.
- நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) -
மங்கையராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா
என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் உலகம் அறிவிலோங்கித் தழைக்கும் என்றும், கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றும், பாரதத்தில் புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பாரதி. பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்களின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் நிறைந்துள்ளதைக் காணமுடிகிறது.
தமிழரின் முதற் காவியமான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் முதற் பெண்ணியக் குரல் எழுப்பப்பட்டதாக கருதுவதை காண முடிகிறது. மன்னன் அவையில் மறுத்துப் பேசுவதும்இ உண்மையை உரைத்து நிற்பதுவும், சுட்டெரிக்கும் சூரியனாக சுட்டுவிரல் நீட்டி ‘தேரா மன்னா’என்ற ஆவேசக் கண்ணகியாகி புது உருக் கொண்டவள் மன்னனிடம் மன்றாடாமல், வேண்டி நிற்காமல், சரிக்குச்சரி பேசியவள் கண்ணகி என்று காவியம் விளம்புகிறது.
ஆண் நோக்கில் எழுதப்பட்டு வந்த பெண்ணின் விடயங்களைக் கலைத்து தன் நோக்கில் எழுதுவதாக வளர்ந்து கொண்டிருக்கின்றன பெண்ணியக் கவிதைகள். சமூக நியதிகள் பொதுவாக ஆணுக்குச் சாதமாகவே உள்ளன. இவற்றை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமைகள் பெண் கவிஞைகளுக்கு சவாலாக உள்ளது. தம் உணர்வுகளை படைப்பாக வெளிப்படுத்துகின்ற உரிமை கூட பல இடங்களில் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது. பெண்ணின் வாழ்வு திருமணம் முடிந்த பின் முழுமையுற்றதாகக் கருதப்படுகின்றது. பெண்ணுக்கான சுதந்திரம் சில இடங்களில் மறுக்கப்படுகின்றது. ஆண் எவ்வகையிலும் கட்டுப்படாதவனாய் சுற்றித் திரிகின்றான். ஆனால் இல்லற வாழ்வில் பெண் நசிந்து போகின்றாள்.
பெண் மொழியை ஆண்கள் வரையறுத்த வார்த்தைகளிலேயே சித்தரித்துப் பேசிவிடுவதுண்டு. அத்தகைய மொழிகளில் பெண்ணியல் அனுபவிக்கும் அடையாளங்கள் ஆணின் கவிதைகளில் வெளிப்படும் விதம் மாறுபட்டே காணப்படுகின்றது. வாழ்க்கைச் செயல்களிலிருந்தே கவிதையின் உன்னத தளம் உருவாகிறது. காதல், காமம், புணர்ச்சி போன்றவற்றால் கசக்கின்ற கனமான வலிகளை பெண் அனுபவிக்கின்றாள். பெண்ணின் பார்வையில் தான் தனது உடலின் துடிப்புக்களையும, வேட்கைகளையும், ஆழங்களையும் இயல்பாகவும், நுண்ணியமாகவும் வெளிப்படுத்த முடியும். ஆனால் இத்தகைய உடலால் உணர்கின்ற உணர்வுகளை படைப்பிலக்கியத்தில் உலாவவிடுவது தவறானது என்று சமுதாயம் கூறுகின்றது. குறிப்பாக உடல் சார்ந்த விடயங்களை எழுதும்போது அவர்கள் இழிவானவர்களாக நோக்கப்படுகின்றார்கள். அப்படியான பல தடைகளைத் தாண்டித்தான் பெண் தன்னைச் சாந்த பிரச்சனைகளை வெளிப்படுத்தி வருகின்றாள்.
இன்றைய தமிழ் இலக்கிய உலகை நாம் பார்க்கும்போது பெண்ணியம் என்பது முதன்மையாக உலகந்தழுவிய ரீதியில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் விடுதலை, சம உரிமை, சுய சிந்தனை இதிலிருந்து ஆரம்பமாகும் பெண்ணியம் பொது நிலையிலும் சிறப்பு நிலையிலும் சமூகத்தில் பெண் என்பவள் சரிபாதி என்ற பெண்ணியத்தைப் பற்றிப் பேசுவதாகும்.
ஈழத்தில் 1923 ல் மங்களம்மாள் ஆரம்பித்த ‘தமிழ் மகள்’என்ற பத்திரிகையில் இருந்துதான் பெண்களின் அரசியல் குறித்த எழுத்துக்கள் அரும்பத் தொடங்கின. இதே போன்று மலையகத்திலும் மீனாட்சியம்மாள் கோகிலம் சுப்பையா ஆகியோர் மலையக மக்களின் அரசியல் குறித்துப் போராடிய பெண்மணிகளாவார். எனினும் 1980 களில் ஈழத்துப் பெண்களின் எழுத்துக்கள் புதிய உத்வேகத்தோடு வெளிவரத்தொடங்கின. குறமகள் (வள்ளிநாயகி), அன்னலட்சுமி ராஜதுரை, கமலினி போன்றோரைத் தொடர்ந்து சிவரமணி, சன்மார்க்கா, றங்கை, ஒளவை, ஊர்வசி, அனார், மைத்திரி, ரேணுகா, சுல்பிகா போன்ற கவிஞைகளின் வருகை புதிய நம்பிக்கையை எழுப்பியுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளிலும் மதனி, கோசல்யா, றஞ்சினி, சாரங்கா, றஞ்சனி, நிலா, நளாயினி, வேதா போன்ற பல கவிஞைகளைக் குறிப்பிடலாம.; இதே போன்று தமிழ் நாட்டிலும் மாலதி மைத்திரி, சுகந்தி சுப்ரமணியம், குட்டிரேவதி, ரிஷி, வெண்ணிலா, சல்மா, சுகிர்தராணி, லீனா மணிமேகலை, உமா மகேஸ்வரி, கனிமொழி, இளம்பிறை போன்ற பல குரல்களும் சற்று வித்தியாசமாக ஒலிப்பதை பார்க்க முடிகிறது.
80 களின் பின்னர் தொடங்கும் கவிதைகள் பெண்ணியம், தலித்தியம்இ ஏகாதிபத்தியம், உலக மயம் எனப் பரந்து செழித்து வளர்வதை அவதானிக்க முடிகிறது. தான் வாழும் சூழலின் தாக்கத்தால் உருவாகும் பிரத்தியேக பிரச்சனைகளே இன்றைய பெண் கவிஞைகளின் படைப்புக்களின் பாடுபொருளாக உள்ளன. தங்களின் வாழ்வின் சந்தித்த கசப்பான அல்லது இனிமையான அனுபவங்கள், மற்றவர்களின் துன்பங்களை தனதாக்கும் வேதனைகள், தங்களின் வலிகள்இ ஏக்கங்கள், அழுகைகள், விம்மல்கள் போன்ற பல்வேறு சுமைகளை பதிவு செய்கின்ற ஊடகமாக கவிதையைக் கையாளுகின்றார்கள். பெண் என்பவள் இத்தகைய தன்னைச் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்துவது அவசியம்.
இதனை ஹெலன் சிசூ என்னும் பெண்ணியச் சிந்தனையாளர் இப்படிக் கூறுகின்றார்: “உன்னையே நீ எழுது. உன் உடம்பின் குரல்களுக்கு செவிசாய். அப்பொழுதுதான் வகுத்துரைக்க முடியாத உனது நனவிலி மனத்திலுள்ள மூலவளங்கள் எல்லாம் பொங்கிப் புறப்பட்டு வரும். எழுத்துலகில் இன்னும் லிங்கமைய மரபில் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்ட குணங்கள் தூக்கி எறியப்படாமல் இருப்பது வெட்கப்படத்தக்க ஒன்றாகும். பெண் அவளுக்கே உரிய பொருட்களையும் அவளுக்கே உரிய உறுப்புக்களையும் ஆழமாகப் புதையுண்டு முத்திரையிட்டுக் கிடக்கும் அவளது உடம்பு சார்ந்த மிகப் பெரிய ஆட்சிப் பரப்பையும் மீண்டும் அதி வலுவோடு திரும்பப் பெற வேண்டும். தன்னைத் தானே தணிக்கை செய்வதிலிருந்து கட்டாயமாக விடுதலை பெறவேண்டும்.”
காலத்தின் கட்டாயமாக பல பெண்கள் தற்போது வீறு கொண்டு எழுதத் தொடங்கியுள்ளார்கள். அமைதியான வாழ்க்கையில் இருந்தவர்களை சுனாமி அலைகள் தாக்குவதுபோல காலம் அவர்களின் வாழ்க்கையை பிய்த்து எறிந்ததின் வலியின் குளறல்கள் பலரின் கவிதைகளில் வதைத்திருப்பதைப் பார்க்கமுடிகிறது.
“நான் கவிஜையாகப் பிறக்கவில்லை
சம்பவங்களின்
நினைவுகள்
ஓயாத அலைகளாய் இதயச் சுவர்களில்
முட்டி மோதியதால் ....
சுற்றி நிகழ்ந்தவைகளைப்
பார்த்த பின்பு
எழுத மட்டுந்தான் முடிந்தது.
ஓயாத வலியால் இதயத் துடிப்பு நின்றுவிடாமல்
நிறுத்தி வைக்க ஒரு நிவாரணமாய்
இந்த எழுத்துத் தேவைப்படுகிறது”
என்று தன் உள்ள உணர்வுகளை எழுத்தில் விதைக்கிறார் பாமதி அவுஸ்திரேலியாவிலிருந்து.
ஈழத்தில் இடம்பெற்ற இனப்போராட்டத்தின் பாதிப்புக்கள் குண்டுவெடிப்புக்கள் அதனால் சிதறிய உடல்கள்… அந்தக் கொடிய சதைத் துண்டங்களைத் தாண்டி திசைகள் மாறி அகதிகள் என்ற முகவரியோடு அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது அவர்கள் வாழ்க்கை. போர்ச் சூழலும் புலம் பெயர் வாழ்வும் மற்ற எவருக்கும் ஏற்படுத்தாத அனுபவங்களை ஈழத்துப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. யுத்த நெருக்கடியில் காலாதிகாலமாக பெண்ணின் உடல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கிறது. ஆண்களை விட பெண்களே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் இன்றும் வன்புணர்ச்சியால் வதை செய்யப்படுகிறார்கள். இந்தப் பிண வலிகள் இன்று பெண் கவிதைகளில் அப்பிக் கிடக்கின்றன.
நளாயினி தாமரைச் செல்வன் (சுவிஸ்) சாட்சி என்ற கவிதையில் இத்தகைய வலியை புதைத்திருக்கிறார்.
என் வழக்கு
ஒத்தி வைக்கப்பட்டது
வாய்க்குள்
துணி அடைத்து
கைகளை
துவக்கின் பிடியால்
அடித்து முறித்து
……
சரிந்து விழுந்தேன்
முட்புதர் பற்றையுள்.
மெல்லிய உணர்வை
முட்புதருள் வைத்தே
காமத்தால்
பலாத்காரம் செய்தனர்
வழக்குத் தொடர்ந்தேன்
ஒத்தி வைக்கப்படடது
…….
உடல்வதையின்
ஆள்மன
பச்சையின் தளும்பும்
சாட்சியம் போதாதாம்
எனக்கு நடந்த
கொடுமையின் கோரத்தை
கண்ட காட்சி
யாராவது வாருங்கள்
மீண்டும் என்னைக் கூண்டினுள் வைத்து
வார்த்தையால்
வன்புணர்வு செய்து
என்னைக் கொல்ல.
போரின்போது வேல்தாங்கி மடிந்த மகனை மடியில் கிடத்தி பெருமை கொண்ட தாயின் போர்வீரத்தை கேள்விக் குறியாக்கி போருக்கும் வன்முறைக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறது ஒளவையின் கவிதை..
இதயத்தை இரும்பாக்கி
மூளையைத் துவக்காக்கி
நண்பனை பகைவனாக்கி
என்னிடம் திரும்பினான்
இராணுவ வீரனாய் என் முன் நின்றான்
என் மகன்.
ஊட்டி வளர்த்த அன்பும் நேசமும்
ஆழப்புதைய
ஆடித்தான் போனேன்.
நண்பனைச் சுட்டுவிட்டு வந்து
வீரம் பேசினான்
தியாகம் பற்றி ஆயுதம் பற்றி
எல்லைப் புற மக்களைக் கொல்வதைப் பற்றி
நிறையவே பேசினான்.
இப்போது நான் மௌனமாக இருந்தேன்.
மனிதர்கள் பற்றி விடுதலை பற்றி
மறந்தே போனான்.
இப்போது நான்
தாயாக இருத்தல் முடியாது
என்று தோன்றுகிறது.
துரோகி என்று
என்னையே புதைப்பானோ
ஒரு நாள்?
ஈழத்தில் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளின் தாக்கங்கள் ஈழத்தில் மட்டுன்றி;இ மற்றும் புலம்பெயர்ந்த நவீன பெண் கவிஞைகளின் மத்தியில் புதிய பரிணாமங்களை தோற்றுவித்திருக்கின்றன. இத்தகைய தாக்கம் தமிழகத்து இலக்கிய உலகின் பெண்ணியச் சிந்தனைகளிலும்; பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்விதமான கவிதைகளை நவீன கவிதைகள் பற்றிப்பேசும் பெண்ணியச் சிந்தனையாளர்கள் எவராலும் புறந்தள்ள முடியாது. இனி எதிர்கொள்ளும்; காலங்களிலும்; பல்வேறு தளங்களின்; பெண்களின் பாதிப்புக்கள் பெண் படைப்பாளிகளால் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இப்போது அரசியல்இ விஞ்ஞானம், கல்வி, வர்த்தகம், கலை போன்ற பல்வேறு துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அவற்றினூடாக அவர்களுடைய மனம், அறிவு, உழைப்பு, தியாகம், மனஉணர்வு ஆகிய பல்வேறு வடிவங்களை முன்நிறுத்திப் படைப்புக்கள் வெளிவரவேண்டும் என்று விரும்புகின்றேன்.
1 comment:
சிறந்த கட்டுரை இன்றைய காலத்திற்கு வேண்டப்படும் கருத்துக்கள் பாராட்டுக்கள்
நவஜோதி யோகரத்தினம்
tharma
Post a Comment