ஒரு வாழ்க்கையின் துகள்கள்

.  
                                                                                                                      ராமகிருஷ்ணன்                           
எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன.
ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது.
அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது.
- ஜெஸ்ஸி பெர்னார்டு

மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார்.



ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி. ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு வாழ்க்கையின் துகள்கள் என வெளியாகி உள்ளது. சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த புத்தகமிது. சுப்புலட்சுமி என்ற அந்த அரிய மனுஷியின் வாழ்வை எழுத்தில் மீட்டெடுத்திருக்கிறார் மைதிலி சிவராமன். முதலில் அதற்காக அவரை மனம் நிறைய பாராட்டுகிறேன்.

1924 முதல் 26 வரை சுப்புலட்சுமி எழுதிய நாட்குறிப்புகள் இவை. சுப்புலட்சுமி சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்தவர். அவரது கணவர் ஆங்கிலேய அதிகாரத்தில் பணியாற்றிய போதும் அதை மீறி அவரது சுதந்திர போராட்ட வேட்கை செயல்பட்டிருக்கிறது.சுப்புலட்சுமி தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருந்த நீலநிறப்பெட்டி ஒன்றில் இருந்த எழுபது வருச பழமையான 26 தாள்களைக் கொண்ட அந்த நாட்குறிப்புகள் அவரது மொத்த வாழ்வின் அடையாளமாகவே உள்ளது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்பில் அவரது ஆசைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி எதுவும் நேரடியாக எழுதப்படவில்லை மாறாக தனது கஷ்டங்களை மறைத்துக் கொண்டு எளிய சம்பவங்கள், தினசரி குறிப்புகளின் வழியே அகவலியை வெளிப்படுத்தும் குறிப்புகளாகவே எழுதியிருக்கிறார். இந்த நாட்குறிப்பின் வழியாக நூற்றாண்டின் முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் துயரசித்திரம் துல்லியமாக வெளிப்படுகிறது. அசலான வரிகளின் மூலமாக சுப்புலட்சுமியின் குரலை நாம் கேட்க முடிகிறது. அவரது இதயம் விம்முவதை நாம் உணர முடிகிறது. அது தான் இந்த நாட்குறிப்பின் தனித்துவம்.

ஆண்கள் எழுதுவதற்கு அறிவார்ந்த அங்கீகாரம், பெயர், புகழ், தனித்துவம், நுட்பமான ரசனை, தன்னை அறிதல், என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு எழுத்து பெரும்பான்மை நேரங்களில் தனது சொந்தத் துயரங்களை மறைத்துக் கொள்ளவும் மீட்சி பெறவும், தன்னைச் சுற்றிய உலகின் மீதான தனது விருப்பு வெறுப்புகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாத குடும்ப, சமூக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குமே உதவியிருக்கிறது. எழுதுதல் ஒரு விதமான குணமாக்கும் செயலே (healing). பெண் எழுத்தில் அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

ஆனி பிராங் என்ற பதின்வயதுச் சிறுமியின் டைரியான Diary of a Young Girl ஹிட்லரின் யூதப்படுகொலைகளுக்கான அழியாத சாட்சியமாக உள்ளது. ஆயிரம் வருசங்களுக்கு முன்பாக ஜப்பானின் அந்தப்புரங்களில் வாழ்ந்த சுகப்பெண்களான சராஸினா, இருமி ஆகிய இருவரின் நாட்குறிப்புகள் இப்போது வெளியாகி உள்ளது. அந்த நாட்குறிப்புகள் முழுவதும் தனிமையும் காமத்தின் பெயரால் ஒடுக்கபட்ட வாழ்வுமே பதிவாகி உள்ளது.

ஐப்பானின் முதல்நாவலான கெஞ்சிக்கதையை எழுதிய லேடி முராசகியின் நாட்குறிப்பு ஆயிரத்து நூறு வருசங்களுக்கு முற்பட்டது. அவள் ஒரு எழுத்தாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எத்தனை பிரச்சனைகளை, அவதூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த காலங்களின் சாட்சியாக இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்குறிப்புகள் அச்சாகி உள்ளன. இவை வெறும் சுயவாழ்வுபற்றிய பதிவுகள் மட்டுமல்ல. மாறாக குடும்ப அதிகாரம், சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய ஆவணங்களாகவே உள்ளன.

பெண்களின் மீது யுத்தம் உருவாக்கிய வன்முறைகள், அவமதிப்புகளை விட குடும்பம் உருவாக்கி வரும் வன்முறைகள் அதிகமானது. அது அங்கீகரிக்கபட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. அதிலும் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பெயரால் பெண்கள் எழுதுவதையும், தங்களது வாழ்வியல் அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதையும் தமிழ்சமூகம் எப்போதுமே எதிர்த்தும் கண்காணித்தும் வருகிறது.சுற்றித் திரிந்து கவிஞராக வாழ்வதற்காக முதுமையை ஏற்றுக் கொண்டதாக கருதப்படும் ஒளவையின் வாழ்வு ஒன்று போதும் இதற்கான சாட்சி.

தனிமனித வரலாறுகள் முழுதுவம் உண்மையானவையல்ல. அவை எழுதுபவனின் புனைவுகளும் விலக்கப்பட்ட உண்மைகளும் கொண்டது என்று மார்க்டிவைன் கூறுகிறார். புகழ்பெற்ற பல சுயசரிதைகள் இப்படியாகவே இருக்கின்றன.ஆனால் சுப்புலட்சுமியின் வாழ்க்கை அவர் நேரடியாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் மறைத்தவை. தான் வாழ்ந்து மறைந்தபிறகு தனது மிச்சமாக அவர் விட்டுச்சென்ற நினைவுகள். இது சுப்புலட்சுமி என்ற ஒரு பெண்ணின் நினைவுகள் மட்டுமில்லை. நூற்றாண்டின் முன்பாக படித்த, அறிவார்ந்து செயல்பட்ட குடும்பங்கள் கூட பெண்களை எப்படி ஒடுக்கி அடக்கியது என்பதன் நேரடியான அத்தாட்சி.

சுப்புலட்சுமி உயிரோடு இருந்த போது அவரை வெறும் விசித்திரங்களின் தொகுப்பாகவே நான் பார்த்ததில்லை, பள்ளிக்குச் சென்று படிக்காமலே உலக விஷயங்கள் அத்தனையும் அறிந்தவராக, தனக்கான ஒரு அகவெளியை கொண்டவராகவே அவரை அறிந்திருக்கிறேன் என மைதிலி சிவராமன் தனது முன்னுரையில் பாட்டி பற்றிய மனச்சித்திரத்தை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

அந்த முன்னுரையில் என்னை அதிர்ச்சியுறச்செய்த வரி சுப்புலட்சுமி இரண்டே அறைகளுக்குள் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்பதே. இந்த வரி தரும் வலியும் நடுக்கமும் மனதை துவளச் செய்துவிட்டது. மைதிலியே தொடர்ந்து சொல்கிறார் இது அவரது உடல்நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்பதால் அல்ல. மாறாக மேற்கத்திய வைத்திய முறைகளில் அவரது கணவருக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவருக்குச் சரியான சிகிட்சை தரப்படாமல் இந்த நிலை ஏற்பட்டது என்கிறார்.

தனது உடல்நலனை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது கருணைக்காக காத்திருப்பது எவ்வளவு வேதனையானது. அதுவும் ஐம்பது ஆண்டுகாலம் நோயாளியாக ஒடுங்கிவாழ்வது என்பது பெருந்துயரம். ஹிஸ்டீரியாஎனப்படும் மனசிதைவு நோயால் சுப்புலட்சுமி பாதிக்கபட்டிருக்கிறார் என்று அவரை குடும்பமே ஒதுக்கிவைத்துவிட்டது என்பதை வாசிக்கும் போது குடும்ப வன்முறையின் உச்சம் இதுவென்றே தோன்றுகிறது.

சுப்புலட்சுமி மார்ச்14ம் தேதி 1897ம் ஆண்டு பிறந்தார். அவரது அப்பா திருவிதாங்கூர் மகாராஜாவின் சபையில் சர்வேயராக பணியாற்றியிருக்கிறார். பிரிட்டீஷ் கலச்சார பண்புகளின் மீது அதிக ஈடுபாடு கொண்ட குடும்பமது. சுப்புலட்சுமியை அவரது அப்பா ஆங்கில கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஐந்து வயதில் அப்பா இறந்து போய்விடவே அந்த கனவு சிதைவுற்றது. தாத்தா வீடான திருவையாற்றிற்கு வந்து சேர்ந்த சுப்புலட்சுமியின் தினசரி வேலை தாத்தாவிற்கு ஆங்கில தினசரியை வாசித்துக் காட்டுவது. பதினோரு வயதாகும் போது அவருக்கு திருமணமானது.

அதன் இரண்டு வருசங்கள் கழித்தே அவர் வயதுக்கு வந்திருக்கிறார். கணவர் பி.ஆர். கோபாலகிருஷ்ணனுக்கு அப்போது வயது 23. 1910ம் ஆண்டு தனது பதிமூன்றாவது வயதில் அவர் தனது புகுந்த வீட்டிற்கு அனுப்பபட்டிருக்கிறார். 14வது வயதிலே தாயாகி விட்டார். அவருக்கு பதினேழு வயதில் வலிப்பு நோய் கண்டிருக்கிறது. அதனால் அவரால் வீட்டுவேலைகள் செய்ய முடியவில்லை.

சுப்புலட்சுமியின் கணவர் பி.ஆர்.ஜி.காலனிய அரசாங்கத்தில் சால்ட் இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர். அவர் பணியாற்றிய இடங்கள் கடவுளால் கைவிடப்பட்டவை. யாருமேயில்லாத கடற்கரை டாக் பங்களா ஒன்றில் தனி ஆளாக கடலை வெறித்து பார்த்து கொண்டிருந்ததை பற்றி சுப்புலட்சுமி தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். அவர்களது முதல் குழந்தை இறந்து போகிறது. சுப்புலட்சுமி நோயுற்று மனச்சோர்வு அடைகிறார். கணவருக்கோ குழந்தை இறந்தது மட்டுமே துக்கம். மனைவியின் நோய்மை சகிக்க முடியாத இடையூறு மட்டுமே. சுப்புலட்சுமிக்கு வலிப்பு நோய் உருவானதற்குக் காரணம் அவரது மூன்றாவது குழந்தை இறந்துபோனதே என்கிறார் அவரது மூத்த மகள் பங்கஜம்.

தன்னால் படிக்க முடியாமல் போய்விடவே தன் மகள் பங்கஜத்தை எப்படியாவது பள்ளியில் சேர்ந்துபடிக்க வைக்க ஆசைப்படுகிறார் சுப்புலட்சுமி. இதற்காகவே அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். ஆனால் தன் மகள் பள்ளியில் சேர்ந்து கல்விபெறுவதைப் படித்த அவரது கணவர் விரும்பவில்லை என்பது சுப்புலட்சுமிக்கு அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் கடைக்குபோய் சாமான் வாங்கும் போது கடைக்காரன் ஏமாற்றிவிடாதபடி அறிவு இருந்தால் போதும் என்று அவர் நினைக்கிறார் என தன்னுடைய கணவரைப் பற்றி சுப்புலட்சுமி எழுதியிருக்கிறார்.

1920களில் உள்ள சென்னை. அன்றுள்ள வாசகசாலை, நாளிதழ்கள், குடும்பக் கனவுகள், படித்த நடுத்தர வர்க்கத்தினரின் காலனிய மோகம், புதிதாக உருவாகிய பெண்களுக்கான கல்விநிலையங்கள். சுப்புலட்சுமியின் அரசியல் விழிப்புணர்வு என்று இதன் அத்யாயங்கள் அவரது வாழ்வின் காட்சிகளாக நீள்கின்றன.

இன்னொரு பக்கம் சுப்புலட்சுமி போன்று பல பெண்கள் கடந்தகாலங்களின் எதிர்கொண்ட பிரச்சனைகள், சமூக நெருக்கடிகள் என்று இடைவெட்டாக சமூக பிரச்சனைகளையும் மைதிலி சிவராமன் விவரித்துக் கொண்டே போகிறார். சுப்புலட்சுமிக்கும் அவரது தோழியாக இருந்த கிரேஸிற்குமான உறவு ஒரு நாவலைப் போல விரிகிறது. தனித்து விரிவாக எழுதப்படவேண்டிய அற்புதமான பகுதியது.

ஷேக்ஸ்பியர், தாகூர், பாரதியார், ஹீரிந்தரநாத் சட்டோபாத்யாயா, காந்தி என்று இந்த நூலெங்கும் இடையிட்டு செல்லும் கவிதைகளும் மேற்கோள்களும் மைதிலி சிவராமனின் தேர்ந்த ரசனை மற்றும் எழுத்தாற்றலின் சான்றாக உள்ளன. முழுமையற்ற இந்த நாட்குறிப்புகளின் வழியே சுப்புலட்சுமியின் மனக்குரலை நாம் நேரடியாக கேட்க முடிகிறது. அந்த அளவு வலிமையாக தனது எழுத்தை உருவாக்கிய மைதிலி சிவராமன் மிகுந்த பாராட்டிற்கு உரியவர்.

இந்த கடிதங்கள் அப்படியே மொழியாக்கம் செய்து பின் இணைப்பாகவோ, அல்லது தனித்தபகுதியாகவோ சேர்க்கபட்டிருந்தால் கூடுதல் உதவியாக இருந்திருக்கும். அது போலவே ஒரே விஷயம் சில அத்தியாயங்களில் மறுபடி மறுபடி எழுதப்பட்டிருப்பது சற்று அயர்ச்சி தருவதாக உள்ளது. சுப்புலட்சுமி குறித்த சுயவிபரக்குறிப்பு அதாவது அவர் பிறந்ததேதி, இடம், திருமணம், வாழ்ந்த இடங்கள், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் யாவும் ஒன்றிணைந்தாக தனித்து உருவாக்கபட்டு பின்இணைப்பாக சேர்க்கபடுதல் அவசியம்.

தேசம் வீடுகளால் ஆனது. நீங்கள் உங்கள் இல்லத்தில் நீதியில்லாமலும், சமத்துவத்தை முழுமையாக அனுசரிக்காமலும் இருக்கும்வரை அவற்றை உங்கள் பொதுவாழ்வில் காணமுடியாது என்கிறார் பாரதியார். அது நிஜம் என்பதற்கு இந்த நூலே சாட்சி. சமகாலத்தில் வெளியான ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகவே இந்த புத்தகம் உள்ளது.அதற்காகவே ஒவ்வொருவரும் இதை வாசிக்க வேண்டும்.

ஒரு வாழ்க்கையின் துகள்கள்.
மைதிலி சிவராமன் pages .216 Rs.100.
பாரதி புத்தகாலயம்
421 அண்ணாசாலை, சென்னை 600018
தொலைபேசி 04424332424

No comments: