வாழ்க்கைப் பாடம் - மணிமேகலா

.

"வாழ்க்கைக்கான பாடம் வகுப்பறைக்கு வெளியே தான் இருக்கிறது"என்று சொல்வார்கள்.அதனை யாரும் சொல்லித் தருவதில்லை. நாமே சமூகம்,சூழல்,குடும்பம், நண்பர்கள்,அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொள்கிறோம். அதனால் தான் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்றனர். நல்ல நண்பர் வட்டம் வேண்டும் என்றனர்.குடும்பங்களுக்குள் வன்முறை கூடாதென்றனர்.அறம், பண்பாடு,சமயங்கள் தோன்றின.சட்டங்கள்,தண்டனை முறைகள் பிறந்தன.ஒழுங்கும் விதியும் அமுல்படுத்தப் பட்டன.


புலம் பெயர்ந்த பின்பும், சமூக ஊடாட்டத்தின் போதும், வாழ்க்கை தந்த அனுபவங்களின் போதும் நான் கண்டு கொண்டதென்னவென்றால் ஒருவர் தன் பிள்ளையைத் தன் காலில் தான் நிற்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான்.அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி; பணமுள்ளவராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி; கல்வியறிவுள்ளவராக இருந்தாலும் சரி இல்லாதவராக இருந்தாலும் சரி;மன உறுதியும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வலுவும் உள்ள பிள்ளையாக; தனக்கு தன் தேவைகள் விருப்பங்கள் இவற்றை இனங்கண்டு கொள்ளத் தக்க பிள்ளையாக - அதில் தெளிவான தீர்மானம் உள்ள பிள்ளையாக;இலக்கினைக் கண்டடைந்து அதை நோக்கி பயணிக்கும் திடமுள்ளவனாக; உறுதியாக பிரச்சினைகளை எதிர் கொள்ளும் தீரம் மிக்கவனாக;வெற்றியில் நிதானமாய் இருக்கத் தக்கவனாக;தோல்வியில் துவண்டு போகாதவனாக; அப்பிள்ளை இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சமூகத்தையும் வாழ்க்கையின் சுக துக்கங்களையும் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்; மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மையையும் பிறர் கையில் எதற்கும் தங்கியிருக்காத தன்மையையும் தன்னைப் புரிந்து கொள்ளும் தெளிவையும் அதே நேரம் அன்பு, மனிதப் பண்பு,எளிமை,சினேகிதத்துவம்,சேவை போன்ற பண்புகளையும், பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.தவறுகளில் இருந்து எழுந்து நடக்கும் வித்தை தெரிந்தவனாக பிள்ளை வளர வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது.அதனை அடையாளம் கண்டு அதில் அவன் தன் ஆற்றலைக் காட்ட பெற்றோர் உதவ வேண்டும்.புலம் பெயர்ந்த நாடுகளில் பிள்ளைகள் பாடசாலை தவிர விளையாட்டு, ரியூஷன், நீச்சல், அதிலும் வின்ரர் விளையாட்டு சமருக்கு வேறு விளையாட்டு,கலைகள் என பிள்ளைகள் பிள்ளைகளாக இல்லாமல் அவர்களது நேரங்கள் பெற்றோரால் களவாடப் படுகின்றன. பெற்றோரின் ஆசைகள் எல்லாம் பிள்ளையில் திணிக்கப் படுகின்றன. அதிலும் ஒரு பிள்ளையாக மட்டும் இருந்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

தன் பிள்ளை எல்லாவற்றிலும் திறமை உள்ளவனாக வர வேண்டும் என்று பெற்றோர் ஆசைப் படுவது இயல்பு தான். ஆனால் பிள்ளை பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதும் கவனிக்கப் பட வேண்டியது முக்கியம் என்பதை மறக்கலாமா? கல்வி கற்கும் இயந்திரமாக பெற்றோர் ஆட்டி வைக்கும் பொம்மையாக பெற்றோரின் ஆசைகளின் வடிகாலாக இருப்பதால் பிள்ளை வளர்ந்த பின் பணம் கொட்டும் ரெல்லர் மெஷினாக மட்டுமே இருப்பான்.மகிழ்ச்சியை அவன் டொலரில் தான் காண வேண்டியிருக்கும்.

பிள்ளைக்கு இல்லாத ஒரு கனவுலகத்தை சிருஷ்டித்துக் காட்டும் பெற்றோரும் உள்ளார்கள்.பணத்தின் மதிப்பு,தம் தேவைகள் எது என்பது பற்றிய தெளிவு,சிக்கனம் இவைகளும் கவனிக்கப் படவேண்டியவை.தமக்குரிய கஷ்டங்களை மறைத்து தம் தகுதிக்கு மீறி பிள்ளைக்கு வேண்டுவனவற்றை எல்லாம் கொடுத்து வாழ்க்கையைப் பற்றிய தவறான முன்னுதாரணமாக அவர்கள் ஆகி விடுவதுமுண்டு.இதனால் திடீரென ஒரு சரிவு வரும் போது அதனை பிள்ளையால் எதிர் கொள்ள முடியாது போய் விடக் கூடும்.சில வேளை பணமில்லாவிட்டாலும் படம் பார்க்கப் போக வேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றக் கூடும்.ஒரு வேளை உணவை விட ஒரு பிள்ளைக்கு புது உடுப்பு கூடுதலான தேவையாக இருக்கக் கூடும்.அதனால் இயல்பாக இருப்பதும் அதனை பிள்ளைக்கு தெளிவாக காட்டுதலும் கூட முக்கியமானது தான்.கனவுகளைக் காணட்டும் ஆனால் யதார்த்தத்தில் இருக்கட்டும்.Think globaly;Act localy.

கலையோ விளையாட்டோ ஏதாவது ஒன்றில் - அது பிள்ளைக்கு மட்டும் பிடித்தமானது எது என்பதைக் கண்டு அதில் மட்டும் அவனை ஈடு படுத்தினால் பிள்ளைக்கு நேரம் மிச்சமாவதுடன் முழுவதுமாக ஒரு விடயத்தில் தன் ஈடுபாட்டைக் காட்டவும் அது ஏதுவாக இருக்கும்.சில வேளை தனிமையும் கலை மூலமான வெளிப்பாடுகளும் சிறந்த மன வலி நிவாரணி என்பதை பெற்றோர் அறிவது நலம்
குடும்பத்துக்கான நேரமும் அதே முக்கியத்துவத்தோடு உணரப்பட வேண்டியது தான்.


அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் (2 ஆண் குழந்தைகளின் தந்தை) குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி சொல்வது என்ன? கல்வி,வேலை, வீடு, குடும்பம் எல்லாம் இருந்தும் மனப்பலம் இல்லாமையும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் பலமின்மையும் அம்மனிதரை இறப்புக்குத் தூண்டி விட்டது போலும்.

இங்கு கல்வி இருந்து பயனென்ன? கல்விக்கூடங்கள் எதனை நமக்குக் கற்றுத் தருகின்றன? அங்கு விடு பட்ட விடயங்களான மன உறுதி, பிரச்சினைகளை எதிர் கொள்ளும் வலு,சமூக அழுத்தங்கள்,சமூகத்தின் இயல்புகள், தன்னை அறிதல்,தன் மீது நம்பிக்கை கொள்ளுதல்,சுயமரியாதை,மகிழ்ச்சியின் பாதை,வாழ்க்கையின் மாற்றங்கள் வளர்ச்சிகள் சிதைவுகள் -போன்ற இயல்புகளை எதிர் கொள்ளுதல் எவ்வாறு,போன்ற விடயங்களை நாம் எங்கிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம்? விடுபட்டிருக்கின்ற இத்தகைய விடயங்களைப் பிள்ளைகளுக்கு யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

இதில் இருக்கின்ற ஓர் ஆபத்து என்னவென்றால் சமூகத்தில் இருக்கின்ற பண்பாட்டுக் கோட்பாடுகளும் பெண்கள் மீதான அழுத்தங்களும்,பொருளாதாரம் ஒருவரிடம் மட்டும் குவிந்திருப்பதும் மக்களிடம் சிலவற்றுக்கெதிராக எதிர்த்து நிற்கும் வலுவைக் கொடுக்கவில்லை. தன்னம்பிக்கையை வளர்க்க அவை உதவவில்லை.அதனால் பலமிழந்தவர்களாக சமூக நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப் படுபவர்களாகவே பலர் உள்ளனர்.வாழ்க்கையோடு சமரசம் என்பது ஏற்றுக் கொள்வதோடு அல்லது சகித்துக் கொள்வதோடு முடிவுக்கு வருகிறது.மகிழ்ச்சியற்ற முகங்களுக்கு சமூகம் ஏற்றுக் கொள்ளத் தக்கதான முக மூடிகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன.வாழ்க்கை வண்ணமயமானது என்று சமூகத்துக்குக் காட்டுவதிலேயே முழுக் காலமும் கரைந்து விடுகிறது.மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கவும் எதிர்கொள்ளவும் யாரும் தயாராயில்லாமல் இருக்க கல்வியும் தன் பங்கை ஆற்றி இருக்கிறது.

அண்மையில் வாசித்த ஆப்பிரகாம் லிங்கன் பாடசாலைக்கு தன் மகனை அனுப்பிய போது ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதம் மிக முக்கியம் வாய்ந்ததென்றே தோன்றுகிறது.இது தான் அவர் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

*எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.

*தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.

*பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

*மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.

*டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.

*புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.

*இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.

*பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.

*எத்தனை பேர் கூடி 'தவறு' என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.

*மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
*துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.


*குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.

*உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன் மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

*அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.

*எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.

*தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.

*இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள் தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.

No comments: