யாழ் உலா

.
                           மரபுக் கதைகள் சொல்லும் அழகுக் கிராமம் 'அச்சுவேலி'
                                                                            பி.ராஹினி (பி.ஏ) யாழ். பல்கலைக்கழகம்

'அச்சு' என்ற சொல்லுக்கு தேயம், அகத்தி, மரம், அச்சுத்தினை எனவும் அடையாளம், தேரச்சு, முத்திரை எனவும் மதுரை தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகின்றது. மேலும் அச்சுக் கட்டு என்பதற்கு நெல் பயிரிடத்தக்க நிலம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம். அத்துடன் அச்சு என்பது வடமொழி 'AKSHA' என்ற சொல்லின் திரிபென்று கதிரவேற்பிள்ளையின் தமிழ் அகராதி கூறுகின்றது.அச்சன்வேலி, அச்சுவேலி ஆயிற்று. ஏனெனில் அச்சன் குளம், அச்சன்துறை, அச்சன் பேட்டை, அச்சன் குட்டைப்பட்டி முதலிய தானப் பெயர்களை நோக்கினால் அச்சுவேலி என்பதில் உள்ள 'அச்சு' என்பது 'அச்சன்' என்னும் பதத்தின் சிதைவு எனத் துணிதல் கூடும் என யாழ்ப்பாண வைபவ கௌமுகி (333-334) கூறுகின்றது.

மேலும் 'ஈழத்து இடப்பெயர் ஆய்வு' எனும் நூலில் 'வேலி' என்பது முள், கழி, முதலியவற்றாலான அரண், மதில், காவல், நிலம், வயல் ஒரு நில அளவு பசுக்கொட்டில், காற்று எனப் பொருள்படும். வேலி பழந்தமிழ்ச் சொல் என்பதும் நிலங்களுக்கு எல்லையாக வேலி அமைக்கும் மரபு பண்டை நாள் முதலாக இருந்துள்ளது என்பது 'வேரலவேலி வேர்க் கோட்பலவு' (குறுந்தொகை 8 ) தமிழர் பண்பாட்டில் அறியப்படும் செய்திகளாகும்.

முன்னர் எல்லையைச் சுட்டிய வேலி என்ற சொல் சோழர் காலத்தில் நில அளவைப் பெயராகப் பொருள் வளர்ச்சி பெற்றுள்ளது. வேலி என்பது சோழர் காலத்து நில அளவுப் பொருட்களில் ஒன்று என்பதைப் பின்வரும் கல்வெட்டுச் சான்று பகர்கின்றது. 'உடையார் ஸ்ரீ ராஜராஜச்சரம்

உடையார்க்கு நிவந்தக் காரராக
நிவந்தமாய் பங்கு செய்த படிபங்கு வழ
ஒன்றினால் நிலன்வேலியினால்......'
நாகசுவாமி (பதிப்பு) தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டு ( 1: 54 : 55)
ஊராட்சி முறையில் ஊர்களுக்கு எல்லை வகிக்கும் போது இயற்கை செயற்கை நிலங்களில் 'வேலி' எனப் பொருள் வைக்கப்பட்டது. அத்துடன் 'நிவந்தம்' அல்லது 'இறையிலி' நிலம் அரசனால் வழங்கப்பட்ட போது 'வேலி' என்ற அடிப்படையிலும் நிலம் அளந்து கொடுக்கப்பட்டமையையும் நோக்கலாம்.

இவ்வாறாக அச்சுவேலி எனப் பெயர்பெற்ற இப்பிரதேசம் வட இலங்கையில் யாழ் குடா நாட்டில் வலிகாமம் என்ற பிரதேசத்தில் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவில் வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசம் வடக்கே தொண்டமனாற்றையும் மேற்கே வசாவிளான் மற்றும் பலாலியையும் எல்லைகளாகக் கொண்டது.

இப்பகுதி 19.8 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பத்தமேனி, கதிரிப்பாய், தம்பாலை, இடைக்காடு, வளலாய், தோப்பு, தென்மூலை, நவக்கிரி, கலட்டி, தச்சன்தோட்டம், நாவற்காடு, மடத்தடி, பயிர்தோலை, கொட்டடி, அச்சுவேலி தெற்கு முதலான 15 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த பிரதேசமாக அச்சுவேலி காணப்படுகின்றது. அச்சுவேலி பிரதேசம் இன்று ஏழு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன

J/2 81 - பத்தமேனி
J/2 83 - தம்பாலை, கதிரிப்பாய்
J/2 84 - இடைக்காடு
J/2 85 - வளலாய்
J/2 86 - அச்சுவேலி வடக்கு
J/2 87 - அச்சுவேலி மேற்கு

போன்ற கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. கோப்பாய் பிரதேச சபை பதிவேட்டின் (2009) தகவல்களின்படி16002 பேர் வசிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் சைவசமயம் புராதன காலந்தொட்டு முதன்மை பெற்று விளங்குகிறது.

1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஐரோப்பியர் ஆளுகைக்கு உட்பட்ட போது ஐரோப்பிய ஆட்சி அச்சுவேலி பிரதேசத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து ஆகிய மதங்களும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றது.

இப்பிரதேசத்தில் சைவசமய கோவில்களாக கந்தசுவாமி கோவில், காளிகோவில், பிள்ளையார் கோவில்கள், முத்துமாரி அம்மன் கோவில், சிவசக்தி கோவில், மீனாட்சியம்மன் கோவில் என்பன குறிப்பிடத்தக்கன. மேலும் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் இங்குள்ள்ன. குறிப்பாக சூசையப்பர் தேவாலயம் முக்கியமானதொரு தேவலாயமாக விளங்குகின்றது. மற்றும் ஒரு புரட்டஸ்தாந்து தேவாலயமும் இங்கு காணப்படுகின்றதுடன் இப்பகுதியில் வாழுவோரில் 15376 பேர் சைவர்களாகவும் 626 பேர் கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

அத்துடன் இங்கு எட்டு பாடசாலைகள் இயங்குகின்றன. இதில் அச்சுவேலி மத்திய கல்லூரி, அச்சுவேலி தெரேசா மகளிர் கல்லூரி ஆகியன பிரபல்யமான பாடசாலைகளாக விளங்குகின்றன. இவ்வாறாக அச்சுவேலி பிரதேசம் நீர் வளமும் நில வளமும் ஒருங்கே கொண்டிருப்பதுடன் இப்பகுதியில் விவசாயம் அன்றுதொட்டு இன்றுவரை முதன்மை பெற்று விளங்குகின்றது.
பி.ராஹினி (பி.ஏ)
யாழ். பல்கலைக்கழகம்
நன்றி
வீரகேசரி

No comments: