இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 01

.
பதினேழாம், 18 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் சேவை புரிந்த ஐரோப்பிய அதிகாரிகளும், வரலாற்று ஆசிரியர்களும் இலங்கையின் சமுதாயங்களைப் பற்றிச் சில சமயங்களிலே தெளிவான உறுதியான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
இலங்கையில் ஒல்லாந்தர்களின் வசமாக இருந்த பிரதேசங்களை ஆங்கிலேயர்கள் போர் புரியாது, இரத்தம் சிந்தாது பெற்றுக் கொண்டார்கள்.

பிரஞ்சுப் புரட்சியாளர்கள் ஓல்லாந்து நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு வற்றேவியக் குடியரசு என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அரசன் அங்கிருந்து இங்கிலாந்துக்கு ஓடி விட்டான். இலங்கைப் பிரதேசங்களை இங்கிலாந்துக்கு ஒரு உடன்படிக்கை மூலம் வழங்கினான். 1796 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பிரித்தானியரின் கொம்பனி அரசாங்கம் இலங்கைப் பிரதேசங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டது.

அதன் பின்பு பிரித்தானியா, ஒல்லாந்தர் வசமிருந்த பிரதேசங்களின் நிர்வாகம், நீதிபரிபாலனம் என்பன தொடர்பான ஒரு அறிக்கையினை கிளைக்கோர்ண் (cleghorn) என்பவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

அவர் கொழும்பிலுள்ள ஒல்லாந்தர்களின் ஆவணச் சுவடிகள் நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். அம்ஸ்ரடாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அதீதமான கல்வித் தகைமையுடன் நிர்வாக சேவையில் அனுபவமும் கொண்டிருந்தார்.

இலங்கைத் தீவின் குடியானவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இரண்டு தேசிய இனங்களைப் பற்றி குறிப்பிடுகின்றார். சிங்களவர், தமிழர் குறித்து அவர்களை அவ்வாறு வர்ணிக்கின்றார்.

புராதன காலம் முதலாக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வாழுகின்றன. தென்மேற்கு கரையோரங்களிலும் மத்திய பகுதியிலும் வாழ்பவர்கள் சிங்களவர் என்றும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மாவட்டங்களில் வாழ்பவர்கள் தமிழர்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

ஒல்லாந்த அதிகாரிகளின் ஆவணக் குறிப்புகளின் அடிப்படையைக் கொண்டும் அக்காலத்தின் சனத்தொகையின் அடிப்படையிலும் அவர் இவ்வாறு இரு தேசிய இனங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

சுரொய்டர் என்பவர் 1760 இல் எழுதிய இலங்கை நிர்வாகம் பற்றிய விபரமான அறிக்கையில் இதே போன்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒல்லாந்தர் வசமுள்ள பிரதேசங்கள் இரு வெவ்வேறான பிரிவுகளைக் கொண்டுள்ளன என்றும், ஒன்றிலே சிங்களவரும் அதாவது தென் மேற்கிலே சிங்களவரும் வடகிழக்குப் பகுதியிலே தமிழரும் வாழ்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்குப் பிராந்தியத்தில் நிர்வாக அதிகாரிகளாக இருந்த ஒல்லாந்தர்கள் அப்பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றிச் சொல்லும் விபரங்களும் கிளெகோர்ன் கூறுவதை உறுதிப்படுத்துகின்றன.

ஃபான் சென்டெல் (Van senden) என்ற திருகோணமலைக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி 1786 இல் தினக்குறிப்புப் பதிவேடு ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் திருகோணமலை பற்று, தம்பலகாமம் பற்று, கொட்டியாரம் பற்று, கட்டுக்குளம் பற்று ஆகிய நான்கு பிரிவுகளிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்குள்ள குடியானவர்கள், இயற்கை வளம், வயல் நிலங்கள், தோப்புகள், கைத்தொழில்கள் முதலானவற்றைக் குறித்த விபரங்களை எழுதியுள்ளார்.

இந்த நான்கு பிரிவுகளிலும் அடங்கிய கிராமங்களில் தமிழரும் முஸ்லிம்களுமே வாழ்ந்தனர் என்று அவர் குறிப்பிடுகின்றமை கவனத்திற்குரியது. குடியானவர்களில் வேறெந்த இனத்தவர்களும் அடங்கியிருந்ததாக அவருடைய பதிவேட்டில் ஓர் இடத்திலாவது சொல்லப்படவில்லை.

திருகோணமலை நகரப்பற்று தவிர்ந்த ஏனைய மூன்று பற்றுகளிலும் பரம்பரையாக ஆட்சியுரிமை பெற்றிருந்த வன்னியர்களைப் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். அவர் இந்த ஊர்களுக்குச் சென்றபோது இந்த மூன்று பற்றுகளிலும் பதவியில் இருந்த வன்னிபங்களின் பெயர்களைக் காணலாம்.

திருகோணமலை போலவே மட்டக்களப்புப் பகுதியிலும் ஒரு தனியான நிர்வாக அலகை ஒல்லாந்தர் உருவாக்கியிருந்தனர். வழமைப்படி மட்டக்களப்பு தொடர்பாக மேஜர் புர்நாட் (Major Bournanad) ஒரு விரிவான அறிக்கை எழுதியுள்ளார்.

அதிலே அப்பிரதேசத்து நிர்வாக, பொருளாதார, சமூக விடயங்கள் பற்றி மிக விரிவான குறிப்புகள் அமைந்துள்ளன. தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய இருசாரார் மட்டுமே அங்கு வாழ்ந்த குடியானவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஸ்கொட்லாந்தில் பிறந்தவரான ரொபேட் நொக்ஸ், கண்டி இராச்சியத்திற்கு வந்திருந்த சமயத்தில் அரசாங்கம் அவரைக் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்திருந்தது.

பல்லாண்டுகள் அவர் இவ்வாறு காலம் கழித்ததால், சிங்கள மொழியையும், கண்டி சமுதாயத்தையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் சிறையிலிருந்து இரகசியமாக வெளியேறி, வடக்குப் பக்கமாகப் பிரயாணம் செய்து நுவரகலாபியாவை அடைந்தார்.

அங்கிருந்து வடக்குநோக்கிச் சென்றபோது, சிங்கள மொழியினைப் புரிந்துகொள்ள முடியாத சமூகத்தவரை எதிர்நோக்கினார்.

ஒரு சமயம் அவருக்கு அச்சம் ஏற்பட்டது. தன்னைக் கைப்பற்றி கண்டி அரசனிடம் அனுப்பிவிடுவார்களோ என்ற ஏக்கம் உண்டானது. ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக அவர் தப்பி ஓடுவதற்கு அவர்கள் உதவி புரிந்தார்கள்.

ரொபேட்நொக்ஸ் தமிழ் மொழி பேசப்படுகின்ற, தமிழர் தேசம் பற்றி தனது நூலிற் குறிப்பிடுகின்றார். குருந்துஓயா என்கின்ற ஆறு கண்டி இராச்சியத்துக்கும் இந்த தமிழ் தேசம் என்பதற்கும் எல்லையாக அமைந்தது என்றும் குறிப்பிடுகின்றார்.

குருந்து ஓயாவைக் கடந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது, அவர் தமிழர் வாழும் விவசாய கிராமம் ஒன்றை அடைந்தார். அங்கே அவர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் காளைகளையும், வண்டிகளையும் பார்த்தார்.

இவர் சென்றபோது அங்குள்ள புலோக்களிலே குரக்கன் விளைந்திருந்தது. அங்குள்ளவர்களால் சிங்கள மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

வேறொரு இடத்திலே அவர் தமிழர் தேசம் என்று குறிப்பிடும் நிலப்பிரிவை கைலாயவன்னியன் நாடு என்று வர்ணிக்கின்றார். அவர் வடக்கிலுள்ள தமிழர் வாழும் வன்னிப் பிரதேசத்தை கைலாய வன்னியன் நாடு என்று சொல்கிறார் என்பது தெளிவாகிறது.

தொடரும்..

கலாநிதி சி.பத்மநாதன்
ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: