பிள்ளையார் கோவிலில் ரசித்த இசைக்கச்சேரி

கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமை (17-09-10) ஹோம்புஷ் பிள்ளையார் கோவிலில் செல்வன் ஹரி மோகனுடைய கர்நாடக சங்கீத நிகழ்ச்சி இடம்பெற்றது.

மிகவும் அருமையானதோர் இசைக்கச்சேரி.  வெளிநாட்டிலே வளர்ந்து, படித்து கூடவே இந்த இசைக்கலையையும் பூரணமாகப் பயின்று, இப்படியான முதல்தர இசை நிகழ்வைத் தந்தமைக்கு ஹரியை மனமாரப் பாராட்ட வேண்டும்.  

வர்ணம் பாடிக்கொண்டிருக்கும் போது தான் உள்ளே நுழைந்தேன். ‘கரணம்ப’ என்ற சகானா வர்ணத்தைக் கேட்ட போதே தொடர்ந்து கச்சேரி எப்படி அமையப்போகிறது என்று தெரிந்துவிட்டது.  அடுத்ததாக கரகரப்பிரியாவில் ‘கஜானனம்’ என்ற சுலோகமும் “கணபதியே கருணாநிதியே” என்ற பாவநாசம் சிவனின் கீர்த்தனையும் இடம்பெற்றது.  பிள்ளையார் கோவிலில் இருந்து அந்தப் பாடலைக் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது.  மிகவும் நேர்த்தியாக கரகரப்பிரியாவை பாடலில் குழைந்து கொட்டியிருந்தார் ஹரி.  ஒரு சின்னக் குறை… அழகான அந்தத் தமிழ்பாடலுக்கு விருத்தத்தையும் தமிழில் பாடியிருக்கலாம்.   ஒளவையார் ,வள்ளலார் , என்று தமிழிலா வினாயகர் விருத்தத்துக்கு குறை?  தொடர்ந்து பந்துவராளியில் ராக ஆலாபனையும் "‘என்ன காணு " என்ற கீர்த்தனையும் இடம்பெற்றது.  நேர்த்தியான பந்துவராளி  லாகவமாகப் பாடினார்.  குரலில் அனுபவ முதிர்ச்சியும், பயிற்சியும் நன்கு தெரிந்தது.  தொடர்ந்து தூரனின் பாடல், தாயே திரிபுரசுந்தரி. எல்லோருக்கும் தெரிந்த பாடல்.  அழகான சிட்டஸ்வரமுள்ள அந்த கீர்த்தனைக்கு இறுதியில் கல்பனாஸ்வரம் தேவையில்லை என்பது எனது கருத்து.

அடுத்து சந்திரஜோதியில் தியாகையர் கிருதி… இந்தக் கீர்த்தனையை முறையாகப் பாடினால் தான் ரசிக்க முடியும்.  மிக மிக அருமையாக நெஞ்சை அள்ளும் வகையில் ஹரி இதனைப்பாடினார்.  இது ஒன்றே அவரது வித்துவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தொடர்ந்து  முக்கிய பாடலாக “ஓ ரங்கசாயி” என்ற காம்போதி ராகக் கீர்த்தனை.  சங்கீதம் தெரிந்தவர்களுக்கெல்லாம் இந்தப் பாடல் நன்கு  பரிச்சியமானது.  பலவருடங்கள் மேடையேறிய வித்வான்கள் தான் இந்த கீர்த்தனையை ஒரு கச்சேரி மேடையில் கையாளுவார்கள்.  ஒரு வித பயமோ, சலிப்போ இன்றி இந்த சௌககாலக் கீர்த்தனையை சுருதி லயத்தோடு அருமையாக, அழகாக மனத்தை கொள்ளை கொள்ளும் வண்ணம் பாடினார்.  காம்போதி ராக ஆலாபனை மிகவும் நன்றாக இருந்தது.  பலரும் காம்போதி பாடலாம்.  ஆனால் இந்த காந்தாரத்தை அந்த ராகத்தின் முறையான சுளிவு நெளிவுகளோடு பாடுவது ஒரு தனி ரகம்.  ஹரி இதில் முழு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.  காம்போதிக்கே உரிய அரிய பிரயோகங்களை ஆங்காங்கே பிரயோகித்து ராகத்தை பரிமளிக்கப் பண்ணினார்.

“பூலோக வைகுண்ட” என்ற இடத்தில் குரலும் , ஸ்வரமும் அபாரம் .நம்முடைய ஈழத்து இளைஞன்  இப்படிப் பாடுகிறான் என்று எனக்குள்ளேயே ஒரு பெருமிதம்.

எங்கே, மிஸ்ரசாபு தாளத்தில் பாடலைக் காணவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்த போது யமன்கல்யாணியில் கிருஷ்னா நீ பேகனே தவழ்ந்து வந்தது.

மொத்தத்தில் ஒரு மனம் நிறைந்த இசைக்கச்சேரி… மனமார வாழ்த்த வேண்டும் ஹரியை.  அவர் அமர்ந்திருந்த விதம், இலகுவாக அங்கசேஷ்டைகளில்லாமல், எளிமையான உடை  மனதுக்கு இசைவாக இருந்தது.

இவரது குருவை மனமார பாராட்டுகிறோம்.  தாயார்  திருமதி கலா சந்திரமோகனிடமும் பின மெல்பேர்ன் ஐயர் சகோதரர்களிடமும் கற்றிருக்கிறார்.  ஹரியிடம் ஒரு வேண்டுகோள்… எத்தனையோ தமிழ்ப்பாடல்கள், சங்கீத மும்மூர்த்திகளுக்கும் முற்பட்ட அரிய தமிழ்பாடல்கள் தேவாரங்கள் உட்பட கோடிக்கணக்கில் உள்ளன.  அவற்றையும் உங்கள் கச்சேரிகளில் இனி சேர்த்துக் கொள்ள வேண்டும்.  உங்களுடைய இசைத்திறமையுடன் இந்த பாடல்கள் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இந்த கச்சேரிக்கு வயலின் வாசித்த பைரவி மிகவும் அருமையாக அபாரமாக வாசித்தார்.  அரங்காமல் நகராமல் அவர் வாசித்த விதம்… அருமையோ அருமை.  இந்த அளவில் ஒரு வயலின் வாசிப்பை நான் கேட்டதில்லை. மெல்பேர்ண் திரு முரளிமோகனுடைய சிஷ்யை என்று சொன்னார்.  என்ன வாசிப்பு…?  அந்த பத்து விரல்களையும் ஒரு முறை வணங்க வேண்டும் போல் இருந்தது.  பந்துவராளியும், காம்போதியும் அந்த விரல்களில் புகுந்து விளையாடின.  இன்னும் இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது.  அவருக்கு எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.  தொடர்ந்து சிட்னியில் அவரது வாசிப்பை கேட்க வேண்டும்.

மிருதங்கம் வாசித்த ரமேஷ் ஹரிச்சந்திரன் அடக்கமாக அழகாக வாசித்து கச்சேரிக்கு மெருகூட்டினார்.  அவருடைய “தனி” மிகவும் ரம்மியமாக இருந்தது.

கடைசியாக, இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த “கற்பகவல்லி” அமைப்பாளர் சுபாங்கன் நிர்மலேஸ்வர குருக்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.  சுபாங்கனின் முயற்சியில் தான் இப்படிப்பட்ட இசைக்கச்சேரிகளில் எங்கள் இளைஞர்களை ஊக்கிவிக்கப்படுகிறார்கள்.  சுபாங்கனின் இந்த அளப்பரிய சேவைக்கு எமது நன்றிகள். 

இறுதியாக… ஒரு கேள்வி…. இத்தனை நேர்த்தியாகப் பாடும் எங்கள் இளைஞர்களை வைத்தே இனி நிகழ்ச்சிகள் நடத்தலாமே…? பிற நாட்டுப் பாடகர்கள் ஏன்???ஒரு இசைப்பிரியன்.

3 comments:

kirrukan said...

பிற மொழியில் பேசுதல்,
பிற மொழியில் பாடுதல்
போன்றவற்றால் எங்களுடைய அந்தஸ்து கொஞ்சம் கூடுமல்ல.....


[quote]
பிற நாட்டுப் பாடகர்கள் ஏன்???[/quote]பிறத்திக்குத்தான் நாங்கள் முதல் மரியாதை கொடுப்போம்....அதை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

kalai said...

இறுதியாக… ஒரு கேள்வி…. இத்தனை நேர்த்தியாகப் பாடும் எங்கள் இளைஞர்களை வைத்தே இனி நிகழ்ச்சிகள் நடத்தலாமே…? பிற நாட்டுப் பாடகர்கள் ஏன்???

-----------------
எங்கட சனத்துக்கு எங்கட திறமைகள் எங்கே தெரியப் போகிறது?. வர்ண இராமேஸ்வரனின் தமிழ்ப் பாடல் கச்சேரிக்கு சென்றவர்களை விட மொழி தெரியாத தெலுங்கு கீர்த்தனைக்கு சென்றவர்கள் அதிகம். எல்லோராலும் பாராட்டப் பட்ட '1999' திரைப்படத்துக்கு சென்றவர்களை விட விசர்ப்படம் என்று தெரிந்தும் சுறா பார்த்தவர்கள் அதிகம். எங்கட அவலங்களைக் காண்பிக்கிற ஜிரிவியை விட ஈழத்துப் படுகொலைகளை வேணுமென்றே மறைத்த சன் தொலைக்காட்சிக்கு ஆதரவு கொடுப்பவர்கள் அதிகம்.

Anonymous said...

பிற நாட்டுப் பாடகர்கள் ஏன்???[/quote]

Yes, there so many talented young Tamil musicians in Australia.

Hari Mohan, Ramesh, Raguram Sivasubramaiam, Iynkaran etc... etc...