும் வேளையில்,
'அந்தோ, எங்களிடமும் இருக்குமெனில்
சைக்கிள் அல்லாத
ஏதாவதொரு வாகனம்'
என்றெண்ணி
பணிவுடன் வேண்டுகோள் எழுப்புவாயோ
என் ப்ரியத்துக்குரிய பெண்ணே

"அப்பா....
காரொன்று
ஏன் எமக்கில்லை?"மகன் வினவுகையில்...
"காரொன்று ஏனில்லையென்றால் மகனே...
புத்தகக் குவியலொன்று எம்மிடம் இருப்பதால்" என
சொல்லிக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு மாதச் சம்பளத்தின் போதும்
வருடந்தோறும் வருகின்ற
புத்தகக் கண்காட்சிகளில்
சுற்றியலைந்தும்
நூல்களை வாங்கி
அடுக்குகளை நிரப்பி
இரவுகள் முழுதும் உறக்கம் தவிர்த்து
ஒவ்வொரு ஏடாக எடுத்து
ஒவ்வொன்றாக வாசித்து
சுற்றுகிறேன் இச் சிறு தீவு முழுதும்
நூல்களின் துணையுடன் உலகம் முழுதும்

பாதங்களினால் நடந்தோ
அல்லது வாகனமொன்றிலோ
பயணிக்க முடியாத் தொலைவுகளைப்
புத்தகங்களினால் கடக்கிறேன்
ஆனாலும்...
என் ப்ரியத்துக்குரிய பெண்ணே!
இனிய குழந்தைகளே!
நான் அறிவேன்
குற்றமிழைத்தவனொருவன் நானென்பதை !!!

மூலம் - பியன்காரகே பந்துல ஜயவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

No comments: